நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் மூன்று கைதிகள் சுட்டுக்கொலை.
நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தி ற்குள் நேற்றுக்காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறைக்கைதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நேற்றுக் காலை 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணைகள் முடிந்து கைதிகள் சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது இரு கைதிகளை இலக்கு வைத்து மற்றொரு கைதி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒரு கைதி ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய கைதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கைதிகள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவரை உடனடியாக சிறைச்சாலைக் காவலர்கள் மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர். இதன் போது அந்த கைதி தன்னிடமிருந்த துப்பாகியைப் பயன்படுத்தி சிறைக்காவலர்களையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அவரை சிறைக்காவலர்கள் சுட்டுக் கொண்டுள்ளனர்.
பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மூவரே இந்தச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவர்களில் கைதியால் சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் சகோதரர்கள் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகவும், கைதியின் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் பூரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேர குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment