Showing posts with label kadurai. Show all posts
Showing posts with label kadurai. Show all posts

Sunday, November 20, 2022

மகாவலி , LRC காணி அதிகாரங்களை பி. செயலாளர்களுக்கு வழங்குவது கோழியை பிடித்து நரியிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

பா.உ ஹேஷா வித்தானகே சீற்றம்! அமைச்சர் அஷோக பிரியந்த அந்தரத்தில் !! 

  வரவு செலவு திட்டு விவாதத்தின்போது பிரதேச செயலாளர்களின் ஊழல்களை போட்டுடைத்த பாராளுமன்ற உறுப்பினரிடம், குறித்த பிரதேச செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்க எடுப்பதாக உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்.

அப்பட்டியலில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவனையும் இணைத்துக்கொள்ளும் அமைச்சரே!


நேற்றுமுன்தினம் 18.11.2022 பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே, மகாவலி அபிவிருத்தி மற்றும் எல்ஆர்சி எனப்படுகின்ற காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் இருக்கின்ற காணிகள் குறித்த நிறுவனங்களால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் முறைமைக்கு அப்பால் அக்காணிகள் பிரதேச செயலாளர்களால் பகிர்ந்தளிக்கப்படக்கூடியவாறு, பிரதேச செயளார்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது. இவ்விவகாரங்களுக்கு பொறுப்பான எனது நண்பரும் அமைச்சரும் இச்சபையிலே அமர்ந்திருக்கின்ற நிலையிலே, இம்முயற்சியானது கோழியை பிடித்து நரியிடம் கொடுக்கும் முயற்சியாகும் என்பதுடன் நான் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

நான் அம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவன். நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ற விடயத்தை முழு அம்பிலிப்பிட்டியும் இரத்தினபுரியும் அறியும், ஆனால் கௌரவ அமைச்சருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது. அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகம் என்பது முழு இலங்கையிலுமிருக்கின்ற ஊழலுக்கு பெயர்போன பிரதேச செயலகங்களில் முன்னணி வரிசையில் முதல் நான்காம் ஐந்தாம் இடங்களில் இருக்கக்கூடும். அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகத்தில் பகிரங்கமாக லஞ்சம் பெறப்படுகின்றது. மண் எடுப்பதானாலும் , கல் எடுப்பதானாலும் ஏன் எந்த சேவையை பெற்றுக்கொள்வதானாலும் பிரதேச செயலாளருக்கு லஞ்சம் வழங்கவேண்டும். இந்த பிரதேச செயலாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ அமைச்சர் அவர்களை இந்த சபையிலே கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அதன்போது சபையிலே எழுந்த உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த, நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவீர்களாயின் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்பதை இவ்விடத்தில் உறுதி கூறுகின்றேன் என்றார்.

மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதேச செயலாளர்கள் மற்றும் எமது அமைச்சுக்குட்பட்ட உத்தியோகித்தர்களின் ஊழல், மோசடிகளை தெரிவிக்கும் பொருட்டு நான் அமைச்சராக பாரமேற்றதன் பின்னர் 1905 என்ற இலக்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். மோசடி புரிகின்றவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குங்கள், நாங்கள் தாமதமின்றி விசாரணைகளை மேற்கொள்வோம் என்றார்.

இலங்கையில் இவ்வாறான பல்வேறு இலக்கங்கள் காலத்திற்கு காலம் அறிவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இவ்வாறான இலக்கங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு என்ன நடைபெற்றது , நடைபெற்று வருகின்றதென்பதையும் நாட்டு மக்கள் நன்கறிவர். இலங்கை வரலாற்றில் இன்றும் TELLIGP என்று ஒரு முறைப்பாட்டுக்கான வழி இருக்கின்றது. ஒரு காலத்தில் Tellpresident , Tellprimeminister என்றும் முறைப்பாட்டு வழிகள் இருந்தது. மேலும் எத்தனையோ முறைப்பாட்டு வழிமுறைகள் இருந்தது. ஆனால் அங்கு கடமையாற்றுகின்றவர்களும் குற்றஞ்சுமத்தப்படுகின்ற அரச ஊழியர்களும் நண்பர்கள். இவ்வாறான நிறுவனங்களிடம் முறையிட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் வரலாற்றில் பாதிவாகவில்லை என்பதையும் அவர்கள் அனைவரும் கூட்டுக்கொள்ளையர்கள் என்பதையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

2020 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தேர்தலில் குதித்தபோது, பலர் நம்பிய விடயம் யாதெனில், ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதாகும். கோத்தபாய ராஜபக்ச கடமையேற்று சிறிது நாட்களில், அரச அலுவலகங்களில் கடமை தவறுகின்ற ஊழியர்களை புலனாய்வுத்துறையினர் சிவில் உடையில் உளவு பார்த்து வருகின்றனர் என கோத்தபாய தரப்பால் கூறப்பட்டது. இப்பிரச்சாரத்தை நம்பியவர்கள், பிலிப்பீன் ஜனாதிபதியாகவிருந்த Rodrigo Duterte (ரொட்றிகோ டுரேர்ரே) ஊழலை ஒழிப்பதற்காக ஊழலுக்கு துணைபோன அரச உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தது போன்றதொரு நிகழ்வு நிறைவேறப்போகின்றது, இலங்கையில் மக்கள் பணத்தை மோசடி செய்து தங்களது வயிற்றை வழர்த்துள்ள அரச ஊழியர்களின் வண்டி கிழிக்கப்பட்டு அவர்களது கழுத்துப்பட்டியால் கம்பத்தில் கட்டப்படப்போகின்றார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர். ஆனால் இலங்கையில் துருப்பிடித்துக்கிடக்கும் அரச இயந்திரத்தின் ஒரு நட்டைக்கூட கழட்டி பூட்ட கோத்தபாயவாலும் முடியாது போனது.

இந்நிலையில் அமைச்சர் புதிதாக உருவாக்கியிருக்கும் 1905 என்ற இலக்கத்திற்கு தகவல் கொடுத்து மாற்றம் நிகழப்போகின்றது என்றோ நீதிகிடைக்கப்போகின்றது என்றோ மக்கள் நம்பப்போவதில்லை. அவ்வாறு அமைச்சருக்கு அதிசயம் ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், மட்டக்களப்பு மண்முனை-வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் என்பவனின் காணி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில், இங்கே வைக்கப்படுகின்ற பகிரங்க முறைப்பாட்டினை வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை செய்து அவனுக்கு தண்டனை வழங்கி தாங்கள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்ற பொறிமுறை இத்தனை காலமும் கூறப்பட்டு மறைந்த பத்தோடு ஒன்று பதினொன்றுதான் இல்லை என்பதை உறுதிசெய்யுமாறு இலங்கைநெட் கோருகின்றது.

ஆரையம்பதி பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜெயபூமி அளிப்பொன்றை அந்த அளிப்பின் நிபந்தனைகளை மீறி தனது சகோதரனின் பெயருக்கு மாற்றி பின்னர் காத்தான்குடி வர்த்தகர் ஒருவருக்கு பலகோடி ரூபாய்களுக்கு விற்பதற்கு வ. வாசுதேவன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மோசடி புரிந்திருக்கின்றான் என பிரதேச மக்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவிலிருந்து சென்ற விசாரணையாளர்கள் (!) வாசுதேவனுடன் விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு விசாரணையை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திடம் பாரம்கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களுடன் நாம் கடந்த வருடம் கேள்வி எழுப்பியிருந்தபோதும் எமது கேள்வி அமைச்சின் விசாரணைப் பிரிவின் காதுகளுக்கோ அன்றில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கருணாகரின் காதுகளுக்கோ கேட்கவில்லை. எனவே அமைச்சரின் புதிய விசாரணைப் பிரிவினரின் காதுகளுக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் குறித்த மோசடி தொடர்பான ஆவணங்களுடனான கட்டுரையை மீண்டும் இங்கு இணைத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

அரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ!

மேலும் 2018.07.24 ம் திகதி அன்றைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய குணநாதன் என்பவன், காணிகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், „தமது பிரிவில் 2011 ம் ஆண்டு தொடர்க்கம் 2017 ம் ஆண்டு வரை இடம்பெற்ற காணிக் கச்சேரிகளில் காணி அற்றோராக பலர் தோற்றி அவற்றிலிருந்து 3247 பேர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் காணி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக காணி அற்றோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்திருக்கின்றான்.

தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமை புரியும் வ. வாசுதேவன் என்பவன் அவனுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற முறைப்பாடு ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள 2022.01.28 ம் திகதிய கடிதத்தில், „இதுவரை நடைபெற்ற காணிக் கச்சேரிகள் மூலம் காணியற்றவர்களாக 3247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருக்கின்றான்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக வாசுதேவன் கடமையேற்றதிலிருந்து இன்றுவரை நூற்று மேற்பட்ட நபர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளபோதும் காணியற்றோராக இனங்காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3247 ஆகவே காணப்படுகின்றது. எனவே எவ்வாறு பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்? காணிகள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்குவதற்கு என ஏற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து ஏன் பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை? என்ற விசாரணை இங்கு அவசியமாகின்றது. (விசாரணைக்கு தேவையான சகல ஆவணங்களும் வழங்கப்படும்)

அம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகம் இலங்கையில் காணப்படும் ஊழல்மிகு பிரதேச செயலகங்களில் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சுமத்தியபோது குறித்த பிரதேச செயலாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றேன் என உறுதி வழங்கிய அமைச்சரின் அந்த ஆர்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு இலங்கையில் ஊழல் மிகு பிரதேச செயலகங்களில் முதலாவது இடத்தில் காணப்படும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதே செயலாளரின் மோசடிகள் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அது தொடர்பான மேலதிக தகவல் வேண்டின் இலங்கைநெட் இன் ஆசிரியர் குழுவினை ilankainet@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

ஜெகன்

Read more...

Monday, June 6, 2022

வெடிக்கும் நிலையிலுள்ள எரிமலைமீது வீற்றிருக்கின்றோம். 10 வருடங்களுக்காவது வரப்பிரசாதங்களை தியாகம் செய்யுங்கள்.

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில், அரச சேவையின் சுமையினை தாங்க முடியாத நிலைக்கு நாடு வந்துள்ளதாகவும், எதிர்கால சந்ததியினராவது இந்நாட்டில் வாழக்கூடியதோர் நிலை உருவாக வேண்டுமாகவிருந்தால் இன்று நாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அரச ஊழியர்கள் வரை அனைவரும் தாங்கள் அனுபவித்து வருகின்ற வரப்பிரசாதங்களை குறைந்தது 10 வருடங்களுக்காவது தியாகம் செய்ய முன்வரவேண்டுமென வேண்டுதல் விடுத்துள்ளார், திவால் என தன்னை அறிவித்துக்கொண்டுள்ள இலங்கையின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள மாயாதுன்ன.

கடந்த 29 ம் திகதி இடம்பெற்ற அரச சேவையாளர்கள் சங்கத்தின் நிகழ்வொன்றில் பேசிய அவர், மொத்த அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 15 லட்சங்களை தாண்டிச் சென்று விட்டதென்றும் இலங்கையின் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கு மேலே செல்லும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தினை 2004 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியின் செயலாளருக்கு தான் எழுதிய கடிதத்தில் எச்சரித்ததாக நினைவுகூர்ந்த அவரது பேச்சின் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகின்றது.

இந்த நாட்டில் உங்களுக்கு வாழமுடியாத வகையிலான அரச நிர்வாகமொன்றை உருவாக்கித்தந்த முன்னோர்கள் என்ற வகையில், நான் உங்களிடம் முதலில் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும். இன்றைய நிலையில் எமது அரச நிர்வாகத்தில் இருக்கின்ற இடைநிலை ஊழியர்களிலிருந்து அதற்கு கீழுள்ள சகல ஊழியர்களும் நாளாந்தம் வேலைக்கு வருவதே பாரிய பிரச்சினையாகியிருக்கின்றது. தை மாதத்தில் போக்குவரத்திற்கு பத்தாயிரம் செலவழித்தவர்கள் மார்ச்மாதமளவில் 15000 ரூபா செலவுசெய்யவேண்டியாகி இன்று அது இருபது இருத்திஐயாயிரம் வரை உயர்ந்துள்ளது.

40 ரூபா கொடுத்து பொதுப்போக்குவரத்தில் வந்த எமது காரியாலயங்களிலுள்ள சிற்றூழியர்கள் இன்று 120 லிருந்து 150 ரூபா வரை கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களது போக்குவரத்து செலவினையும் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் வருடத்திற்கு ஒருமுறையாவது தொழிலுக்கு வருவதற்கு ஒரு புதிய ஆடையையோ, பாதணியையோ கொள்வனவு செய்யமுடியுமா என்பது சந்தேகமே.

இது இவ்வாறிருக்கும் சூழ்நிலையிலும்கூட நான் நேற்று சில அமைச்சர்களுடன் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபொழுது, அரச சேவையில் இருப்பவர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்டு இன்று நாட்டில் எவ்வித சம்பளமும் எடுக்க முடியாமல் இருப்பவர்களிடம் எங்களையும் அடிவாங்க செய்யாதீர்கள் என்று அவ்விடத்தில் நான் கூறினேன். அத்துடன் முடிந்தால் அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து செலவிற்கு உதவும் வகையில் ஏதாவது சலுகையை பெற்றுக்கொடுக்கமுடிந்தால் உதவியாக இருக்குமென்றும் கூறினேன்.

எங்கள் எல்லோருடைய மனச்சாட்சியின் உணர்வுகளில் ஏற்றத்தாழ்வுகள் பலவாறு இருக்கலாம். ஆனால் முப்பது வருடங்களோ அதற்கு மேலோ அரச நிர்வாக சேவைகளில் நாங்கள் இருந்திருப்போமேயானால் நாங்களும் ஏதோவொரு வகையில் இன்றைய நிலைக்கு பொறுப்புக்கூறியேயாக வேண்டும். அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். நாங்கள் இங்கே பேசுகின்ற விடயங்கள் எல்லாவற்றையும் விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தியேயாகவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் இந்த நாடு அதாள பாதாளத்தை நோக்கி விழத்தான் போகின்றது. ஏனெனில் இம்முறைக்கான சிறுபோக விளைச்சல் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையிலிருந்து சாதரண நிலைக்கு தூக்கி நிறுத்த முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் எம்மிடமில்லை. வேறுகாலங்களாக இருந்தால் ஆகக்குறைந்தது பக்கத்து நாடுகளிலிருந்தாவது உணவை பெற்றுக்கொண்டிருக்க முடியும். கடனாகவோ அல்ல பிச்சையாகவே பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்று எமது நிலை அப்படியில்லை. பங்களாதேஷ; போன்ற ஒரு நாட்டின் உபரி உற்பத்தியாக இருக்கின்ற ஐந்து வீத உற்பத்தியானது, எமது நாட்டின் மொத்த உற்பத்திக்கு சமன் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

இன்று உலகத்தின் எல்லா நாடுகளிலும் உணவுற்பத்தி விகிதாசாரம் வீழ்சியடைந்துவருகின்ற காலம். நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே உணவுத்தட்டுப்பாட்டு நிலை உருவாகியிருக்கின்றது. இன்னும் பல நாடுகள் அதை நோக்கி பயணித்துக்கொண்டும் இருக்கின்றது. எமது நாட்டில் சிறுபோக உற்பத்தியாளர்கள் 50-55 வீதத்தினரே தற்போது வயலில் சேற்றுக்குள் காலை வைத்திருக்கின்றார்கள். ஆகவே எமது உணவு நெருக்கடி என்பது மிக கடுமையாக இருக்கப்போகின்றது என்பது வெள்ளிடைமலை.

இந்த நெருக்கடி நிலையை இன்று இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கின்ற இளம் சமூகத்தினாரால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் எம்மை போன்ற 50 களிலும் 60 களிலும் பிறந்தவர்களுக்கு ஒரு றாத்தல் பாணை வாங்குவதற்கு பேக்கரிகள் முன்பாகவும் , புதிய ஆடையொன்றை தைப்பதற்கு துணிவாங்குவதற்கு கூட்டுறவு சங்ககடைகளின் முன்னால் பங்கீட்டு அட்டையுடனும் வரிசைகளில் நின்றது நினைவிருக்கின்றது. இதற்கு பிற்பட்ட இன்னொரு காலமிருந்தது, சிவில் யுத்தம் நடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் ஒருபோத்தல் மண்ணெண்ணை 800 -1000 ரூபாவிற்கு வாங்க வேண்டிய நிலையும் சாப்பிடுவதற்கு மூன்று நேர உணவு இல்லாத நிலையும் நிலவியது. நாம் இன்று எமது கையிலிருக்கும் கடனட்டைகளுக்கு கூட எந்தவித பெறுமதியுமற்றுப்போகும் நிலையை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நாட்களில் எரிபொருளுக்காக வரிசையிலே நின்று எரிபொருள் கிடைக்காமல் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு நடந்துவரும்காலம் எம்முன்னேயுள்ளது. எம் எல்லோரினது வீட்டிலும் ஆகக்கூடியது 10 கிலோ அரிசி மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலை உருவாகும். அப்படி அரிசி முடிகின்ற நேரத்தில் ஒன்று இரண்டு மூன்று என ஒவ்வொரு கடையாக சென்று அங்கும் அரிசி கிடைக்காமல் திரும்பி வரவேண்டிய நிலை உருவாகும். மேல் மாகாணத்திற்கு தேவையான அரிசி பாவனையில் 10 வீதம் கூட மேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. 90 வீதமான அரிசி வெளியிலிருந்துதான் வந்தாகவேண்டும். நாம் அமர்ந்திருப்பது வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையில் மீது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வகையில் நேற்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அரச ஊழியர் சங்கத்தினால் முன்மொழியப்பட்டு முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் அச்சங்கமானது முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொள்வற்கு தயார் என அறிவித்தனை நான் இங்கு மகிழ்சியுடன் அறியத்தருகின்றேன்.

எனவேதான் 15 லட்சத்திற்கு மேற்பட்டிருக்கின்ற அரச ஊழியர்கள் அனைவரும், தாம் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லங்களிலோ அல்லது சொந்த இல்லங்களியோ ஒரு சிறுதுண்டு மரவள்ளித்தண்டையும் வற்றாளைக்கொடியின் சிறுதுண்டையும்கூட வீணாக்காமல் குறுகியகாலப்பயிராக ஊண்டுவோமென உறுதியெடுக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே எதிர்வரும் நெருக்கடியின்போது மூன்று நேர உணவு அல்லது இரண்டுநேர உணவு அதுவும் முடியாவிட்டால் ஒரு நேரத்திற்கு ஒரு கறியும் சோறுமாவது உண்ணும் நிலையில் இருப்போம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதுதான் நாம் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற நெருக்கடியின் உண்மையான நிலைமையாகும்.

இந்த நிலைமை புரியவில்லையானால் அவர்கள் எந்தவிதமான அறிவாற்றலும் அற்றவர்களென்றே கணிக்கப்படவேண்டும். மூன்று நான்கு மாதங்களுக்கு முன் அல்லது ஒரு வருடத்திற்கு முன்னர் காலையில் ஒரு கோப்பை பால்குடித்த நாம், அதை இன்று எமது பட்டியலிலிருந்து நீக்கியுள்ளோம். பாண் எமது பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மாலையில் வேலைமுடிந்து போகும்போது சிற்றுண்டியொன்றை வாங்கிச்செல்வது எமது பட்டியலிலிருந்து நீங்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியானது படிப்படியாக நெருக்கி கசக்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எம்மை கொண்டுவந்துள்ளது. இது இதையும் தாண்டி இன்னும்போகும். வரவர நெருக்கடி கூடியே தீரும். எனவே நாம் இவ்விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆனால் எங்களைப்போன்றவர்களுக்கு இது புத்தியில் உறைக்கவேண்டுமென்றால், இவ்வாறான அனர்த்தம் நிகழவே வேண்டும். இல்லாவிட்டால் ஒருபோதும் திருந்தாத நாடு இது. இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஆகக்கூடியது 15 அமைச்சர்களுடன்கூடிய ஒரு நிர்வாக கட்டமைப்பில் அடுத்த ஆறு மாதத்திற்கு முன்நோக்கி போகலாம் என்பதுதான் எனது நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. எங்களைப்போன்றவர்கட்கு மேலதிக செயலாளர்கள் நிலைக்குப்போவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆறு மாத காலமோ அல்லது ஒரு வருடகாலமோ அல்ல 6 வருடகாலமாயினும் இந்நாடு திருந்துமாக இருந்தால் எம்மால் அதனை தாங்கிக்கொள்ள முடியும்;. இந்த நாட்டை தூக்கி நிறுத்த முடியுமாக இருந்தால் நாம் இந்த பதவிகளை விட்டுப்போய் இதற்கு வேறுயாராவது வந்தாலும் பிணக்குகள் இல்லை. எது எப்படியோ, இந்த சிக்கலான அவசரமான சூழ்நிலைக்கு முகம்கொடுப்பதற்கென்றே ஒரு அவசரகால திட்டத்தை நாம் தயாரித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எம்மால் இதற்கு முகம்கொடுக்க முடியாது. சகல வரப்பிரசாதங்களையும் பின்போடத்தயாராக வேண்டும். உதாரணத்;திற்கு நேபாளத்தில் பின்பற்றப்பட்டதுபோல் தனிநபர் வருமானம் வருடமொன்றுக்கு பத்தாயிரத்தை எட்டும்வரை எவருக்கும் சம்பள உயர்வுகளோ நலன்களோ வழங்கப்படமுடியாது, கேட்கப்படமுடியாது என்ற நிலைக்கு நாம் வந்தேயாகவேண்டும்.

இன்று உங்கள் கையியுள்ள சொத்துக்களின் பெறுமதி வெறும் கடதாசித்துண்டுகளே. எனவே நாட்டின் தனிநபர் வருமானம் வருடமொன்றுக்கு பத்தாயிரம் என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் பின்பே இவை வழங்கப்படலாம் என்பதே ஜதார்த்தம். எனவே இந்த மீள்சீரமைப்பு நிகழ்சிநிரலின் கீழ் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் , பாராளுமன்றத்தில் தொடங்கி பிரதேச சபை மந்திரிகள் வரை மற்றும் அமைச்சின் செயலாளர்களில் தொடங்கி அவர் கீழிருக்கும்; சகல ஊழியர்கள் வரைக்கும் நீங்கள் ஏதாவது வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள மனதில் நினைத்திருந்தால் அதனை பத்துவருடங்களுக்கு பின்போட்டுக்கொள்ளுங்கள். அது மட்டுமன்றி சகலரும் இந்த பொது நிகழ்சிநிரலுக்குள் பணியாற்ற தயாராகவேண்டும். அதாவது அரச பணியில் எந்த தரத்திலிருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் தங்களுக்குரிய வரிகளையும் , தங்களுடைய மின்சாரம்-நீர் பாவனைக்குரிய கட்டணங்கள் வரை சகலவற்றையும் உரியநேரத்தில் தவறாது செலுத்தவேண்டும்.

இது கேளிக்கைகளுக்கு செலவுசெய்யும் காலமும் அல்ல. சகல தொழல்சார் நிறுவனங்களும், நிபுணர்களும், சங்கங்களும் இந்த நிலைமையை இதயசுத்தியோடு திரும்பி பார்த்து இந்த அர்ப்பணிப்பை செய்யத்தாமாகவே முன்வருவதாக முன்மொழியவேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரச சேவையில் இருக்கின்ற நாமும் தெருவிலே மக்களிடம் உதை வாங்கவேண்டிவரும். இன்று நாடு ஓலமிட்டு வேண்டி நிற்கும் மீள்சீரமைப்பைப்பற்றித்தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றேன். இதை இந்த நாடு நீண்டகாலமாக வேண்டி நிற்கின்றது.

எம்மளவுக்கு படித்த , விடயங்கள் தெரிந்த ஆனால் எம்மளவுக்கு பொறுத்துப்பொறுத்துப்போகும் வழும்பல் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது. எனவே நாங்கள் பொறுத்திருந்தது போதும்! தொழில்சார் நிபுணர்கள் என்ற வகையில் நாம் இன்று கடுமையாக அழுத்திக்கூறவேண்டியது யாதெனில், உடனடியாக இந்த சீரமைப்பு திட்டங்கள் யாவும் சட்டமாக்கப்படவேண்டும். ஏனென்றால் இலங்கையில் வாய்கிழியப்பேசி உருவாக்கப்படுகின்ற தேசிய கொள்கைகத்திட்டங்கள் யாவுமே இறுதியில் குப்பைக்கூடத்தில் வீசப்படுவதைத்தான் நாம் பார்த்து வந்திருக்கின்றோம், பொறுத்து வந்திருக்கின்றோம். எனவே, இவை சட்டமாக்கப்படவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் நலன்கள் சலுகைகள் அனைத்தும் பாராளுமன்ற சட்டத்திற்கூடாக வரையறுக்கப்படவேண்டும். அரசாங்கத்தால் அனைத்து சட்டங்களும் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றப்படமுடியாதவாறு கொள்கையாக பிரகடனப்படுத்தப்படவேண்டும். படுமோசமான, எந்தவித பொறுப்புமற்று அபிவிருத்தித்திட்ட கொள்கைவகுப்புக்கள், நிர்வாக கட்டமைப்பு , ஆட்சேர்ப்பு போன்ற நீண்டகால அதிகார துஷ்பிரயோகத்தின் பிரதிபலனையே நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். இன்று அரச சேவையின் சுமையினை தூக்க முடியாத நிலைக்கு இந்த நாடுவந்திருக்கின்றது. இதற்கு பரிகாரம்தேடுவதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டியதில்லை.

2004ம் ஆண்டளவில் அரச நிர்வாக சேவை அதிகாரியாக இருந்த பொழுது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குக்கும் விடயத்தில் அன்றிருந்திருந்த ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் , இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவினை மாதமொன்றுக்கு வழங்கி அவர்களை வேறெங்காவது தொழில்புரிய பணிக்குமாறு அலோசனை வழங்கினேன் என்பது இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது . அதற்கு காரணம் அன்று அறுபது ஆயிரம்பேரை அரசசேவையில் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது நான் ஓய்வுதியம் செல்லும்போது எனக்கு ஒய்வூதியம் கிடைக்காது என அச்சப்பட்டேன். அது இன்று நிஜமாகி, நேரடியாக முகம்கொடுத்து நிற்கின்றேன். இந்த அரச வேவையானது ஐந்து லட்சத்திலிருந்து ஆகக்கூடியது எட்டு லட்சமாக இருந்தால் மட்டுமே சாத்திமாக இருக்கும் என்பது அன்றே எனக்கு புரிந்துகொள்ளக்கூடியாதாக இருந்தது. இன்று எம்கண்முன்னே அந்த ஆபத்து நிதர்சனமாகியுள்ளது.

இன்று ஓய்வூதியம் பெறும்ஒருவர் வெறுமனே ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் எதுவுமின்றி வெறும் ஓய்வூதியம் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். இன்று இந்த ஊக்குவிப்பு பணத்தை யாரிடம் போய்க்கேட்கப்போகின்றீர்கள். அங்கே அலுவலகத்தில் அமர்ந்திருக்கின்றவர்களிடம் ஊக்குவிப்பு பணம் கொடு என்றா கேட்கப்போகின்றீhகள்? வெளியே தொழிற்சங்கங்கள் கோஷமிடுகின்றார்கள் என்பதற்காக பணத்தை கொடுப்பதற்கு அந்த ஊழியரிடம் பணமேதுமில்லை. சம்பளஉயர்வு கோரிக்கை வந்தவுடன் வங்கிகளில் ஓவர்ட்றாப்பில் பணத்தை பெறுவது, பின்னர் வங்கிகளின் பணத்தை கொடுப்பதற்காக பணத்தை அச்சடிப்பது போன்ற கோமாளித்தனத்தை தொடர்ந்து செய்யமுடியாது. எனவே இந்த தசாப்பதம் என்பது அனைவரும் தியாகங்களை மேற்கொள்ளவேண்டிய தசாப்தமாகும்.

இன்று சகல பன்சலைகளும் , கோவில்களும், பள்ளிகளும் , தேவாலயங்களும் வழிபாடுகளை நிறுத்திவிட்டு நிலத்தை கொத்தி விவசாயம் செய்யவேண்டும். சகல பாடசாலைகளும் சகல ஆசிரியர்-பெற்றோர் சங்கங்களும் விவசாயம் செய்யவேண்டும். சுகல அரச நிறுவனங்களும் விவசாயம் செய்யவேண்டும். கடந்த காலத்தில் தலைக்குள் கொண்டுதிரிந்த பாழாய்ப்போன எண்ணங்களை தூக்கி வைத்துவிட்டு நேரமில்லை , எரிபொருள்இல்லை , உடலை வளைக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிராமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். இதை உங்களால் செய்ய முடியாது விட்டால் உங்களுக்கு அருகிலுள்ள ஒருவருக்கு அந்த நிலத்துண்டை கொடுங்கள் எதாவது விதைக்கட்டும்.

அடுத்ததாக தங்களுக்கான மேலதிக நலன்களை 10 வருடங்களுக்கு பின்போடுமாறு எல்லோம் இணைந்து முன்மொழியுங்கள். தொழிற்சங்கங்கள் உட்பட சகல சங்கங்களும் முழுமையாக ஒரு றாத்தல் இறைச்சியைத்தாருங்கள் என கோரிக்கை வைக்கக்கூடிய காலமல்ல இது. எனவே இந்த நாட்டை சீரமைத்து தூக்கி நிறுத்த வேண்டுமென்றால், தூக்கிநிறுத்திய மாபெரும்பணியில் பங்காளர்கள் ஆகவேண்டுமென்றால் ஆகக்குறைந்தது பத்துவருடங்களுக்கு எமது நலன்களையும் நேரத்தையும் தியாகம் செய்யவேண்டியவர்களாகவுள்ளோம். அப்படியானால் மட்டுமே ஆகக்குறைந்தது எதிர்காலசந்ததியினராவது இந்த நாட்டில் தலை நிமிர்ந்து சுயகௌரவத்துடன் வாழமுடியும். எனவே நாம் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த நற்பணியில் கைகோர்த்து கொள்வோம்.

தமிழாக்கம் மனோரஞ்சன்


Read more...

Saturday, February 26, 2022

புதியதோர் பனிப்போரில் உருக்குலையும் உக்ரைன்

ரஷ்யாவிற்கு இன்னொரு பெயரும் உண்டு, “The Russian Bear” Bear என்பதே ஒர் ரஷ்ய சொல் ஆனாலும் ரஷ்யர்கள் அதனை அப்படி அழைக்க விரும்பவில்லை, மாறாக அதை “ Medved” என்று தான் அழைக்கிறார் , அதாவது தேனை விரும்பி உண்ணும் விலங்கு என்பதே அதன் பொருள், Bear என்றழைத்து அதன் இயல்பான மூர்க்க குணத்தை அவர்கள் தட்டி எழுப்ப விரும்பவில்லை. அது பல காலம் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருக்கும், விழித்திருக்கும் காலங்களில் மூர்கமான போர்க்குணத்துடன் இருக்கிறது.

கண்டங்கள் தாண்டி மலைகளாகவும், ந்நிகளாகவும் ஊசியிலைக்காடுகளாகவும் பரந்து விரிந்த பனிப்பாலைவனமாகவும் மிக விசாலமாக இருக்கிற ரஷ்யா என்கிற நாட்டை இந்த நவீன யுக வேக ரயிலில் கூட சுற்றி வரவே ஏழு இரவுகளும் ஆறு நாட்களும் எடுக்கிறது. பதினொரு ( Time zones ) நேர மண்டலங்களை உள்ளடக்கியது. மேலும் சொல்வதானால், ரஷ்யா பிரித்தானியாவை விட எழுபது மடங்கு பெரியது ,அமெரிக்கா மற்றும் சீனாவை விட இரண்டு மடங்கு பெரியது, இந்தியாவை விட ஐந்து மடங்கு பெரியது. இருப்பினும் சனத்தொகை என்று பார்த்தால் வெறும் 140 மில்லியன்கள் மட்டுமே, கிட்டத்தட்ட பாகிஸ்த்தான் சனத்தொகை அளவு.

1812 ல் நெப்போலியன் ரஷ்யாவை படையெடுத்த காலத்தில் இருந்து அண்ணளவாக கணக்கிட்டுப்பார்த்தால் முப்பது வருடத்திற்கொருமுறை ரஷ்யா மேற்கு ஐயோப்பிய நிலத்தில் இருந்த வந்த படையெடுப்புக்களும் ஆக்கிரமிப்புக்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியிடம் இருந்து கைப்பற்றிய சில மத்திய கிழக்கு ஐரோப்பிய பிரதேசங்கள் பல சோவியத் யூனியனின் பகுதியாகின. அது பழம் பெரும் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கு நிகராக இருந்தது. ரஷ்ய சர்வாதிகாரத்திற்கெதிராக 1949 ஆம் ஆண்டு The North Atlantic Treaty Organisation ( NATO) என்ற அமைப்பை ஐரோப்பியர்களும் வட அமெரிக்கர்களும் சேர்ந்து உருவாக்கினர் . இதன் முழு நோக்கமே ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக சேர்ந்து போரிடுவதாகும்.

இதற்கு எதிராக ரஷ்யா Warsaw Pact என்று ஒரு அமைப்பை 1955 ல் தன் நேச நாடுகளுடன் சேர்ந்து உருவாக்கியது. Warsaw Pact ஐ இரும்பினால் செய்யப்பட்ட ஒப்பந்தமாக ரஷ்யா நினைத்திருந்தாலும் அது 1980 களில் துருப்பிடிக்க தொடங்கியது, 1991 ல் கிழக்கு ஜேர்மனியின் சுவர் உடைந்ததும் Warsaw Pact மண்ணோடு மண்ணானது, சோவியத் யூனியன் என்ற மாபெரும் கட்டமைப்ப்பு உடைந்து சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பதினைந்து புது நாடுகள் உருவாகின. அன்றிலிருந்து ரஷ்யாவின் பதட்டம் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதை உலகம் அவதானிக்கிறது, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் பலவற்றை NATO தன்னோடு இணைத்தமை ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. NATO இந்த நாடுகளை அதில் இணைக்க மாட்டோம் என்று ரஷ்யாவிற்கு உறுதி மொழி அளித்த போதும் அது அதனை கடைப்பிடிக்கவில்லை. செக் றெப்பப்ளிக், ஹங்கேரி, பல்கேரியா, றுமேனியா , எஸ்ரோனியா , அல்பேனியா என்று ஒவ்வொன்றாய் NATO வுடன் இணைவதை எச்சரிக்கை உணர்வுடன் ரஷ்யா கவனித்து வந்தது, சில நாடுகள் ஐரோப்பிய யூனியனோடு இணைந்தன. இதுவும் ரஷ்யாவிற்கு ஒவ்வாத ஒன்றுதான். முன்னாள் சோவியத் யூனியனின் சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்க கொள்ளவே அவசர அவசரமாக இந்த நாடுகள் மேற்கோடு இணைந்தன என்பது ஓர் உலக கணிப்பு.

ஐரோப்பிய யூனியனுக்கு நிகராக ரஷ்யா CSTO ( Collective Security Treaty Organisation) என்ற கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது, இதில் கிறிகிஸ்ரான் , ரஜிஸ்கிஸ்ரான் மற்றும் ஆர்மேனியா சேர்க்கப்பட்டது. இதனை அரசறிவியலார்கள் “ poor man’s Europe “ என்றழைக்கிறார்கள். இது ஒரு போதும் ஐரோப்பிய யூனியனின் பலத்திற்கு இணையாக மாட்டாது என்பது அவர்கள் கணிப்பு. மேலும் ஜோர்ஜியா , உக்ரைன் மற்றும் மோல்டோவா போன்ற நாடுகளும் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தவை தான், NATO மற்றும் ஐரோப்பிய யூனியனோடு இணைவதில் இந்த நாடுகள் ஆர்வம் காட்டினாலும் இந்த நாடுகள் ரஷ்யாவிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதனாலும் அவர்கள் நிலத்தில் ரஷ்ய படைகள் இருப்பதனாலும் எரிவாயுக்காக ரஷ்யாவில் உக்ரைன் தங்கியிருப்பதனாலும் அது மேற்குடனும் ரஷ்யாவுடனும் ஓர் நடுநிலையான உறவை பேணிப்பாதுகாத்து வந்தது. ஆனால் 2013 ல் உக்ரைன் பிரதமர் விக்றர் யனுகோவிற்ச் விலாங்கு மீன் போல இரண்டு பக்கமும் நட்புறவை பேணுவது போல பாசாங்கு செய்து வந்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஐரோப்பிய யூனியனோடு கைச்சாத்திட ஆயத்தமாகியது, அது பின்னர் அந்த உறவு ஐரோப்பிய யூனியனுடன் அங்கத்துவம் என்ற அளவிற்கு வளர்ந்து விடும் பின்னர் அது NATO வுடனும் சேர்ந்து விடும் என்பதனாலும் விலாடிமியர் பூட்டினுக்கு உடனடியாக உக்கிரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

ரஷ்யாவின் ஒரே warm water port என்றழைக்கப்படும் Sevastopol என்கிற துறைமுகத்தின் அமைவிடம் கிரிமியாவாக இருந்தது. அப்படி கிரிமியாவை இணைக்காமல் போயிருந்தால் ஒர் காலத்தில் உக்ரைன் அமெரிக்காவிற்கும் மேற்கிற்கும் இந்த துறைமுகத்தில் கடற்படைத்தளம் அமைத்து குடுத்துவிட்டிருக்க கூடும். இந்த காலகட்டத்தில் ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உக்ரைனில் மேற்குற்கு சாதகமான எதிர்கட்சியை வளர்க்க நிதியுதவியும் கல்வி உதவிகளையும் வழங்கின.

2014 Feb 22 ல் கிரிமியாவை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின் உக்கிரைன் பிரதமர் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் மேற்கிற்கு சார்பான ஆட்சி அதிகாரம் உக்ரைன் தலைநகரான Kiev ல் உருவானது. கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிய பின் விலாடிமியர் பூட்டின் “ ரஷ்யா தன் இடத்தை கண்டெடுத்து விட்டது இனி ஒரு போதும் அது இந்த நிலையில் இருந்து பின்வாங்காது” . என்று உரையாற்றினார.

மேலும் கிழக்கு உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் 60 வீதமான மக்களை புதிய இடைக்கால நிர்வாக உக்ரைன் ஆட்சியார்கள் அடிமைப்படுத்துகிறார்கள் என்று காரணம் காட்டி கிழக்கு உக்ரைன் பிரிந்து தனிநாடு ஆக வேண்டும் என்று மறைமுகமாக சின்ன விரிசல்களை பெரிதாக்கி அந்த நாட்டில் இன முரண்பாடுகளை மறைமுகமாக வளர்த்தெடுத்து கொழுந்து விட்டு எரிய வைத்தது. இதனால் கிழக்கு உக்ரைன் ஆன லுஹான்ஸ் மற்றும் ரொன்ஸாக் ல் இனப்பிரச்சனை உருவானது . கிழக்கு உக்ரைன் ரஷ்யாவிற்கு நேச நாடாக தனி நாடு ஆனால் அதை தன் buffer zone ஆக வைத்துக்கொள்ளலாம் என்பது ரஷ்யாவின் உள்நோக்கமாக இருந்தது. அந்த அரசியல் நகர்வை இந்த வாரம் ரஷ்ய அதிபர் தனது படைகளை கிழக்கு உக்ரைன் அனுப்பி நிறைவேற்றியுள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ் மற்றும் ரொன்ஸாக் ஐ உக்ரைனில் இருந்து பிரித்து அவைகளை சுயாட்சி பிரதேசங்களாக ஒருதலைப்பட்சமாக பிரகடனப்படுத்தி இருப்பது NATO ற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. ஒரு நாட்டை படையெடுத்து அதில் ஒரு பகுதியை தனிநாடாக பிரகடனப்படுத்துவது உலக அரசியல் ஒழுங்கிற்கு புறம்பானது, உக்ரைன் இறையாண்மைக்கு புறம்பானது என்றெல்லாம் NATO வும் அதன் சார்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன், இருந்தும் இதை அமெரிக்கா அறைகூவுவது முரண்நகை. ஏனெனில் அமெரிக்கா பல நாடுகளை படையெடுத்து பிரித்ததும் சேர்த்தும் உலகறிந்த ஒன்று.

இதுவரை செய்வதறியாது இருதலைப்கொள்ளியாக அமைதி காத்த ஜேர்மனி NATO வுடன் சேர்ந்து இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு ரஷ்யாவோடு இணைந்து நடத்தி வந்த NORD Stream 2 திட்டத்தை இடைநிறுத்தி வைத்திருக்கிறது. மற்றும் NATO வும் அதன் நட்பு நாடுகளிள் தலைவர்களும் ரஷ்ய அதிபருக்கு மிக நெருக்மான பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்குகளை தாங்கள் முடக்கியுள்ளதாகவும் ரஷ்ய வங்கிகளை முடக்கியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த பொருளாதார முடக்கங்கள் எல்லாமே மூன்று வருடங்களுக்கு முன்னர் செய்த ஒன்று தான் என்றும் மீண்டும் இவற்றை புதிய முடக்கங்கள் என்று அறிவிப்பது செத்த பாம்பை அடிக்கும் செயல் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். பேலும் இப்படிப்பட்ட முடக்கங்களை ஏற்கனவே எதிர்ப்பார்த்த ரஷ்யா பொருளாதாரத்தில் கீழே விழாமல் இருக்க நிதி களஞ்சிய்த்தில் போதுமான சேமிப்பை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஆட்சியை கவிழ்க்க ரஷ்யா பல மில்லியன் ராணுவத்தின் உயிரைக்கொடுத்த கடனும் ரஷ்யா மேல் ஜேர்மனிக்கு உண்டு அதனாலும் வர்த்க ஒப்பந்தங்களினாலும் ரஷ்யாவோடு ஜேர்மனி பின்னிப்பிணைந்துள்ளது. ஜேர்மன எவ்வளவு தூரம் ரஷ்யா மீது எதிர்ப்பை காட்ட முடியும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

Sevestatopol என்பது ரஷ்யாவின் பிரதானமான பனியால் உறையாத ஓர் துறைமுமாக இருந்தாலும், கருங்கடலில் இருந்து வெளியேறி மத்திய தரைக்கடலில் நுளைவதற்கான கடல் பாதை Montreux Convention of 1936 என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் Bosporus நீரிணை NATO ல் அங்கத்துவம் வகிக்கும் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது, ஆகவே அந்த நீரிணையில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடே ரஷ்யாவிற்கு இருக்கிறது. அப்படி அது Bosporus நீரிணையை கடந்து Aegean கடலை அடைந்தே Gibraltar நீரிணையை அடைந்து அட்லாண்டிக் கடலை அடைந்து பின் சூஸ் கால்வாய் சென்றே இந்திய சமுத்திரத்தை அடைய முடியும், அதிலும் நிறைய NATO நாடுகளுக்கு சொந்தமான கால்வாய்களினூடு செல்ல முடியாத நிலை உண்டு. குறிப்பாக GUIK gap ( Greenland, Iceland, U.K.) என்ற NATO விற்கு சொந்தமான வடக்கு கடல் கால்வாய் தடைதான்.

ரஷ்யா 2014 ல் கிரிமியாவை தன்னோடு பலவந்தமாக இணைத்தது ரஷ்யாவின் சர்வாதிகாரம் என்ற தினுசில் மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரைனின் இழப்பிற்காக வருந்தியது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை என்பது உலகத்திற்கு வெளிச்சமாக தெரிந்த ஒரு விடயம்.

கிரிமியாவை இணைத்த கையோடு ரஷ்யா Sevestapol துறைமுகத்தில் அதன் கடற்படை பலத்தை அதிகரிக்கும் முகமாக பதினெட்டு போர்க்கப்பல்களை தயார் நிலையில் அங்கு நிறுத்தியுள்ளது. கருங்கடலில் இருந்து வரும் ஆபத்துக்களை சந்திக்க ரஷ்ய தயார் நிலையில் உள்ளது. இதற்கு முகம் கொடுக்கும் விதமாக அமெரிக்கா தனது NATO கூட்டாளிகளான ரொமேனியாவில் தனது புஜ பலத்தை அதிகரிக்கும் அதே நேரம் துருக்கியை Bosporus நீரிணையில் ரஷ்யாவை தடுக்க கோரும்.

இன்று NATO. ல் அங்கத்துவம் வகிக்கும் துருக்கி உக்ரைன் எல்லையில் படைகளையும் கன ரக வாகனங்களையும் குவித்த வண்ணம் உள்ள ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கண்டிக்கும். அதே நேரம் துருக்கி கருங்கடல் எல்லைகளை ரஷ்யா மற்றும் உக்ரைனோடு பகிர்ந்து கொள்கிற நாடு என்பதனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பது அறிவான செயலாக இருக்காது என்றும் அறிக்கை விட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை கைமீறி விட்டது. துருக்கி NATO ல் அங்கம் வகித்த போதிலும் அது ரஷ்யாவுடன் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் ராஐதந்திர உறவில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துருக்கி போலவே உக்ரைன் கூட மேற்கு அதற்கு வலிந்து கட்டி செய்யும் மிலிட்டரி படைக்குவிப்பு உதவுகளை உபத்திரம் என்றே எண்ணியது , இப்படி உக்ரைனை ரஷ்ய படைகளை தாக்கி கைப்பற்றும் நிலைக்கு இன்று மேற்கின் செயல் இட்டுச்சென்றிருக்கிறது. உக்ரைனை அச்துறுத்தும் ரஷ்யாவை ஜேர்மனி கண்டும் காணாமல்்இருந்ததை பற்றி அமெரிக்கா விசனம் தெரிவித்திருந்தது. ஜேர்மனிக்கு எரிவாயுவை வழங்கும் நாடாக ரஷ்யா இருப்பதனால் ஜேர்மனி அப்படி இருக்கிறது என்பது அமெக்காவிற்கு தெரியாத ஒன்று அல்ல.

எரிவாயு தேவைக்காக ரஷ்யாவில் தங்கி இருக்கும் ஜேர்மனியையும் இதர ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவோடு பகையை வளர்க்க அமெரிக்கா ஏன் தூண்டியது? அமெரிக்காவிடம் இப்போது Shale எரிவாயு தாராளமாக இருக்கிறது. அதனது தேவைக்கு மேலேயே இருக்கிறது. ஐரோப்பாவிற்கு எரிவாயு தேவைப்படுகிறது. ரஷ்யாவின் வெளியுறவு கொள்கைகளோடு முரண்பட முட்டுக்கட்டையாக இருப்பது இந்த எரிவாயுத்தேவைக்கு அதில் அவை தங்கி இருப்பதனால் தான்.

ரஷ்யாவின் South Stream மற்றும் Turk Stream எனப்படும் எரிவாயு திட்டங்கள் உக்ரைன் ஊடாக செல்லாமல் உக்ரைனை தவிர்த்து செல்வதனால் உக்ரைனுக்கு அதலிருந்து கிடைக்க கூடிய கணிசமான வருமானம் அதற்கு கிடைக்காமல் போய்விட்டது. இது உக்ரைனை மேலும் பொருளாதாரத்தில் வீழ்த்தும் ஓர் யுக்தி. மேற்குடன் நட்புறவில் இருப்பதனால் இப்படி ரஷ்யா அதை தள்ளி வைத்திருந்தது.

அமெரிக்காவிற்கு ஐரோப்பிய எரிவாயு சந்தையை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல அட்லான்டிக் கடல் வழி pipe line களினூடே கடத்த வேண்டும், Liquefied Natual Gas என்னும் திரவ வடிவத்தில் கடத்த வேண்டும் அதை மீண்டும் விநியோகிப்பதற்குமுன் எரிவாயு வடிவத்திற்கு மாற்ற வேண்டும் அதற்கு ஐரோப்பிய நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் LGN terminal களை உருவாக்க வேண்டும். அதை ஏற்கனவே பல NATO நாடுகளான போலந்து மற்றும் லத்துவேனியாவில் உருவாக்கி வருகிறது. செக் றெப்பப்ளிக் இப்படியான terminal களை உருவாக்கி வருகிறது.

இன்று ஐரோப்பிய யூனியனில் கிட்டத்தட்ட முப்பது LNG terminal கள் உள்ளன. போர்ச்சூழலில் ரஷ்யா எரிவாயுவை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு வழங்க மறுத்தால் ்அந்த நாடுகளுக்கு இந்த terminal களிலிருந்து எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்பதும் உறுதி. ஆகவே ரஷ்யாவிற்கு அந்த பிடிமானம் கூட buffer state ஆக இருந்து வருகிற அயல் நாடுகளிடம் இன்று கிடையாது.

ரஷ்யாவுடம் இருந்து கிடைக்கும் எரிவாயு ஒப்பீட்ளவில் விலைகுறைவாக இருந்தாலும் அதை பெற்றுக்கொள்ளும் நாடுகள் ரஷ்ய வெளிவிவகார கொள்கைகளில் முரண்பட முடியாதபடி அந்த வர்த்தக உறவு அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும், அமெரிக்க எரிவாயு முற்று முழுதாக ரஷ்ய சந்தையை கைப்பற்ற முடியாது ஏனெனில் ரஷ்ய எரிவாயு மலிவானது. ரஷ்யா தனது எரிவாயுவை விற்க வேறோர் சந்தையை தேர்ந்தெடுத்து விட்டது, அது சீனாவிற்கு 2020 ல் இருந்து விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது. $400 billion பெறுமதியான எரிவாயுவை வாங்குவதற்கான முப்பது வருட ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை அது சீனாவுடன் செய்திருக்கிறது.

சீனாவோடிருந்த பழைய அரசியல் பொருளாதாரம் சார்ந்த சித்தாங்களில் இருந்த முரண்பாடுகளை கொண்டாட சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் நேர அவகாசம் கிடையாது, சீனாவின் one belt road என்ற உலகெங்கும் வியாபித்திருககும் கடற்படை தளங்களும் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தமும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இன்று நிலவும் பகையும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாட்டை இரு பெரும் வல்லரசுகளையும் ஒர் அணியாக சேர வைத்திருக்கிறது.

ஆகவே இந்த உலகம் இவ்வளவு காலமும் இருந்து வந்தது போன்று bipolar world என்று சொல்லப்படும் இருமுனை அரசுகளின் ஆதிக்கத்தில் அல்லாமல் multipolar என்ற பலமுனை வல்லரசுகளின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது. ஆகவே யார் யாரெல்லாம் எப்போது எந்தெந்த நாடுகளோடு எப்பேர்பட்ம நலன்களுக்காக கூட்டு சேர்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சர்வாதிகார வெறி கொண்டு ஆண்களினால் நடாத்தப்படும் இந்த வீர விளையாட்டின் சிக்கி சின்னாபின்னமாகப்போவது வழமைபோல் யார் எதற்காக போராடுகிறார்கள் என்று போரின் காரணங்கள் ஏதும் அறியாத சாதாரண மக்கள் தான். மீண்டும் ஓர் cross fire ல் சிக்கிய அவர்களுக்கு மேலும் அகதி முத்திரை குத்தப்படும். ஊர் பேர் தெரியாத நாடுகளில் கையேந்தி நிற்பார்கள் , அவர்கள் கதைகளும் இலக்கிய வடிவம் பெற்று லிபரல் மேற்கினால் கொண்டாடப்படும்.

அன்வர் சதாத்

Read more...

Sunday, February 6, 2022

இலங்கைப் பொருளாதாரத்தில் பல்லும்சில்லுமாகவிருந்த மலையகத்தமிழர் வருகையும் பிரித்தானியர் வெளியேற்றமும்.

வணிகத்துக்காக வந்த பிரிட்டிசார் இந்திய நாட்டைத் தமது காலனி நாடாக ஆக்கினர். நாட்டை ஒட்டச் சுரண்ட அனைத்துவகையிலும் உரிமை மீறலைக் கையாண்டனர். மூலதனத்தைக் குவிக்கத் தொடங்கியவர்களின் பசித்தீரவில்லை. அதை மென்மேலும் பெருக்கிக்கொள்ள தமது ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளில் பயிர் உற்பத்தியில் ஈடுபடுத்த, இந்தியாவில் இருந்து மக்களை கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் பிரிட்டிசாரின் நிலவரிச் சீர்த்திருத்தம் கிராமப்பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பஞ்சம், பல்லாயிரக்கணக்கானோரைக் காவு கொண்டது. பல ஆண்டுகள் நீடித்தப் பஞ்சத்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து கிராமங்கள் மீளவில்லை. இந்தச் சூழலில், காலனி நாடுகளுக்குக் கூலிகளை அழைத்துச்செல்லும் நடைமுறைகளைப் பிரிட்டிசார் மேற்கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர். இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குப்பின் பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசுகளின் காலனி நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

1837ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய அரசு குடிபெயர்வு சட்டத்தை அறிவிப்பதற்கு முன்பே, தடையற்ற குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, 1817 இல் இலங்கை, 1819 இல் மொரிசீயஸ், 1826 இல் போர்பன், 1833 இல் பர்மா , 1843 இல் மலேசியா மற்றும் பிரிட்டிஷ் கயானா, ஆப்ரிக்கா, சிங்கப்பூர் பிஜி, நியூ கலிடோனியா, அட்லாண்டிக் கரிபியன் கடல் தீவுகளான ட்ரினிட்டாட், டோபோக்கோ போன்ற தீவுகளுக்கு மக்களை அழைத்துச் செல்லத் தொடங்கினர். பிரிட்டிஷ் அரசும் இதை ஊக்குவித்தது.

தமிழகத்திலிருந்தும் அதிக எண்ணிக்கையில் குடும்பம், குடும்பமாக புலம்பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியை எட்டுமென கணிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்தே அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்துள்ளனர். அதிலும் இலங்கைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

காலனி ஆதிக்கச்சுரண்டல் பசிக்கு அதிக எண்ணிக்கையில் தங்களின் இருப்பை இழந்தவர்கள் தமிழர்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் தொடங்கிய சிதறடிப்பு இருபதாம் நூற்றாண்டு தொடக்கம்வரை நீடித்தது. பல்வேறு நாடுகளுக்கு சிதறிச்சென்ற பலரும் மீண்டும் தங்களின் தாயகத்துக்குத் திரும்பவில்லை.

இலங்கையைக் கைப்பற்றிய பிரிட்டிசார் பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்காகத் தமிழகத்திலிருந்து மக்களை அழைத்துச் செல்லத் தொடங்கினார்கள். பெருந்தோட்ட உற்பத்தியில் இம்மக்களின் அயராத உழைப்பு இலங்கை நிலவுடைமை சமூகஅமைப்பில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கின. காப்பி, தேயிலை, இரப்பர், தென்னை, கொக்கோ ஆகியவற்றின் உற்பத்தியில் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

இந்தியத் தமிழர்களை அழைத்துச் சென்ற பிரிட்டிசார் பெருந்தோட்டப் பகுதிகளை தனித்த ஓர் உலகமாக வைத்திருந்தனர். ஐரோப்பியர்கள் மற்றும் உள்ளுர் தோட்ட முதலாளிகளின் மிலேச்சத்தனங்களும் ஒடுக்கு முறைகளும் வெளிவுலகுக்கு எட்டாதவகையில் தோட்டங்களைத் தங்களின் அதிகாரக்கட்டுக்குள் வைத்தனர்.

மலைப்பகுதிகளில் குடியேறி நூறாண்டுகள் கடந்த பின்பும் அடிமைப்படுத்தப்பட்ட இம்மக்களை மீட்டெடுக்க எந்த ஓர் அமைப்பும் முன்வரவில்லை. இந்நிலையில் அடக்குமுறையின் கொடூரங்களை துண்டறி்க்கைகள் மூலம் நாடறியக் கொண்டுவந்த சமூகப் போராளி நடேசய்யரை வரலாறு பதிவு செய்துள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தில் பல்லும்சில்லுமாக இருந்தவர்கள் மலையகத் தமிழர்களாகும். இவர்களின் உழைப்பு இலங்கைவாழ் சமூகங்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியது. ஆனால் இவர்கள் ஈட்டித்தந்த வருவாயில் 5% வீதம்கூட தோட்ட மக்களின் நலனுக்குச் செலவிடப்படவில்லை.

தமிழகக் கிராமங்களில் இருந்து வேரடி மண்ணோடு பிடுங்கியெடுத்து இலங்கை மலைப்பிரதேசங்களில் நடப்பட்டவர்களின் தலைமுறையினரே இன்று ’மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப் படுகிறார்கள். இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவர்கள் இலங்கை தேசிய இனமாக அங்கீகரீக்கப்படவில்லை. பிரிட்டிசார் வெளியேறிய பின் ஆட்சியாளர்களின் சட்டங்களால் சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதுடன், சட்டமென்ற கருவியைக் கொண்டே மலையகத் தமிழர்களின் இன உருவாக்கத்தையும் அடித்து சிதைத்தார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பெருந்தோட்ட உற்பத்தியில் கொத்தடிமைகளாக உழைத்த இம்மக்களின் உழைப்பை ஒட்ட சுரண்டிய காலனித்துவம், இலங்கையின் அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்கும்பொழுது தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டங்களை உருவாக்கவில்லை. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசியல்தலைவர்களிடம் தீவிர எதிர்ப்பு இருப்பதை அறிந்தும், சோல்பரி ஆணைக்குழுவின் குடியுரிமை தொடர்பான பரிந்துரை மலையக மக்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு துணைநின்றது.

இம்மக்களை வழிநடத்திய அரசியல் தலைமை, குடியுரிமை பறிப்புச்சட்டத்தை திரும்பப்பெறக் கோரும் போராட்ட வலிமையைக்கொண்ட அணிகளை கொண்டிருந்தபோதும் அதைப் பயன்படுத்தத் தவறியது. இதுபோன்ற வரலாற்றுத் தவறுகளின் தொடர்ச்சியாகவும் உச்சமாகவும் 1964ஆம் ஆண்டு சாஸ்திரி - சிறிமா உடன்படிக்கை ஏற்பட்டது; பிற்காலத்தில் இம்மக்களை சிதறடிக்கவும் காரணமானது. பத்துலட்சம் மலையக மக்களின் தேசியம் சார்ந்த உரிமையை ஒரு சாதாரண பிரச்சனையாக இடதுசாரி அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து அமைப்புகளும் எடுத்துக்கொண்டன.

1920ஆம் ஆண்டுகால அரசியல் பிரவேசத்தோடு மலையகத் தமிழர்களுக்கெதிராக தோன்றிய பேரினவாதம் குடியுரிமை பறிப்பில் தொடங்கி நாடு கடத்தும் உடன்படிக்கை யோடும்கூட அதன் தாகம் முற்றுப்பெறவில்லை.

மலையகத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் ஏன் பிரித்து பார்க்க வேண்டும் என்ற வாதம் தமிழகத்தில் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரே பூகோளப் பகுதியில் இருப்பை கொண்டுள்ளவர்கள் அல்ல.

வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களது பூர்வீக நிலப்பகுதியை தாயகமாக கொண்டுள்ளார்கள். பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்கள் வாழும் தென் மற்றும் தென்மேற்குப்பகுதிகளில் உள்ள சிங்களக் கிராமங்களை சுற்றி உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக, தினக் கூலிகளாக தங்களது இருப்பை தொடரும் சமூகமாக இந்திய வம்சாவழி மலையகத்தமிழர்கள் உள்ளனர். 1972, 1975 காலங்களில் மலையகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தனியார் மற்றும் கம்பெனிகளிடமிருந்த தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களைக் கையகப்படுத்திய அரசு. தோட்டங்களின் சில பகுதிகளை சிங்களவர்களுக்கு பங்கிட்டு வழங்கியது. ஆனால் இதில் பணிசெய்து வரும் தொழிலாளர், அல்லது வேலையற்று இருக்கும் இவர்களின் பிள்ளைகளுக்கோ அவை வழங்கப்படவில்லை. நிலம் மற்றும் வீட்டுமனைக்கான உரிமைகளை இவர்களுக்கு வழங்குவதை அரசு மறுத்துவரும் நிலையும் தொடர்கிறது.

தேசிய கல்வியுடன் இணைக்காமல் பல்லாண்டுகளாகத் தனித்து விடப்பட்ட தோட்டங்களில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. 1977- 80 காலத்திற்குப் பின்பே இந்தக் கல்விக்கூடங்களை தேசிய கல்வியுடன் அரசு இணைத்தது. இதன்பிறகே தோட்டப்பகுதிகளிருந்து கல்வி கற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின. என்றாலும் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை என்பது தேசிய மட்டத்தில் ஒப்பிடுகையில் மலையக மாணவர்களின் விகிதம் ஆக குறைந்தே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இதேவேளை தோட்ட மாணவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப தினக்கூலியைத்தவிர வேறு வேலைகள் இல்லாத காரணத்தால் பலரும் நகரங்களில் கிடைக்கும் வேலைகளை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால். நகரப்பகுதிகளிலும் ஏனைய சமூகத்தினருடன் இவர்கள் கூடிவாழும் நிலையிலேயே உள்ளனர்.

1958- 77- 81- 83 ஆண்டுகளில் தென்பகுதிகளில் சிங்களவர்களால் மலையகத் தமிழர்கள் தாக்குதலுக்கும் சூறையாடலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். மலையகத்தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமையைக் கோரி போராட்டம் நடத்தியதால் ஏற்பட்ட தாக்குதல் அல்ல. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிர்வினையாக சிங்கள பெளத்த பேரினவாதத்தால் உரிமைப் போராட்டம் நடத்தாத மலையகத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

ஈழத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் சிங்களப் பெளத்த பேரினவாதத்தால்தான் ஒடுக்கப்படுகின்றனர். ஆனாலும் இவ்விரு தரப்பினதும் பிரச்சனைகளும் தனித்த வரலாற்றுக் கூறுகளைக் கொண்டுள்ளன. தனித்த அரசியல் வேட்கைகளையும் போராட்டங்களையும் கொண்ட மக்கள் பிரிவினர் இவர்கள். எனவே, பிரச்சனையை தனித்துக் கையாள்வது தேவையின் பொருட்டே ஆகும். அவர்களது பிரச்சனைகளுக்கும், சனநாயக உரிமை மறுப்புகளுக்கும் குரல் கொடுப்பதற்கான ஓர் அமைப்பு தேவை. ஆகவே, “மலையகம்- தாயகம் திரும்பியோருக்கான இயக்கம்” தேவையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் நோக்கத்தையும்,வேலைத் திட்டத்தையும் பின்வரும் வகையில்,

• இலங்கை தீவில் வாழக்கூடிய மலையக அல்லது இந்திய வம்சாவழித் தமிழர்கள் நிலை, வரலாறு, கோரிக்கைகள் தொடர்பில் தமிழ்நாட்டளவில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

• மலையகத்தில் வாழும் தமிழர்கள் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியிலும் இன்ன பிற ஒடுக்குமுறை வடிவங்களாலும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக்க வேண்டும். அப்படியான, விவாதம் இல்லாமல் அம்மக்களுக்கு ஆதரவான அடித்தளம் உருவாகவியலாது.

• முதலில், மலையக தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றிய தகவலை, செய்திகளை, அவர்தம் கோரிக்கைகளை, அதற்கான நியாயங்களை தமிழ்நாட்டின் அரசியல்தளத்தில் முன்வைப்பது அவசியமாகிறது.

• தமிழ்நாட்டில் உள்ள ஏதிலி முகாம்களில் இந்திய வம்சாவழித் தமிழார்கள் குடியுரிமை இல்லாமல் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற முத்திரையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைபடி குடியுரிமை வழங்குவதற்கான கோரிக்கை விளக்கக் கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. கூடவே, ஏதிலி முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் ஏதிலிகள் இக்கோரிக்கையை தங்கள் நலனுக்கு ஊறு ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். இந்த முரண்பாடு தீவிரம் அடையாதபடி நட்பு வகையில் தீர்ப்பதற்கு உரிய கவனம் எடுக்க வேண்டும்.

• தாயகம் திரும்பியோராக பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவோருக்கான கோரிக்கைகளை தமிழக அரசின் மறுவாழ்வு துறையிடம் கொண்டு சேர்த்தல். இதன் தொடர்பில் செய்யவேண்டிய வேலைகள் குறைவே.

• இலங்கையில் வாழக்கூடிய மலையகத் தமிழர்களை இந்த அமைப்பின்வழி அமைப்பாக்க வேண்டியதில்லை. ஒரு சில முன்னோடிகள் இதில் பங்குபெறும்போதுதான் அங்குள்ள தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள இயலும்.

• தமிழ்நாட்டில் முகாம்களில் குடியுரிமைக் கோரக் கூடியவர்கள் மற்றும் தாயகம் திரும்பியோரை அடித்தளமாக கொண்டு இவ்வமைப்பு செயல்பட முடியும். திரளான வெகுமக்களை அணிதிரட்டுவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள் குறைவு. அதே நேரத்தில், முன்னணியாக இருக்கக் கூடிய சில இளைஞர்களையேனும் அமைப்பாக்கினால் அது நீண்ட நெடுங்காலத்திற்குப் பயன் தரும்.

• இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இந்திய அரசு இருந்துவருகிறது. இதில் ஒரு மாற்றம் ஏற்படாதவரை இந்தியாவின் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை ,வங்க தேசம், நேபாளம், மியான்மர், பூடான், மாலத்தீவு போன்ற எந்த நாட்டுக்கும் விடிவு கிடையாது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கை தீவைப் பொருத்தவரை உலகளாவிய ஏகாதிபத்திய போக்கில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படாதவரை அமைதியும் சனநாயகமும் கொண்ட சூழல் உருவாகப் போவதில்ல்லை. எனவே, இலங்கையில் வாழக்கூடிய மலையகத் தமிழர்களின் பாதுகாப்பையும் சம உரிமையையும் கண்காணித்து உரிய ஆதரவை தர வேண்டிய கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கக் கூடும். அதற்கான தயாரிப்புப் பணிகளை இப்போது செய்ய வேண்டி இருக்கலாம்.

• தமிழகத்தில் வாழும் தாயகம் திரும்பியோரின் உளவியல் கட்டுமானம் தமிழ்நாட்டு தமிழரைப் போன்றே இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, அவர்களை தனி வகையினமாக கருதி அணிதிரட்டக் கூடிய வாய்ப்பு குறைவு. மேலும் அவர்கள் தமிழ்நாட்டின் பலவேறு கட்சிகளிலும் பங்கு பெறுகின்றனர், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

• செயல்பாட்டு வடிவங்களாக – அறிக்கை கொண்டு வருதல், கோரிக்கைகளை வடிவமைத்தல் , ஜூம் கூட்டங்கள் நடத்துதல், அரங்கக் கூட்டங்கள் நடத்துதல் ஆகியவை இருக்கக்கூடும்.

கரவூர் அசுரன்

Read more...

Saturday, December 18, 2021

அன்ரன் பாலசிங்கத்தின் வரலாற்று பக்கங்கள். (By நட்சத்திரன் செவ்விந்தியன்)

2005 மாவீரர் நாளில் லண்டனில் "ரணில் ஒரு நரியன்" என்று அன்ரன் பாலசிங்கம் உரையாற்றுகிற ஒரு வீடியோவை பார்த்திருப்பீர்கள். இந்த உரையை வழங்குகிறபோது பாலசிங்கம் வன்னியில் செத்துப்பிழைத்து தாய்லாந்து வழியாக லண்டன்சீமைக்கு நடைப்பிணமாக வந்தவர். அவரது மதியுரைஞர் வாழ்நாள் முழுக்க சாராய புகையிலை போதையில் இருந்தவர். சலரோக நோய் முத்தி தன் சிறுநீரகங்களை இழந்து இரவல் சிறுநீரகங்களில் பிழைத்த பாலசிங்கத்தின் உடல் மொழியை கவனியுங்கள். எவ்வளவு கஸ்ரப்பட்டு சேடமிழுத்து அந்த உரையை வழங்குகிறார். இப்போது பாலசிங்கம் உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட குளிசைகளின் போதையில் இவ்வுரையை வழங்குகிறார். அவரது நாக்கு மட்டுமல்ல உடலும் தள்ளாடுகிறது. கடல்வழியாக தாய்லாந்து வழி லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகாரனின் கள்ளுக்கடை ஓத்தா ரக பேச்சுக்கள்.

(பாலாவின் இறுதிகாலத்தோற்றம்.)

 அன்ரன் பாலசிங்கத்தை மதிப்பிட அவரின் சிறுவயது வரலாற்றிலிருந்து தொடங்குவோம். ஒரு கரவெட்டியில் வசித்த யாழ்நகரை அண்டிய பகுதியை பூர்வீக ஊராகக்கொண்ட கத்தோலிக்க வெள்ளாடிச்சிக்கும் மட்டக்களப்பு சைவக்குருக்களின் மகனுக்கும் பிறந்த பாலசிங்கம் கத்தோலிக்கராக தாயால் கரவெட்டியில் வளர்க்கப்பட்டவர். தந்தை சிறுவயதிலேயே பாலசிங்கத்தின் தாயைவிட்டு பிரிந்துவிட்டார். கரவெட்டி அம்பம் சிறு ஆஸ்பத்திரியில் Mid wife ஆக தொழில் செய்து கஸ்ரப்பட்டுத்தான் தாயார் பாலசிங்கத்தையும் உடன்பிறப்புக்களையும் வளர்த்தார். நெல்லியடி St Anthony's church அக்காலத்தில் வெள்ளாள கத்தோலிக்கர் ஆதிக்கம் மிக்கது. தாயார் வெள்ளாடிச்சி என்றாலும் பிறத்திய ஊரைச்சேர்ந்தவர் என்பதாலும் ஒரு மட்டக்களப்பானை கட்டியவர் என்பதாலும் பாலசிங்கம் குடும்பம் வெள்ளாள கத்தோலிக்க குடும்பங்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டது. பாலசிங்கம் குடும்பம் தேவாலயத்துக்கு வருவது மட்டுந்தான். இவர்கள் சக வெள்ளாள குடும்ப நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை.(முக்கியமான இத்தகவலை எனக்கு தந்தது இப்போது புலம்பெயர்ந்து வாழும் அதே கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்)

(கரவெட்டி புனித அந்தோனியார்)
இந்த பாரபட்சம்தான் அன்ரன் பாலசிங்கத்தின் பொதுவாழ்வில் பின்னாட்களில் பெருந்தாக்கம் செலுத்தியது. தேவாலயத்துக்கருகிலுள்ள Sacred Heart பாடசாலையில் அக்கால ஆங்கிலமுல matriculation சாதாரண தரம்வரைதான் பாலசிங்கம் படித்தார்.

வறுமையும் சமுகப்பாரபட்சமும் குடும்பத்தை கடுமையாகப் பாதித்தது. இளவயதிலேயே பாலசிங்கம் மதுவுக்கும் சிகரெட்டுக்கும் அடிமையாகிவிட்டார். சிறுவயதிலேயே மேற்படிப்பு படிக்காமல் பத்திரிகையாளராக வேலைசெய்ய கொழும்புபோனார். சுய படிப்பு வாசிப்பு மூலமே புத்திஜீவியானவர் பாலசிங்கம். பாலசிங்கத்தின் கொழும்பு புத்சிஜீவி நண்பர்களில் ஒருவர் பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் விரிவுரையாளரான சா.வே. காசிநாதன். மற்றவர் செய்தி என்ற வார இதழின் ஆசிரியர். பாலசிங்கம் பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக ஆனபின்னரே அவர் வாழ்வில் திருப்புமுனையானது. இடையில் அவர் முதல் காதல் மனைவி மரணம். இதோடு பாலசிங்கத்துக்கு லண்டன் போகவாய்ப்பு வருகிறது. ஆனால் இதற்குமுதலே காசிநாதன் கலாநிதிப்படிப்புக்காக லண்டன் போய்விட்டார். தனக்கு A/L படிப்பு பல்கலைக்கழக படிப்பு என்பன உரிய காலத்தில் இலங்கையில் வறுமைகாரணமாக மறுக்கப்பட்டதும் கரவெட்டில் இருந்த பாரபட்சமும் அவரை ஒரு நிரந்தரமான காழ்ப்புமிக்க மனிதனாக்கிவிட்டது. பின்நாட்களில் லண்டனில் பாலசிங்கம் கலாநிதிப்படிப்புக்கு பதிவுசெய்த வாய்ப்பு வந்தபோதும் அவரது காழ்ப்பு விலகவில்லை.

யாழ் குடாநாட்டை ஒரு நாடாக உருவகித்தால் இவர் வளர்ந்த கரவெட்டி ஒரு Province ஆகிறது. யாழ் நகரம் Cosmopolis. ஒரு provincial பாலசிங்கத்தின் காழ்ப்பிலிருந்து அவரது Personal Agenda வருகிறது. ஈழ கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் தான் பெரும்பான்மை என்றாலும் டச்சுக்காலத்திலிருந்து Cosmopolitan களான அங்கிலிக்கன் மற்றும் ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்களே புலமைசார் செல்வம்சார் மேட்டுக்குடிகளாக இருக்கிறார்கள். அமெரிக்கன் மிசன் ஆரம்பித்த அப்போது பல்கலைக்கழகத்துக்கு சமனாக இருந்த வட்டுக்கோட்டை கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி இவற்றை அடியொற்றி வந்த சீ.வை தாமோதரம்பிள்ளையிலிருந்து வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்(ஹண்டி பேரின்பநாயகம்), ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம்( இந்து ஆனாலும்) லக்ஸ்மன் கதிர்காமர், ராஜன் ஹுல் வரையான நவீன புலமைத்துவ பாரம்பரியத்தில் புலிகளுக்கிருந்த வெறுப்பு பிரபாகரனால் வந்ததல்ல. பாலசிங்கத்தின் personal Agenda வின் ஆன விளைவு. பாலசிங்கம் புலிகளின் சிந்தனையில் 1983 ஜூலையின் பின் தாக்கம் செலுத்தமுன் புலிகள் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டிய துரையப்பா தியாகராஜா முதலியவர்களுத்தான் கொன்றார்கள். பாலசிங்கத்தின் பின் தான் புலிகள் St.John's College அதிபர் ஆனந்தராஜ், சாம் தம்பிமுத்து, ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம், கதிர்காமர் போன்றவர்களைக்கொல்கிறார்கள்.

புரியவில்லையல்லவா! தெளிவாக விளக்குகிறேன். பாலசிங்கம் அசலான ஒரு புத்திஜீவி. தீலிரமான வாசகர்/படிப்பாளி. லெனினையும் ஸ்ராலினையும் மாவோவையும் தெளிவாகப்புரிந்து கடந்து இடதுசாரியத்தை புரிந்தவர் பாலசிங்கம் என்பதை அவரது புலி அரசியல் சாராத கட்டுரைகளின் தொகுப்புமூலம் அறியலாம். அவரது எழுதி சமர்ப்பிக்கப்படாத கலாநிதி பட்ட தலைப்பையும் ஆராய்ந்து பாருங்கள். சி.சிவசேகரம் போன்ற கட்டுப்பெட்டி மார்க்சியர் அல்லர் பாலசிங்கம்.

இப்படியானவர் ஏன் அக்காலத்திலிருந்த இடதுசாரி இயக்கங்களான EROS, EPRLF என்பவற்றிலும் தலமை தீவிர இடதுசாரித்தனமாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான தொண்டர்கள் இடதுசாரிகளாக இருந்த PLOTE, TELO என்பவற்றில் சேராமல் அப்பட்டமான வலதுசாரியான புலிகளில் போய்ச்சேர்ந்தார். பின் புலிகள் வலதுசாரிகளைவிடமோசமாகி பாசிஸ்டுகள் ஆனபின்னும் அதனை நியாயப்படுத்தினார்? வலதுசாரியான பிரபாகரனை சந்திக்கமுதல் EROS ஸ்தாபகர் ரட்ணசபாபதி, EPRLF பத்மநாபா ஆகியோரை லண்டனில் சந்தித்திருந்தபோதும் அசல் இடதுசாரி புத்திஜீவியான பாலசிங்கம் புலிகளில் இணைந்தார். காழ்ப்புதான் வேறொன்றுமில்லை.

பாலசிங்கம் பற்றி மிகத்தவறான மதிப்பீடுகள் பத்திரிகையாளர்களிடமுண்டு. அவர் அசலான சுயாதீனமான இடதுசாரி புத்திஜீவி. ஆனால் தார்மீகமில்லாத மோசமான மனிதர். தன்னை வஞ்சித்த சமூகத்தில் காழ்ப்புகொண்ட பெரும் Ego கொண்ட மனிதன் அதே சமூகத்தில் தன்னை அறத்தை அடகுவைத்து நிலைநிறுத்துவதே அவரை இயக்கிய தத்துவம்.

கரவெட்டியில் அவரை வஞ்சித்த வறுமையையும் பிரதேச ஜாதீய பாரபட்சத்தையும் வென்று 70 களின் ஆரம்பத்தில் லண்டன் சீமையில் பல்கலைக்கழக மாணவனாக கரையேறிய பாலசிங்கம் லண்டனில் மறுபடியும் ஒரு பரம வைரியை காண்கிறார். அவர் வேறுயாருமல்ல. யாழ் வெள்ளாளரும், என்ஜினியரும், கட்டுப்பெட்டி மார்க்சியருமான EROS ரட்ணசபாபதி.

ரட்னா தன் லண்டன் பலஸ்தீன PLO தொடர்புகளால் ஈழப்புலிபோராளிகளையும் தன் EROS போராளிகளையும் லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்புகிறார். ரட்ணா மார்க்சியத்தை வெறும் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக மட்டுமே அறிந்தவர். பாலசிங்கமோ மார்க்சியத்தை தத்துவ வரலாற்றுப்பின்னணியில் மேலும் மேவி அறிந்தவர். ரட்னாவுக்கு தன் மேதமையை புரியவைக்கும் அவா பாலாவுக்கு வருவது இயல்புதானே. தானும் ஏதாவது செய்யவேண்டும். இதன் விளைவுதான் 1979ல் பாலாவின் இந்தியபயணம்.

தன் பூர்வாங்க புலனாய்வுகளின் விளைவாக பிரபாகரன் என்ற புலிகளின் தலைவரையே நேரே அணுகி அவரை protege/சீடன் ஆக்கலாம் என்ற திட்டத்தோடு புதிய ஆஸ்திரேலிய காதல் மனைவியோடு சென்னை வருகிறார். இந்த தருணத்தில் பாலா சிறிது பொறுமை காத்திருந்தால் அவசரப்படாமல் தன் கலாநிதிப்பட்ட ஆய்வை செய்துமுடித்து ஒரு தத்துவப்பேராசிரியராக வந்திருந்தால் வரலாற்றில் பாலாவுக்கு நல்ல இடம் வசமாகியிருக்கும். பிரபாகரனதும் புலிகளதும் Hegemony கூட வரலாற்றில் இல்லாமல் போயிருக்கும். இக்காலத்தில் கொடிகட்டிப்பறந்த சித்தாந்த கைலாசபதியைவிட அசலான புத்திஜீவி கோட்டைவிட்ட துரதிஸ்ட தருணமிது.

பாலா ஏற்கெனவே புகைக்கும் மதுவுக்கும் அடிமை. இடையில் ஜேம்ஸ் பாண்டின் "blonde" காதலிகள் மாதிரியான ஒரு ஓஸ்றேலிய நாட்டுப்புறக்காதலியான அடேல் ஊர்வசி மேனகா ரம்பை போல அவர் தவத்தை கலைக்க வந்திருப்பதையும் பாலா அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

(24 வயசு அடேல் குட்டி)
பிரபாகரனை பாலா சந்தித்த முதல் 1979 பயணத்தில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் அணி பிரிந்து PLOTE உருவாகியிருக்கவில்லை. ஆனால் பாலாவுக்கு உமாவை பிடிக்கவில்லை. ரட்ணாவைப்போல உமா ஒரு மேட்டுக்குடி வெள்ளாளன். ஆங்கிலம் அறிந்த உமா பிரபாகரனைவிட 10 வயது அதிகமான Surveyor. விவாதித்து கேள்வியெழுப்பும் உமா பாலாவின் Protege ஆக வாய்ப்பில்லை. தலமைப்போட்டியில் உமாமீது ஊர்மிளாவின் காதல் தொடர்பு பாவிக்கப்படுகிறபோது பாலா பிரபாகரன் சார்பு எடுப்பதன் காரணம் இதுதான்.

1979 ல் பிரபாகரனை முதலில் பாலா சந்திக்கிறபோது பிரபாகரனுக்கு இருந்த ஒரே மெடல் அவர் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்றது என்பதுதான். இது வலதுசாரி அமிர்தலிங்கம் ஏவி நடந்து கொண்டாடிய விருது. துரையப்பா மேட்டுக்குடி அங்கிலிக்கன்/மெதடிஸ்து வெள்ளாளன் என்றாலும் அவர் ஒடுக்கப்பட்ட தலித் யாழ்நகர மாந்தரின் விருப்பு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி என்பதை நன்கு அறிந்தவர்தான் பாலா.

வரலாற்றில் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையிலான ஒத்த உறவை தேடி ஆராய்ந்தபோது கிடைத்தது ஸ்ராலினுக்கும் போல்செவிக்குகளின் உளவுப்படையின் இரண்டாவது தலைவன் Vyacheslav Menzhinsky க்குமிடையிலான உறவுதான். ஸ்ராலின் மண்டையில் போடாத ஒரேயொரு உளவுப்படைத்தலைவனும் மென்சின்ஸிகிதான். பாலாவும் மென்சின்ஸிடகியைப்போல இயற்கை மரணமடைந்தவர். மென்ஸின்ஸிகியின் வரலாற்றைப்படித்தால் இவருக்கும் பாலாவுக்குமான பல ஒற்றுமைகள் புலப்படும். மனிதரைப்பற்றியும் தகவல்களைப்பற்றியும் மிகக் கறாரான மதிப்பீடுகளை செய்யக்கூடியவராக இருந்தமைதான் மென்சின்ஸ்கியின் மிகப்பெரிய பலம். இதுதான் பாலாவின் பலமும்.

(Vyacheslav Menzhinsky)
பாலசிங்கம் ஏறத்தாழ தன்னை ஒரு Tallyrand ஆகவும் பிரபாகரனை நெப்பொலியன் ஆகவும் உருவகித்து காய் நகர்த்தினார். இது அடிப்படையில் தப்பாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருந்தன. தப்பு எங்கு இருநததென்றால் வரலாற்றில் முறையாக இராணுவனாகப் படித்து வந்த புத்திஜீவித்தன்மைகள் கொண்ட நெப்போலியனையே Tallyrand சுத்தினார். ஈழச்சூழலில் படிக்காத பிரபாகரன் பிச்சைக்காரன் பாலாவை சுத்தினார். பிரபா பாலா முதல் சந்திப்பு நடக்க லண்டன் பாலா தம்பதியர் சென்னை வரும்போது சென்னையில் நல்ல ஓட்டலில் தங்க தாம் வசதியற்றிருந்ததை அடேல் அம்மையார் தன் விடுதலை வேட்கை புத்தகத்தில் பதிந்துள்ளார்.

(Tallyrand)
பிரபாகரனை மாற்றுவதற்குபதிலாக பிரபாகரன்தான் பாலாவை உருமாற்றினார். பிழைப்புக்காக ஒரு இடதுசாரி தத்துவ அறிஞர் வலதுசாரி பாசிஸ்ட் பிரபாகரனின் Theoretician ஆகவும் பேச்சாளராகவும் மாறினார். உண்மையில் பாலா புலிகளின் அறம்மிகு ஆலோசகர் என்பதைவிட ஒரு உளவுப்படைத்தலைவர் போலவே இருந்தார். கூட்டமைப்பை புலிகளின் ஊதுகுழலாக மாற்றிய திட்டத்தை வகுத்து அதனை உளவுப்படைத்தலைவர் பொட்டனிடம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது பாலாதான்.

பிரபாகரன் போராட்டத்தில் தனக்கு போட்டியாக வரக்கூடிய தன்னைவிட திறமையான நேர்மையான மற்ற இயக்கத்தலைவர்களை எவ்வாறு கொன்றாரோ அதேபோல அன்ரன் பாலசிங்கமும் புலிகள் இயக்கத்தில் தனது ஆலோசகர் என்ற பதவிக்கு போட்டியாக வரக்கூடியவர்களை கனகச்சிதமாக திட்டமிட்டு ஓரங்கட்டி அவர்களை கலைத்தார். பாலசிங்கம், பிரபாகரன் என்கிற இரண்டு அரக்கர்கள் ஒருவரையொருவர் இட்டுநிரப்பி வந்ததுதான் புலிகளின் பாசிசம்.

பிரபாகரன் இல்லாமல் பாலசிங்கமும் பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரனும் தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அரக்கர்களாக வந்திருக்கமுடியாது. பாலசிங்கம் தம்பதியர் பிரபாகரனை 1979, 1981 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்தியாவில் சந்தித்து சில மாதங்கள் பிரபாகரன் அணியோடு தங்கியிருந்தனர். இவ்விரு தடவைகளிலும் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் தன்னை ஒரு இட்டு நிரப்பமுடியாத ஆளுமையாக நிலைநிறுத்தமுடியவில்லை. ஆனால் 1983 திருநெல்வேலித்தாக்குதல்/ஜூலைக் கலவரங்கங்களையடுத்து வந்த நிகழ்வுகளை அடுத்து பாலசிங்கம் தான் புகுந்துவிளையாடவந்த தகுந்த சந்தர்ப்பத்தை மிகச்சாதுரியமாக பயன்படுத்தினார்.

1983 ஆகஸ்டில் சென்னைக்கு பாலசிங்கம் மனைவியோடு வருகிறபோது பிரபாகரன் ஈழத்தில் வன்னிக்காடுகளிலிருந்தார். 1982 சென்னையில் நடந்த பிரபாகரன், உமாமகேஸ்வரன் துப்பாக்கிச் சண்டையின் விளைவாக சென்னையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் நீதிமன்ற உத்தரவைமீறிச்சென்றுதான் 1983 திருநெல்வேலித்தாக்குதலை நடத்தியிருந்தார். அப்போது பிரபாகரன் ஒரு லோக்கல் மாபியாக்காரன் போலவே சிந்தித்து இயங்கினார். பிரபாகரன் ஒரு லோக்கல் மாபிக்காரனின் "றேஞ்சி"லேயே இக்காலத்தில் சிந்தித்தார். சீலனின் கொலைக்கு பழிவாங்க இலங்கை படையினர்மீது தாக்குதல் செய்யவேண்டும். புளட் செய்த ஆனைக்கோட்டை பொலிஸ்நிலய தாக்குதலைவிட பலமான தாக்குதல் செய்து மக்களுக்கு படங்காட்டவேண்டும். இந்தவகையில் சிந்தித்த பிரபாகரனுக்கு ஒரு தேசியப் போராட்டத்துக்கான தொலைநோக்கு, முறைதிறன் எதுவும் கிடையாது. ஆனால் வெறும் பழிவாங்கலாக செய்த திருநெல்வேலித்தாக்குதலின் விளைவுதான் 1983 இலக்கலவரமே.

இக்கலவரத்தின் பின் இந்திய அரசாங்கம் தமிழ்ப்போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியளித்து உதவ தீர்மானித்தது. போராளி இயக்கங்களை ஆயுதப்பயிற்சிக்கு ஒருங்கிணைக்கும் பொறுப்பு தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனிடம் வந்தது. ஒரு வழக்கறிஞரான அவர் இந்திய அரச பணித்துறையினரால் ஏற்கெனவே அறியப்பட்டவர். பிரபாகரன் உமாமகேஸ்வரன் துப்பாக்கிச்சண்டையின் பின் பிரபாகரன் தந்தை கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தியாவந்தவர். நிலமையை மத்திய மாநில அரசுகளிடம் புரியவைத்து அவர்கள் இருவரையும் இலங்கைக்கு நாடுகடத்தாமலிருக்க நடந்த முயற்சிகளில் சந்திரகாசனின் பங்களிப்பு பெரியது.

சந்திரஹாசன் 
இந்திய அரசாங்கத்திற்கு நன்றியின்றி நீதிமன்ற உத்தரவை மீறிச்சென்றவர் பிரபாகரன் என்பதால் பிரபாகரனின் புலிகளுக்கு ஆரம்பத்தில் பயிற்சி வழங்கப்படவில்லை. பிரபாகரனும் தான் தமிழகம் வந்தால் கைதுசெய்யப்படுவேன் என்று இந்தியப்பயிற்சி எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பிரபாகரன் ஒரு லோக்கல் மாபிக்காரனின் "றேஞ்சி"லேயே இக்காலத்தில் சிந்தித்தார். சீலனின் கொலைக்கு பழிவாங்க இலங்கை படையினர்மீது தாக்குதல் செய்வேண்டும். புளட் செய்த ஆனைக்கோட்டை பொலிஸ்நிலய தாக்குதலைவிட பலமான தாக்குதல் செய்து மக்களுக்கு படங்காட்டவேண்டும். இந்தவகையில் சிந்தித்த பிரபாகரனுக்கு ஒரு தேசியப் போராட்டத்துக்கான தொலைநோக்கு, முறைதிறன் எதுவும் கிடையாது.

பாலசிங்கமோ தான் பிரபாகரனை நெருங்க பிரபாகரன் தன்னை தவிர்க்க இயலாத ஆலோசகராக வைத்திருக்க இந்த வாய்பை பயன்படுத்தலாம் என்பதை அறிந்தார். பாலசிங்கம் ரோமன் கத்தோலிக்கர் அல்லாத யாழ்ப்பாண புறட்டஸ்தாந்து கிறிஸ்தவ புத்திஜீவித்துவ கல்விப்பாரப்பரியத்தில் காழ்ப்புணர்வு கொண்டிருந்தவர் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அந்தப்பாரம்பரியத்திலிருந்துவந்த சந்திரகாசன் மீதான வசைக்குற்றச்சாட்டு பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் இதே தகுந்த தருணம் என்றறிந்தார் பாலசிங்கம்.

கலாநிதி சபா ராஜேந்திரன்
 வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கலாநிதி சபா ராஜேந்திரன் என்கிற சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தவரும் புலிகளுக்கு இந்தியப்பயிற்சி வழங்குவதற்காக சந்திரகாசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ராஜேந்திரன் படித்தவர். பண்பானவர். அவர் யதார்த்தமாக சிந்தித்து சந்திரகாசன் மூலமாக புலிகள் பயிற்சி எடுக்கலாமென பாலசிங்கத்துக்கு அறிவுறுத்தினார். பாலசிங்கம் தனக்கு புலிகளில் தொழில் நிரந்தரமாக இருக்கவேண்டுமென்று வந்தவரல்லவா. ராஜேந்திரனைப்பற்றி அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் பரப்பி அவரை பிரபாகரனிடம் நெருங்கவிடாது ஓரங்கட்டினார்.

பின்னர் இந்திய உளவுத்துறையினருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பிரபாகரனையும் இந்தியாவுக்கு வருமாறு செய்தி அனுப்பினார் பாலசிங்கம். இந்தக்கட்டத்தில் பிரபாகரன் பாலசிங்கத்தின் ஆலோசனையைக்கேட்காது விட்டிருந்தால் புலிகள் மேலாதிக்கத்துக்கு வந்திருப்பது சிரமமானதாகியிருக்கும்.

இந்தியப்பயிற்சியை உடனடியாகவே ஏற்றது TELO இயக்கம்தான். இதனால்தான் சந்திரகாசன் TELO வுக்கு நெருக்கமானார். பாலசிங்கமோ TELO இந்திய உளவுப்படையால் வளர்க்கப்பட்டவர்கள் என்றுதொடங்கி இந்திய அரசின் கைக்கூலிகள் என்றதுவரை தனது பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார். உண்மைகளைத்திரித்து தனக்கும் தான் சார்ந்த இயக்கத்தின் நலனுக்குமாக மகாபுனைவான பிரச்சாரங்களை செய்வதில் பாலசிங்கத்து நிகர் யாருமில்லை. ஈழப்போராட்டத்தில் நடந்த அனைத்து படுகொலைகள், சிங்கள மக்கள் மீதான படுகொலைகளுக்குமான பழியை R&AW உளவுப்படையில் போடும் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. ஆதாரமற்ற உண்மையில்லாத இந்த பொய்ப்பிரச்சாரத்தின் மூலவர் பாலசிங்கம்தான். சந்திரகாசன் மீதான பாலசிங்கத்தின் காழ்ப்புணர்வும் பொய்ப்பிரச்சாரங்களும் பாலசிங்கம் எழுதிய நூல்களில் வெளிப்படையாகவே உள்ளன.

விடுதலை இயக்கங்களில் புலிகள் ஆரம்பத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில் மிகச்சிறிய இயக்கமாக இருந்தது. பிரபாகரன் குறுகிய நோக்கில் தன் கரையாரச்சாதியினரை சேர்ந்தவர்களையே பெருமளவில் சேர்த்தார். மிகப்பெரிய இயக்கமான புளட்டில் அதன் தலைவர் வெள்ளாளர் என்பதால் பல வெள்ளாளர் சேர்ந்தனர். ரெலோ இயக்கத்தில் அதன் ஆதி தலைவர்கள் கரையார்கள் என்பதால் கரையார ஆதிக்கம் இருந்தது. EPRLF, EROS இயக்கங்களில் இடதுசாரியப்பின்புலத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சனத்தொகையில் வெறும் 10 வீதமான கரையாரச்சாதிப்பின்புலத்திலிருந்து வந்த 9ம் வகுப்புவரை மட்டுமே படித்த பிரபாகரனின் புலிகள் பிரபாகரனின் திறமையால் மட்டும் மற்ற இயக்கங்களை அழித்து ஏகபோக பாசிஸ்டுகளாக வரவில்லை. புலிகள் மேலோங்கியதற்கு பாதிக்காரணந்தான் பிரபாகரன். மீதிக்காரணம் பாலசிங்கம்.

புலிகள் மேலாதிக்கத்துக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கப்பால் சர்வதேச சந்தையில் சுயாதீனமாக ஆயுதக்கொள்வனவு செய்து அதனை வெற்றிகரமாக தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தமைதான். இதற்குரிய பணத்தை புலிகள் பெறுவதற்கும் அப்போதைய தமிழக முதலமைச்சர் MGR இன் செல்லப்பிள்ளை இயக்கமாக புலிகள் வருவதற்கும் காரணமாக இருந்தவர் பாலசிங்கம்தான். பாலசிங்கம் மிகத்திறமையாக சீட்டு விளையாடக்கூடியவர். நல்ல சீட்டு விளையாட்டுக்காரன்தான் நல்ல ராஜதந்திரியாக வரமுடியும் என்பது உண்மை.

TELO, PLOTE முதலிய இயக்கங்கள் இந்திய வெளிவிவகாரக்கொள்கை இந்திய மத்திய அரசின் கையிலிருப்பதால் புது தில்லிக்கு நெருக்கமாக இருக்கவே வேலைசெய்தன. இவ்வியக்கங்கள் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தில் வலுவை குறைத்து மதிப்பிட்டன. தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் மத்திய அரசின் பங்காளியாக இருக்கக்கூடிய ஒருவரின் முடிவே இந்திய மத்திய அரசின் முடிவில் தாக்கம் செலுத்தும் என்பதை இவை கணிக்க தவறின. பாலசிங்கம் அதனை கனகச்சிதமாக கணித்தார். பாலசிங்கத்தால் புது தில்லியை நெருங்கமுடியவில்லை என்பதும் உண்மை. 83 இறுதிப்பகுதியில் ஒருநாள் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் கருணாநிதி எல்லா இயக்கங்களையும் வந்து பணம்பெற்றுக்கொள்ள அறிவித்தார். பணத்தொகை மிகச்சிறியதுதான். புலிகளும் புளட் இயக்கமும் இந்தப்பணத்தைப் பெறச்செல்லவில்லை. இதனை புலிகள் முதலமைச்சர் MGR ஐ நெருங்கும் வாய்ப்பாக பாலசிங்கம் பயன்படுத்தினார். அவர் எதிர்பார்த்தபடியே MGR இடமிருந்து அழைப்புவந்தது. பாலசிங்கம் புலிகளின் குழுவுக்கு தலமைதாங்கிச்சென்று புலிகளை MGR ன் செல்லப்பிள்ளையாக்குமளவுக்கு புளட் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தமது சொந்த உறுப்பினர்களையே சித்திரவதை செய்பவர்கள் என்று "கதை" சொல்லி( இதில் உண்மை இருந்தாலும் புலிகளும் தமிழ்நாட்டில் தம் சொந்த உறுப்பினர்களை சித்திரவதை/கொலை செய்தனர்) அவரிடமிருந்து கோடிக்கணக்கான இந்தியப்பணம் பெற வழிசெய்தார். பாலசிங்கம் மனிதர்களை அவர்களின் பலம் பலவீனம் பயம் ஆசாபாசம் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை மிகக்கறாராக மதிப்பிடக்கூடிய விண்ணன். அக்காலத்தில் MGR பாரிசவாதத்தால் பாதிகாகப்பட்டு இருந்தவர். அவர் பேசும்போது வாயால் வீணி வழியும். தன்னைமீறி கலைஞர் ஈழவிடுதலை இயக்கங்களை தன் செல்லப்பிள்ளைகளாக்குகிறார் என்பதே MGR ன் பயமும் கோபமும். இவற்றுக்கெல்லாம் கனகச்சிதமாக MGR க்கு தீனிபோட்டார் பாலா. துரும்பை அடித்தார் பாலா. பாலா உங்களின் சாதாரணமான Mortgage Broker அல்ல. அவர் "போராட்டத்தை" ஈடு வைத்து கடன் பெற்றுக்கொடுக்கும் Super Mortgage Broker.(பிரேமதாசாவிடம் பின்னாட்களில் பணமும் ஆயுதங்களும் கடனாக வாங்கியவரல்லவா பாலா) மயங்கிய MGR 4 கோடி முற்கட்டமாக கொடுக்க முன்வந்தார். இந்த பணத்தில்தான் புலிகள் சர்வதேச சந்தையில் சுயாதீனமாக இந்தியாவிடமிருந்துபெற்ற ஆயுதங்களைவிடச் சக்திவாய்ந்த(Fire Power) ஆயுதங்களை கொள்வனவு செய்தார்கள். MGR ன் கிருபையால் இந்த ஆயுதங்களை தமிழக துறைமுகத்துக்கும் கொண்டுவந்து சேர்த்தார்கள். இந்த ஆயுத பலத்தால்தான் TELO, PLOTE, EPRLF ஆகிய இயங்கங்களை அழித்து மேலாதிக்கம் எடுத்தார்கள்.( இதே காலத்தில் புளட் சர்வதேச ஆயுத சந்தையில் ஆயுதம் கொள்வனவுசெய்து தமிழக துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்த்தபோதும் தமிழக அரசின் ஆதரவின்பையால் கைக்கெட்டியதை வாய்க்கெட்ட வைக்க புளட் இனால் முடியவில்லை.)

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுக்கள். ரெலோ இத்திய றோவின் சீடர்கள் என்று. ரெலோவை யாழ்ப்பாணத்தில் அழித்து புவிகள் சனனதமாடியபோது பிரபாகரன் இந்தியாவில்தானே இருந்தார். றோவின் சீடர்களான ரெலோவை அழித்த புலிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதா?

உருளைக்கிழங்கும் மார்க்சிசமும் யாழில் விழையாது என்று சொன்ன சிவநாயகம்
 S.சிவநாயகம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த Saturday Review ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர். இலங்கையின் முன்னணி ஆங்கிலப்பத்திரிகைகளில் பத்திரிகையாளராக இருந்தவர். தன் பல்கலைக்கழகப்படிப்பையும் சட்டப்படிப்பையும் நிறைவுசெய்யாதவராக இருந்தாலும் மிகத்திறமையான ஆங்கிலப்பத்திரிகையாளர் என்று பெயரெடுத்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் படித்துவந்த இவர் அன்ரன் பாலசிங்கம் காழ்ப்புகொண்டிருந்த அசல் யாழ்ப்பாண புறஸ்டஸ்தாந்து கல்விநிறுவனப்பாரம்பரியங்களிலிருந்து வந்தவர். 1983ல் Saturday Review ஜெயவர்த்தன அரசால் தடைசெய்யப்பட்டதால் இவர் உயிருக்குப்பயந்து புலிகளின் படகில் தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்றார். சிவநாயகம் தனது தொழிலுக்கு ஆப்புவைத்துவிடுவாரோ என அஞ்சிய பாலசிங்கம் தமிழகத்தில் இவரை அழைத்து சந்தித்தார். புலிகளிடம் இணைந்து வேலைசெய்யலாமே என நாசூக்காக கேட்டார். இது பாலசிங்கத்தின் ராசதந்திரம். இந்தக்கேள்விமூலம் சிவநாயகத்தின் நோக்கங்களை அறிவது. சிவநாயகம் மாத்தையா போன்ற வேறு புலித்தலைவர்கள் மூலம் உள்ளே வருவதைவிட தன்மூலம் உள்ளே வந்தால் தன்னால் கட்டுப்படுத்தக்கூடியவராகவும் ஓரங்கட்டக்கூடியவராகவும் இருப்பார் என்பவையே பாலசிங்கத்தின் தந்திரங்கள். சிவநாயகம் இக்கட்டத்தில் புலிகளில் இணைவதை விரும்பவில்லை. ஆனால் மாத்தையா, சங்கர், திலகர் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். சிவநாயகம் தனது முதலாளியான TRO கந்தசாமியின் தமிழர் தகவல் மையத்தில் இக்காலத்தில் பொறுப்பாளராயிருந்தார். பிறகு இல.இந்திய ஒப்பந்த காலத்தில் R&AW informer ஆகவும் ஆலோசகராகவும் இருந்து பின் கந்தசாமியை புலிகளுக்காக EROS கொன்றபின் 90களில் பிழைப்புக்காக புலிகளின் அடிமை பத்திரிகையாளரானார்.

நிர்மலா, நித்தியானந்தன் தம்பதியர்கள் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே புலிகளின் ஆதரவாளர்களாக இருந்து உதவிசெய்தவர்கள். காயப்பட்ட புலிப்போராளிகளை தமது வீட்டில் வைத்து சிகிச்சை அளித்ததற்காக கைது செய்யப்பட்டு பின் 83 ன் பின் சிறைமீட்கப்பட்டு இந்தியாசென்று புலிகளோடு இணைந்தவர்கள். இதில் நிர்மலா பாலசிங்கம் காழ்ப்புகொண்டிருந்த யாழ்ப்பாண பறட்டஸ்தாந்து மேட்டுக்குடி கல்விப்பாரம்பரியத்திலிருந்து வந்தவர். குறித்த மேட்டுக்குடி செல்வாக்கு/சலுகை காரணமாக 18 வயதிலேயே அமெரிக்காவுக்கு புலமைப்பரிசில் பெற்றுச்சென்று பின் ஊர்திரும்பி யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில போதனாசிரியராக கடமையாற்ற அவர் கணவரான நித்தியானந்தன் அங்கு பொருளியல் விரிவுரையாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தவர். 31 வயதில் தன் இளமையின் உச்சத்தில் இருந்ததுடிப்பான பெண் நிர்மலாவுக்கென்றே தனிப்பட்ட ஒரு சிறையுடைப்பை புலிகள் செய்து அவர் மீட்கப்பட்டதால் நிர்மலா ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ஒரு வீராங்கனையாக இருந்தார். இந்த அலையைப்பாவித்து பாலு மகேந்திராவும் நிர்மலாவின் சிறையுடைப்பை வைத்து ஒரு படம் எடுக்க முயன்றார். நிர்மலா நித்தியானந்தன் தம்பதியரின் தனிப்பட்ட வாழ்வும் அவர்களது அரசியல் வாழ்வும் மிகச்சிக்கலான நிலையிலிருந்த காலம். இந்திய வம்சாவழி மேட்டுக்குடி கங்காணி பின்புலத்திலிருந்துவந்த மொட்டை வெள்ளாளரான நித்தியானந்தன் வசீகரமானவர்(Charismatic). ஆனால் நிர்மலாவிடமிருந்த துடிமதிநுட்பம்(Acumen) நித்தியானந்தனிடம் கிடையாது. தம்பதியர்களைவிட பாலசிங்கம் வயசிலும் துடிமதிநுட்பத்திலும் உற்சாகத்திலும் பலபடிகள் மேலே. இடதுசாரிகளாய் அரசியலில் இருந்த நிர்மலா தம்பதிகளும் இடதுசாரியான பாலசிங்கத்தைப்போல வலதுசாரி புலிகளில் சேர்ந்தது அதிசயம். நிர்மலாவும் அவர் காரணமாக நித்தியானந்தனும் பிரபாகரனோடு முரண்படத்தொடங்கியதற்கு தம்பதிகள் எதிர்பார்த்த பொறுப்பான பதவி தமக்கு வழங்கப்படாமையா அல்லது கொள்கைகளா காரணம் என்பது விரிவான ஆய்வுக்குரியது. நிர்மலா பாலசிங்கத்தைப்போல பொறுமையாக தன் வாய்ப்புக்களையும் பலத்தையும் கனகச்சிதமாக மதிப்பிட்டு காய் நகர்த்த தெரியாதவர். வெளிப்படையாக பேசி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று போட்டு உடைக்கக்கூடியவர். இதற்கிடையில் பிரபாகரனின் விசுவாசியாக நீண்டகாலம் இருந்த இராகவனுக்கும்(சிவகுமார்) விரிசல் ஏற்படுகிறது. அதுவரையில் இடதுசாரியாக இல்லாமல் சீர்திருத்தவாதியாக இருந்த இராகவன் பிரபாகரனின் தன்னிச்சையான சர்வாதிகார மானுடவிரோத போக்குகளை எதிர்க்கிறார். இங்கு தம்பதியர்கள் எவ்வளவு ராகவனால் தூண்டப்பட்டார்கள்? ராகவன் எவ்வளவு தம்பதியர்களால் தூண்டப்பட்டார் என்பது ஆய்வுக்குரியது. நிர்மலா, நித்தியானந்தன், ராகவன் முதலியோர் ஏன் புலிகள் அழிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் தமது புலிகள் கால அனுபவங்களை புத்தகமாக எழுதாமல் தவிர்த்து வருகிறார்கள் என்பது பலரின் கேள்வி. பாலசிங்கம் தான் காழ்ப்புக்கொண்டிருந்த பறட்டஸ்தாந்து மேட்டுக்குடி பின்னணியில் வந்திருந்த நிர்மலாவையிட்டு பயந்தார். அவரது தொழிலுக்கு ஆப்பு நிர்மலா மையத்திலிருந்து வருகிறது. நிர்மலா தம்பதியர்கள் மட்டுமல்ல. ஏற்கெனவே பிரபாகரன் மீதான தன் அதிருப்தியை தனக்கு கடிதமாக எழுதிய ராகவன் தம்பதியர்களோடு சேர்ந்துவிட்டார். பாலசிங்கத்தால் முடியாததும் நிர்மலாவால் முடியும். பிரபாகரனைவிட ஓரிருவயது மூத்த நிர்மலா ஒரு பெண். பிரபாகரன் திருமணமாகாத இளைஞன். பாலசிங்கம் பயந்தது வேறு ருபத்தில் வந்தது. பிரபாகரனைவிட இளமையான ராகவனுடன் நித்தியானந்தனை விட்டு விலகி நிர்மலா சேர்ந்து வாழ்வது வரலாறானது. தம்பதியரின் குடும்பவாழ்வில் வந்ந ரென்சன்களுக்கு எந்தளவு தனது தனிப்பட்ட நலன்களுக்காக பாலசிங்கம் எண்ணெய் ஊற்றினார் என்பது முறையான தொழில்சார் Biography எழுத்தரின் ஆய்வுக்குரியது. ஏனெனில் தன் இறப்புவரை நித்தியானந்தனுடன் பாலசிங்கம் நட்பு பேணினார். தான் இலண்டனில் சாகமுதல் சந்திக்கவேண்டியவர்களில் பட்டியலில் நித்தியானந்தனின் பெயர் இருந்தது.

பாலா manuscript editing செய்த முக்கோண காதல் கதை?
 பிரச்சனை நிர்மலாவுக்கும் பாலசிங்கத்துக்குமிடையில் முத்தியது. ஆங்கிலம் மட்டுமே பேசந்தெரிந்த அடேல் பாலசிஙாகத்துக்கும் சிறைமீட்கப்பட்டு வந்த நிர்மலாவுக்குமிடையில் பெண்கள் என்பதாலும் மொழியாலும் ஆரம்பத்தில் புரிந்துணர்வு இருந்தது. ஆனால் நிர்மலாவும் அடேலும் வேறுவேறு வர்க்கப்பின்னணியிலிருந்து வந்தவர். நிர்மலா யாழ் மத்தியதர மேட்டுக்குடி உயர்வர்க்கத்திலிருந்து வந்தவர். தன் 18 வயதிலேயே அமெரிக்காவுக்கு ஒரு புலமைப்பரிசிலை பெற்றுச்செல்லும் செல்வாக்கு நிர்மலாவுக்கு இருந்தது. வெள்ளை ஆஸ்திரேலியப்பெண்மணி என்றாலும் நிர்மலாவைவிட 2/3 வயது கூடிய அடேல் ஒஸ்றேலியாவிலேயே பல்கலைக்கழகம் சென்று படிக்க வசதியற்ற குடும்பத்திலிருந்து வந்தவர்.(அடேல் 1950 ல் பிறந்தவர். ஒஸ்றேலியாவின் முதல் சோசலிஸ பிரதமர் விற்லம் 1974 ல் கல்வியை இலவசமாக்குவதுவரை ஏழைகளுக்கு பல்கலைக்கழகம் போகும் வாய்ப்பிருக்கவில்லை) ஏழை கிராமத்து பெண் அடேல் மருத்துவ மாதுவாக லண்டன் சீமை போயே பாலசிங்கத்தை சந்திக்கிறார். நிர்மலா பேசிய ஆங்கிலம் அடேலுக்கு புரியும். நிர்மலாவின் அரசியல் புரியாது. அடேல் ஒரு விசுவாசமான மனைவியாகவும் ஒற்றராகவும் நிர்மலா பேசியதை கணவரிடம் கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார். இதனுடைய விளைவாக நிர்மலா வழியாக ரஜினி திராணகமவிடம் சென்ற அடேல் அப்பாவி பற்றிய விபரணம் முறிந்த பனை நூலில் உள்ளது. பாலசிங்கம் இதைப்படித்து பெருஞ்சினம் கொண்டு தீட்டியதுதான் ராஜினி திராணகம கொலை. உண்மையில் ராஜனி திரணகமவின் கொலைக்கு திட்டம் வகுத்து அதை செயற்படுத்த தூண்டியது பாலசிங்கம். இந்த தொடரின் மூன்றாவது பகுதியின் தலைப்பு: "பாலசிங்கம்; ராஜனி திராணகம கொலையின் சிற்பி" என்ற தலைப்பில் வரும். வெள்ளை கிராமத்து பெண்ணை எப்படி கையாளுவது என்பது நிர்மலாவுக்கு தெரியாதது. பாலசிங்கம் நிர்மலாவை ஒரங்கட்டும் தனது கேம் பிளானை கனகச்சிதமாக வடிவமைத்தார்.

1, நிர்மலாவை தனிமைப்படுத்துவது.

2. இதற்கு உவப்பாக நித்தியானந்தன், அடேல், ராகவன் ஆகியோரை முடிந்தவரை தன் உளவாளிகளாக பயன்படுத்துவது.

இதற்கமைய தானும் நிர்மலாவின் விமர்சனங்களை ஏற்று புலிகளை விட்டு விலக தயாராக இருப்பதாக நாடகம் ஆடினார்( பார்க்க Palmyrah Fallen by Rajan Hoole) நிர்மலாவும் தன்னை நம்புமளவுக்கு சீன் போட்டார் பாலா. எல்லாவற்றையும் விசுவாசமான ஒற்றர் படைத்தலைவன் போல பிரபாகரனிடம் ஒப்புவித்தார். பாலசிங்கம் ஒருபோதும் தன் பிரபாகரனின் "ஆலோசகர்" பதவியைவிட்டு வெளியேற தயாராக இருக்கவில்லை..

பாலாவின் திறமுறை வென்றது. நிர்மலா வெளியேறவேண்டிய கட்டாயம். தம்பதியரின் உறவுச்சிக்கலும் பாலசிங்கத்தின் டிசைன். ராகவனும் வெளியேற பாலசிங்கம் அடையாறு ஷொக்கேசனில் அரிய சிங்கிள்மோல்ற் ஸ்கொச் விஸ்கியும் சுருட்டும் நிலவிரவில் அனுபவித்து கொண்டாடினார்.

பாலசிங்கம் ஆசாபாசம், அதிகார ஆசை போட்டி பொறாமை கொண்டவர் என்பதற்கு இன்னொரு உதாரணம் பாரிஸ் இலிருந்து பின்னாட்களில் சர்வதேசப்பொறுப்பாளர் திலகரின் ஆளாக இருந்து Hotspring என்கிற புலிகளின் ஆங்கில பிரச்சார மாத சஞ்சிகையை வெளியிட்டுவந்த S.சிவநாயகத்தை இரண்டாம் தடவையாகவும் ஓரங்கட்டியது. 1983ன் பிற்பகுதியில் முதல்தடவையாக ஓரங்கட்டியது இக்கட்டுரையின் முற்பகுதியிலுள்ளது. 1996 ன் இறுதிப்பகுதியில் பாரிஸ் இல் ஈழமுரசு ஆசிரியர் நாதன் என்பவரையும் கஜன் என்பவரையும் புலிகளே கொன்று பழியை இலங்கை அரசாங்கத்தில் போட்டார்கள். இது புலிகளின் பெரிய நாடகமொன்றின் காட்சிகள். பிரபாகரன் போன்ற பாசிச சர்வாதிகள் தம் அதிகாரத்தை தக்க பயன்படுத்தும் பொறிமுறைகள் தமது கீழ்மட்ட தளபதி/பொறுப்பாளர்களை

1. பிரித்தாளும் தந்திரம்

2. அவர்களுக்குள் போட்டி பொறாமைப்படுவதை ஊக்குவிப்பது

இதனால் ஒவ்வொரு தளபதி/பொறுப்பாளர்கள் பற்றிய தகவல்கள் மற்ற தளபதி/பொறுப்பாளர்கள் வழி பிரபாகரனைச் சென்று சேரும்.

இந்த தகவல்களை பிரபாகரன் தன் மதிநுட்பம், பயங்கள் என்பவற்றுக்கேற்பவோ பாலசிங்கத்தின் ஆலோசனைக்கேற்பவோ மதிப்பிட்டு பதவி மாற்றங்களில் முடிவு செய்வார். இதன்படி சர்வதேச பொறுப்பாளர் திலகர், சர்வதேச ஆயுத முகவர் KP ஆகியோர் பதவிவிலக்கப்பட்டு காஸ்ரோ சர்வதேசப்பொறுப்பாளராக எடுக்கப்பட்ட முடிவை செயற்படுத்த பணிய மறுக்கும் ஒரு தளபதிக்கு(KP) சேதி சொல்ல செய்யப்பட்ட கொலைகள்தான் நாதன், கஜன் கொலைகள். இதையடுத்து திலகர் வன்னிக்கு அழைக்கப்பட்டார். திலகரின் சுவிஸ் வலது கரமான நடராஜா முரளிதரன் பதவியிழந்து கனடாவுக்கு ஓடி தஞ்சம் கோருகிறார். KP குமரன் பத்மநாதன் வன்னிக்கு போகமறுத்து/பயந்து தென்கிழக்காசியாவிலேயே தனித்து போகிறார்.

1999 ல் நோய் முற்றிய பாலசிங்கத்தை புலிகள் கடற்கரும்புலிகள் அணி புடைசூழ முல்லைத்தீவிலிருந்து தாய்லாந்து வழியாக லண்டனுக்கு அனுப்புகிறார்கள். நோய் தேறியதும் பாலசிங்கம் செய்த காரியங்களிலொன்று S.சிவநாயகத்தை தன் வீடடுக்கழைத்து உரையாடியது. திலகர் ஓரங்கட்டப்பட்டபின் Hot Spring பதிப்பிக்கப்படுவது புலிகளால் தடுக்கப்படுகிறது. சிவநாயகம் இதனை பாலசிங்கத்திடம் முறையிட்டு உதவி கேட்கிறார். பிரபாகரனோடு சேர்ந்து பாலசிங்கம் எழுதிய நாடகமல்லவா.(90 களின் ஆரம்பத்தில் பிரபாகரனோடு முரண்பட்ட மாத்தையா படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு கடைசியில் பொய்க்குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஆபத்தை உணர்ந்து கடைசிநேரத்தில் மாத்தையா தனக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில் பாலசிங்கம் வீட்டில் வந்து அங்கு உண்ணாவிரதமிருக்க அனுமதி கேட்டார். பாலசிங்கம் அறவான் அல்லவே. மாத்தையாவையும் அவர் மெய்பாதுகாவலர் அணியையும் நாசூக்காக பேசி கலைத்துவிட்டார். புலிகளில் எக்காலத்திலும் ஒரு மாறிலி ஆக ஊக்கி(catalyst) ஆக இருந்த தன்னோடு கேம் கேட்ட மாத்தையாவினதும் பின்னாளில் திலகரதும் சீடனாக இருந்த சிவநாயகம் இப்போது தன்னிடம் உதவி கேட்கிறார். சிவநாயகம் அன்றிரவு அடேல் சமைத்த உணவைப்புசிக்கும்போது அவர் கை கிறுக்க அரித்த ஒரே வசனம்

"Balasingham is a sadist". 
சிவநாயகம் ஒரு கிறுக்கனும் கூட. நித்திய புகையிலை பிரியன். பாலசிங்கம், வரதராஜப்பெருமாள் ஆகிய பெரும் சுருட்டுக்காரர்களுடன் புகைத்து அனுபவித்து கான்சர் வந்து செத்துப்போன அற்புதமான பத்திரிகையாளர். தன்னை புலிகளுக்கு விற்றுப் பிழைத்தாலும் நமக்கு அற்புதமான இரண்டு நூல்களை தந்து போயிருக்கிறார். அவரது இரண்டாவது நூலை புலிசார்பாளர்கள்தான் வெளியிட்டதால் பாலசிங்கம் தனக்கு இரு தடவை முதுகில் குத்தியதை வெளிப்படையாக அவரால் சொல்லமுடியவில்லை. வரதராஜப்பெருமாள் மீது சேறடித்த அவரால் EPRLF பத்மநாபா மீது சேறடிக்க முடியவில்லை. புலிகள் வெளியிட்ட புத்தகத்திலேயே பத்மநாபாவுக்கு "நேர்மையான மகத்தான புரட்சியாளன்" அவர் கொடுத்த சான்று சாகும்போது கொஞ்ச நஞ்ச உண்மையோடு செத்தார் என்பதற்கான ஆதாரம்.

Read more...

Tuesday, September 21, 2021

ராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் 32 வருடங்கள் நிறைவு!

பாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்:
„ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுதாக இருக்காது. எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்"

என தன்னுடைய மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு எம் தேசத்து மக்களின் விடிவுக்காக போராடினார். அடங்காப்பற்றுடன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடய அந்த தீர்க்கதரிசி புலிகளின் அழிவு எவ்வாறு அமையும் என்பதனை முற்கூட்டியே தனது முறிந்த பனை என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதி வைத்தவர்.

'புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரசியற் பார்வை இன்மை, சகிப்புத் தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே, அவர்களின் உடைவுக்கு, இறுதிக் காரணமாக அமையப் போகிறது.

புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும், அதன் மேலாதிக்கக் கருத்தியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான ஒரு புதிய பார்வை பிறக்க முடியும்.'


ராஜனி திரணகம அவர்கள் கொல்லப்பட்டு 16 வருடங்களின் பின்னர் அவரது மாணவன் ஒருவனால் அன்னாரது கொலையின் சில முடிச்சுக்கள் அவிழ்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் 21 - 09 - 2005 வெளியாகிய கட்டுரை இவ்வாறு தெரிவித்திருந்தது. வரலாற்றில் மறக்கமுடியாத அந்த மாமேதையின் 30 ஆண்டு நிறைவில் அக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிப்போம்-

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.

அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.

எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

-- ஆண்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்-

(1989ம் இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை 21 - 09 - 2005)




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com