கிளிநொச்சியில் இணையம், சமூக ஊடகம் சம்மந்தமான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு!
உலகத்தையே ஒரு குக்கிராமமாக மாற்றி, அதில் எண்ணி லடங்காத சாத்தியங்களை உருவாக்கிய பெருமை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தையே சாரும். ஒரு தனிநபரின் அன்றாட தேவைகளுக்குள் கணினி மற்றும் இணையம் அடங்க வேண்டிய கட்டாயத்தை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உண்டுபண்ணியுள்ள தெனலாம். விடியும் ஒவ்வொரு பொழுதும் புதிய பல சவால்கள் நிறைந்ததாகவும் தொழில்நுட்ப சாத்தியங்களின் அளவு அதிகமானதாயும் காணப்படுகின்றது.
தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட கண்டுபிடிப்பான இணையம் தனிநபருக்கும் சமூகத்திற்கும் வழங்கும் நன்மைகள் அளப்பறியன. பொருளாதார விருத்தி, இலகு தொடர்பாடல் வசதி, வினைத்திறனான செயற்பாட் டுக்கான வழி என அதன் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வாறான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு அது தொடர்பான தெளிவான அறிவும் விழிப்புணர்வும் அவசியமாகின்றது.
தமது திறமைகளுக்கு களமில்லாமல் தவிக்கின்ற பலரினதும் ஏக்கங்கங்களை இணையம் இல்லாதொழித்திருக்கிறது. உலகளவிலே தமது திறமைகளை வெளிக்காட்டி அதற்கு பல நாடுகளின் ஆர்வலர்களிடமிருந்தும் விமர்சனங்களைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியத்தை இணையம் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் மாணவச் செல்வங்களுக்கும் ஏனையவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவர்களாக புடம் போடச் செய்வதற்காக சமுயோ கனடா நிறுவனத்தின் அணுசரனையில் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28.01.2014) காலை 10 மணிக்கு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இணையத்தின் நன்மைகளை அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பிரயோகிக்க முடியும் என்பதில் விஷேட பாண்டித்தியம் பெற்ற, இலத்திரனியல் வணிக ஆலொசகரும் சுயஆளுமை விருத்தி பேச்சாளரும், இலங்கைக்கான சர்வதேச இணைய சமூக அத்தியாயம் மற்றும் இணைய பொறியியல் பணிப்பிரிவின் செயற்குழு உறுப்பின ருமான, இஸ்ரத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இந்த விழிப்புணர்வு கருந்தரங்கு நடைபெறவுள்ளது.
இணையத்தை தமது கல்வி தொடர்பான விடயங்களை மேற்கொள்ள எவ்வாறு பயன்படுத்துவது, வீட்டிலிருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மற்றும் இணையத்தில் பொருள்களை சந்தைப்படுவது எவ்வாறு, சமூக ஊடகம் அதன் நன்மை தீமைகள், பாதுகாப்பான இணையம் என பல விடயங்கள் மிகவும் தெளிவாக இஸ்ரத் இஸ்மாயில் அவர்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
நாளைய தலைவர்களாக உருவாகவிருக்கும் மாணவச் செல்வங்கள், நாளுக்கு நாள் முன்னேறிவரும் இணையம், சமூக ஊடகம்
மற்றும் தொழில்நுட்ப விடயங்களை தமது அறிவுக்கு இற்றைப்படுத்திக் கொள்ளும் அவசியம் காலத்தின் தேவையாகும். இதன் போதே, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தமது முன்னேற்றத்தின் வழிக்காக பாவிக்கக்கூடிய வழிகள் உணரப்படும். எதிர்காலத்தில் தொழில்நுட்ப சாத்தியங்கள் கொண்ட புத்தாக்கங்களை வெளியிடக்கூடிய அறிவும் இதன் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்பது வெளிப்படையான உண்மையே.
ஒரு சமூகத்தில் ஏழை மற்றும் பணக்காரர் என்ற பாகுபாடு காணப்படுவது போல், இப்போது, 'டிஜிடல் இடைவெளி' என்ற சுட்டியும் ஒரு சமூகத்தின் தொழில்நுட்ப அறிவை அளந்து கொள்ளும் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. தொழில்நுட்ப விடய ங்களை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை இழிவளவாக்குவதில் இந்தக் விழிப்புணர்வு கருத்தரங்கு பெரும் பங்காற்றும் என நம்பப்படுகிறது.
தொழில்நுட்பத்தின் மூலமாக, எமது சமூகத்தை உலகக் குக்கிராமத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் எதிர்காலச் சிற்பிகளை செதுக்கும் என்ற செயற்றிட்டத்தின் முன்னோட்டமாக இந்த விழிப்புணர்வுக் கருந்தரங்கு இடம்பெறவுள்ளது. இன் நிகழ்வில் விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்வதுடன் இந்த முயற்சியும் முன்னெடுப்பும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திப்போம்.
0 comments :
Post a Comment