Sunday, February 23, 2014

தெற்கிற்கு நான் புதியவளல்ல! என் தேகமெங்கும் தெற்கின் குருதியே! - நதீஷா

அத” செய்திப் பத்திரிகையில் இடம்பெற்றிருந்த தென் மாகாண சபை சபையின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து களம் குதித்துள்ள, பிரபல நடிகை நதீஷா ஹேம்மாலியுடனான நேர்காணல் தமிழில்…

(தமிழாக்கம் - கலைமகன் பைரூஸ்)

நீங்கள் ஒரு நடிகையாக நின்று, அரசியலில் களம் குதிப்பதற்குக் காரணம் என்ன?

நிகழ்கால சமுதாயத்தில் உள்ள குழப்பநிலை. இலங்கை மண்ணில் கால் வைத்து உயிர்வாழ்கின்ற ஒருவர் என்ற முறையில், இந்நாடு செல்லும் பிழையான திசையை சாதாரண பொதுமக்களைப் போலவே நானும் காண்கிறேன். இந்நிலையில், பொதுமக்களுக்காக என்மீது அன்பு கொண்டிருப்பவர்களுக்காக நன்றிக் கடனுக்காகவே, உதவுவதற்காகவே நான் ஐக்கிய தேசியக் உறுப்பினர் என்ற வகையில் அரசியலில் இணைந்து எனது மக்களுக்குச் சேவையாற்ற விரும்பினேன். நான் நடிகையானதும், பிரபலமானதும், ஏதேனும் எனக்குக் கிடைத்திருப்பதும் எனது அன்பான அபிமானிகளினாலேயே.

மாத்தறை மாவட்டத்திலிருந்து தேர்தலில் ஈடுபடுவதற்குக் காரணம் என்ன?

எனது ஊர் தென் மாகாணத்தில் அம்பலங்கொட. நான் அம்பலங்கொட பிரஜாபதி மகளிர் மகா வித்தியாலயத்திலேயே கல்வி கற்றேன். உயர்கல்விக்காக மட்டுமே நான் கொழும்புக்குச் சென்றேன். அதன்பின் கலை சார்ந்த விடயங்களுக்காக கொழும்பில் தங்கினேன். இனி, தென்னகத்தைச் சேர்ந்தவர் என்றவகையில் என் சரீரமெங்கும் தெற்கின் இரத்தமே ஓடுகின்றது. எனக்கு தெற்கிற்கு உரிமை இருக்கிறது. மாத்தறை மாவட்டம் என்பது தென்மாகாணத்திற்கு உரித்துடையது. அதனால், மாத்தறை எனக்கு புதிய இடமே அல்ல.

மற்றவர்களைப் போலவே, தேர்தலின் பின்னர் தாங்களும் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வீர்கள் என்று கருத்தொன்று நிலவுகின்றது. நீங்கள் அப்படிப்பட்டவரா?

நான் உல்லாப் பறவை அல்ல. எனது தாய்நிலம் இது. நான் வளர்ந்தும், உயர்ந்ததும் தெற்கிலிருந்து. மாத்தறை மாவட்டத்திற்கும் தென் மாகாணத்திற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. நான் எனது மக்கள் மீது உயிரையே வைத்திருக்கின்றேன். நான் கொழும்பு போன்ற நீண்ட தூரத்திலிருந்து மாத்தறைக்கு அவர்களுக்காகவே வருகின்றேன். பாதுகாப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. நான் சுதந்திரமானவள்.. சுயாதீனமானவள்… தொடர்ந்து மாத்தறை வாழ் மக்களுடன் இணைந்து, அவர்களுக்கு சேவையாற்றுவதையே பெரிதும் விரும்புகிறேன்.

No comments:

Post a Comment