Monday, October 8, 2012

தமிழரின் போராட்டத்தை எரிக் சொல்கைமே அழித்தாராம். கண்டுபிடித்தார் ஜெயானந்தமூர்த்தி !

இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்தை நோர்வேயின் சிறப்புத் தூதராக செயற்பட்டுவந்த எரிக் சொல்கைமே இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து அழித்தவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி.

அத்துடன் எரிக் சொல்கைம் தற்போது புலம்பெயர் மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்களை முடக்குவதற்கு முனைப்புடன் செயற்படுவதாகவும் சாடியுள்ளார்.

நோர்வே இலங்கையினுள் நுழையும்போது அதன்நோக்கத்தை அறிந்து கொண்ட பலர் அப்போது எச்சரித்தனர். ஆனால் ஜெயானந்தமூர்த்தி போன்ற புலிகளின் அடிவருடிகள் எரிக்சொல்கைம் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ள இறைதூதன் , வெள்ளை முருகன் எனப் புகழாரம் சூட்டி அவர் முன் கைகட்டி கூனிக்குறுகி நின்றனர்.

தற்போது அதே ஜெயானந்தமூர்த்தி எரிக்சொல்கைம் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றார், எமது விடுதலைப் போராட்டம் பலம்பெற்ற ஒரு சக்தியாக வளர்ந்து தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை விடுதலைப்புலிகள் நிர்வகித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த சக்தியை முற்றுமுழுதாக அழிப்பதில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து மேற்கொண்ட நாடகமே நோர்வேயின் சமாதான முயற்சியாகும்.

தாம் பலமாக இருந்த வேளையிலும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டுக்கு இணங்கியே எமது தேசியத் தலைவர் சமாதான உடன்படிக்கைக்கு முன்வந்திருந்தார். ஆனால் நோர்வே பல்வேறு சதிமுயற்சிகளை மேற்கொண்டு விடுதலை அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தியது மாத்திரமின்றி இறுதியில் விடுதலைப் போராட்டத்தையே நசுக்கியது. இதை நாம் என்றுமே மறந்துவிடப் போவதில்லை.

விடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம் பெயர் மக்கள் தழிழீழத்திற்கான போராட்டத்தை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் நிலையில் தற்பேர்து அதையும் சிதைப்பதற்கு எரிக் சோல்கெய்மும் களமிறக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் விடுதலைப்புலிகளை தாக்கியும் கருத்துக்களை புலம்பெயர் நாடுகளில் பரப்பி வருகின்றார்.

விடுதலைப்புலிகளின் மீது பல குற்றச்சா‌ற்றுக்களை முன்வைத்து வரும் அவர் இறுதிப்போரின் பேர்து சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கும் புலிகளே காரணமெனவும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் எரிக் சோல்கெய்ம் இறுதிக் கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த புலிகளின் முக்கிய தலைவர்களின் படுகொலையையும் நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

அத்துடன் தமிழர்களுக்கு தமிழீழம் என்பது சாத்தியப்படாத விடயம் அதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டங்களைக் கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கை அரசின் ஆசீர்வாதத்துடன் ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது எனவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.

இதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதும் தெரியவருகின்றது. எரிக் சோல்கெய்மின் இந்த நிலைப்பாட்டுக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பின்னணி இருப்பதாகவே கருத முடிகின்றது. எனவே எமது விடுதலைப் போராட்டத்தை நோர்வேயின் தூதுவர் எரிக் சோல்கெய்மை பயன்படுத்தி சர்வதேசம் எவ்வாறு அழித்ததோ அதே பாணியில் புலம்பெயர் தமிழர்களின் உறுதியான போராட்டங்ளையும் பலத்தையும் அழிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவே கருத முடிகின்றது.

எரிக் சோல்கெய்மின் இவ்வாறான கருத்தியலுக்கு உலகத் தமிழர்களின் அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் அமைப்பு மற்றும் பிரித்தானியா உட்பட சில நாடுகளில் இயங்கி வரும் தமிழர்களின் அமைப்புகள் கூட சார்பான நிலைப்பாட்டை எடுக்க முடியும். இந்த அமைப்புகள் தற்போது தேசியத் தலைவர், தமிழீழம், தேசியக்கொடி, இனவழிப்பு போன்ற வார்த்தைகளைக் கூட பாவனையிலிருந்து தவிர்த்தும் வருகின்றன.

சுவிஸ், தென் ஆ‌ப்பிரிக்கா போன்ற நாடுகளில் சந்திப்பை நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற இவர்கள் முயற்சிக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் 13வது திருத்தச்சட்டத்தின் மாகாணசபை நடைமுறையை அல்லது அதற்கும் குறைவான தீர்வைப் பெற்றுவிட்டு அதற்கும் நியாயம் கற்பிக்கலாம். எனவே புலம்பெயர் மக்கள் எமது கொள்கையான தமிழீழம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே எமது வீரமறவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தனர்; பொதுமக்களும் உயிரைக் கொடுத்துள்ளனர்.

எனவே அந்த இலட்சியத்தை சிதைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. தற்போதைய காலகட்டத்தில் சில தீயசக்திகளின் சதிவலைகள் புலம்பெயர் மக்களைச் சுற்றி பின்னப்படுவது போன்று தெரிகின்றது. எனவே இந்த தீயசக்திகளின் சதிமுயற்சிகளை முறியடித்து எமது மக்கள் தமிழீழம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதுவே எமது இலட்சியமுமாகும் எ‌ன்று ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1 comments :

ragunathan ,  October 8, 2012 at 5:33 PM  

foolish.......jeya
he cannot enter to Batticaloa
no 1 traitor to east ana whole tamils

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com