Thursday, September 19, 2013

சித்தார்த்தனுக்கும் உதயனுக்கும் எதிராக நடவடிக்கை எடுங்கள். தேர்தல் உதவி ஆணையாளரிடம் சகாதேவன் வேண்டுதல்.

புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தருமலிங்கம் சித்தார்த்தன் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய கருத்துக்கள் தமது கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு எதிராக உதவித் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் சகாவேதவன் தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ளார் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஜனநாயக ஐக்கிய முன்னணி
713, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
19.09.2013

உதவித்தேர்தல் ஆணையாளர்,
தேர்தல் தெரிவு அலுவலகம்,
யாழ்ப்பாணம்.

ஐயா!


நாங்கள் இக்கடிதத்தில் தாழ்மையுடன் அறியத்தருவது யாதெனில், மேற்காட்டிய கட்சியில் வேட்பாளர்களாக இருக்கிறோம். எமக்கு எதிராக 19.09.2013 உதயன் செய்தித்தாளில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளரான தர்மலிங்கம் சித்தார்த்தன் எமது கட்சிக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட விமர்சனக்கருத்துக்களை கூறியுள்ளார். அவை வருமாறு:

1. நாம் சிங்கள அரசின் கைக்கூலிகள் என்றும்,
2. எமது கட்சித் தலைவர் ஒரு சிங்களவர் என்றும்,
3. நாம் எம்.ஜி.ஆர் (முன்னாள் முதலமைச்சர் தமிழ் நாடு), தந்தை செல்வநாயகத்தின் படங்களை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும்,

கூறி தமிழரசுக்கட்சி தான் வடமாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்கு எமது கட்சியையும், வேட்பாளர்களையும் அவமானப்படுத்தி வாக்குகளைப் பெற முயற்சித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் எமது கட்சி மீதும், வேட்பாளர்கள் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.

இது சம்மந்தமாக உதயன் பத்திரிகையாளர்களிடம் முறையிட்டபோது, தேர்தல் பற்றி இனி எதுவும் வெளியிட முடியாது என மறுத்துவிட்டனர். ஆனால் நேற்று இரவு பன்னிரண்டு மணிக்கு பின்னர் தேர்தல் சட்டத்தின் படி அது சம்மந்தமாக அறிக்கையோ, விளம்பரமோ விட்டிருக்கக் கூடாது என தேர்தல் சட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி உதயன் பத்திரிகையாளர்கள் இதனை தமிழரசுக்கட்சியின் சார்பாக வெளியீடு செய்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாது இதற்கு முன்னரும் எமது கட்சிக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ செயலாளரை தவறாக எமது கட்சி பயன்படுத்துவதாக 14.09.2013 அன்று வெளியான உதயன் நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இது விடயமாக நாங்கள் அவர்களுக்கு மறுப்புத்தெரிவித்து, விளக்கம் கொடுத்தபோதும், அதை ஏற்று பிரசுரம் செய்யாது மீண்டும் எம்மை தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தியுள்ளனர்.

நாம் ஆட்டோ சங்க செயலாளரை வேட்பாளராக நியமிக்கும் போது அவர் அலுவலகத்தில் தலைவர் மற்றும் பிணை அலுவலர்கள் மத்தியிலேயே எமக்கு தமது விருப்பை தெரிவித்து வேட்பாளராக தெரிவானார்.

இது சம்மந்தமாக தயவுசெய்து அதற்குரிய நடவடிக்கை எடுத்து எமது கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானத்தை ஈடுசெய்வதற்கு இத்தேர்தல் கால இடைவெளிக்குள் சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு மன்னிப்புக் கோருமாறும், அதன் அறிக்கையை அதே உதயன் புதினத்தாளில் வெளியிடுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அது தவறின் சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்து தரும்படி மேலும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்
சகாதேவன்(சகா)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com