Tuesday, October 23, 2018

கல்முனை பிரதேச செயலக கோவில் விவகாரம் தொடர்பில் சங்கரியாருக்கு ஒன்றும் தெரியாதாம். உலாமா கட்சி.

கல்முனை பிரதேச செயலகத்தில் இந்து ஆலயத்திற்கான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்திற்கான சட்டரீதியான அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அக்கட்டிடத்தை இடிக்க உத்தரவிடுமாறு கோரியும் மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்த சங்கரி, இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மதித்து, பாதுகாக்க வேண்டும் என வேண்டியிருந்தார்.

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

கோவில் சம்மந்தப்பட்ட விடயத்தில் கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வு இனங்களுக்கடையேயான நல்லுறவை பாதிப்படையச் செய்யும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேணடும். சகல இன மத மக்களின் வணக்கஸ்தலங்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதொன்றாகும். இறை நம்பிக்கை கொண்ட அனைவரும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை மதித்து, பாதுகாக்க வேண்டும். இதைத்தான் ஒவ்வொரு மதமும் போதிக்கின்றது. இதனை உணர்ந்து கொண்டால் மாற்று மதத்தினரின் உள்ளங்ளை நோகடிக்கும் எண்ணம் எவருக்கும் ஏற்படாது.

இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டு மிகவும் சுலபமான முறையில் இதனை அணுகி இருக்கலாம். அதனை விடுத்து தன்னிச்சையாக இதனை நீதிமன்றம் வரை எடுத்து சென்று விட்டு, அதன் பிறகு நீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளபடியால், அது சம்மந்தமாக எவரும் சபையில் கருத்துக் கூற முடியாது என்று கூறுவது, ஒரு ஜனநாயக செயற்பாடாக நான் கருதவில்லை. ஜனநாயக முறைப்படி எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை அணுகியிருக்கலாம். நல்லாட்சி அரசும் சகல இன, மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது.

தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் மொழியால் ஒன்று பட்டவர்கள் என்ற காரணத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை இரண்டு சமுகங்களுக்கிடையில் ஒற்றுமையை பேணுவதற்காக பாடுபட்டு வந்துள்ளது. அந்த வகையில்தான் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் கல்முனை மாநகர சபையில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தர முன்வந்தது. அந்த நல்லெண்ணத்தை சகல தரப்பினரும் புரிந்து கொண்டு, இந்த கோவில் சம்மந்தமான பிரச்சினைக்கு மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி அனைவரிடமும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றது.

மேற்படி அறிக்கையினை காட்டமாக சாடியுள்ள உலாமக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், ஆனந்த சங்கரி அவர்கள் விடயம் தொடர்பான தெளிவின்றியே மேற்படி அறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, இறை அச்சமுள்ளார் பிற மதத்தவரின் வழிபாட்டுத்தலங்களை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் மேற்படி வணக்கஸ்தலத்துக்கெதிராக நீதிமன்றத்தை நாடியது தவறு என்பது போன்றும் அறிக்கை விட்டுள்ளார்.

திரு. வி. ஆனந்த சங்கரி அவர்கள் நாம் பெரிதும் மதிக்கும் தமிழ் தலைவர். இனவாதம் கொஞ்சமும் இல்லாத தமிழ் பெருமகன். அப்படியிருந்தும் கல்முனையில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை சரியாக தெரியாமல் ஒரு பக்க தரப்பின் தகவலை மட்டும் வைத்து அறிக்கையிட்டமை தவறாகும்.

கல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் எந்தப்பிரச்சினையும் இன்றி சகோதரர்களாகவே வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் தமது அரசியல் நலனுக்காக இம்மக்கள் மத்தியில் இனவாதத்தினை ஊக்குவித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

கல்முனையில் ஒரேயொரு பிரதேச செயலகம் அதுவும் தமிழ் மொழி பிரதேச செயலகம் இயங்கி வந்தது. யுத்த காலத்தில் புலிகளின் ஆயுத பலத்தால் கல்முனை உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மேற்படி உப செயலகம் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்றும் தமிழ் பிரிவு என்றும் அழைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது. எந்தவொரு பிரதேச செயலகமும் இனத்தின் பெயரால் அழைக்க முடியாது என்று தெரிந்தும் இனவாதத்தை உருவாக்கி தமிழ் மக்களை உசுப்பேற்றுவதற்காகவே தமிழ் இனவாத அரசியல்வாதிகளாலும் அவர்களின் அதிகாரத்துக்கு பயந்த கல்விமான்களாலும் பாவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்முனையில் முஸ்லிம்களின் வாழும் இடங்களையும் அவர்களின் வியாபாரஸ்தலங்களையும் உள்ளடக்கி புதியதொரு தனியான பிரதேச சபையை உருவாக்க கள்ளத்தனமாக முயற்சிகள் எடுக்கப்பட்டன. கல்முனை முஸ்லிம்களின் பிரதிநிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இது பற்றி அறிந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது எதிர்ப்பை காட்டியதால் முஸ்லிம்களின் நிலபுலன்களை கபளீகரம் செய்யும் முயற்சி கைவிடப்பட்டது.

அதன் பின் பிரதேச செயலக வளவில் கோவில் கட்டுமான பணிகள் அனுமதியின்றி ஆரம்பமான போது அதனை நிறுத்தும் படி அ. இ. மக்கள் காங்கிரசின் ஆதரவாளர் மூலம் அரச அதிபரினால் கூறப்பட்டு இடை நிறுத்தப்பட்டது. பின்னர் இரவோடிரவாக கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் கல்முனை மேயர் சட்டபூர்வமற்ற இந்த வணக்கஸ்தலத்தை உடைக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்துள்ளார். இத்தனைக்கும் மேற்படி வணக்கஸ்தலம் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்ட போதே மேயரினால் தடை உத்தரவு பெற்றிருக்க முடியும். அதனை செய்யாமல் இருந்து விட்டு எல்லாம் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இறுதியிலாவது அவர் சட்டத்தை நாடியது சரியான செயலாக இருப்பினும் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் திட்டமிட்டு கல்முனையில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகமும் உலமா கட்சிக்கு உண்டு.

இந்த உண்மைகளை புரியாமல் அத்துமீறி அனுமதியின்றி கட்டப்பட்ட வணக்கஸ்தலத்தை மற்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என மூத்த அரசியல்வாதியான ஆனந்த சங்கரி சொல்வது முறையான செயல் அல்ல.
கல்முனை பிரதேச செயலகத்துள் பணி புரியும் இந்துக்களுக்கு கோவில் தேவையாயின் அனுமதி பெற்று கோவில் கட்டலாம். அதே போல் அங்கு பணிபுரியும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தேவைப்பட்டால் பௌத்தர்களுக்கும் வணக்கஸ்தலங்களை அதே அனுமதியுடன் கட்டிக்கொள்ள முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com