Sunday, October 27, 2013

தொடரும் பொறுப்பற்ற செயற்பாடுகள்: நடவடிக்கை எடுக்குமா வவுனியா பிரதேச செயலகம்?

வவுனியா பிரதேச செயலகத்தால் முதியோர் தினம், சிறுவர்தினம், விசேட தேவைக்குட்பட்டோர் தினம் போன்ற முப்பெரும் விழாக்களும் நேற்று(26) வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட பல மாணவர்கள் கண் முன்னே துஸ்பிரயோகத்திற்கும் கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையையோ அல்லது எதிர்ப்பையோ காட்டாத பிரதேச செயலகம் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் தான் இந்த சிறுவர் தினத்தை 25 நாட்கள் கழித்து கொண்டாடியது என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் வைத்து வவுனியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சிறுவர்களும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். இன்று அந்த பிள்ளைகள் பின் தங்கிய நிலையில் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களுக்காக பிரதேச செயலகம் என்ன செய்துள்ளது.

தவசிகுளம், வேப்பங்குளம், தோணிக்கல், வெளிக்குளம், கோவில்குளம் என பலபகுதிகளில் வசிக்கின்ற சிறுவர்கள் இன்று சிறுவர் இல்ல விகாராதிபதியால் தாக்கப்பட்டவர்களாகவும் துன்புறுத்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். இந்த சிறுவர்களுக்கான நீதியையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதை விட்டு மாறாக நிகழ்ச்சிகளை உங்கள் பகட்டுக்காக செய்வதால் என்ன ஆகப்போகின்றது என மக்கள் கூறுகின்றனர்.

எனவே, இது விடயத்தில் மக்கள் கருத்துக்களை பிரதேச செயலகம் கருத்தில் கொள்ள வேண்டும் என எமது இணையம் சுட்டிகாட்டுகிறது.

இதேவேளை, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தின் அசமந்தமான பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மூன்று குழந்தைகளை தாய் ஒருவர் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்த சமபவம் தாண்டிக்குளத்தில் இடம்பெற்றமையையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment