Friday, June 5, 2009

இனி நமது சொந்தக்காலில் நிற்போம். - யஹியா வாஸித்- ( பகுதி – 2)

ஆண்டவன் படைப்பில்தான் எத்தனை அதிசயங்களும், அவலங்களும். அதிசயம் அவலம்
இவ்விரண்டையும் எடுத்துப் பிசைந்து சிறிலங்கா என்ற ஒரு குட்டித்தீவாக இந்தப்பரந்த உலக
த்தில் தூக்கி வீசியுள்ளான் அந்த இறைவன். வீசியது மட்டுமல்லாது தனது சகல திருவிளையா
டல்களையும் இங்கேயே அரங்கேற்றினான். ஒன்றா இரண்டா பல நூறு திருவிளையாடல்கள்
30 வருடம். இறைவனுக்கு மூச்சு முட்டமுட்ட திருவிளையாடல்கள்.

சாவகச்சேரி பலாப்பழத்தை எங்கும் விற்கமுடியவில்லை , காங்கேசன்துறை கிளிங்கர் கல்லுக்கு மார்கட்டே இல்லை. யாழ்ப்பாண ஒடியல் விலைபோகல, ஊர்காவல்துறை கடலட்டை எந்த சந்தைக்கும் போகல. வன்னி சிவப்பரிசியை வெள்ளவத்தையில் யாருமே விற்பனைக்கு வைக்கவில்லை. கிளிநொச்சி வெங்காயம் சந்தையில் இல்லவே இல்ல.அம்பாறை நெல்விளைச்சல் நிலங்கள் முற்றாக தரிசாக கிடந்தன. புல்மோட்டை இல்மனைட் வாங்குவாரின்றி கொட்டிக்கிடந்தது. சிறிலங்காவின் எற்றுமதி வியாபாரம் பாய்விரித்து உறங்கியது. உல்லாசப்பிரயாணிகள் வருகை முக்காடு போட்டு தூங்கியது. நாட்டின் நிதியமைச்சர்கள் உலகவங்கியில் கியூவில் நின்றனர். பாதுகாப்பமைச்சர்களோ பேய்க்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

படித்தவர்கள் சம்பளத்தையும், சாப்பாட்டையும் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி புசித்தனர்.
பாமரர்கள் துண்டுக்காணிகளை வட்டிக்குவிட்டு பிள்ளைகளை அரபுநாடுகளுக்கு ஏலம் விட்டனர். விபரம் புரிந்தோர் ஐரோப்பாவில் பெற்றோல் கராஜ்களில் சோரம் போனார்கள். நாடு சோபை இழந்தது. தலைவர்கள் வந்தார்கள் போனார்கள். வென்றதாக சரித்திரமே இல்லை.

ஒருவாறாக முப்பது வருடத்திற்குப் பின் பக்தா உன்பக்தியை மெச்சினோம் எனக்கூறிக்
கொண்டு சிற்பியை தேடிக்கண்டுபிடித்து இனி நீதான் இந்த நாட்டுக்கு ராஜா எனக்கூறி நியமித்துவிட்டு, உழியை கொண்டுபோய் கோட்டபாயவிடமும், சரத் பொன்சேகாவிடமும் கொடுத்து செதுக்குங்கடா மக்காள் என ஒரு நீண்ட திருவிளையாடல். செதுக்கிட்டாங்கள்.மொத்தமாக செதுக்கிட்டாங்கள். இனி ஜாலியா,ரொம்ப ஜாக்கிரதையா அந்தச்சிலையை பராமரிக்க வேண்டும். சாமி சிலை. இலங்கைச்சாமி. சாமிக்கு கற்பூராதனை, மலராதானை எனத்தொடங்கி பாமாலைகள் பாடி, பாலாபிக்ஷேகம்வரை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

என்.எம்.பெரேரா என்கின்ற ஒரு மண்டை சிறிலங்காவில் நிதியமைச்சராக இருந்த காலம் அது. சிகரட்இசாராயம், பெற்றள் விலைகளை இரவோடிரவாக ஏற்றி, சீனி, யூரியா இலாம் பெண்ணை விலைகளைக் குறைத்து, கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்த வியாபாரிகளை கில்லி விளையாடிய காலமது. அந்தக் காலத்தில் சில பழுத்த, கொழுத்த முதலைகள் என்.எம்.பெரேரா வின் நாடிபிடித்துப் பார்த்து, சில பொருட்களை வாங்கி சேமித்து வைப்பார்கள். அதாவது இந்த வருடம் சிகரட்டுக்கு விலையைக் கூட்டலாம் என அறிந்து நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய நாள் சிகரட்டை வாங்கி குவித்து வைத்துக் கொள்வர். அதே போல் சிகரட் விலை கூட்டப்படும்.

இவர்கள் கொள்ளை இலாபம் உழைப்பர். இதை அறிந்த ஒரு கிரிமினல் வக்கீல் தானும் இதில் சிறிது இலாபம் உழைக்கலாம் என முடிவெடுத்து, அடுத்த வருடம் பெற்றள் விலை கூடலாம் என எதிபார்த்து எக்கச்சக்கமான பெற்றளை சேமித்தார். இவரது கெட்டகாலம் பெற்றள் விலை 15 சதவீதம் குறைக்கப்பட்டது. தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்த இவர், விட்டதைப் பிடிப்பதற்காக அடுத்த வருடம் சைக்கிள் டயரை வாங்கி சேமித்தார். இவரது அதிபோதாதகாலம் சைக்கிள் டயரின் விலை 25 வீதத்தால் குறைக்கப்பட்டது. இங்கு எதைச் சொல்ல வருகின்றேன் என்றால் வியாபாரம் என்பது நன்கு திட்டமிட்டு செய்யப்பட வேண்டியது. தடாலடியாக இலாபம் எதிர்பார்க்கக் கூடாது. ரொம்ப ஜாக்கிரதையாக அடிமேல் அடியெடுத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு அடியும் அடுத்த பல வருடங்களுக்கு உரமாக இருக்க வேண்டும்.

நல்ல ஒரு பிஸினஸ் செய்ய வேண்டும். உடனே இலாபம் கிடைக்கணும்,கடன் கிடன் எல்லாம் கொடுக்க முடியாது. என்ன பிஸினஸ் பண்ணலாம்? என சில பேர் பணத்தை மூட்டையில் கட்டி வைத்துக்கொண்டு அலைவதாக கேள்விப்பட்டேன். அதனால் இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே யோசிப்போம். நாம் தினமும் சாப்பிடும் வெள்ளைச் சீனி எங்கிருந்து வருகின்றது. கல்லோயா, வெல்லவாய, இங்குறான, பெல்வத்த. ஹ்ஹ்ம். கிடையவே கிடையாது. அது நேரடியாக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அந்த சீனிக்கு இகும்ஸா 45 என்ற இரசாயனப் பெயரும் உண்டு. அப்படியானால் நமது நாட்டில் உற்பத்தியாகும் சீனி என்னாகிறது. அதை சிங்கள கிராமப்புற மக்கள் கருப்பட்டி செய்து கஹட்ட தே குடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பார்த்தீர்களா புத்திசாலிகளே, நாம் வெளிநாட்டு சீனி சாப்பிட, இம்மண்ணின் மைந்தர்கள் சுதேசிச் சாப்பாடு உண்டு கொண்டிருக்கின்றார்கள். மொத்த சிறிலங்காவுக்கும் ஒரு மாதத்துக்கு ஒருலட்சம் மெற்றிக்தொன் சீனி தேவை. (ஒருமெற்றிக் தொன் 1000 கிலோ கிராம்) நமது நாட்டில் இதில் முப்பது வீதம் தான் தயாராகின்றது. மீதி 70 வீதத்தை இறக்குமதி செய்கின்றோம். ஹில்டன் ஹோட்டலில் தயாரிக்கப்படும் சொக்லேட் கேக் முதல், நம்ம வீட்டில் தயாரிக்கப்படும் வட்டிலாப்பம் வரை பிரேஸில் சீனி (இகும்சா 45) யை கொண்டுதான் தயாரிக்கிறோம்.

பிரேஸில் சீனி உற்பத்திக்கு பெயர்போன நாடு. நூற்றுக்கணக்கான சீனி உற்பத்தி நிறுவனங்கள்
இங்கு கியூவரிசை கட்டி நிற்கும். ஒவ்வொரு பெக்டரியும் உலகளவு ப்ரமாண்டம். ஒரு நாளைக்கு ஒரு பெக்டரியில் பல ஆயிரம் மெற்றிக் தொன் சீனி உற்பத்தி செய்வார்கள். ஆறு மாதம் உற்பத்தி. ஆறுமாதம் கம்பனியை மூடி இயந்திரங்களையும், உதிரிப்பாகங்களையும் சுத்தம் செய்வார்கள். இங்கு உற்பத்தியாகும் கரும்பு ரொம்ப சொற்பம். மீதி கரும்பை உலக நாடுகளில் இருந்து வாங்குவார்கள். அனேகமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து வாங்குவார்கள். சில சீனி உற்பத்தியாளர்களுக்கு ஆபிரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான ஹெக்டேர்களில் கரும்புத் தோட்டங்கள் உண்டு. இங்கு உற்பத்தியாகும் கரும்புகளை பாரிய கப்பல்களில் ( இதை பிக் பாட்ச் எனச் சொல்வர்) ஏற்றி கடல் வழியாக கட்டி இழுத்து வருவர்.

ஒரு மெற்றிக் தொன் கரும்பின் விலை அண்ணளவாக வெறும் 45 யுஎஸ் டொலர் (5220 ரூபா) மட்டும்தான். ஒரு கிலோ கரும்பு வெறும் ஐந்து ரூபா இருபது சதம். கப்பல் கூலி ஆபிரிக்கா இருந்து பிரேஸிலுக்கு முப்பதாயிரம் யுஎஸ் டொலர்.கரும்பை பிரேஸில் கொண்டுபோய் சேர்க்கும் போது ஒரு கிலோ கரும்பின்விலை 8ரூபாவாக மாறும்.

கரும்பை ஆலையில் இட்டு கழுவி, சீவி பிரதான இயந்திரத்துக்குள் கொட்டி, கறுப்பஞ்சாறாக மாற்றி, அப்புறம் பதப்படுத்தி, பளீர் வெண்மையாக சீனி (இகும்ஸா 45) வரும். அதன்பின் மொத்த உற்பத்தி செலவையும்இகணக்கப்பிள்ளைமார் ( சீனியர் எக்கவுன்டன்ற்)உட்கார்ந்து பிரித்து மேவுவார்கள். ஆம் சுத்தமான வெள்ளைச்சீனி கிலோ 14 ரூபா 50 சதத்தை தாண்டவே தாண்டாது. சீனியை உற்பத்தி செய்துவிட்டு இவர்கள் நினைத்த மாதிரி ஏற்றுமதி செய்துவிடமுடியாது.

பிரேஸில் கடற்கரை ஓரங்களில் குட்டிக் குட்டி படகுகளை வைத்துக் கொண்டு குட்டிக் குட்டி தாதாக்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தொன்னுக்கு ஐந்து, ஆறு டொலர் அழ வேண்டும். அப்புறம் இகும்ஸா 45 என்கின்ற அந்த வெள்ளைச் சீனி கப்பல் இந்தியாவில் உள்ள கல்லத்தா துறைமுகத்துக்கு( கந்தளமே துறைமுகம்) அல்லது துபாய், சிங்ப்பூருக்கு வரும். அங்கிருந்து நம்ம இரண்டாம் குறுக்குத்தெரு புங்குடுதீவார்ர கடைக்கோ நுவரேலியா கவிதாஸ்க்கோ கிலோ 85 ரூபா என வந்து நம்ம பொருளாதாரத்தை உறிஞ்சும். விபரம் புரியாமல் நமது மொத்த புத்துசாலிகளும் நிதியமைச்சரை திட்டித்தீர்ப்பர். 33 ரூபாவுக்கு பிரேஸிலில் சீனியை வாங்கி, புறோக்கர் பீஸ் வாங்கிக் கொண்டு, 72 ரூபாவுக்கு கல்கத்தா வியாபாரிகளுக்கு சீனி விற்ற புறோக்கர்(மிடுல் மேன்) இங்கிலாந்தில், மார்பள் ஆர்ச் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கஸினோவில் (சூதாட்டம்) ஒரு மில்லியன் டொலருக்கு பந்தயம்கட்டி பணத்தை தண்ணீராக செலவு செய்து கொண்டிருப்பார். இங்கு நமது உம்மாமார்(அம்மாக்கள்) அமைச்சர் அதாவுல்லாவுக்கோ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவு
க்கோ வசை பாடிக்கொண்டிருப்பர்.

சீனி விலையை இப்பிடி கூட்டிப்போட்டான்கள். இதை இந்த அமைச்சர்மார் கேக்கமாட்டாங்களா என குசினிக்குள் ஆராதனைகள் காதைப்பிளக்கும்.
ஏன் நாம் சீனியை இறக்குமதி செய்ய முடியாதா? முடியும். அதற்குரிய கெப்பாசிற்றியும் நமக்கு உண்டு. ஆனால் யாரும் யோசிக்கல. ஏன் யோசிக்கல. இன்றைய ( 5.6.2009) சீனி விலை ஒருமெற்றிக் தொன் 385 யுஎஸ் டொலர். பிரேஸிலில் சீனி வாங்குவதானால் ஆகக்குறைந்தது 12500 மெற்றிக் தொன் சீனிதான் வாங்கலாம். அதற்கு 4812500 (4.8 மில்லியன் )டொலர் தேவை. கிட்ட தட்ட 55கோடி 35 லட்ச ரூபா தேவை. இதனால் யாரும் முயற்சிக்கல.

எந்த வியாபாரியும் பணத்தை கையில் கட்டி வைத்துக் கொண்டு வியாபாரத்தை தொடங்குவதி
ல்லை. வங்கிகளின் உதவியுடன்தான் வியாபாரத்தை விருத்தி செய்வார்கள். இவர் ஒரு 50வீதம்பணம் முதலிட வங்கியும் 50வீதம் உதவி செய்துதான் வியாபாரங்கள் உலகம் பூராக நடக்கின்றது. ஆனால் இந்த சீனி வியாபாரத்தில் பிரேசில் சீனி வியாபாரிகள் கொஞ்சம் கிறுக்குப் பிடித்தவர்கள். 12500 மெற்றிக் தொன் சீனி வாங்க வேண்டுமென்றால், 25ஆயிரம் மெற்றிக் தொன் சீனிக்குரிய பணத்தை முற்பணமாக கேற்பதுடன்,ஒரு வருடத்துக்கு தங்களிடம் சீனி வாங்க வேண்டும் என எக்றிமென்ட் (ஒப்பந்தம்)செய்ய வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.

12500 மெற்றிக் தொன் சீனி வாங்கவே யோசிக்கும் நம்மவர்கள், 25ஆயிரம் மெற்றிக் தொன் சீனி க்கு 111 கோடி ரூபாவுக்கு எங்கே போவார்கள். வேண்டாம்பா இந்த வம்பு என ஓடி ஒழிந்து விடுவார்கள். இதனால் இந்தியாவிலிருந்தும், சிங்கப்பூர், துபாயிலிருந்தும் 20 தொன், 50 தொன் என சீனியை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம்.

இன்று வேலையற்றிருக்கும், தொழில் செய்ய ஆர்வமாயிருக்கும் என்ன தொழில் செய்தால் முன்னேறலாம் என சிந்திக்கும் அனைவரும் சீனி வியாபாரம் சம்பந்தமாக யோசிக்கலாம். 20
பேரோ அல்லது 30 பேரோ சேர்ந்து ஒரு கம்பனி அமைத்து வங்கிகளின் உதவியுடன் சீனியை
நேரடியாக பிரேஸிலில் இருந்து இறக்குமதி செய்யலாம். கொழும்புத் தறைமுகத்துக்கு சீனியை
38 ரூபாவுக்கு தருவிக்கலாம். ஒரு கிலோ 60 ரூபாவுக்கு விற்றாலே கொள்ளை இலாபம் உழைக்கலாம். ஆம் புத்திசாலிகள் சிலர் ஒன்று சேர்ந்து இன்று நாட்டின் அபிவிருத்திதான் முக்கியம்இஎமது அடுத்த இலக்கு பொருளாதார வளர்ச்சி என வீறுநடை போடும் அமைச்சர்
கள் அதிகாரிகளின் கதவுகளை தட்டி கம்பனிகள் தொடங்கி சீனியை இறக்குமதி செய்யலாம்.

பிரேசில் எம்பஸி கொமர்ஷியல் டிவிஷனை தொடர்புகொண்டு சரியான சீனி கம்பனியை கண்டு பிடிக்கலாம். அதற்கு முதல் எமக்கென ஒரு கம்பனியை பதிவு செய்து கொள்ள வேண்டும். சீனி வேண்டும் என அவர்களுக்கு ஈமெயில் எழுதி அடுத்த நிமிடம், நமது கம்பனி எல்.ஓ.ஐ. (லெற்றர் ஒப் இன்ரன்ட் ) அனுப்ப சொல்வார்கள். நாம் யார்? நமது கெப்பாசிற்றி என்ன? என நமது கம்பனி லெட்டர் ஹெட்டில் எழுதி அனுப்ப வேண்டும். அது போய் சேர்ந்ததும் தங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் பீ.சி.எல்.( பேங் கன்போர்மேஷன் லெட்டர்) அனுப்ப சொல்வார்கள்.

ஏஸ்.மேற்படி கம்பனி எங்களிடம் கணக்கு வைத்துள்ளது, நல்லவர்கள், வல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இவர்களது பணபலம் 110 கோடியை தாண்டும் என எழுதி வங்கி முகாமையாளர் வங்கி தலைமையகம் என ஒரு கடிதம் பெற்று பிரேஸில் கம்பனிக்கு அனுப்ப வேண்டும்.

இங்குதான் சிறிலங்காவில் உள்ள மொத்த வங்கியும் வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கின்றன. 110 கோடி ரூபாவை முதலில் வைப்பிலிடு, அப்புறம் தருகின்றோம் பீ.சி.எல்.என வியாபாரிகளின் முகத்தில் அறைந்த மாதிரி கூறி விடுவார்கள். இதனால் தினமும் பல கோடி, பல மில்லியன், பல ஆயிரம் பில்லியன் ரூபாக்களை எங்கோ பெயர் தெரியாத, யாரோ பல இடைத்தரகர்களுக்கு நாமும், நமது நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த விடயத்தை நமது நாட்டின் இன்றைய கதாநாயகர்களுக்கு புரியவைத்து, வங்கிகளை கொஞ்சம் இறங்கி வரச்செய்து பாரிய சீனி வியாபாரத்தை தொடங்கலாம்.

குறிப்பு : வேலையற்ற பட்டதாரிகள் பலர் சேர்ந்து அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேங் கன்போர்மேஷன் லெட்டர் பெற்று நேரடியாக இறக்குமதி செய்யலாம்.
சீனி மட்டுமல்ல கோதுமை மாவு, பழைய இரும்பு என்பனவும் இப்படியே நம் உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.

வெல்லவாய சீனி பெக்டரியை குத்தகைக்கு விடப்போவதாக காற்றுவாக்கில் ஒரு செய்தி வந்துள்ளது. வருட குத்தகை 30 கோடி ரூபா என்றும் கேள்வி.நோ புறப்ளம்.ஆனால் அந்த மொத்த காணியிலும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பழைய இரும்பின் பெறுமதி ரூபா 300 (முன்னூறு )கோடி தேறும். பலசாலிகள் இதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி, அந்த
இரும்பை விற்று பல நூறு மக்களின் கண்ணீரை துடைக்கலாம்.

(அடுத்த வாரம் ஐ.ரி.என்று சோர்ட் அன்ட் சுவீற்றாகவும்இ இன்போர்மேஷன் டெக்னோலஜி என ஆங்கிலத்தில் பந்தாவாகவும்இதகவல் தொழில் நுற்பம் என செந்தமிழில் அழகாகவும் சொல்லப்படுகின்ற அந்த பூதத்தை தரிசிப்போம்......)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com