Saturday, November 25, 2023

100 கோடி நஷ்ட ஈடு கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர். யார் இந்த ஷானி அபயசேகர?

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, 100 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பொய் வழக்குகளில் கைது செய்து நீதிமன்ற செயற்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி தன்னை ரிமாண்ட் செய்து தனது சுயமரியாதைக்குக் கேடு விளைவித்தமைக்காகவே அவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் தனக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் விசாரணைகளை மேற்கொண்டதாக திரு.ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளின் போது கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகியோர் தமக்கு எதிராக பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு பல்வேறு நபர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக திரு.ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பல மாதங்களின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுமனே பழி வாங்கும் நோக்கில் தனது சுயகௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தியமைக்காக 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஷானி அபேசேகர இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் முன் நிற்கின்ற சாதகமான நிலை யாதெனில், ஷானி அபயசேகர மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என அவரை நீதிமன்று விடுவித்துள்ளதுடன் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் என்பவருக்கு அரசு 10 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்று தீர்பளித்துள்ளது.

நஷ்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்த உதவி பொலிஸ் பரிசோதகர் மென்டிஸ், மொஹமட் ஷியாம் வழக்கில் குற்றவாளியென மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன விடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அவரை குற்றவாளியாக்குவதற்காக ஷானி அபயசேகரவினால் வைக்கப்பட்டது என சாட்சியமளிக்குமாறு தன்னை கைது செய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கோரியதாகவும் தான் ஷானி அபயசேகரவிற்கு எதிராக பொய்சாட்சி கூற மறுத்தமையினால் தன்னை விளக்க மறியலில் அடைத்ததாவும் தெரிவித்திருந்தார். இதனை உச்ச நீதிமன்று ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஷானி அபயசேகர தன்னை தீயநோக்குடன் கைது செய்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் நீதிமன்றின் முன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

யார் இந்த ஷானி அபயசேகர?

1986.02.10 இலங்கை பொலிஸ் சேவையில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்ட ஷானி அபயசேகர சிறந்த துப்பறியும் நிபுணனாக இலங்கையில் அவிழ்கப்பட முடியாது எனக் கருதப்பட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களின் முடிச்சுக்களை அவிழ்த்ததுடன் குற்றவாளிகளை மோப்பம்பிடித்து கைது செய்தது மாத்திரமல்லாது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தி தண்டனையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

துப்பறிதலில் மாத்திரமன்றி நாட்டின் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான சட்டதிட்டங்களையும் கசடறக் கற்றுள்ள இவர் கையில் எடுக்கும் வழக்குகளிலிருந்து குற்றவாளிகள் தப்புவது மிகக்கடினமானது என்பது பொலிஸ் திணைக்களத்தினர் மாத்திரமல்ல குற்றவாளிகளும் அறிந்த விடயமாகும்.

அந்தவகையில், 1999 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி தாக்குதல், 2001 ம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், 2005ம் ஆண்டு றோயல் பார்க்கில் யுவதி ஒருவர் தனது காதலனால் மேற்கொள்ளப்பட்ட கொலை விவகாரம், அங்குலான பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை, மொஹமட் சியாம் என்ற வர்த்தகர் பிரதி பொலிஸ் மா அதிபரான வாஸ் குணவர்த்தவின் தலைமையில் கொலை செய்யப்பட்டமை போன்ற பல்வேறு சிக்கலான வழக்குகளை முன்னின்று விசாரணை செய்ததுடன் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக்கொடுக்க அயராது செயற்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பின் புறநகர் பிரதேசங்களில் 11 மாணவர்கள் கடற்படையின் ஒரு பகுதியினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை, லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணை, பிரகீத் எகனலியகொட காணமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் மீதான விசாரணைகளை தலைமை தாங்கி முன்னெடுத்துக் கொண்டிருந்த தருணத்தில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்று 48 மணித்தியாலயங்களுள் ஷானி அபயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதிவியிலிருந்து தூக்கப்பட்டு காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கான பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதே நேரத்தில் இலங்கை 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கும் ஷானி அபயசேகரவே தலைமை வழங்கியிருந்தார் என்பதுடன், குறுகிய காலத்தினுள் அவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து உண்மைகளை கண்டறிய அவர் செயற்பட்ட முறையினை பாராட்டி சர்வதேச பொலிஸாரின் தலைவரினால் நற்சான்றுதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment