Sunday, September 2, 2012

மொழிப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! கொள்கையை பின்பற்றாத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மக்களுக்குச் சேவை வழங்கத் தவறும் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி அரசாங்கத்தின் மொழிக் கொள்கையைக் கடுமையாக கடைப்பிடிப்பதன் ஊடாக இனங்களுக்கிடையில் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், அறிவுறுத்தல் விடுக்கும்படி தேசிய மொழிகள் ஆணைக்குழுவுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாக, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

அரசாங்க நிறுவனங்களில் தங்களது தாய் மொழியைப் பயன்படுத்த சகல மக்களுக்கும் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது என்றும், ஆனால் தமிழ் பேசும் மக்கள் அரசாங்க நிறுவனங்களில் மொழி பெயர்ப்பு சம்பந்தமாக பலவித இன்னல்களை எதிர் கொள்வதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். உதாரணத்துக்கு, வடக்கு, கிழக்கில் உள்ள ஒரு பாடசாலைக்கு அல்லது சுகாதார நிறுவனத்துக்கு சிங்களத்தில் ஒரு சுற்ற்றிக்கையை அனுப்பினால், அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது பலவித குளறுபடிகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில்,சகல அரசாங்க ஊழியர்களும் தமிழ் மொழிப் பயிற்சி வழங்கப்பட்டு ள்ளதாகவும், அந்த மொழியைப் பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிகளை பூர்த்தி செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும், 500 பேர் கொண்ட மொழி பெயர்ப்பாளர்கள் குழுவை மொழித் திணைக்களத்துடன் இணைத்துள்ளதாகவும், சகல அரசாங்க நிறுவனங்களும் இவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், திணைக்களத்தின் இணைய தளம் ஊடாக மொழி பெயர்ப்பாளர்கள் குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சின் ஊடக செயலாளர் மகேந்திர ஹரிச்சந்திர, தெரிவித்துள்ளார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சு விரைவில் ஒரு நேரடித் தொலைத் தொடர்பு சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும், அதன் ஊடாக சிங்கள – தமிழ் மொழி பெயர்ப்பு தேவைப்படும் அரசாங்க நிறுவனங்கள், மொழி பெயர்ப்பாளரின் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஹரிச்சந்திரா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com