Wednesday, October 31, 2012

ஜப்பான் விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள செண்டை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அனைத்து 92விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஹிரோஷி ஒüச்சி கூறியது: விமான நிலைய கட்டடத்திலிருந்து 1.2 கி.மீ. தூரத்தில் உள்ள ஓடுபாதை அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை 250 கிலோகிராம் எடை கொண்ட ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

துருப்பிடித்த நிலையில் இருந்த அந்த வெடிகுண்டு, 110 செ.மீ. நீளம் மற்றும் 35 செ.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் புறப்பாடு மற்றும் தரை இறங்குவது ரத்து செய்யப்பட்டன. உடனடியாக ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டை அப்புறப்படுத்தி செயலிழக்க வைத்தனர் என்றார்.

ஜப்பானில் இதுபோன்ற வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. துருப்பிடித்த நிலையில் உள்ள இவை, ஓரிடத்திலிருந்து இடம்பெயரும்போது வெடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com