பௌத்த மதபீடத்தின் கொள்கைக்கு உடன்பட்டு செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுகின்ற பௌத்த மதகுருமார் தொடர்பில் சட்ட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமரபுர தர்மரக்ஷித மகா நிகாயவின் தலைமை பௌத்த பிக்கு திருகோணமலை ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை அமரபுர மகா நிகாயாவுடன் தொடர்புடைய பௌத்த பிக்குமார் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வகையிலும் அதிகாரம் வழங்கப்போவதில்லை எனவும் மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த அக்காலத்தில் கூட, பௌத்த மதகுருக்கள் காவியுடை தரித்து, தேர்தலில் ஈடுபடவில்லை. அக்காலத்தில் சில பௌத்த மதகுருக்கள் தங்கள் சீருடை களைந்து அரசியலில் ஈடுபட்டதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
தேரர்கள் தங்களுக்குள் கட்சி அரசியல் செய்யாமல் எல்லோரும் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. நாட்டைப் பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் நிற்கிறோம் எனவும் மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் போன்றவற்றில் மக்கள் பிரதிநிதியாக நின்று வாத விவாதங்களில் பங்குகொள்வது பௌத்த தேரர்களுக்கு பொருத்தமானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பிரதேச சபைகளை, நகர சபைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய பௌத்த மதகுருக்கள் அப்பகுதியில் இறைச்சிக் கடைகளை நடாத்துவதற்கு அதிகாரம் வழங்குவது ஒழுக்கமற்ற செயல் என்று கருதலாம். தரும விதிகளை, நல்லொழுக்கங்களைப் போதிப்பதே பௌத்த தேரர்களின் பொறுப்பாக உள்ளது. அதனை ஒழுக்கச் சீர்கேடான அரசியலிலிருந்து நீங்கி சரிவரச் செய்தால் பொதுமக்களின் ஆதரவு பௌத்த தேர்ர்கள் மீது மேலும் கூடிச் செல்லும் எனவும் மாநாயக்க தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)

No comments:
Post a Comment