வன்னியில் தொற்றுநோய்கள்; மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: வைத்தியர் சத்தியமூர்த்தி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவிவருவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து கரையோரப் பகுதிகளில் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் அதிக வெய்யில் காரணமாக நோய்த்தொற்றுக்கள் பரவுவதாக வைத்தியர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார்.
“குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் கரையோரங்களை அண்டிய வெளிகளிலேயே தற்காலிக கூடாரங்களை அமைத்துத் தங்கியுள்ளனர். தற்பொழுது காணப்படும் கடும் வெய்யில் காரணமாக அவர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகின்றனர். நேற்றும், நேற்றுமுன்தினமும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார் அவர்.
இடம்பெயர்ந்து நெருக்கமாக வாழும் மக்கள் மத்தியில் டைரியா, மூளைக்காய்ச்சல், நிமோனியா போன்ற தொற்றுநோய்கள் பரவி வருவதாகவும், குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களே இதனால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சத்தியமூர்த்தி கூறினார்.
ஒருவயதுக்குக் குறைந்த குழந்தைகள் நோய்த்தொற்றினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தொற்றுநோய் காரணமாக வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு வழங்கப் போதியளவு மருந்துகள் இல்லாதபோதும், நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான அடிப்படை சுகாதார வசதிகளைப் பேணுமாறு கூறிவருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் போதியளவு உணவு மற்றும் குடிநீர் வசதிகளின்றி சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், கடற்கரையோரம் என்பதால் குடிநீருக்காக நீண்டவரிசையில் மக்கள் காத்துநிற்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் போதியளவு மருத்துகள் இல்லையென்பதால், காயங்களால் ஏற்படும் இரத்தப்பெருக்கைத் தடுப்பதற்காக மாத்திரம் கட்டுக்களைப் போட்டிருப்பதாக வைத்தியர் சத்தியமூர்த்தி பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் நாளையதினமே நோயாளர்களை ஏற்றிச்செல்ல வரும் என்பதால், நோயாளர்களுக்குக் கட்டுப்போட்டு இரத்தப் பெருக்கைத் தடுத்திருப்பதாகவும், புதுமத்தளன் பகுதிக்கு காயமடைந்த 600 பேர் இதுவரை அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நேற்றையதினம் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் காயமடைந்த 400 பேர் திருகோணமலைக்கு அனுப்பகைவ்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பிவைக்கப்பட்ட 30 மெற்றிக்தொன் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற பொருள்கள் கப்பல் மூலம் முல்லைத்தீவை நேற்று புதன்கிழமை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment