Saturday, January 26, 2019

இராணுவ வீரர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு ஐ நா சபையின் செயலாளர் நாயகம் கண்டனம்

இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு காரணமான மாலி தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். மாலியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த அசம்பாவிதம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்த அவர், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான தாக்குதல் நாட்டின் சமாதானத்திற்கான உறுதிப்பாட்டை தடுக்காது என்று அறிகையில் தெரிவித்த அவர், ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின்கீழ் போர்க்குற்றங்களாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே நேற்றைய தாக்குதலில் புர்கினோ ஃபாசோவை சேர்ந்த அமைதி காக்கும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment