Sunday, August 3, 2014

மோடியின் அரசாங்கம் த.தே. வுக்கு கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்! பேராசையால் இந்தியாவை வெறுக்க வைத்தது விக்கியா??

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பீடமேறிய அடுத்த நாளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத் தந்துவிடுவார் எனும் அதீத நம்பிக்கையிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நரேந்திர மோடி தலைமையி லான புதிய அரசாங்கம் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கை கள் எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கி இல்லாமற் செய்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திவரும் வலுவானதும், நெருக்கமானதுமான இராஜதந்திர மற்றும் நட்பு ரீதியான உறவு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்நாடு மீது வைத்திருந்த பலமான நம்பிக்கை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் தம்மையே முதலாவதாக அழைத்து இலங்கைத் தமிழர் விடயமாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்துவார் எனவும், இலங்கை அரசிற்கு தமது சொற்கேட்டு பாரிய அழுத்தத்தைக் கொடுப்பார் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால் இன்று அவ்வரசு ஆட்சிபீடமேறி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் குறித்து எவ்வகை யிலும் சிறிதள வேனும் அலட்டிக்கொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துடனேயே சகல விடயங்களிலும் பேசி வருகிறது.

தமிழ்க் கூட்டமைப்பு எதிர்த்து வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்துமாறும் இந்தியா கூட்டமைப்பிடம் கேட்டும் உள்ளது. முரண்டு பிடிக்கும் எதிர்ப்பு அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனவும் இந்தியா தனது அறிக்கைகள் மூலமாக மறைமுகமாகத் தெரிவித்தும் வருகிறது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்றிருந்தால் இந்தியாவின் இந்தக் கடும் போக்கில் தளர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் இது தொடர்பாக அன்று தமிழ்க் கூட்டமைப்பும், முதலமைச்சரும் விடுத்த காரசாரமான அறிக்கைகளே இன்றைய நிலைக்குக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை அமைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இந்தியா ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டாது எனவும், இலங்கையில் இன அழிப்பு என்ற ஓர் சம்பவம் ஒருபோதும் நடைபெறவில்லை என்பதை ஐ.நா மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் கூட சுட்டிக் காட்டவில்லை என்றும் இந்திய அரசின் முக்கியஸ்தரான டாக்டர். சுப்பிரமணியம் சுவாமி தலைமையில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஐவரடங்கிய குழுவினால் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இது இந்திய அரசாங்கத்தின் கருத்தாகவே அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கைக்கு எதிராக எந்தவொரு அரசியல் காய்நகர்த்தல்களை யும் இந்தியா மேற்கொள்ள மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்து ள்ளது. அத்துடன் வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கொழும்பில் இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந் தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்பர் என இந்தியா அறிவித்துள்ளது. இதுவும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதேவேளை தம்மை வந்து சந்திக்குமாறோ அல்லது தாம் அனுப்பிய கடிதத்திற்கு இந்திய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் விடுக்க வில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்குவிஜயம் செய்ய உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்திய மத்திய அரசாங்கம் தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு இதுவரையில் உத்தி யோகபூர்வ அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

1 comments :

Arya ,  August 3, 2014 at 3:42 PM  

இலங்கை பிரச்சனையில் சுயநலம் இல்லாமல் உண்மையை சொல்பவர்கள் இருவர் தான் இந்தியாவில் உள்ளார்கள் , ஒருவர் திரு சோ , மற்றவர் சுவாமி அவர்கள் , மற்றவர்கள் அரசியல் செய்வதே விடுதலை புலி பினாமிகள் கொடுக்கும் பணத்தில் தான், இந்தியா இலங்கை விடயத்தில் 1980 களில் தலையிடாமல் இருந்திருந்தால் , இலங்கை எப்போவோ , சிங்கபூர் , மலேசியா , ஹாங்காங் , தைவான் மாதிரி முன்னேறி இருக்கும், தேவை இல்லாமல் இந்தியா பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும் பயிற்ச்சியும் கொடுத்து , அந்த பயங்கர வாதிகளால் தமது முன்னாள் பிரதமரை இழந்தது தான் கண்ட பலன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com