வல்வெட்டித்துறையில் கடந்த மாதம் பொதுமக்களின் ஆதரவுடன் நிறைவேற் றப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.குலநாயகம், தனது ஆதரவாளர்களாகக் கடந்த காலத்தில் இருந்து செயற்பட்டுவரும், சபையின் உப தலைவர் க.சதீஸ், ம.மயூரன், கோ.கருணானந்தராசா, ச.பிரதீபன் ஆகியோரைக் கொண்ட குழுவினரை மனுதாரர்களாகக் குறிப்பிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வல்வெட்டித்துறை நகரசபைக்கு எதிராக யாழ் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அவரால் தொடுக்கப்பட்ட வழக்கில், எதிர் மனுதாரர்களாக அரச நிறுவனம் என்ற வகையில் நகரசபையை முதலாம் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிட்டு, நகரசபையின் செயலாளர், தவிசாளர், நகரசபையின் உறுப்பினர்களான க.ஜெயராசா,திருமதி.இ.கைலாஜினி, பொ.தெய்வேந்திரன் மற்றும் வடமாகாண முதல் அமைச்சர், வடமாகாண ஆளுநர், உள்ளுராட்சி அமைச்சர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பொலிஸ்மா அதிபர், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பதினேழு பேர் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள மேற் குறித்த முறைப்பாட்டில் பின்வரும் ஏவு எழுத்தாணையை நீதி மன்றம் பணிக்கவேண்டுமென, குலநாயகத்தின் சட்ட்ததரணி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நகரசபையினால், தவறான முறையில் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுத் தவறான முறையில் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்படும், குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக எவ்வித வருமான அல்லது செலவின அல்லது அவற்றுடன் தொடர்புபட்ட வகையிலான எவ்வித நடவடிக்கையையும் தவிசாளராலோ அல்லது செயலாளராலோ அல்லது 4ஆம்,5ஆம், 6ஆம் எதிர்மனுதாரர்களான க.ஜெயராஜா, திருமதி.இ.கைலாஜினி, பொ.தெய்வேந்திரன் ஆகிய சபையின் உறுப்பினர்கள் தனித்தோ கூட்டுச் செயற்பாட்டுடனோ மேற்கொள்வதைத் தடுப்பதற்கான தடை செய்வதற்கான ஒரு தடை எழுத்தாணையைப் பிறப்பிப்துடன், 2014 ஆம் நிதியாண்டிற்கான வருமானங்கள், செலவினங்கள் ஆகியவற்றைக் கையாளுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாதெனத் தடை செய்வதற்கான தடையுத்தரவை நீதி மன்றம் அவசரமாகப் பிறப்பிக்க வேண்டுமென்று சட்டத்தரணி மூலம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமான ஆவணங்களாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டுப் பிரதிகள், பொலிஸ் நிலையத்தில் திரு.குலநாயகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுப் பிரதி மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினருமான திரு.ஆ.மு.சிவாஜிலிங்கம் அவர்களினால் வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்து, மீண்டும் சபையின் கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று முதலமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதம் ஆகியவை மனுதாரர்களின் சட்டத் தரணி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட போது, தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரின் கண்டிப்பான உத்தரவையும் மீறி வரவு செலவுத் திட்டம் தொடர்பான எந்தவிதமான குறைபாடுகளையோ அல்லது திருத்தங்களையோ குறிப்பிடாது திரு.குலநாயகம் குழுவினரால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாக டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், வவுனியாவில் வைத்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜா தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை வல்வெட்டித்துறையின் 11 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சென்று சந்தித்த பொழுது, அவர்களால் கூறப்பட்ட ஆலோசனைக்கு அமைய சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் ஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே.
No comments:
Post a Comment