Wednesday, January 23, 2019

அரசியல் விபத்து காரணமாகவே த.தே.கூ அரசுடன் இணைந்தார்களாம். கூறுகிறார் மனோ கணேசன்

தற்போதைய  அரசாங்கத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு  இணைந்து செயல்படுவதற்கான காரணம்,  அண்மையில் நாட்டில் ஏற்பட்ட  அரசியல் விபத்தே என, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் மன்னார் மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த நாட்டிலே கடந்த 58 நாட்களின் பின்னர் புதிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ஓர் அரசியல் விபத்தாக இருந்தாலும் கூட, விபத்தினால் நல்ல காரியங்களும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி தற்பொழுது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்த அரசியல் விபத்து எனது அமைச்சிற்கும் நல்ல பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும் கடந்த காலங்களை விட அதிகமான பொறுப்புக்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் மக்களுக்காக நேர்மையான சேவைகளை தங்கு தடையின்றி வழங்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

எனவே வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து, பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம் என்று, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment