ஜேர்மன் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் யுத்த எதிர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாக்க முனைகின்றன. By Christoph Dreier
சமீபத்திய மாதங்களாக ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், ஜேர்மன் இராணுவத்தை உலகில் மிக பலமானதாக நிலைநிறுத்த மிக பகிரங்கமாக அழைப்புவிடுத்து வருகிறார். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயுரூட்டும் இந்த முயற்சியை மக்களின் பெரும்பான்மையினர் தீர்க்கமாக நிராகரிக்கின்றனர். அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மற்றும் அரசு வழக்குத்தொடுனர் அலுவலகமும் இப்போது யுத்த எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து வருவதோடு, அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகளைத் தொடங்க தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில், இதுவரை பெரிதும் அறியப்பட்டிராத ஒரு இடது கட்சி அரசியல்வாதியின் பேஸ்புக் பதிவு சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த திங்களன்று 28 வயதான பிராண்டன்பேர்க் மாநில சட்டமன்ற பிரதிநிதி நோர்பேர்ட் முல்லர், கௌவ்க்கின் யுத்த கொள்கைகள் மீதான தேவாலய பாதிரிமார்கள் பலரது விமர்சனங்களைக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு எழுதினார்: “சிலர் [அவர்களுடைய நம்பிக்கைக்கு] உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனையவர்கள் கூட்டாட்சி ஜனாதிபதிகளாக மற்றும் அருவருப்பான யுத்தவெறியர்களாக இருக்கிறார்கள்,” என்று எழுதியிருந்தார்.
அந்த பதிவு பல்வேறு ஊடகங்களால் கையிலெடுக்கப்பட்டதோடு, “ஜனாதிபதியை அவமதிப்பதாக" கண்டிக்கப்பட்டது. குற்றவியல் நெறிமுறை சட்டத்தின் 90வது பிரிவின் கீழ் மற்றும் கூட்டாட்சி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால், அதுபோன்ற இழிவுபடுத்தல், ஜேர்மனியில் ஒரு குற்ற நடவடிக்கையாகும்—மேலும் அவர்களுக்கு மூன்று மாதங்களில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரையில் அதற்காக சிறை தண்டனையும் வழங்க முடியும். போட்ஸ்டாம் பொது வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் Spiegel Onlineக்கு கூறுகையில், அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து வருவதாக தெரிவித்தார். புதனன்று கௌவ்க் கூறுகையில், வழக்கு தொடுப்பதற்கு தாம் வழக்கறிஞருக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அதே நாள், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் [CDU], கிறிஸ்துவ சமூக ஒன்றியம் [CSU] மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி [SPD] ஆகியவற்றின் பிரதிநிதிகள் பேஸ்புக் பதிவை கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் (Bundestag) பொது விவாதத்திற்கு ஒரு தலைப்பாக கொண்டு வந்திருந்தனர். அந்த விடயத்தில் இடது கட்சி கன்னையின் தலைவர் கிரிகோர் கீசி அவரது நிலைப்பாட்டை விளக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
SPDஇன் ஒரு பிரிவு தலைவர் தோமஸ் ஓப்பெர்மான், முல்லரின் கருத்தை "நம்பவியலாத அவமதிப்பு விமர்சன துணுக்காக" குறிப்பிட்டதோடு அதற்கு கீசி தனிப்பட்ட முறையில் பொறுப்பாவதாக அவரைக் குற்றஞ்சாட்டினார். ஓப்பெர்மானின் கருத்துப்படி, “ஜனாதிபதியின் வார்த்தைகளை வார்த்தைஜாலத்தில் திரித்ததில்" இருந்து அவரது அந்த "விசித்திரமான மடத்தனம்" வருகிறது, மேலும் அவர் இடது கட்சியை தேசிய சோசலிஸ்டுகளோடு இணைத்துப் பேசி அவரது உரையை நிறைவு செய்திருந்தார். ஓப்பெர்மான் கூறுகையில், முல்லரின் விமர்சனத்தை SPD தீவிரமாக எடுக்கிறது, “ஏனென்றால் வைய்மார் குடியரசில் ஜனாதிபதி எபெர்டுக்கு எதிராக அந்த மூலோபாயம் தான் நாஜிகளால் பயன்படுத்தப்பட்டது", என்று தெரிவித்தார்.
கீசி தன்னைத்தானே முல்லரிடமிருந்து தூர விலக்கி கொண்டு விடையிறுப்புக் காட்டினார். முல்லர் "தவறாக வெளிப்படுத்தி இருந்ததாக,” கூறிய அவர், கௌவ்க் ஒரு "அருவருப்பான யுத்தவெறியர்" கிடையாது என்றார். “ஒரு கட்சியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் என்ன கூறுகிறார்களோ அதற்கெல்லாம் எந்த கட்சியும் பொறுப்பாக முடியாது,” என்றும் கீசி அறிவித்தார். இடது கட்சி தலைவர் பேர்ன்ட் ரிக்சிங்கரும் முல்லரிடமிருந்து தன்னைத்தானே தூர நிறுத்திக் கொண்டார், அவர் கூறுகையில், யுத்த நடவடிக்கைகள் மீதான இப்போதைய விவாதம் "[ஜனாதிபதி] அலுவலக கௌரவத்திற்கு மதிப்பளித்து, முற்றிலுமாக புறநிலைரீதியாக இருக்க வேண்டுமென" அறிவித்தார்.
யுத்த எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கான பிரச்சாரம் இடது கட்சிக்கு எதிராக திருப்பி விடப்பட்டு வருவதல்ல. அந்த கட்சி ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் மீள்-இராணுவமயமாக்கலைச் செயல்படுத்த கூட்டாட்சி அரசாங்கத்தோடு நெருக்கமாக வேலை செய்து வருகிறது. கடந்த செவ்வாயன்று தான் அதன் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் ஸ்ரெபான் லீபிஹ் கூறுகையில், வெளிநாடுகளில் ஜேர்மன் இராணுவ [Bundeswehr] நடவடிக்கைகளை ஆதரிப்பதில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியோடு சாத்தியமான கூட்டணியில் தங்கள் கட்சியும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
அதற்கு மாறாக, முல்லருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், உண்மையான அனைத்து யுத்த எதிர்ப்பாளர்களையும் மிரட்டவும், மற்றும் குற்றவாளியாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி கடந்த பல மாதங்களாக, இராணுவ சக்தியை வெளிப்படையாக பயன்படுத்துவது உட்பட, ஜேர்மனியின் தரப்பிலிருந்து இன்னும் கூடுதலான தீவிர சர்வதேச பொறுப்பை ஏற்பதைத் திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
சாதகமான ஊடக விடையிறுப்பைக் கணக்கிட்டு, கௌவ்க் 2013 ஜேர்மன் ஐக்கிய தினத்திலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் முனிச் பாதுகாப்பு மாநாட்டிலும் அதேமாதிரியான கண்ணோட்டத்தை வெளியிட்டார். ஜேர்மனி சர்வதேச அளவில் "கடமையில் இருந்து நழுவும்" ஒன்றாக மதிக்கப்படுவதாகவும், ஆகவே அது நிறைய சவால்களை முகங்கொடுக்க தயாராக வேண்டி இருப்பதாகவும் அவர் முனிச்சில் அறிவித்தார். இரண்டு உரைகளுமே மிக கவனமாக தயாரிக்கப்பட்டிருந்தன என்பதோடு கூட்டாட்சி அரசாங்கத்தோடு ஒருங்கிணைந்திருந்தன.
கடந்த 15 ஆண்டுகளாக, சேர்பியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தங்களில் ஜேர்மனி ஈடுபட்டு வந்துள்ளது, மேலும் அது ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திலும் அமெரிக்காவிற்கு இராணுவ தளவாட உதவிகளை கையாள்வதில் ஒத்துழைப்பை வழங்கியது. இதே கூட்டாட்சி அரசாங்கம், உக்ரேனில் ஸ்வோபோடா மற்றும் Right Sector பாசிசவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொடூரமாக ஆதரிக்கப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு உடந்தையாய் இருந்தது. சேர்பிய மற்றும் ஈராக்கிய யுத்தங்கள் இரண்டுமே ஐக்கிய நாடுகளின் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டதோடு, அவ்விதத்தில் அவை தற்போதைய சட்ட விதிமுறைகளின்படி சர்வதேச சட்டத்தை மீறி இருந்தன. ஆகவே அதிக பலத்தோடு இராணுவம் களத்தில் இறங்க வேண்டுமென பரிந்துரைக்கின்ற கௌவ்கே கூட அந்த சட்டத்தை மீறுகிறாரா என்று ஒருவர் கேட்க வேண்டியதிருக்கிறது.
யுத்த எதிர்ப்பாளர்களைத் தண்டிப்பதற்காக, “கூட்டாட்சி ஜனாதிபதியை அவமதிப்பது" மீதான சட்ட விதிமுறைகளை பயன்படுத்துவதற்கான யோசனை, ஜேர்மனியில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் மரபுகளை பின்தொடர்கிறது.
மேதகு பதவியில் இருப்போரை (lèse majesté) அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் மீள்ஆயுதமயமாக்கலின் எதிர்ப்பாளர்களை மிரட்ட வில்ஹெல்மிய சாம்ராஜ்ஜியத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். 1896 மற்றும் 1907க்கு இடையே மட்டும், Vorwärts எனும் சமூக ஜனநாயக பத்திரிகை இந்த சட்டத்தின் கீழ் 907 முறை குற்றஞ்சாட்டப்பட்டது. தகுதியற்ற பேரரசரைக் குற்றஞ்சாட்டியதற்காக 1904இல் சிறையில் அடைக்கப்பட்டவரும், சோசலிஸ்டும், யுத்த எதிர்ப்பு நடவடிக்கையாளருமான ரோசா லுக்சம்பேர்க் மற்றொரு முக்கிய எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
1908க்குப் பின்னர், மேதகு பதவியில் இருப்போர் மீதான சட்ட விதிமுறைகள் பின்புலத்தில் நீர்த்துப் போயின. இருந்த போதினும், தனிநபர் குற்றச்சாட்டுகளோடு சம்பந்தப்பட்ட அதுபோன்ற சட்டவிதிகள் சமாதானவாதிகள் மற்றும் யுத்த-எதிர்ப்பு போராட்டக்காரர்களை சிறைபடுத்த பயன்படுத்தப்பட்டன. முதலாம் உலக யுத்தம் தொடங்கியதற்கு சற்று முன்னர், லுக்சம்பேர்க் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை அவர் "அதிகாரிகளின் உத்தரவுகளை மற்றும் சட்டங்களை மீற தூண்டிவிட்டதாக" குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவர் மனச்சாட்சிப்படி அதை கைவிடுவதாக அறிவிக்க அழைக்கப்பட்டிருந்தார்.
1918 புரட்சியோடு, தனிநபர்களின் சர்ச்சைமிக்க கண்ணோட்டங்கள் மீதான உரிமைகளை மட்டுப்படுத்தும் சட்டம் முதலில் நீக்கப்பட்டது. ஆனால் ஜூன் 1922இல் தீவிர வலதால் வெளியுறவுத்துறை மந்திரி வால்த்தெர் ராத்தெனாவ் படுகொலை செய்யப்பட்ட போது, சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர சமூக ஜனநாயக கட்சி [USPD], கதோலிக் மத்திய கட்சி மற்றும் ஜேர்மன் மக்கள் கட்சி [DVP] ஆகியவை குடியரசின் பாதுகாப்பிற்காக அந்த சட்டத்தை அமலாக்கின, அது குடியரசு மற்றும் அதன் ஜனாதிபதியை அவமதிப்பதை ஒரு தண்டனைக்குரிய நடவடிக்கையாக ஆக்கியது.
ஆனால் இந்த சட்டம் அதிதீவிர வலதிற்கு எதிராக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அது கம்யூனிஸ்ட் கட்சி [KPD] மற்றும் ஏனைய இடதுசாரி குழுக்களுக்கு எதிராக ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. 1924இல், குடியரசின் பாதுகாப்பிற்கான சட்டத்தோடு சம்பந்தப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு குற்றத்தீர்ப்புகள் கம்யூனிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது; 1925 மற்றும் 1926இல், அதுபோன்ற அனைத்து குற்றத்தீர்ப்புகளுமே அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்தன. 1925இல் மட்டும், ஏறக்குறைய 268 கம்யூனிஸ்டுகள் இந்த சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமூக முரண்பாடுகள் தீவிரமடைந்து, மீள்ஆயுதமயமாக்கல் அதிகரிக்கப்பட்ட போது, அந்த அரசியல் நீதிமுறைக்குள் இருந்த வாக்கியங்கள் இன்னும் கொடூரமாக மாறின. இதற்கு பலியான நன்கறியப்பட்ட ஒருவர், அமைதிவாத கார்ல் வொன் ஓஸ்ஸிஸ்ட்கி ஆவார், இவர் 1931இல் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், ஏனென்றால் அவர் வைய்மார் குடியரசின் ஆயுதமேந்திய படையான ரைய்ஷ்வெஹ்ரின் சட்டவிரோத மீள்ஆயுதமயமாக்கலை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அவர் விடுவிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகவில்லை, ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு சற்று முன்னதாக, நாஜிக்கள் ஓஸ்ஸிஸ்ட்கியை வதை முகாமிற்கு (concentration camp) அனுப்பிவிட்டனர். அங்கே அவர் அனுபவித்த துஷ்பிரயோகங்களின் விளைவாக அங்கேயே அவர் இறந்து போனார்.
யுத்தத்திற்குப் பின்னர், “கூட்டாட்சி ஜனாதிபதியை அவமதிப்பதை" ஒரு தண்டனைக்குரிய குற்றமாக்கும் குற்றவியல் சட்டவிதிகளின் 90வது பிரிவு, குடியரசின் பாதுகாப்பிற்கான சட்டவிதிகளுக்கு மேலதிகமான ஒன்றாக கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதிகள் தியோடர் ஹெய்ஸ் மற்றும் ஹைன்ரிச் லூப்க் மூன்றாம் குடியரசில் அவர்கள் வகித்த பாத்திரத்தை அம்பலப்படுத்த முயன்ற விமர்சகர்களை எதிர்க்க முதன்மையாக அதை பயன்படுத்தினார்கள். கடந்த 20 ஆண்டுகளில், அந்த சட்டவிதி அரிதாகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் எப்போதெல்லாம் யுத்த தயாரிப்புகளுக்கு திரும்புகிறதோ, தனிநபர்களின் அரசியல் கண்ணோட்டங்கள் மீதான உரிமைகளை மட்டுப்படுத்தும் சட்டங்களும் திரும்பி வருகின்றன. யுத்த எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு தொடுப்பது குறித்து நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையானது, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்.
0 comments :
Post a Comment