Monday, March 11, 2013

பொது பல சேனாவிற்கு நன்றி சொல்கிறார் கண்டி மர்யம்

பொது பல சேனாவிற்கு நன்றி! - கண்டி மர்யம் ஷஹீதா

(தமிழில் : கலைமகன் பைரூஸ்)

சாதாரண முஸ்லிம் பெண்ணொருத்தி என்ற வகையில் பிரச்சினைகள் அதிகரித்துவரும் இவ்வாறான ஒரு கட்டுரையை வரைவதற்குரிய மனநிலை ஏற்பட்டது ஒரு விதிசார்ந்த விடயமாகும். ஏனெனில் கடந்துசென்றபல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தித் தருமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சி நின்றனர். ஆயினும் அந்த சமாதானம் மாற்றொரு மதத்தை, கொள்கையை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் மூலமாக வந்தடைந்தயடையச் செய்த அல்லாஹுத் தஆலாவோடு அவர்களுக்கும் நன்றிக்கடனுடையவர்களாக மாற வேண்டிவரும் என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

எவரதும் வரலாறுகளை ஆராய்ந்துபார்த்தால், இலங்கையில் வாழ்கின்ற எந்தவொரு இனத்தவரும் இது எனது நாடுதான் என்று கூற முடிகின்றதா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைவரும் வந்தேறு குடிகளே என்பதை எல்லோரும் அறிவோம். என்றாலும் பெரும்பான்மை இனத்தினருக்கு இந்நாட்டில் பெரும் உரிமை உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பொது பல சேனா இயக்கம் குறிப்பிடுவதைப் போல பெரும்பான்மைச் சமூகத்தினர் பிரதான பயிராயின் சிறுபான்மை நாங்கள் கீழ்மட்டப் பயிர்களவோம். அது உண்மைதான். என்றாலும் பிரதான பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய அறுவடை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் கிடைக்கும். ஆயின், கீழ்மட்டப் பயிர் மண்ணை வளப்படுத்தி, பயிருக்குத் தேவையான போசாக்கினை வழங்க அது ஆண்டு முழுவதும் நல்ல பயனைத் தரும் என்பது வேறுவிடயம்.

முஸ்லிம்களின் ஹலால் சட்டத்தை இழுத்துப்பிடித்துக் கொண்டு, இந்நாடெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பேரணியை உருவாக்கிய அதிசங்கைக்குரிய இயக்கம் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால், ஹலால் உணவும், நாங்கள் உபயோகப்படுத்துவதும் மட்டுமே என்பதாகும். கடந்த சில மாதங்களாக தேவைக்கதிகமாக இதுபற்றித் தெளிவுறுத்தியதும் இன்றுவரை அதைப் பற்றிய உண்மையை தெளியாதிருப்பதும் துரதிஷ்டமான விடயமாகும். பாவம் எனக் கருதக் கூடிய அனைத்தும் ‘ஹராம்’ அல்லது தடை செய்யப்பட்டது எனவும், பாவனைக்கு உகந்தவற்றை ‘ஹலால்’ அல்லது பயன்படுத்த முடியுமானவை எனவும் இஸ்லாம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. எனக்கு விளங்காத ஒரு விடயம் உள்ளது. அதுதான், பௌத்த தர்மத்தில் பஞ்ச சீலத்தின்படி உயிர்களைக் கொலை செய்வது ஹராமாகும். அவ்வாறாயின் மாமிச உணவு முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, அவனை நினைத்து அறுக்கப்படும் உயிரினங்களின் இறைச்சியை முஸ்லிம்கள் சாப்பிடுவது கூடும் என எங்களது சமயம் எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளது. அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். ஆயினும் அது பௌத்தர்களுக்காக அறுக்கப்பட்டதல்ல. அவ்வாறாயின் அதற்காக ஏன் பிரச்சினைப்பட வேண்டும். முஸ்லிம்கள் பலாத்காரமாக ஹலால் உணவை உண்ணச் செய்கிறார்கள் என சொல்லித் திரிபவர்கள், தமது மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘முஸ்லிம் இறைச்சிக் கடைகளிலிருந்து இறைச்சி வாங்க வேண்டாம்’ என்பதல்ல. ‘மாறாக, மாமிச உணவுகள் எதனையும் சாப்பிடாதீர்கள் - அது பௌத்த தர்மத்திற்கு முரணானது’ என்பதாகும். முட்டை, இறைச்சி, எலும்பு, தோல் என்பவற்றை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல்வேறு வகைப்பட்ட உணவுகள், இனிப்புப் பண்டங்கள் போன்றவற்றை ஒவ்வொரு பௌத்தனும் தவிர்க்க வேண்டுமல்லவா? பாவத்தில் மூழ்கி முதலாவது உபதேசத்தை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டியதெல்லாம் ஹலாலுக்கு எதிராக எழுந்து நில்லுங்கள், ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்பதல்ல. மாறாக, நான் மேலே சொன்னது போல, ‘ இறைச்சி, மீன், முட்டை முதலியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்’ என்பதாகும். அப்போது அவர்களை அறியாமலேயே ஹலால் உண்பது இல்லாமலாகும்.

கௌரவத்திற்குரிய பொது பலசேனா உறுப்பினர்களே, புத்த பெருமானின் கொள்கைகளையும், படிப்பினையையும் முதலில் சரிவரச் செயற்படுத்துங்கள். உணவு வகைகளில் ஏற்கனவே சொன்னது போல, எங்களுக்கும் கூடாதவை, விலங்குகளும் அதனுடன் தொடர்பு கொண்டவையுமே. அது உங்களுக்கும் ஆகாதது அனைத்து பௌத்தர்களுக்கும் தங்களது மதம்சார் கூற்றுக்களைச் செயற்படுத்துவதன் மூலம் ஹலால் இயல்பாகவே நீக்கப்படும் அல்லவா? மற்றைய புறம், ஹலால், ஹராம் இஸ்லாத்தில் கடைப்பிடிக்கப்படுவது மதுபானம், போதைவஸ்து என்பவற்றுக்காகும். அது தம்ம பதத்தின் மூன்றாவது உபதேசமல்லவா? பௌத்த நாடாகிய இங்கு அடிக்கடி உருவாகிவரும் தவறணைகளை மூடிவிட வேண்டியது பௌத்தர்களின் முக்கிய தேவையல்லவா? பௌத்தர்களாகிய உங்களால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அந்த தீயபழக்கத்தை சிறுபான்மை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதைக் கண்டு நீங்கள் பொறாமைப்பட வேண்டிய விடயமா? உணவுக்கு மேலதிகமாகவுள்ள ஹலால் ரீதியான வாழ்க்கை முறைகளான களவு, வஞ்சகம், பகைமை, குரோதம் ஆகியவற்றிலிருந்து நீங்கி வாழ்வதாகும். அது உங்களுக்கு பிரச்சினை தருகிறதா? அவ்வாறாயின் பெளத்த தார்மீகம் அவ்வாறான எண்ணக்கருக்களை வளர்த்திருப்பது ஏன்?

இந்நாடு முஸ்லிம்மயமாகி விடும் என்ற பீதி உங்களை எல்லாம் ஆட்டிப் படைக்கிறது. அவ்வாறு நீங்கள் சிந்திப்பதற்கு உங்களுக்கு நியாமான காரணங்கள் உள்ளன. அதற்கு முதலாவது காரணம் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் பெருகிவருவது. பெருமரியாதைக்குரிய அறிஞர்களே, ‘சிறிய குடும்பம் பொன் மயமானது, நாமிருவர் நமக்கிருவர்’ போன்ற எண்ணக்கருக்களைக் கொணர்ந்தது முஸ்லிம் சமுதாயாமா? முத்திரை, கடிதஉறைகள் முதலிவற்றில் கூட இவற்றை அச்சிட்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளை மாத்திரம் போதும் என்ற நாகரீகமயமாக்கலை மேற்கத்தேய நாடுகளிலிருந்து இந்நாட்டுக்குக் கொணர்ந்தது கிறிஸ்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இன்றும் தெளிவாக - வெளிப்படையாக - பகிரங்கமாக தம் சமயத்தைப் பரப்புதற்காக பௌத்த மக்களில் பெரும்பான்மையினரை தமது சமயத்துக்குள் உள்வாங்குவதற்கு வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைப் பயன்படுத்துகின்ற அவர்கள் உண்மையிலேயே சமயோசிமான கெட்டிக்காரர்கள். முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றால் அவ்வாறான மதப் பிரச்சாரம் தேவையில்லையா? அவ்வாறான எந்தவொரு சமயத்தின்பால் ஈர்க்கும் செய்கைகளும் எங்களிடம் இல்லை என்பதை இந்நாடு நன்கறியும். கௌரவத்திற்குரிய நல்லறிஞர்களே! ‘ஸப்ப துக்க நிஸ்ஸரண நிப்பான சச்சி கரண்தாய’ என இவ்வுலக துன்பங்களினின்று நீங்கி சுவர்க்கத்தை அடையும் நன்னோக்கில், துறவி வாழ்க்கையை விரும்புகின்ற சிறு வயதுத் பௌத்த துறவியொருவர் இளமையைக் கடந்து முதுமையடையும் வரை அதனை அடைந்துகொள்ள, குறைந்தளவு ‘சகுர்த்தகாமி’ வழியிலாவது செல்லமுடியாதுள்ளதல்லவா? சகல உயிரினங்களும் துன்பமின்றி வாழ்வதாக!’ என உள்ளார்ந்த ரீதியாக்க் குறிப்பிடும் ஒருவருக்கு சிறுபான்மை இனத்தினரை ஒதுக்கு வாழவியலாது.

ஐந்து நல்லுபதேசங்களையும் சிறப்பாகக் கடைப்பிடிக்கும் பண்புமிகு சமூகமொன்றில் சிறுபான்மை இனமொன்று தலைநிமிர்ந்து வாழமுடியாதுள்ளது. அடுத்தவரைப் பற்றிய தீய எண்ணம் தனக்குள் ஏற்படுவது ஏனெனில் தனக்குள் குறைகள் இருப்பதனாலேயே. தந்தை மூலம் கருத்தரித்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் நாடொன்றில், தாயைக் கொன்று தந்தையைக் கொன்று சொத்துக்களை அநுபவிக்கின்ற நாடொன்றில், உடம்பின் முக்காற் பகுதியை வெளிக்காட்டி காம உணர்வுகளை தூண்டிவிடுகின்ற நாடொன்றில், களவிலே இருந்து மற்றவரைச் சார்ந்து வாழ்ந்து புத்தருடைய சிலைகளைக்கூடக் குடைந்தெடுக்கும் நடொன்றில் சுருக்கமாகச் சொன்னால் இவை ஏதுமின்று சிறந்த பௌத்த நாடு என்று பறைசாற்றுகின்ற நாட்டில் எவ்வாறாயினும் தமது சமயம்சார் கடமைகளைக் கடைப்பிடிக்க முனையும் முஸ்லிம்கள் உங்களுக்கு அடிப்படைவாதிகளாக்க் காண்பார்களாயின், இந்த அலங்கோலங்களைப் பார்த்துக்கொண்டு பௌத்தர்கள் நாங்கள் என்று வாயால் மட்டும் கதைப்பவர்களைப் பார்த்து எங்களுக்கும் நகைப்பாக இருக்கிறது. இதில் தவறில்லை என நினைக்கிறேன்.

சுவனத்தை அடைய வேண்டும் என்பதையே தனது பரமநோக்கமாக்க் கொண்ட பௌத்தன் பலமுறை மறுபிறவி எடுத்தாலும், எங்களுக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லாமையால் நாங்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க மாட்டோம். எனவே இந்த பௌத்த நாட்டுக்கு நாங்கள் அன்பு செலுத்துவோமே தவிர, அதனை அடைய முனைய மாட்டோம். பௌத்தன் கூட மறுபிறவியை விரும்ப மாட்டான் என்பதை மரண வீட்டு பதாதைகளில் நாங்கள் காண்கிறோம். அவ்வாறாயின் இப்பேராசை எங்கள் இருசாராருக்கும் உகந்ததல்ல. ‘ஏஹி பஸ்ஷிகோ’ என்று மொழிந்தாலும், மாற்று மதத்தவர்களையும் அநுசரித்து வாழும் பௌத்தனாக இல்லாதவிடத்து தனது சமயத்தைப் பரப்பவியலாது. முதலில் உங்களைச் சார்ந்தவர்களை நல்ல பௌத்தர்களாக்க முயலுங்கள். அப்போது எங்களுக்கும் பேராசையிலிருந்து விடுபடலாம். எது எவ்வாறாயினும் இந்த பகிஷ்கரிப்புக்களினாலும், எதிர்ப்புக்களினாலும் முன்னொரு போதும் இல்லாதவாறு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டிருக்கிறார்கள். அடி விழுகின்ற அளவுக்கு இன்னும் இறைவன் மீது பக்தி மிக்கவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். ஹராம், ஹலால் என்றால்கூட என்னவென்று அறியாத சில முஸ்லிம்கள் கூட இன்று ஹலால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளனர். இத்திருப்புமுனை முஸ்லிம்களுக்கு தேவையான ஒன்றாக இருந்தது. இதுகாலவரை ‘இலங்கையர்’ என்றிருந்த முஸ்லிம்கள் ‘இலங்கை முஸ்லிம்கள்’ என்ற உணர்வுடன் ஒன்றுபட்டுவிட்டனர். முன்னொருபோதும் இல்லாதவாறு மற்றவரின் சுக துக்கங்களில் பங்குகொள்கின்ற உண்மை முஸ்லிம்களாகி விட்டார்கள். இந்த வெற்றியை கிரீடத்தை எங்களுக்குப் பெற்றுத்தந்தவர்கள் பொது பல சேனாவாகிய நீங்களே! எங்களை அல்லாஹ்விடம் மேலும் நெருங்க வைத்தவர்கள் நீங்களே! உங்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக. ஆயிரம் தடவைகள் நன்றி!!!!!

நன்றி : ராவய 24/02/2013 பக்: 06

2 comments :

Anonymous ,  March 11, 2013 at 9:10 PM  

There are something working hard on to make a great communal spilits inside the country and to divide the societies with a view of making disunification in the country.However we are srilankans unity is our strength .

S. Hameeth March 11, 2013 at 10:29 PM  

ஹலால் உரிமையை விட்டுக் கொடுத்திருப்பதானது இஸ்லாத்தை விலை கூறி அந்நியர்களுக்கு விற்றிருப்பதைப் போல் இருக்கிறது.
பாலைவனத்தின் நெருப்பு நிலத்தில்-நெஞ்சில் பாறாங்கல்லை வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்ட போதும் ''அல்லாஹு அக்பர்'' என்று முழங்கிய ஹஸ்ரத் பிலால் (ரலி) அவர்களின் ஈமானிய உறுதி இந்த நேரத்தில் நினைவு கூரப்பட வேண்டும்.

சிறுபான்மையினராக இருந்த போதும் இஸ்லாத்திற்காக , பெரும்பான்மை காபிர்களுடன் யுத்தம் புரிந்து ஷஹீதான உத்தம சஹாபாக்களின் தியாகங்கள் இந்த நேரத்தில் இரை மீட்டப்பட்டிருக்க வேண்டும். காபிர்கள் பெரும்பான்மையினர் என்று அடங்கிப் போயிருந்தால் இன்று உலகில் இஸ்லாமும் இல்லை; முஸ்லிம்களும் இல்லை என்பது எண்ணிப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.எத்தனையோ துன்பங்களும் எண்ணற்ற கொடுமைகளும் இழைக்கப்பட்ட போதும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு இஸ்லாம் எழுச்சி பெற்று வளர்ந்தது என்பது நமது சிந்தனைகளுக்குள் உள்வாங்கப் பட்டிருக்க வேண்டும். நமது மார்க்க உரிமைகளையும் கடமைகளையும் இழந்து ஈனர்களாக வாழ்வதை விட, அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வது மேலானது என்ற முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும்.''உங்களை எதிர்த்துப் போரிடுபவர்களுடன் நீங்களும் போரிடுங்கள்'' என்ற அல்லாஹ்வின் கட்டளையை சிரமேற்கொண்டு போராடியிருக்க வேண்டும்.

இவை எதுவுமே இல்லாமல் நமது உரிமைகளை- நமது மார்க்க விழுமியங்களை-நமது கட்டாயக் கடமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்திருப்பதானது-நயவஞ்சகத்தனத்தின் அறிகுறியாகும்.
மார்க்கத்தில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லை; சமரசம் என்ற பெயரில் இஸ்லாத்தின் கடமைகளை நாம் இழந்து விட முடியாது. உயிருக்கோ-உடமைக்கோ-பயந்து, அந்நியரிடம் இஸ்லாத்தை அடகு வைக்க முடியாது.

ஹலால் விடயத்தில் அ.இ.ஜ.உ. எதற்காக இவ்வளவு அவசரமாக ஒரு முடிவுக்கு வந்தது என்பது தெளிவில்லை. இந்த விடயத்தில் மக்களிடம் நிறைய ஐயப்பாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னம் எவ்வளவோ செய்திருக்க முடியும். எத்தனையோ வழிகளில் செயற்பட்டிருக்க முடியும்; போராடி இருக்க முடியும்.
31ம் திகதி என்று பொது பாலா சேனா காலக் கெடு விதித்திருப்பதைக் கூட எண்ணிப் பார்க்காமல், 20 நாட்களுக்கு முன்னமே அவர்களின் காலில் விழுந்து விட்டதை எண்ணிச் சிரிப்பதா-அழுவதா என்று தெரியவில்லை. 31ம் திகதிக்குப் பின்னரான அவர்களின் போராட்டங்களை அவதானித்த பின்னராவது நாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

ஹலால் என்ற வார்த்தைதான் அவர்களின் பிரச்சினை என்றால் அதற்குப் பதிலாக suitable to muslims என்பதைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி ஆராய்ந்திருக்கலாம். suitable to vegetarian , suitable to children என்று உணவுப் பொருட்களிலும் வேறு பொருட்களிலும் லேபல் இடுகிறார்களே அது போல.
சமயப் பெரியார்கள்-அறிஞர்கள்-அரசியல்வாதிகள்-வெளிநாட்டுத் தூதுவர்கள்- என்று அழைத்து, திறந்த மனதுடனான கருத்தரங்குகளை நடாத்தி முடிவொன்றைக் காண முயற்சித்திருக்கலாம். ஹலால் வேண்டுமா-வேண்டாமா என்று ஒரு வாக்கெடுப்பு கூட நடாத்திப் பார்த்திருக்கலாம்.
இவை எதுவுமே இல்லாமல் ஏன் இந்த அவசர முடிவு...? இந்த முடிவின் பின்னணியில் உள்ள இரகசியம்தான் என்ன...?

எத்தனை உலமா சபை இருந்தென்ன..?எத்தனை முஸ்லிம் அரசியற் கட்சிகள்-தலைவர்கள் இருந்தென்ன...? எத்தனை முஸ்லிம் இயக்கங்கள் இருந்தென்ன...? நமது அடிப்படை உரிமைகளைக் கூடக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோமே...அப்புறம் எதற்கு இந்த சபைகளும் உலமாக்களும் கட்சிகளும் தலைவர்களும் இயக்கங்களும் அங்கத்தவர்களும்....?

பொறுங்கள்...அடுத்தது புர்கா; அடுத்தது ஹிஜாப்; அடுத்தது பர்தா; அடுத்தது முந்தானை; அதற்கடுத்தது பாவாடை...எல்லாவற்றையும் தேச நலன் கருதி விட்டுக் கொடுங்கள்.
அதன் பின்னர் தொப்பி-தாடி-தஸ்பீஹ் மாலை...எல்லாவற்றையும் சமூக நல்லிணக்கம் கருதி விட்டுக் கொடுங்கள்.

அதன் பின்னர் அரபு மொழியில் உள்ள உங்களின் பெயர்களை அப்புஹாமி-பொன்சேகா, ரோசி, சூட்டி என்று மாற்றச் சொல்லிக் கேட்பார்கள்; இன ஐக்கியம் கருதி மாற்றுங்கள்.
அதற்கும் பின்னர் பள்ளிவாசல்களை எல்லாம் இடித்து விட்டு, பன்சலவுக்கு வந்து கும்பிடச்
சொல்வார்கள். நாட்டின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு போய்க் கும்பிடுங்கள்.

சீ....வெட்கமாக இல்லை...?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com