இரண்டாகப் பிரிகிறது ஜேவிபி! புதிய கட்சி விரைவில் அறிவிப்பு?
இலங்கையின் முக்கியமான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பிக்குள் உட்கட்சி முரண்பாடு உக்கிரமடைந்துள்ளது. ஜே.வி.பியின் தலைமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தரப்பினருக்கும், சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிணக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நீதிமன்றின் உதவி நாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக மாற்றுக் கொள்கையாளர்கள் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர்.
மாணவர் ஒன்றியங்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களும் பிரேம்குமார் தரப்பினருக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
புதிய கட்சி உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை சோமவன்ச தரப்பினர் தடுத்து நிறுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரேம்குமார் தரப்பினர் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தங்களது இருப்பினை உறுதி செய்து கொள்வதற்காக தற்போதைய தலைமைத்துவம் அரசியல் குறுக்கு வழிகளை பயன்படுத்தி வருவதாகவும், மெய்யான சோசலிச கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி. ஆதரவான முக்கிய மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் பலர் மாற்றுக் கொள்கையாளர்களுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உந்துல் பிரேமரட்ன, சமீர கொஸ்வத்த, துமிந்த நவகமுவ போன்றவர்களும் இதில் அடங்குகின்றனர்.
இதேவேளை, கட்சி மாற்றுக் கொள்ளையாளர்களுக்கு எதிராக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்தமை, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட வேண்டுமென நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன.
இதேவேளை கட்சி நடவடிக்கைகள் யாப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் எவரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி கட்சித் தலைமையகத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.
கட்சியின் ஊடகப் பிரிவு உள்ளிட்ட சகல பிரிவுகளின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
உட்கட்சி முரண்பாடு காரணமாக தலைமையகப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது ஓர் பாரிய பிரச்சினை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியை இல்லாதொழிக்கும் சூழ்ச்சித் திட்டங்கள் முறியடிக்கப்படும் - ரில்வின்
கட்சியை இல்லாதொழிக்க சில சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சித் திட்டங்கள் முறியடிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அழுத்தங்களினால் சோசலிச மற்றும் ஜனநாயக கோட்பாடுகளிலிருந்து கட்சி விலகிச் செயற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஆட்சி நடத்தியவர்களும் இவ்வாறு கட்சியை வலுவிழக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான முயற்சிகளின் போது கட்சி மேலும் வலுவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி உள்முரண்பாடு தொடர்பில் தெளிவான அறிக்கையொன்று விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கட்சிக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது என தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றுமொரு ஆயுத போராட்டத்தை நோக்கி ஜே.வி.பி நகர்கின்றது – திஸ்ஸ வித்தாரண
மற்றுமொரு ஆயுத போராட்டத்தை நோக்கி ஜே.வி.பி கட்சி நகர்வதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஜே.வி.பி நடத்திய ஆயுத போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஆயுத போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ சமூகமே நன்மைகளை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை சீர் குலைக்கும் நோக்கில் சிலர் ஜே.வி.பி.யை வன்முறைப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுத போராட்டம் வெடித்தால் அதனை தடுப்பதற்கு படையினரை மீள நிலைநிறுத்த நேரிடும் எனவும், இதனால் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி கட்சி தொடர்ந்தும் ஜனநாயக நீரோட்டத்தில் தனது பயணத்தை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களிலும் ஜே.வி.பிக்குள் முரண்பாடு நீடித்து வந்ததாக அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கட்சிக்குள் ஜனநாயகதன்மை அற்ற நிலைமை காணப்படுகின்றமை அம்பலமாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பின் உறுப்பினர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது:-
ஜே.வி.பின் உறுப்பினர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சி அடுத்த சில தினங்களில் உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தேசிய பிரச்சினை, வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேருதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு, மிக நீண்டகாலமாக இருந்து வந்த கொள்கை தொடர்பான முரண்பாடுகளை தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவில் 25 பேர் அங்கம் வகிக்கின்றனர். அதன் அதிகாரம் சோமவன்ஸ அமரசிங்க அணியினரிடம் இருப்பதாக தெரியவருகிறது. சோமவன்ஸ அமரசிங்கவுக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவும், பிரேமகுமார் குணரத்தினத்திற்கு 12 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் இதனால், ஜே.வி.பியின் செயற்குழு இரண்டாக பிளவுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அதன் அரசியல் சபை உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, பிரசார செயலாளர் விஜி ஹேரத், லால்காந்த, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் சோமவன்ஸ அமரசிங்க தலைமையிலான குழுவில் அங்கம் வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேமகுமார் குணரத்தினத்தின் அணியில் புபுது ஜாகொட, மாலன், அசோக, வருண ராஜபக்ஷ, திமுத்து ஆட்டிகல ஆகிய முக்கிய உறுப்பினர்கள் உள்ளதாகவும் தெரியவருகிறது. கட்சி புரட்சிகர அமைப்பாக தனித்து செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியை தீர்க்க இரண்டு தரப்பினரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஜே.வி.பியின் தலைவர்களுடன் தொடர்புக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
அதேவேளை ஜே.வி.பியின் யாப்பை மீறி, சிலர் பலவந்தமாக பதவிகளில் இருப்பதாக கூறி, ஜே.வி.பியின் கிளர்ச்சியாளர்கள் குழு நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகி வருகிறது. கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் கட்சியின் யாப்பை மீறியுள்ளதாகவும் கட்சியின் தலைவரை தெரிவுசெய்ய கட்சியின் மாநாடு கூட்டப்படவில்லை எனவும் ஜே.வி.பியின் கிளர்ச்சி குழு தெரிவித்துள்ளது.
கட்சியின் யாப்பை மீறி இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் குறித்த பதவிகளில் இவர்கள் பலவந்தமாக இருக்காமல், புதியவர்களை பதவிகளுக்கு நியமிப்பதற்காக கட்சியின் மாநாட்டை கூட்டுமாறு கோரி நீதிமன்ற அறிவித்தலை அனுப்ப உள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நன்றி(gtn)
0 comments :
Post a Comment