ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்.
காணாமற் போனோரின் உறவினர்களும் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உறவினர்களும வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்ற இவர்கள், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ - 9 வீதியை வழி மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த நிலையில், ஏ - 9 வீதி யூடான போக்குவரத்துக்கள் சுமார் 30 நிமிடங்கள்வரை ஸ்தம் பிதமடைந்து காணப்பட்டது.
காணாமற் போனோர் மற்றும் தடுப்புக் கைதிகளின் குடும்பத்தினரின் சங்கம் கொழும்பில் நேற்று ஒன்றுகூடல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுவதற்கு கொழும்பு செல்வதற்காக வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம் திரண்ட மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களுக்கும் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உறவினர்களுக்கும் பாதுகாப்பில்லை எனக் கூறி பொலிஸார் கொழும்பு செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையிலேயே இவர்கள் நேற்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்காக இவர்கள் சென்றனர். இந்த நிலையில், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடமே இவர்கள் மகஜரைக் கையளிக்க முடிந்தது.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மத்தியில் கருத்துத் தெரிவித்த வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், தான் அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரிலேயே இங்கு வருகை தந்ததாகவும் இந்த மகஜரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவிடம் தான் ஒப்படைப்பதாகவும் கூறினார்.
இதேவேளை சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்றுக் காலை 9.30 மணியளவில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டபேரணி ஒன்றை நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்ன, ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜயசூரிய, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment