Thursday, March 1, 2018

அமெரிக்க இராணுவமும் ட்ரம்ப் நிர்வாகமும் சிரியாவில் போர் நடத்துவதற்கு வரம்பற்ற அதிகாரங்களுக்கு உரிமை கோருகின்றன. Patrick Martin

சிரியாவில் அமெரிக்கப் போரை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச அங்கீகாரம், நாடாளுமன்ற ஒப்புதல் அல்லது பொது விவாதம் ஆகியவற்றின் நடிப்பும் கூட இல்லாமல் அந்த நாட்டின் கணிசமான பகுதிகளை கிட்டத்தட்ட இணைத்துக் கொள்வதற்கு மற்றும் ஆக்கிரமித்துக் கொள்வதற்குமான அதிகாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

பென்டகன் மற்றும் வெளியுறத்துறையில் இருந்து செனட்டர் டிம் கேயினுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் இந்த நிலைப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருப்பதை, நியூ யோர்க் டைம்ஸ் ”சிரியப் படைகளுக்கு புதிய ஒப்புதல் தேவையில்லை என நிர்வாகம் கூறுகின்றது” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமையன்று அதன் உள் பக்கங்களுக்குள் புதைந்திருந்த ஒரு செய்திக் கட்டுரையில் கூறியிருந்தது. சிரியாவில் மட்டுமல்ல, மறைமுகமாக உலகெங்கும் போர் நடத்துவதற்கான உட்பொதிந்த செயலதிகாரத்தை திட்டவட்டம் செய்கின்ற, வெள்ளை மாளிகையின் மூலமாக அரசியல்சட்டத்தின் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலின் பரிமாணங்களை இந்தக் கடிதங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

வேர்ஜினியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிக்காரரான கேய்ன், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் அரசாங்கத்தைப் பதவியிறக்குவதை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற போருக்கு ஒரு சட்டபூர்வமான போலி மறைப்பை வழங்குவதற்காக, ஒரு புதிய இராணுவப் படை பயன்பாட்டுக்கான அங்கீகாரம் (Authorization for Use of Military Force - AUMF) நிறைவேற்றப்படுவதற்கு ஒரு சம்பிரதாயமான மற்றும் கபடவேடமான அழைப்பை முன்வைத்திருக்கிறார்.

சிரியாவில் இப்போதைய அமெரிக்க இராணுவ செயல்பாடுகளின் அதிகரிப்பானது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரதானக் கோரிக்கையின் நிறைவேற்றமாகும். இதுவே ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியுறவுக் கொள்கைத் திட்டநிரலின் மையத்தில் இருந்தது -கேயின் கிளிண்டனின் துணை-ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்- ஜனாதிபதியாகிருந்தால் ஹிலாரி கிளிண்டன் செய்திருக்கக் கூடிய முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருந்திருக்கும். சிரியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் “ISISக்கு எதிரான யுத்தக்கள வெற்றிகளை சுரண்டிக் கொண்டு வருகின்றன.... அமெரிக்கா மற்றும் பிற உலக சக்திகளது தலைவர்கள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு விருப்பமில்லாதவர்களாகவோ அல்லது இயலாதவர்களாகவோ பெரும்பாலும் நின்று கொண்டிருக்கின்ற நிலை” நிலவுவதாக புகார் கூறி, போரைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு தலையங்கத்தை, கடந்த வாரத்தில் தான், டைம்ஸ் வெளியிட்டிருந்தது.

ISIS இன் கட்டுப்பாட்டில் இருந்த அத்தனை பெருநகரங்களும் மற்றும் நகரங்களும் மீட்கப்பட்டு விட்ட பின்னரும் கூட, சிரியாவிலான இப்போதைய நடவடிக்கைகள் ISIS ஐ தோற்கடிப்பதற்கான பிரச்சாரம் என்று சொல்லப்படுவதின் கட்டமைப்புக்குள் தான் வருவதை பென்டகன் கடிதம் காட்டுகிறது. ட்ரம்ப் நிர்வாகம், அதற்கு முந்தைய ஒபாமா நிர்வாகத்தைப் போன்றே, ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கு நாடாளுமன்ற ஒப்புதல் வழங்குவதற்காக 16 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்கெய்தாவிற்கு எதிரான 2001 AUMF ஐக் கொண்டு “ISISக்கு எதிரான போருக்கு” நியாயம் கற்பிக்கின்ற அபத்தமான கூற்றை முன்னெடுக்கிறது.

”ISIS ஐ தோற்கடிப்பதற்கான பிரச்சாரம் ஈராக்கிலும் சிரியாவிலும் ஒரு புதிய கட்டத்திற்கு உருமாறிக் கொண்டிருக்கிறது” என்று அந்தக் கடிதம் திட்டவட்டம் செய்கிறது. அமெரிக்க இராணுவம் “எதிரியின் மீது பயங்கரவாத எதிர்ப்பு அழுத்தத்தை பராமரிப்பதற்கேற்ப நமது இராணுவப் பிரசன்னத்தை மேம்படுத்துகின்ற மற்றும் தகவமைத்துக் கொள்கின்ற அதேநேரத்தில், ISIS இன் நீடித்த தோற்கடிப்பை உறுதிசெய்வதற்கு அவசியமான ஸ்திரப்படுத்தல் மற்றும் அரசியல் நல்லிணக்க முயற்சிகளுக்கும் வழிவகையமைக்கிறது.”

இந்த வலியுறுத்தல்கள் சிரியா மீதான காலவரையற்ற அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு வசதியாய் மிக விரிந்தவையாக, அத்துடன் விருப்பத்திற்கேற்பவும் அகநிலைக்கேற்பவும் பொருள்விளக்கமளித்துக் கொள்ள இலக்கு வைக்கப்பட்டவையாக இருக்கின்றன.

2001 போர் தீர்மானத்தின் கீழ் அவசியப்படுகின்றவாறாக, சிரிய அரசாங்கப் படைகளோ அல்லது ஹெஸ்பொல்லா மற்றும் ஈரான் போன்ற அவற்றின் கூட்டாளிகளோ, ISIS அல்லது அல் கெய்தாவின் “தொடர்புபட்ட படை”களாக கருதப்பட முடியாது என்பதை பென்டகன் மற்றும் அரசுத் துறை கடிதங்கள் ஒப்புக்கொள்கின்றன. மாறாக, எல்லாவற்றுக்கும் மேல் சிரியாவின் இறையாண்மையை மீறியும் அதன் அரசாங்கத்தின் சம்மதம் இல்லாமலும் தான் அமெரிக்கா அங்கே நிலைகொண்டிருக்கின்ற போதிலும் கூட, சிரிய அரசாங்கப் படைகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அமெரிக்க இராணுவப் படைகளின் “தற்காப்பு” நடவடிக்கைகளாகத் தான் சித்தரிக்கப்படுகின்றன.

சென்ற ஏப்ரலில், அசாத்-எதிர்ப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தின் ஒரு நகரத்தில் நரம்பு வாயுவை சிரிய அரசாங்கம் பயன்படுத்தியதாக அமெரிக்க தலைமையிலான ஒரு ஊடகப் பிரச்சாரம் நடத்தப்பட்டதற்குப் பின்னர், சிரிய வான்தளம் ஒன்றுக்கு எதிராக ட்ரம்ப் உத்தரவிட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு முன்வைக்கப்பட்ட சட்டரீதியான நியாயப்படுத்தல் இன்னும் திகிலூட்டக் கூடியதாகும். “முக்கியமான அமெரிக்க தேசிய நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு வெளிநாடுகளில் இதுமாதிரியான இராணுவப் படையைப் பயன்படுத்துவதற்கு தலைமைத் தளபதி மற்றும் தலைமை அதிகாரியாக அரசியல்சட்டத்தின் பிரிவு இரண்டின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தின் படி ஜனாதிபதி அந்தத் தாக்குதலுக்கு அங்கீகாரமளித்தார்” என்று பென்டகன் கடிதம் தெரிவிக்கிறது.

இந்த மொழிப்பிரயோகம் முற்றிலும் திறந்தமுனையுடையதாகவும் அமெரிக்க அரசியல்சட்ட கட்டமைப்பை -இதன்படி போரை அறிவிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குரியதாகும், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்துகின்ற தலைமைத் தளபதியாக ஜனாதிபதி இருப்பார்- கேலிக்கூத்தாக்குவதாகவும் இருக்கிறது. நீண்டதொரு காலமாய், அமெரிக்க ஜனநாயகம் தொடர்ந்து அரிக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், அதிகாரங்களுக்கு இடையிலான இந்த அரசியல்சட்ட பிரிப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 1941 டிசம்பரில் பேர்ல் துறைமுகத்தின் மீதான ஜப்பானிய தாக்குதலைத் தொடர்ந்து போரை நாடாளுமன்றம் அறிவித்து இப்போது 75 ஆண்டுகளுக்கும் அதிகமாய் கடந்து விட்டது.

இருப்பினும், சென்ற கால்நூற்றாண்டு காலத்தின் கிட்டத்தட்ட இடைவிடாத அமெரிக்க போர் ஈடுபாட்டின் சமயத்திலும் கூட, பொதுமக்கள் கருத்தில் கைப்புரட்டு செய்யும் நோக்கங்களுக்காக, அமெரிக்க இராணுவத்தின் ஒரு பெரிய ஈடுபடுத்தலுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவது அவசியமாக இருந்ததாக உணரப்பட்டு வந்தது. 1990-91 பேர்சிய வளைகுடாப் போர், 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் 2003 இல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு ஆகியவற்றுக்கு முன்பாக, போர் மீதான உத்தியோகபூர்வ பிரகடனத்துக்காய் அல்லாமல், மாறாய் இராணுவப் படையை பயன்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிப்பதற்காய், நாடாளுமன்ற விவாதங்களும் வாக்கெடுப்புகளும் நிகழ்ந்தேறின.

நாடாளுமன்ற ஒப்புதலின் நடிப்பும் கூட இல்லாமல் முழுவீச்சிலான போரில் ஈடுபட்டது முந்தைய இரண்டு ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் 1999 இல் சேர்பியா மீது அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்கு உத்தரவிட்டார், ஆயினும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்றத்தின் ஆதரவை வெல்வதில் அவர் தோல்விகண்டார். 2011 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா அப்போது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த செனட்டில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி வெற்றிகாண முயற்சியும் கூட செய்யாமலேயே லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சைத் தொடக்கினார். இந்த இரண்டு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளுமே உட்பொதிந்த ஜனாதிபதி அதிகாரங்களுக்கு உரிமை கோரினர்.

இப்போது மனித உரிமைகள் குறித்த பொய்கூறும் வார்த்தையாடல்கள் மற்றும் “கொலைகாரர்” ஆசாத் மீதான சிடுமூஞ்சித்தனமான கண்டனங்கள் (”கொலைகாரர்கள்” மிலோசேவிக், சதாம் ஹுசைன் மற்றும் கடாஃபி மீதான முந்தைய கண்டனங்களைப் போன்றவை) ஆகியவற்றின் மறைப்பின் கீழ், அமெரிக்கா, சிரியாவின் மூலோபாயரீதியான முக்கியத்துவமுடைய கணிசமான பகுதி ஒன்றை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு நிகரான ஒன்றை, நடத்திக் கொண்டிருக்கிறது. இது ஆரம்பகட்ட நடவடிக்கை மட்டுமே, அந்த நாட்டையே ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் அறிவிக்கப்படாத காலனி நாடாக மாற்றுவது இதனைப் பின்தொடர இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், ஏகாதிபத்தியம் “ஒவ்வொரு வகையான நாட்டையும்... தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு முயல்வதைக் கொண்டு” குணாம்சப்படுத்தப்படுகிறது என்ற 1916 இல் லெனின் எழுதிய கூற்றை (”ஏகாதிபத்தியமும் சோசலிசத்திலான பிளவும்”, சேகரத் தொகுதி, மாஸ்கோ, 1977, தொகுதி 23, பக். 107) நிரூபணம் செய்கின்றன.

அத்துடன், லெனின் எச்சரித்ததைப் போல, பலவீனமான நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் காலனித்துவ அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுகின்ற நிகழ்ச்சிப்போக்கானது சொந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் துடைத்தளிக்கப்படுவதுடன் மாற்றவியலாதவகையில் தொடர்புபட்டிருக்கிறது. “அடிமுதல் தலைவரை அரசியல் பிற்போக்குத்தனம் ஏகாதிபத்தியத்தின் குணாம்சமாக இருக்கிறது” என்று அவர் எழுதினார். “ஊழல், பெரும் அளவிலான இலஞ்சம் மற்றும் அத்தனை வகையுமான மோசடிகள்”. (அதே புத்தகம், பக். 106)

எந்த அரசியல் விவாதமும் இன்றி அத்துடன் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக எந்த எதிர்ப்பும் இன்றி ஒரு பெரிய இராணுவ ஆக்கிரமிப்பு நடத்தப்பட முடிகிறது என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் அந்திமகால அழுகலை வெளிப்படுத்துகிறது. மத்திய கிழக்கின் மக்களுக்கு, அமெரிக்க மக்களுக்கு மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் மக்களுக்கு மிகவும் நீண்டகாலத்திற்கான பின்விளைவுகளைக் கொண்டுள்ள முடிவுகள் இராணுவத்தாலும் உளவு முகமைகளாலும் ஒருதரப்பாய் எடுக்கப்படுகின்றன.

சிரியாவில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எந்த ஒழுங்கமைந்த எதிர்ப்பும் இல்லாமலிருப்பது, சோசலிஸ்டுகளாக கூறிக் கொண்டு ஆனால் ஏகாதிபத்திய கொலைபாதகத்தின் வக்காலத்துவாதிகளாகவும் ஆலோசகர்களாகவும் இருப்பதற்கு அதிகமாக வேறொன்றுமாய் இல்லாத குழுக்களான, போலி-இடது அமைப்புகளின் பாத்திரத்தையும் அம்பலப்படுத்துகிறது. சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற குழுக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒட்டுவால்களாக செயல்படுகின்றன. சிரியாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டை ஆதரிக்கும் இந்த அமைப்புகள், ஒபாமாவும் இப்போது ட்ரம்ப்பும் சிரியாவுக்கு எதிரான ஒரு முழுவீச்சிலான போரை நடத்துவதற்கு தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுவதைக் குறித்து மட்டுமே புலம்புகின்றன.

சிரியாவின் உள்நாட்டுப் போரானது அமெரிக்கா தவிர ரஷ்யா, ஈரான், துருக்கி, ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலக சக்திகளை உள்ளிழுக்கின்ற ஒரு மோதலாக உருமாற்றம் கண்டிருக்கிறது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில், புகைமூட்டமாகத் தொடர்கின்ற சூழ்நிலைகளின் கீழ், ரஷ்ய கூலிப்படையினர் அல்லது சிப்பாய்கள் கொண்ட ஒரு சிரிய அரசாங்க-ஆதரவு படை மீது அமெரிக்க போர்விமானங்கள் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 200 பேரைக் கொன்றன. புட்டின் அரசாங்கம் அதற்கு ஒரு தீவிரமான எதிர்ப்புநிலையை எடுக்கவில்லை என்றால் அதன் காரணம், உலகின் இரண்டு மிகவும் அணுஆயுத வல்லமைமிக்க சக்திகளிடையிலான ஒரு விரிந்த போராக தீவிரப்படக் கூடிய சாத்தியத்துடன், அமெரிக்க மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையிலான ஒரு முழுவீச்சிலான இராணுவ மோதலின் வெடிப்பான பின்விளைவுகள் குறித்து மாஸ்கோ அஞ்சுகின்ற காரணத்தால் மட்டுமேயாகும்.

சிரியாவெனும் கந்தகக் கிடங்கு, மிக நன்கு புலப்படக் கூடியவற்றை மட்டும் குறிப்பிடுவதென்றால், வட கொரியா, ஈரான், தென் சீனக் கடல், உக்ரேன், பால்டிக் அரசுகள் உள்ளிட்ட, ஏகாதிபத்தியப் போரின் ஒரு வெடிப்புக்கான சந்தர்ப்பமாக துரிதமாக உருமாறத்தக்க ஏராளமான மோதல்களில் ஒன்றேயொன்று மட்டுமேயாகும். ஏகாதிபத்திய சக்திகளின், எல்லாவற்றுக்கும் முதலில், அமெரிக்காவின் போர் முனைப்புக்கு எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு அவசர அவசியம் நிலவுகிறது. இந்தக் கடமையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூலமும் மற்றும் அதன் பிரிவுகள் மூலமும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலமாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com