இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். யாழ். மாவட்டத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான பெருமளவு இலக்கிய நூல்களை அன்பளிப்புச்செய்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பௌதீக வளங்களையும் மேம்படுத்த வேண்டும். பல வருடங்கள் நீடித்த யுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அடித் தளமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்து வதற்கு மனித வள முகாமைத்து வம் மிகவும் முக்கியமாகும்.
பல வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த யாழ். மாவட்டம் இன்று சுதந்திர பூமியாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டம் நாட்டில் முன்னேறிய நகரமாக முன்னேற் றப்படும். இன, மத அடித்தளத்தில் இருந்து ஒதுங்கி செயற்படுவதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்வி நிலையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். சிங்கள மற்றும் தமிழ் கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார். அமைச்சர், சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம், யாழ் மின்சார சபை என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார், ஹெல உருமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன் தனது இனத்தினை சேர்ந்தோரால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டமைக்காக தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment