வெள்ளைக்கொடியுடன் எவரும் வரவும் இல்லை படையினர் சுடவும் இல்லை.
சரணடைந்த புலிகளுக்கு பாதுகாப்பு இல்லையென மக்களுக்கு தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று வினவிய பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார, பிரதிவாதிக்கூண்டிலிருந்து தனது கூற்றினை விடுத்த பிரதிவாதி புலிகள் வெள்ளைக்கொடியுடன் வரவில்லை படையினர் சுடவும் இல்லை என்றார். அவ்வாறு கூறியவர் இறுதி யுத்தக்களத்திலிருந்த இரண்டு ஊடகவியலாளர்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக அவர் சொன்னதேன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இனவாதம் தூண்டப்படவில்லை என்பதனை மனுதாரர் நிரூபிக்கவேண்டியதில்லை. அந்தகூற்றினால் நாட்டிற்கு சர்வதேச மட்டத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறான நிலையில் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பெற்றிக்கா ஜான்ஸின் சாட்சி சுயாதீனமானது, நேர்மையானது என்பதுடன் பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளும் சாதாரணமானதாகும் என்றார்.
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செதி தொடர்பில் தாக்கல் செயப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வரும் மேற்படி வழக்கில் பிரதிவாதி தரப்பில் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி ஆஜராகியிருந்தார். மனுதாரர் தரப்பின் வாய்மூல சமர்ப்பணம் நேற்று மூன்றாவது நாளாகவும் முன்வைக்கப்பட்டது.
வழக்கின் பிரதிவாதிக்கு எதிராக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தில், அவசரகாலச்சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும் தண்டனை கோவைச்சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டுமென மூன்று கடும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மக்களிடையை குழப்பம் விளைவித்து மக்களை அச்சுறுத்தியமை, இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும், அரசாங்கத்திற்கு எதிராக வார்த்தையளவில் விரோதம் செய்தமை என்ற மூன்றாவது குற்றச்சாட்டு தண்டனை கோவை சட்டத்தின் கீழும் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
சண்டே லீடர் பத்திரிகைகு 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி பிரதிவாதி வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 58 ஆவது படையின் கட்டளையிடும் தளபதிக்கு சரணடையும் புலிகளை சுடுமாறு உத்தரவிட்டதாக பெற்றிக்கா ஜான்ஸிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றிக்காவின் சாட்சியத்தை ஏற்றுக்கொண்டதால் பிரதிவாதி நேர்காணலை வழங்கியுள்ளார். பிரதிவாதி தனது கூற்றை தெரிவிக்கையில, பெற்றிக்கா ஜான்ஸ் வெள்ளைக்கொடி தொடர்பில் தன்னிடம் கேட்டதாகவும் அந்த கதையை தானும் கேள்விப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார். வதந்தியை கேள்விப்பட்டதாக பிரதிவாதி பெற்றிக்காவிடம் தெரிவித்துள்ளார். அப்படியாயின் அது வதந்தியாகும்.
கூற்று பொய்யானது என்று கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சவேந்திர சில்வா ஆகிய இருவரும் சாட்சியமளித்தனர் என்பதனால் அந்த கூற்றானது முற்றுமுழுதும் பொய்யானதாகும். ஏனெனில் கோத்தபாய சாட்சியமளிக்கும் போதே இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என்பதனை சான்றாதாரங்களை பார்த்து சான்றுப்படுத்தினார்.
கூற்று, வதந்தி இன்றேல் போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூற்றின் தன்மையை பார்க்குமிடத்து அக்கூற்று மக்களை அச்சுறுத்தல் இன்றேல் குழப்பத்தை உருவாக்குதலாகும். புலிகள் யார்? இலங்கையில் இருந்த பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளிலேயே இவர்கள் செயற்பட்டனர் என்பதனை கோத்தபாய உறுதிப்படுத்தினார்.
இந்த கூற்றினால் மக்கள் குழப்பமடைந்தனர், அச்சமடைந்தனர் என்பதனை மனுதாரர்தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவசரகாலச்சட்ட மூலத்தில் பயமுறுத்தல், அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் இன்றேல் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை பாதுகாப்பையே அவர் எதிர்பார்த்திருப்பார். பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து அந்த பாதுகாப்பு கிடைக்காவிடின் மக்கள் குழப்பமடைவர்.
உதாரணமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தடுத்துவைக்கப்படிருந்த நிலையில் மரணமடைந்ததை அடுத்து கொதித்தெழுந்த மக்கள் பொலிஸ் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். மக்கள் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்காவிடின் மக்கள் குழப்பமடைவர்.
சரணடைந்த புலிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று மக்களுக்கு தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்கும். அண்மையில் நடந்த சம்பவத்தில் மக்கள் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அவசரகாலச் சட்டத்தின் 29 ஆவது உறுப்புரைக்கு அமைவாக மேற்கூறப்பட்ட விடயத்தை தூண்டும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அறிக்கையிடல், இன்றேல் தகவல்களை வழங்குவோர் குற்றவாளியாவார். இதுவே இரண்டாவது குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் தகவலை வழங்கியுள்ளார், அந்த தகவலின் பிரகாரம் நேரடியாகவோ இன்றேல் மறைமுகமாகவோ இனவாதத்தை தூண்டியுள்ளார். தகவலை பெற்றிக்கா ஜான்ஸ் வழங்கியுள்ளார். பெற்றிக்கா ஜான்ஸின் சாட்சியை ஏற்போமாயின் பிரதிவாதியே அத்தகவலை வழங்கியுள்ளார்.
கூற்று வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் இருந்த நிலைமையினை பார்க்கவேண்டும். 30 வருட பயங்கரவாதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இனவாதத்தை தூண்டும் வகையில் நேரடியாகவோ இன்றேல் மறைமுகமாகவோ மீண்டும் செயற்பட்டிருந்தால் அது தவறானதாகும்.
இவ்வாறான பின்புலத்தில் அரசாங்க படையினரிடம் சரணடையும் பயங்கரவாதிகளை சுடுமாறு உத்தரவிட்டால் அது இனவாதத்தை தூண்டுவதாகும். இவ்விடத்தில் இனவாதம் தூண்டப்படவில்லை என்பதனை மனுதாரர் நிரூபிக்க வேண்டியதில்லை.
2009 ஆம் ஆண்டே பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட வருடமாகும். அவ்வாறான காலக்கட்டத்தில் ஊடகத்திற்கு இவ்வாறானதொரு உறுத்துணர்வு கூற்றை வெளியிடுவது இனவாதத்தை தூண்டுதலாகும்.
பிரதிவாதி கூண்டிலிருந்து பிரதிவாதி விடுத்த கூற்றில,; சரணடைய வந்த புலிகள் வெள்ளைக்கொடிகளை எடுத்துவரவில்லை. அவர்களை படையினர் சுடவும் இல்லை என்றார். ஆனால் யுத்தகளத்திலிருந்த இரண்டு ஊடகவியலாளர்களிடமிருந்து தகவல் கிடைத்தது என்று பிரதிவாதி கூறியது ஏன்?
இராணுவத்திற்கு தலைமைதாங்கிய ஒருவர் இந்த கூற்றில் இரண்டாவது பகுதியை (யுத்தகளத்திலிருந்த இரண்டு ஊடகவியலாளர்களிடமிருந்து தகவல் கிடைத்தது) என்று கூறியதன் மூலமாக இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளார்.
நேர்காணலின் போது தகவல் வழங்குவோர் மிகக்கவனமாக இருந்திருக்க வேண்டும். உரையாடுபவர் சாதாரண நபரல்ல. அவர் ஒரு ஊடகவியலாளர் தான். கூறுகின்ற தகவல் மக்கள் மத்தியில் செல்லும் என்பதனை தகவல் வழங்குவோர் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
தண்டனை கோவைச்சட்டத்தின் 120 ஆம் உறுப்புரையின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது பிரஜைகளுக்கு மத்தியில் கோபம் மற்றும் எதிர்ப்பை உருவாக்குவதற்கான முயற்சியாகும். நாட்டு பிரஜைகளில் வேறு இனங்களுக்கு இடையில் கோபத்தை உருவாக்கும் முயற்சியாகும். இங்கு பிரதிவாதி அச்சமடையும் வகையில் கூற்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் செய்தவரின் சாட்சி ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீனமான சாட்சியாகும் என்பதுடன் மூன்று குற்றச்சாட்டுகளும் சாதாரணமானதாகும் என்று கூறியதுடன் மனுத்தரப்பு சமர்ப்பணத்தை நிறைவுக்கு கொண்டுவந்தார். இதனையடுத்து பிரதிவாதியின் சமர்ப்பணத்திற்காக மேற்படி வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment