Sunday, November 27, 2022

600 பொலிஸாரும் ரணில் ன் ஹன்சார்ட்டும். அவர் கொலையாளி என்றால், அவர்கள் யார்? சுமத்திரனின் இரட்டை வேடம். ஜெகன்

2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முரண்பட்டு நிற்கும் இருவேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கமும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஒருவர் மேல் ஒருவராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அரச வளங்களை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சூறையாடியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்கள் எவையும் வெறுமனே அரசியல் காழ்ப்புணர்சியில் கூறப்படுகின்ற விடயங்கள் என்று என்னால் கடந்து செல்லமுடியாது. அவை தொடர்பான ஒரு விரிவான உரையாடலுக்கு இருதரப்பினரையும் அழைத்துள்ளதுடன் , இரு தரப்பாலும் உலாவ விடப்பட்டிருக்கின்ற ஆவணங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் போதிய ஆய்வின் பின்னர் பேசுவது பொருத்தமாகும் என எண்ணுகின்றேன்.

மேற்படி இருவருக்குமிடையேயான குற்றச்சாட்டுக்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் தனது கட்சியின் உறுப்பினரின் பெயர் „சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்" திரிவுபடுத்தப்படுகின்றது என சிறப்புரிமைக் கேள்வியை எழுப்பியதுடன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு கொலையாளி என்றும் அதனை ரணில் விக்கிரமசிங்கவே தனது 06.05.2022 திகதிய உரையில் கூறியுள்ளமை ஹன்சார்ட் ல் பதிவாகியுள்ளதாகவும் ஆத்திரமும் ஆவேஷமும் அடைந்தது தொடர்பில் நிறைய புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், இதுவரை இருந்துவந்த சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடையையும் தந்துள்ளது.

இலங்கை சோசலிஸ சனநாயக குடியரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் ஆங்கிலத்தில் „Shanakiya Rahul Rajaputhiran Rasamanickam „ என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயர் ஆங்கிலத்தில் „Shanakiyan Rajaputhiran Rasamanickam" என பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரட்டை பெயர் தொடர்பில் சாதாரணமான சந்தேகங்கள் காணப்படும்போது, அப்பெயர்கள் வெளிப்படுவது தொடர்பில் சுமந்திரன் ஆத்திரமடைந்தவிதம் பலத்த சந்தேகங்களை கொடுக்கின்றது.



பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் பிரகாரம் வழங்கப்படும் கடவுச்சீட்டில் காணப்படும் „சாணக்கிய" „சாணக்கியன்" ஆகியமையும் அங்கே காணப்பட்டும் „ராகுல்" நீக்கப்பட்டுள்ளமையும் தமிழ் மக்களிடம் வாக்குகளை வசூலிக்கும்போது, அவர் பிறப்பால் யார் என்ற கேள்வி எழுவதை தவிர்ப்பதற்காகவும் தமிழ் மக்களை வழமைபோல் ஏமாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட திருகுதாளமாக இருக்க முடியும் என இத்தனை காலமும் யாவரும் கடந்து சென்றபோதும், இன்று இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளவர்கள் இலங்கை பாராளுமன்றில் அங்கத்தவர்களாக இருக்க முடியாது என்ற சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துவரும் நிலையில் சுமந்திரனின் தடுமாற்றம், இங்கே ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெற்றிருந்தால் கட்சியின் தலைமையும் அதற்கு பொறுப்புக்கூறவேண்டுமாகையால், சுமந்திரன் பதறுகின்றாரா? என்ற கேள்விகளுடன் சுமந்திரனின் இரட்டை வேடத்திற்கு செல்வோம்.

600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளியே பிள்ளையான் என்றும் இவ்விடயத்தை பாராளுமன்றிலே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 06.05.2022 தெரிவித்துள்ளமை ஹன்சார்ட்டில் பதிவாகியுள்ளதாகவும் சுமந்திரன் கூறுகின்றார். 1990 ம் ஆண்டு கிழக்குப் பகுதியில் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பகுதியில் வைத்து கோழைத்தனமாக புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். ஆனால் 1990ம் ஆண்டு ஆனி மாதம் 11 அல்லது 12 ம் திகதி இப்படுகொலை இடம்பெற்றபோது, பிள்ளையான் அவ்வியக்க உறுப்பினராக இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

குறித்த கொலை இடம்பெற்றபோது அவ்வியக்க உறுப்பினராக இருந்திராதபோதும், பிள்ளையானை அக்கொலைகளின் கொலையாளியாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் விடயம். சரணடைந்து நிராயுதபாணிகளாகவிருந்த மேற்குறித்த 600 பொலிஸாரையும் உலக யுத்த நியதிகளை மீறி கொலை செய்து அது ஒரு பயங்கரவாத இயக்கம்தான் என புலிகளியக்கம் மீண்டும் தன்னை நிரூபித்து நின்றபோது, அவ்வியக்கத்தின் கொள்கையை ஏற்று 1991 ம் ஆண்டு புலிகளியக்கத்தில் பிள்ளையான் இணைந்து அவ்வியக்கத்தை பலப்படுத்தியிருக்கின்றார் என்றால் அவ்வியக்கத்தின் சகல குற்றங்களுக்கும் கூட்டாக பொறுப்புக்கூறவேண்டியவர்தான் என்ற தர்க்கத்தை சுமந்திரன் முன்வைப்பாரானால், அத்தர்க்கத்தை நான் ஏற்றுக்கொள்வதுடன் பிள்ளையான் 600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளிதான் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அவ்வாறாயின், 600 பொலிஸார் கொல்லப்பட்ட விடயத்தில் பிள்ளையான் கொலையாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டால் அங்கு தவிர்கமுடியா அடுத்த கேள்வியாதெனில், அவ்வியக்கத்தின் அங்கத்தினர் அனைவரும் 600 பொலிஸாரையும் கொன்ற கொலையாளிகள் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே மாவீரர்கள் , முன்னாள் போராளிகள் என்பவர்கள் யார்? அவர்களும் கொலைக்குற்றவாளிகளாகத்தானே இருக்கவேண்டும். கொலையாளிகளை மாவீரர்கள் எனப்போற்றுவது நகைப்புக்குரியதல்லவா?

ஆகவே கொலைக்குற்றவாளிகளை மாவீரர்கள் மற்றும் போராளிகள் என்று போற்றுவது எந்த விதத்தில் நியாயம் என சுமந்திரனைக் கேட்கின்றேன். அதாவது தங்களது அரசியல் பித்தலாட்டங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்போரை முன்னாள் போராளிகள் என்பார்கள், தங்களது வாக்குவங்கியை நிரப்புவதற்காக கொலையாளிகளை மாவீரர்கள் என விளக்கேற்றி அர்ச்சிப்பார்கள், தங்கள் அரசியல் பாதைக்கு குறுக்கே செல்வோரை கொலையாளிகள் என்பார்கள். இது அயோக்கியத்தனமான இரட்டை வேடம் இல்லையா?

No comments:

Post a Comment