Thursday, March 1, 2018

அம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா? வை எல் எஸ் ஹமீட்

வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ( நான் பார்த்தவரையில்) நாலாவது ( பிரதியமைச்சர்) கச்சேரிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் விளைவு எதுவாயிருந்தாலும் அவ்விஜயம் பாராட்டப்பட வேண்டியதே! செய்திகேட்டு வேதனையுற்ற மக்களுக்கு அவர்களின் அதிகாலை விஜயம் ஓர் ஆறுதலாகவே இருந்தது.

பள்ளிவாசலில் அந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றபோது ஒரு பிரதியமைச்சர் மாத்திரமே அங்கு இருந்தார். ஏனையவர்கள் கச்சேரிக்கு சென்றிருந்தார்களோ தெரியவில்லை. பிரதியமைச்சர் ஊடகத்திற்கு பேட்டிகொடுக்க விளைந்தபோது உயர்பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையிலேயே ஒலிவாங்கி பிடுங்கப்பட்டு அமைச்சருக்கெதிராக கூச்சல் போடப்பட்டது. இதுதான் பொலிசின் கையாலாகத்தனமான நிலை.

இங்கு நாம் சிந்திக்கவேண்டியது: இனவாதிகள் அங்கு ஏன் கூச்சலிட்டார்கள்? பள்ளிவாசலுக்கு களவிஜயம் செய்தபோதா? பள்ளிவாசல்உட்பட சம்பவம் நடந்த அனைத்து இடங்களையும் பிரதியமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சுற்றிப்பார்த்தபோது யாரும் கூக்குரலிடவில்லை. ஆனால் மனிதாபிமானமற்ற இனவாதிகளுக்கு முன்னால் அவர்களின் செயலைக்கண்டித்து பேட்டிகொடுக்க முற்பட்டபோதுதான் மைக்கைப் பிடுங்கி கூக்குரலிட்டு ஓர் அசாதாரண சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது.

அவர்களின் ஈனச்செயலைக் கண்டித்து பேட்டி கொடுப்பதற்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது. ஆனால் அவர்களோ மனச்சாட்சியில்லாதவர்கள். பொலிசாரோ கையாலாகத் தனமானவர்கள். அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு முன்னாலேயே அவர்களது செயலைக் கண்டித்து பேட்டிகொடுப்பதை அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? அவ்வாறு பேட்டி கொடுக்கத்தான் முடிந்ததா?

எந்த இடத்தில் எவ்வாறு செயற்படவேண்டும்; என்று சிந்திக்க மாட்டோமா? அந்த இடத்தில் ஏற்பட்ட அசாதாரணசூழ்நிலை கூக்குரலிடுவதோடு முடிந்துவிட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அந்த சந்தர்ப்பத்தில் நமது சகோதர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தார்கள். அதுவொரு கைகலப்பாக மாறியிருந்தால் நிலைமை என்ன? அது அந்த இடத்து கைகலப்பாக மட்டுமா முடிந்திருக்கும்?

இவ்வாறான சூழ்நிலைகளில் அரசியல்வாதிகளிடம் ஒலிவாங்கியைத் தூக்கிக்கொண்டு ஊடகவியலாளர்கள் வரத்தான் செய்வார்கள். அதை சாதுர்யமாகத் தவிர்க்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பின்னர் கச்சேரியில் வைத்தோ அல்லது கல்முனயிலோ சம்மாந்துறையிலோ ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி பேட்டி கொடுத்திருக்கலாம். இனவாதிகளை பற்றி கதைத்து பிரயோசனமில்லை. அவர்கள்தான் நல்லவர்களாக இருந்தால் இந்தப் பிரச்சினை எதுவும் தோன்றாதே! நாம்தான் சாமர்த்தியமாக நடந்துகொள்ள வேண்டும். அன்று நமது சாமர்த்திய குறைபாடு பெரியதொரு அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இறைவன் பாதுகாத்தான்; அல்ஹம்துலில்லாஹ்.

சுயவிளம்பரம், சுயபுகழ்பாடல்

இன்று என்ன நடக்கின்றது. நாம் விட்ட தவறினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை வைத்தே சுயவிளம்பரமும் சுயபுகழ்பாடலும் சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை முகநூல்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எந்த அளவென்றால், தனது கட்சியிலிருந்து களவிஜயம் செய்த ஏனைய பிரதிநிகள் யாரும் களத்திற்கு விஜயமே செய்யாததுபோலவும் ஒரேயொரு பிரதிநிதியே விஜயம் செய்ததுபோலவும் அவ்விஜயத்தின்காரணமே இனவாதிகளின் கொடுக்கண்பார்வை தன்னை நோக்கித் திரும்பியதுபோலவும் சுயவிளம்பரம் செய்யப்படுகின்றது.

முகநூல் சுயவிளம்பரம், சுயபுகழ்பாடல் நோய் வன்னியில்தான் கருக்கொண்டது. அது இப்போது கல்முனைக்கும் தொற்றியிருப்பது கவலையளிக்கிறது. ஒரு ஆறுதல், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பாகங்களுக்கு அது இன்னும் தொற்றவில்லை; என்பது. அவர்கள் களவிஜயம் செய்து, கச்சேரிக் கூட்டத்திலும் கலந்துவிட்டு, அந்தச்செய்தியையும் புகைப்படங்களையும் மாத்திரம் மக்கள் தகவலுக்காக பதிவுசெய்துவிட்டு அமைதியாக இருக்கின்றார்கள்; மிகுதியை மக்கள் முடிவுசெய்யட்டும் என்று. எனவே, வன்னி வியாதியிலிருந்து கல்முனையைப் பாதுகாப்போம்.


அமைச்சரவையில் எடுத்துரைப்பு

சம்பவம் அன்றைய தினம் அமைச்சரவையில் பேசப்பட்டிருக்கின்றது. பாராட்டத்தக்கது.
சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவரமுடியாத சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டிருக்கின்றது. நல்லது. நஷ்ட ஈடு வழங்கக் கோரிக்கை விடுங்கப்பட்டிருக்கின்றது. சிறந்தது. பொலிசாரின் அசமந்தத்தினாலேயே இச்சம்பவம் நடந்தது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மிகவும் பாராட்டத்தக்கது.

மேற்சொன்ன அனைத்தையும் அளுத்கம கலவரத்தின்போதும் சொன்னோம். ஆனால் அது கின்தோட்டைக் கலவரத்தையோ அல்லது அதுவரை இடம்பெற்ற பல சிறிய சிறிய நிகழ்வுகளையோ தடுக்கவில்லை. கின்தோட்டைச் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை இவையனைத்தையும் சொன்னோம். ஆனால் அது அம்பாறைத் தாக்குதலைத் தடுக்கவில்லை. அம்பாறைத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை கூறியிருக்கின்றோம். ஆனால் நேற்று மீண்டும் இனவாதிகள் அம்பாறையில் முஸ்லிம் வீடுகளுக்குச்சென்று யாராவது கைதுசெய்யப்பட்டால் பள்ளிவாசலையும் உடைத்து உங்களையும் துரத்துவோம்; என்று கூறிவிட்டுப் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சியம்பலாண்டுவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருங்கிறார்கள். முஸ்லிம் வர்த்தகர்கள் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது. எனவே, இந்த அமைச்சரவையில் பேசியது அடுத்த தாக்குதலைத் தடுக்குமா?

எங்கு தவறு

அமைச்சரவையில் பேசியது தவறல்ல. பேசவேண்டும். ஆனால் ஒவ்வொரு இனக்கலவரமும் பொலிசாரின் அல்லது பாதுகாப்புத் தரப்பினரின் அசமந்தம் என்கின்ற பங்களிப்போடுதான் இடம்பெற்றிருக்கின்றன. அவைகள் நமது அமைச்சர்களால் அரசுக்கும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அசமந்தமும் தொடர்கிறது. முஸ்லிம்களின் அவலமும் தொடர்கிறது. எனவே, எங்கே பிழை?

எங்கே பிழை என்றால் அதை நம்மவர்கள் சுட்டிக்காட்டிவிட்டு அதற்கு போதிய விளம்பரத்தையும் ஊடகங்களில் கொடுத்துவிட்டு, அவ்விளம்பரத்திற்கு, “ கர்ஜித்தார்கள், ஆக்ரோசப்பட்டார்கள், கதிரையைத் தூக்கினார்கள், பொலிஸ்மாஅதிபரின் சேர்ட்கொலரைப் பிடித்தார்கள்” என்றெல்லாம் அணிகலனும் சேர்த்துவிட்டு, பொதுமக்களை போதுமான அளவு நம்பவைத்துவிட்டோம் நம் கடமையைச் செய்ததாக; என்று ஓய்ந்து விடுவார்கள். அடியாட்கள் சில நாட்கள் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். பொதுமக்களும் நம்பிவிடுவார்கள். புகழாரமும் சூட்டுவார்கள். மீண்டும் பல்லவி.

செய்யவேண்டியதென்ன?

உங்களிடம் பேரம்பேசும் சக்தி இருக்கின்றது; என்பது உண்மையானால் சுட்டிக்காட்டத் தெரிந்த உங்களுக்கு அவ்வாறு கடமை தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவைக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான ஒரு சம்பவத்திலாவது ஒரு அதிகாரி தண்டிக்கப்பட்டிருக்கின்றாரா? அவ்வாறு ஒரு அதிகாரியாவது தண்டிக்கப்பட்டால் முழு பாதுகாப்புத்தரப்பிற்கும் அது ஒரு எச்சரிக்கையாக மாறும்.

அதேநேரம் இந்நாட்டில் கடமை தவறியதற்காக, அசமந்த போக்கிற்காக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லையா? ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட ஓட்டுமொத்த பொலிசாரையும் இடமாற்றம்செய்து விசாரணை நடாத்தி தண்டித்த வரலாறுகளெல்லாம் தெரியாதா?

பொலிசார் அன்று சரியாக செயற்பட்டிருந்தால் அன்றிரவு களத்தில் இருந்தே ஒரு ஐம்பது பேரையாவாது கைதுசெய்ய முடிந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. இப்பொழுது யாரையாவது கைதுசெய்வதாக இருந்தால் அது முஸ்லிம் தலைவர்களின் அழுத்தத்தில் கைதுசெய்கின்றார்கள். அவர்களின் அழுத்தத்தில் எவ்வாறு சிங்களவர்களைக் கைதுசெய்ய முடியும். நாம் ஆர்ப்பாட்டம் செய்வோம். உங்கள் பள்ளியை மீண்டும் உடைப்போம். உங்களைத் துரத்துவோம்; என்கிறார்கள்.

எனவே, பொலிசார் தன்கடமையைச் செய்யாதவரை இதற்கு தீர்வில்லை. கடமைதவறிய பொலிசார் தண்டிக்கப்படாதவரை அவர்கள் கடமையைச் செய்யப்போவதில்லை. இதனைச் செய்விக்க முடியாதவரை அரசியல்தலைவர்களின் படங்கள் ஓடப்போவதில்லை.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஓரளவு பாதுகாப்பு இருப்பதாகவும் மோடி ஆட்சியில் இல்லை; என்றும் கூறுகிறார்கள். ஏன்? இரு ஆட்சியிலும் ஒரே பாதுகாப்புத்தரப்பினர்தான், ஒரே இனவாதிகள்தான், ஒரே ஆர் எஸ் எஸ் தான், ஒரே காவிகள்தான். என்ன வித்தியாசம்.

காங்கிரஸ் ஆட்சியில் இனவாதிகள் களத்தில் இறங்கினால் சட்டம் தன்கடமையைச் செய்யும்; என்று அவர்களுக்குத் தெரியும். எனவே அடக்கி வாசிப்பார்கள். மோடி ஆட்சியில் சட்டம் அவர்களை ஆசீர்வதிக்கும். இங்கு எல்லா ஆட்சியிலும் சட்டம் இனவாதிகளை ஆசீர்வதிக்கின்றது. இந்த ஆட்சி நம்முடைய ஆட்சி. ஏனெனில் நமது முட்டில் தங்கியிருக்கின்ற ஆட்சி. பிரதமர் பதவியைக் காப்பாற்ற நம்மைத்தான் அழைத்துக்கொண்டு செல்வார்கள். ஆனாலும் இந்நாட்டில் நமக்குப் பாதுகாப்பில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com