Wednesday, June 17, 2009

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். -சாந்தி ரமேஷ் வவுனியன்-

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள் நின்ற அந்த மக்கள்கூட வணங்காமண்ணைப் பெரிதும் நம்பினர். தனது உறவுகளைப் பலிகொடுத்த ஒரு இளைஞன் கண்ணீரோடு கப்பல் வருமா எங்களைக் காக்குமா எனக் கதறியது எங்கள் எல்லோரையும் அழ வைத்தது.

புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் இந்தக் கப்பல் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு மட்டுமல்ல ஒர் உணர்வு கலந்த உதவிகளை அனைத்துத் தமிழர்களும் ஓடியோடிச் செய்தது மட்டுமல்லாமல் வளமை போல் தம்மைத் தேசிய ஊடகம் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் முதலாக பிரபல ஆய்வாளர்கள் வரை, இந்தக் கப்பல்தான் முல்லைத்தீவில் முடக்கப் பட்டிருந்த பல இலட்சம் மக்களினதும் மீட்புக் கப்பல் என்பதைப்போல பேசியும் எழுதியும் கொண்டிருந்தனர்.

அவையெல்லாம் அந்தக் கப்லின் பயணத்திற்கான விபரங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து அதற்கான உதவிகளைப் பெறுவதே நோக்கமாக இருந்தது .எனவே அதில் தவறு சொல்வதற்கில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடனும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடனும் இந்தத் திட்டத்தினைத் தொடக்கியவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கத்தினர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையரசினாலும் மற்றும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்ததனால் எந்தவொரு கப்பல் நிறுவனமும் இவர்களுக்குக் கப்பலை வாடைகைக்குக் கொடுக்க முன்வரவில்லை.அது மட்டுமல்ல சர்வதேசத் தொண்டு நிறுவனங்களோ செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவிகளோ கிடைக்க முன்னரே சட்ட வல்லுனர்களின் உதவியுடன் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டங்களிற்கமைய , அதே நேரம் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் , அதன் உறுப்பினர்களுடனும் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றுடனும் தான் இந்தக் கப்பல் புறப்படும் என்றும் சொல்லப்பட்டது.

எனவே இலங்கையரசு இந்தக் கப்பலைத் தடுத்தாலும் சர்வதேச நாடுகளும் உதவி அமைப்புக்களும் இலங்கையரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்ஆகவே அது கூட எமது போராட்டத்திற்கான ஒரு பரப்புரையாக அமையும் என்றும் அதன் ஏற்பாட்டாளர்களினால் மக்களிற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது. எனவே மக்களும் தங்கள் உறவுகளுக்கு எல்லாம் போய்ச்சேரப்போகிறதென நம்பிப் பணமாகவும் பொருட்களாகவும் போதும் வேண்டாம் என்று சொல்லும் வரை அள்ளிக் கொடுத்தனர்.

பணம் பொருட்கள் எல்லாம் தயாரான பின்னரும் கப்பல் தயாராகாததால் கப்பல் பறப்படுமா இல்லையா என்றொரு குழப்பம் இருந்தது. பணம் கொடுத்த மக்கள் ஊடகங்களில் நேரடியாகவே தங்கள் கோபங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர். மக்களின் கோபத்தினை திசை திருப்புவதற்காக பிரான்சிலிருந்து ஒரு கப்பலும் யெர்மனியிலிருந்து ஒரு கப்பலும் பறப்படுவதற்கு தயாராகின்றது என்று பரபரப்புக் கதைகளைப் பரப்பிவிட்டபடியே ஒருவாறு பழைய கைவிடப்படவேண்டிய நிலையிலிருந்த *கப்டன் அலி* என்கிற சிரிய நாட்டுக் கப்பலைப் பல இலட்சம் யுரோக்களிற்கு விலைக்கு வாங்கி அதில் 800 தொன் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு பின்லாந்து நாட்டுக்காரரின் தலைமையில் ஒரு தமிழர் உட்பட கப்பல் ஊழியர்கள் 13 பேருடன் வணங்காமண் கப்பல் கடலில் நகரத் தொடங்கிய பொழுது முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாய் இருந்த அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டிருந்தனர்.

இந்தக் கப்பலின் எற்பாட்டாளர்கள் கூறியது போல கப்பலில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோ வைத்தியர் குழுவோ இருந்திருக்கவில்லை.கப்பலும் இலங்கையரசினால் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு கப்பலில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை மருந்துகளும் உணவுப் பொருட்கள் மாத்திரமே உள்ளது ஆனாலும் அதனைப் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்குக் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று திமிராகக் கூறிவிட்டுக் கப்பலையும் திருப்பி அனுப்பிவிட்டது.

பணமும் பொருளும் அள்ளிக் கொடுத்த மக்களின் எதிர் பார்ப்பின்படி எந்தப் பொருட்களும் எமது உறவுகளிடம் சென்று சேரவுமில்லை அதே நேரம் ஏற்பாட்டாளர்கள் கூறியதைப் போல எந்தப் பரப்புரையும் நடக்கவுமில்லை. எந்தவொரு நாடும் ஏன் எந்தவொரு மனிதவுரிமை அமைப்புக்கூட ஒரு கண்துடைப்புக்கேனும் ஒரு கண்டனத்தைக்கூட வெளியிடவில்லையென்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். காரணம் இதன் எற்பாட்டாளர்கள் சர்வதேச ரீதியான ஆதரவினைப் பெற்றுக் கொள்ளாததும். சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட புலிகளின் உப அமைப்பு எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் இதனை ஏற்பாடு செய்ததுமேயாகும்.

அது மட்டுமல்ல கப்பல் இலங்கையிலிருந்து திருப்பப்பட்டதும் அதில் உள்ள பொருட்களையாவது பொறுப்பெடுத்து பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கும்படிதொண்டு நிறுவனங்களிடமும் சில இந்திய(தமிழ்நாட்டு)அரசியல் வாதிகளிடமும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. தங்களுக்கும் புலிச்சாயம் அடிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் யாரும் பொறுப்பெடுக்க முன்வராததால் கப்பல் தற்சமயம் இந்தியாவின் கல்கத்தா துறைமுகம் நோக்கிப் பயணித்தபடி இருக்கின்றது.

கல்கத்தா சென்றடைந்ததும் கப்பலில் உள்ள பொருட்களை யாரோ ஒருவர் ஏலத்தில் எடுக்கப்போகிறார் , மீதி கடலில் எறியப்படும் , கப்பலும் பழைய கப்பல்கள் உடைக்கும் ஒரு நிறுவனத்திடம் விற்கப்பட்டு உடைக்கப்பட்டு கல்க்கத்தாவில் உள்ள கலாயன் கடைகளில் விலைக்குப் போடப்படும்.

இங்கு உடைபடப்போவது வணங்காமண் என்கிற கப்பல் மட்டுமல்ல , புலம்பெயர் தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் , உணர்வும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் தான்.

இது யாருடைய தவறு??? இப்படி ஒரு திட்டத்தினைப் போட்டது தவறல்ல ஆனால் அதனை வழிநடத்தியவர்களின் தவறேயாகும். தங்களிற்கே எல்லாம் தெரியுமென்கிற அதிமேதாவித்தனம் , இங்கிலாந்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவுக்குரல் தந்துவிட்டால் நாடாளுமன்றமே ஆதரவு தந்துவிட்டதாகக் கட்டப்பட்ட மனக்கோட்டைகள் என எங்களது தவறான புரிதல்களும் வழிநடாத்தல்களுமேயாகும்.

பலவிடயங்கள் சட்டரீதியாக சர்வதேச விதிமுறைகளிற்கு அமையாமலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஆதரவுகளைத் திரட்டாததும் தான் காரணமாகும். இப்படி மக்களின் பணமும் , உழைப்பும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் சில புலத்து மேதாவிகளால் விணடிக்கப்படுவது இது முதல் தடைவையல்ல என்பதை எல்லோருமே அறிவார்.. ஆகவே இனியாவது இப்படியான தவறுகளை விடாதீர்கள். மக்களை ஏமாற்றாதீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இதற்கு மேலும் ஏமாற்றங்களைத் தாங்க எம்மால் முடியாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com