Saturday, July 4, 2009

இலக்கியச் சந்திப்பில் தேசத்துரோகிகளும் பாஸிஸ்டுக்களும் ஒன்று சேர்ந்தனர். -விருகோதரன்-

இலக்கியச் சந்திப்பு. புனிதமான பெயர். எல்லோரும் தலைப்பைப் பார்த்தவுடன் ஒருகணம் திகைத்துப்போயிருப்பர். நான் கூறவில்லை அவர்கள் கூறியதைத் திருப்பிக் கூறுகின்றேன். கடந்த 1986ம் ஆண்டு தொட்டு தமிழ் மக்களுக்கு சொல்லித்தரப்பட்ட விடயத்தை திருப்பிக் கூறியிருக்கின்றேன். தமிழ் மக்களில் பல தரப்பு. அதில் மாபெரும் இரு தரப்பு. ஒரு தரப்பு தேசத்துரோகிகள், தீண்டத்தகாதோர், ஓட்டுக்குழு, கைக்கூலிகள், என செல்லமாக அழைக்கப்பட்டோர். மறுதரப்பு பாஸிஸப் புலிகள் என திட்டித்தீர்க்கப்பட்டோர்.

ஓட்டு மொத்தத்தில் இவ் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்வோர் தேசத்துரோகிகள் என புலித்தலைமை அறிவித்திருந்ததுடன் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான சபாலிங்கம் என்பவர் இவ்வாறான நிகழ்வொன்றை ஒருங்கமைத்த குற்றத்திற்காக புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இலக்கியச் சந்திப்பு (புலிகள் இயக்கிய சந்திப்பு) 37 ம் தடவையாக இம்முறை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள குருறூட் சந்திப்பு மண்டபத்தில் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரை இடம்பெற்றிருக்கின்றது. அங்கே மேற்குறிப்பிடப்பட்டோர் ஒன்று கூடியிருக்கின்றனர். அங்கு என்ன கதைத்தார்கள்? ஏது கதைத்தார்கள?; என்பது தொடர்பாக கலந்து கொண்டோரில் பலரும் பலவாறான தகவல்களை கூறுகின்றனர். (பல முறைகள் அக்கூட்டத்திற்கு சென்றிருந்த ஒருவரிடம் நீங்களும் சென்றுரந்தீர்களா எனக் கேட்டேன், தற்போது உடம்பு நிலை சரியில்லை இனி குடிக்கக் கூடாது என்பது வைத்தியரின் ஆலோசனை என பதில் வந்தது.)

இருநாள் சந்திப்பு முடிவில் ஏகமனதாக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சில இணையத்தளங்களில் காணப்படுகின்றது.

1. இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை அரசியல் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

2. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முழுமையான அதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை உடனடியாக கையளிக்கப்படவேண்டும்.

3. இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள், மலையக மக்கள் தலித் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவுசெய்யப்படுவதனுடன் அவர்களின் சமூக இருப்புக்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


4. அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்படுவதுடன் அம்மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான நடமாட்டத்துக்கானதுமான உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

5. மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.

6. இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துடனும் கூடிய உரிமையை பாதுகாப்பதுடன் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

என்பனவே அத்தீர்மானங்கள் ஆகும். இந்த ஆறு தீர்மானங்களில் தமிழ் கலாச்சாராம், தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த விடயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் முற்றிலும் திட்டமிட்டமுறையில் இலங்கை அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்துகின்ற மற்றும் விமர்சிக்கின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருகின்றது. இதில் மிகவும் சுவாரசியமான விடயம் யாதெனில் இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பவர்களில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அம்முன்னணியில் அங்கம் வகிப்பவர்கள் தொட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்ற கொள்கையை ஏற்று நின்று விடத்தல்தீவை இராணுவம் கைப்பற்றி அங்கு பிடிபட்ட 1500 க்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப்படகுகளை ரீவி யில் பார்த்து விட்டு தமிழ் கூட்டமைப்பில் இருந்து விலகி முன்னணியில் சேர்ந்துகொண்டோர் வரை அடங்குகின்றனர்.

ஆம், நாங்கள் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றோம். அது காலத்தின் கட்டாயம். எம் தமிழ் மக்களுக்கு, நாங்கள் உயிரிலும் மேலாக நேசிக்கின்ற தமிழ் மக்களுக்கு, நாங்கள் எல்லோரும் சேர்ந்து நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க கூட்டுச்சேர்ந்துள்ளோம் (சிரிப்பு) ஆனாலும் நாங்கள் தவறு இடம்பெறுகின்றபோது அவற்றை சுட்டிக்காட்டத் தவறப்போவதில்லை. நாங்கள் அங்கம் வகிக்கின்ற முன்னணி தவறிழைத்திருக்கின்றது அதை நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்கின்றோம் அதில் என்ன தப்பிருக்கின்றது என்ற கேள்வியை முன்வைப்பார்களேயானால் என்னிடம் பதில் இல்லை. முன்னணியில் இருந்து வெளியேறுங்கள் என்பேன். பொடியளுக்கு சாப்பாடு போடுவீர்களா என்பார்கள் (ஏமாற்றப் பிறந்தவாகள் ஆயிற்றே) (என்னிடம் வக்கில்லை என்பேன்.)

மேலே குறிப்பிடப்பட்ட தீர்மானங்ளை நிறைவேற்றியோர் அத்துடன் சேர்த்து,

7. புலிகள் இத்தேசத்திற்கு செய்திருக்கும் துரோகங்களை பட்டியலிட்டு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

8. புலிகள் இன்று அறிவித்திருக்கும் நாடுகடந்த தமிழீழம் என்கின்ற விடயம் மக்களை மேலும் அழிவிற்குள் தள்ளுமாகையால் அவர்கள் அதை கைவிடவேண்டும். அத்துடன் மக்களும் இவ்விடயத்தை மக்கள் முற்றாக நிராகரிக்கவேண்டும்.

9. புலிகளால் போராட்டத்தின் பெயரால் மக்களிடம் அறவிடப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டி அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முற்படவேண்டும். அல்லது அவற்றை இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

10. ஐரோப்பிய தேசத்திலலே புலிகள் வங்கிக்கடன்களை பெற்று நடுத்தெருவில் விட்டுள்ள மக்களது கடனை மீளச் செலுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. இன்று பிளவுபட்டுள்ள புலித்தலமையின் சர்வதேச வலையமைப்பு கலைக்கப்படவேண்டும்.

12. தொடர்ந்தும் ஐரோப்பாவில் பணம் கேட்டுவரும் புலிகளை பொலிஸாரிடம் காட்டிக்கொடுக்கவேண்டும்.

போன்ற விடயங்களையும் வலியுறுத்தி இருப்பார்களேயானால் இச்சந்திப்புக்குச் சூட்டப்பட்ட பெயருக்காவது மதிப்பிருந்திருக்கும். ஆனால் மேற்படி ஒன்றுகூடலில் கலந்து கொண்ட துரோகிகள் எனும் தரப்பினர் முழு விட்டுக்கொடுப்புச் செய்ய பாஸிஸ்டுக்கள் என்போர் தமது விடயங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.

மாற்றுக்குழக்களுடன் சேர்ந்து செயற்படப்போகின்றோம் என புலிகளால் ஏன் அறிவிக்கப்பட்டது. புலிகளுடைய துரோகங்களை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட புலிகள், தாம் தமது தவறுகளை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவற்றை எதிர்காலத்தில் திருத்தி சகல கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவோம் எனக் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் புலம்பெயர் புலித்தொழிலாளர்களுடன் எமக்கு எந்த சமரசமும் இல்லை என மக்களின் நலனில் நின்று தமது கொள்கையில் தெளிவாக இருக்கும் நபர்களையும் தமது அரசியல் வங்குரோத்து மற்றும் சுயலாபங்களுக்காக புலிகளின் ஏமாற்றுக்கு துணைபோவோரையும் மேற்படி சந்திப்பும் தீர்மானங்களும் இனம் காட்டியுள்ளது.

மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட துரோகிகள் என்போரும் பாஸிஸ்டுக்கள் என்போரும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். பாஸிஸ்டுக்கள் தாம் தமது சுயலாபத்திற்காகவே எண்ணற்ற உயிர்களை துரோகிகள் என சுட்டுத்தள்ளியதுடன் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த மக்களையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கினோம் எனவும் துரோகிகள் என்போர் நாம் மக்களை ஏமாற்றுவதற்காகவும் பிறதேவைகளுக்காகவுமே புலிகளை பாஸிஸ்டுக்கள் என்றோம் என்பதையும் தெளிவாகவும் பகிரங்கமாகவும் கூறி தமது உண்மை முகத்தை காட்டவேண்டும். VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com