Wednesday, November 24, 2010

இந்திய பொலிஸாரினால் கற்பழிக்கப்பட்ட யுவதியின் தாய் நீதிமன்று சென்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் இந்தியாவில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, குறித்தப் பெண்ணின் தாய் சென்னை நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய அரச நிறுவனங்களின் குறைபாடுகளை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறித்தத் தாய், இந்திய வெளியுறவுச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்போரை மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பத்மவதி என்ற பெண்ணும் அவருடைய மகளும் ரயனூர் என்ற முகாமில் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி குறித்த முகாமிற்குச் சென்ற தமிழ்நாடு கரூர் பொலிஸார் பத்மவதியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டுமெனக் கூறுவதாகக் குறிப்பிட்டு அவர்களை வான் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக பொலிஸாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று தாயான பத்மவதியை வானிலேயே இருக்குமாறுக் கூறி அவரது மகளை அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று மணித்தியாலங்களின் பின்னர் தாயை உள்ளே செல்ல அனுமதித்தபோது, மகள் தலைவிரிக்கோலமாக இருப்பதையும், அவருடைய அறையிலிருந்து மூன்று பொலிஸார் சிவில் உடையில் செல்வதையும் கண்டுள்ளார்.

பின்னர் பொலிஸார் குறித்தப் பெண்ணையும். பத்மவதியையும் அவர்களுடைய விட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளனர். வீட்டுக்கு வந்த ஒருசில நிமிடங்களில் குறித்தப் பெண் தனக்கும் தானே தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்தப் பெண்ணை பத்மவதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். வைத்தியசாலைக்கு விசாரணை செய்ய வந்த நீதவானைச் சுற்றி பொலிஸார் இருந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் நடந்த முழுவதையும் கூற மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பெண்கள் அமைப்பின் அதிகாரி ஒருவரான தமயந்தி பொலிஸார் இல்லாத சமயத்தில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். அத்துடன் வாக்குமூலத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தினை அவர் பிரதான நீதிபதியான யூசுப் இக்பாலிடம் சமர்பிக்க, பிரதான நீதிபதியும் மார்ச் 9ம் திகதி பெண் ஒருவரை அனுப்பி வாக்குமூலம் பெற்று அதனை கையடக்கத் தொலைபேசியிலும் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் நடந்து 3 வாரங்களுக்குப் பின்னர் மார்ச் 28ம் திகதி, கற்பழிக்கப்பட்ட பெண் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எதுவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்வில்லை.

இந்த நிலையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற நீதவான் கே.சுகுநா சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னறிவித்தல் கடிதம் விடுத்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு தற்காலிக நிவாரணமாக 5 லட்சம் இந்திய ரூபாயும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டும் என தாயான பத்மவதி தனது மனுவில் கோரியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com