Wednesday, June 18, 2014

பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றிய நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!! (படங்கள்)

மணமகன் தேவை என பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றிய சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் அமில ஆரியசேன உத்திரவிட்டார். மணமகன் தேவை என பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, ஹற்றன் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் குமாஸ்தாவாக கடமை புரியும் பெண் ஒருவரை (37) கடந்த முதலாம் திகதி திருமணம் முடிப்பதாக தெரிவித்து அவரை ஒரு முச்சக்கரவண்டியில் நோர்வூட் பகுதிக்கு கொண்டு சென்று குறித்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க ஆபரணங்களை அபகரித்து விட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து நோர்வூட் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை 4ம் திகதி இரவு நுவரெலியா பீட்ரூ தோட்டத்தில் வைத்து சந்தேக நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கடந்த 5ம் திகதி மாலை ஹற்றன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் அமில ஆரியசேன குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த 16ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் அடையாள அணிவகுப்பும் நடாத்தப்பட்டது. இதில் அப்போது சந்தேக நபரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டினார். அத்தோடு கடந்த மாதம் 18ம் திகதி கொழும்பு தெம்மட்டகொட, பேஸ் லைன் வீதியில் இலக்கம் 40 ல் வசிக்கும் 40 வயதுள்ள 3 பிள்ளைகளின் தாயாரை வெள்ளை வானில் கடத்தி கொண்டு வந்து ஹற்றன் வில்பிரட் பிரதேசத்தில் தேயிலை காட்டுப்பகுதியில் கட்டி வைத்த சம்பவத்திற்கும் மேற்படி சந்தேக நபர்க்கும் தொடர்பு இருப்பதாகவும் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது தெரியவந்துள்ளது.

எனவே நுவரெலியா பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த மாதவன் சுரேஷ்குமார் (41) என்ற குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் மாவட்ட நீதவான் அமில ஆரியசேன உத்தரவிட்டார்.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com