அரசாங்கம் அறிவித்துள்ள ஹஜ் கட்டண உச்சத் தொகையான 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹஜ் குழுவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பெளசி தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அறிவித்துள்ள ஹஜ் கட்டண .உச்சத் தொகைக்கு மேல் அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக ஹஜ்ஜாஜிகள் தங்களுக்கு முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் குறித்து ஒரு குழுவை நியமித்து உரிய விசாரணைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கூடுதலான தொகையை அறவிட்டிருப்பது இந்த குழுவின் விசாரணையின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நான் தீவிர சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று ஹஜ் குழுவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பெளசி தமிழ் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இப்போது இந்த ஹஜ்ஜாஜிகள் இத்தகைய முறைப்பாடுகளை செய்தால் நாம் சம்பந்தப்பட்ட முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒரு கடினமான விடயமென தெரிவித்துள்ள அமைச்சர் பெளசி, நாம் அவ்விதம் செய்தால் சம்பந்தப்பட்ட ஹஜ்ஜாஜிகளுக்கு மக்கா சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும், ஆகவே, ஹஜ் புனித கடமைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அவர்கள் தங்களிடம் (3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கும்) கூடுதலான கட்டணத்தை அறவிட்டார்கள் என்று ஹஜ் முகவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் ஒரு கமிட்டியினால் நடுநிலையாகவும், நேர்மையாகவும் விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் குற்றமிழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ஹஜ் கடமைகளை செய்வதற்கு சென்ற ஹஜ்ஜாஜிகளிடம் நாலரை லட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரை அறவிட்ட பல சம்பவங்கள் பற்றி தமக்கு தகவல் கிடைத்திருந்ததாகவும், நியாயமற்ற முறையில் ஹஜ்ஜாஜிகளிடம் கூடுதலான பணம் அறவிடும் ஹஜ் முகவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பெளசி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹஜ் யாத்திரிகர்களிடம் கூடுதல் தொகையை அறவிடுகின்ற ஹஜ் முகவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹஜ் குழு எச்சரித்துள்ளது.
ஹஜ் யாத்திரை தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா இக்கருத்தை வெளியிட்டார்.இலங்கையில் பேச வேண்டிய சில சர்ச்சைக்குறிய விடயங்கள் மக்காவில் பேசப்பட்டதாலேயே இம்முறை ஹஜ் கோட்டா குறைவடையக் காரணமாக அமைந்துள்ளதென கொழும்பு மாநகரசபையின் உறுப்பினரும் ஹஜ் குழுவின் உறுப்பினருமான அசாத்சாலி தெரிவித்தார்.இம்முறை கோட்டா அனுமதிகள் குறைவடைந்ததன் காரணமாக சில முகவர்கள் நான்கரை முதல் ஐந்து இலட்சம் ரூபாவரை பணம் கேட்பதாக தொழிநுட்ப பிரதி அமைச்சரும் ஹச் குழுவின் மற்றுமொரு உறுப்பினருமான பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.
இதேவேளை, இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3800 ஹஜ் யாத்திரிகர்கள் செல்லவுள்ளனர் என்றும், இது வரை 2 ஆயிரம் பேர் மக்கா சென்றுள்ளனர் என்றும் இறுதி ஹஜ் குழு நவம்பர் 2ம் திகதி அங்கு செல்லவுள்ளதாகவும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment