Wednesday, October 30, 2013

கணவனை தற்கொலை செய்ய வைத்த பேஸ்புக்!

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தமது திருமண புகைப் படத்தினை அகற்றுமாறு மனைவியிடம் கோரியுள்ளார். அதனை அகற்ற மறுத்ததினால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை,இந்தியாவின் மைலாப்பூரில் இடம்பெற்றுள்ளது. சாந்தன்குமார் சிங் (வயது 29) என்ற இளைஞனே மனவுளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

ஜார்கந்தைச் சேர்ந்த சாந்தன்குமார் சிங்கும் சென்னையைச் சேர்ந்த சந்தியாவும் மைலாப்பூரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்தார்கள். இருவருக்கும் சில வருடங்களாக காதல் தொடர்பு இருந்துவந்துள்ளது. சாந்தனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சந்தியாவின் குடும்ப அங்கத்தவர்களின் ஆசீர்வாதத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவரும் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். சந்தியாவின் குடும்பம் மாற்று மதத்தினைச் சார்ந்தது என்பதனாலேயே சாந்தனின் குடும்பம் இந்த திருமணத்தினை விரும்பவில்லை.

இந்நிலையில், ஜூலையில் நடந்த திருமண புகைப்படத்தினை சந்தியா தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை, சாந்தனின் உறவுக்காரர் ஒருவர் கண்டு, இவ்விடயம்பற்றி சாந்தனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தேவாலயத்தில் நடந்த திருமணம் என்பதால் அவர்களின் உறவுக்காரர்கள் கண்டால் பாரிய பிரச்சினை வரும் என்பதை உணர்ந்து பெற்றோர் மனமுடைந்தனர். இதனை தங்களின் மகனிடமும் எடுத்துக்கூறி, தயவுசெய்து அந்த புகைப்படத்தினை அகற்றிவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெற்றோரின் மனநிலையினை புரிந்துகொண்ட சாந்தன், தனது மனைவியிடம் அந்த புகைப்படத்தினை மனிதாபிமான முறையில் அகற்றிவிடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தினை பேஸ்புக்கிலிருந்து அகற்ற மறுத்த சந்தியா, வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

சாந்தன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதனை சந்தியா ஏற்க மறுத்ததால், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் வேறு அறையில் சாந்தன் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நீண்டநேரமாகியும் தனது கணவன் அறையினைவிட்டு வெளியில் வராததை அவதானித்த சந்தியா, கணவனின் அறையினை திறந்து பார்த்தபோது, சாந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக் கண்டு அலறியிருக்கிறார்.

தனது பிடிவாதத்தினால் கணவனை இழந்துவிட்ட மனவுளைச்சலில் சந்தியா துடித்துப் போயிருக்கும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com