விஜித தேரரின் மீதான தாக்குதலை SLMDI UK அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறோம்! SLMDI
இலங்கையில் பாரிய திட்டமிடலுடன் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் பயங்கரவாத வன்முறையின் இன்னொரு கோர வடிவமாகவே வடரக்க விஜித தேரரின் மீது இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் தாக்குதலை SLMDI UK அமைப்பு நோக்குகிறது.
இலங்கை முஸ்லிம்களின் மீதான அத்துமீறல்களை வெறுக்கின்ற பெரும்பான்மையான பௌத்த மக்களின் மனச்சாட்சியாக ஆரம்ப காலத்திலிருந்தே வட்டரக்க விஜித தேரர் செயற்பட்டு வருபவர் என்பதை இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மதிப்புடன் நினைவுபடுத்துகின்றோம்.
இன்று காலை பாணந்துறை பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயக்கமாக மீட்கப்பட்ட விஜித தேரர் அவர்கள் கடுமையான அடி மற்றும் குரூர வெட்டுக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறோம்.
ஒரு பௌத்த பெரும்பான்மை நாட்டில் நேர்மைக்காகக் குரல் கொடுக்கின்ற, அதற்காகத் தூய்மையாகப் போராடுகின்ற ஒரு பௌத்த மத குருவுக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பதானது இலங்கையின் காவல் துறையினதும் ஏனைய சட்ட ஒழுங்கைப் பேணுகின்றவர்களினதும் பணிகளின் அர்த்தத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது என்பதை விசனத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மதிப்புக்குரிய விஜித தேரர் அவர்கள் மீதான இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எமது அமைப்பு பிரித்தானிய வாழ் அனைத்து இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
அத்தோடு பாதிக்கப்பட்டிருக்கும் ஜனநாயகப் போராளி விஜித தேரர் அவர்களுடன் எமது கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறது.
இந்த வன்முறைச் சம்பவத்துக்கு இலங்கை அரசாங்கமும் பொலீஸ் மா அதிபரும் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனே சட்டத்தின் படி தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறும் எமது அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
அத்தோடு நமது சமூகத்தின் மீது நடாத்தப்படும் திட்டமிட்ட வன்முறைகளுக்கெதிராக உண்மையான பௌத்த அறங்களைக் காப்பதற்காக துணிவோடு அக்கிரமக்காரர்களை எதிர்த்துப் போரடும் விஜித தேரர் அவர்கள் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்குத்திரும்பி வர ஹிதயாத்தையும், ஸலாமத்தையும் கொடுக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்திகுமாறு இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர் முஸ்லிம் உறவுகளை அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
0 comments :
Post a Comment