கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் நடைபெற்ற கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் பதவி ஏற்கும் வைபவத்தில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இணக்கத்துடனேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற மாகாண சபைத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணணி சார்பில் 7 முஸ்லிம்கள் தெரிவாகியிருந்ததோடு, அதில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 3 பேரும், தேசிய காங்கிரஸ் சார்பாக 3 பேரும், சுதந்திர கட்சி சார்பாக நஜீப் ஏ மஜீத்ம் தெரிவாகியிருந்தனர்.
அத்துடன்,நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் 11726 விருப்பு வாக்குகளை பெற்ற நஜீப் ஏ. மஜீத் மாகாண சபைக்கு தெரிவாகியதோடு, கிழக்கு முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணணியுடன் இணைந்து ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. முதலமைச்சர் நியமனம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், இரண்டு தவணைகளாகப் பிரித்து முதலமைச்சர் நியமிக்கப்படவுள்ளார் எனவும், முதல் இரண்டரை வருடங்கள் நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக இருப்பார். அடுத்த தவணை காலத்தில் மு.கா. உறுப்பினர் முதலமைச்சராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment