Sunday, November 20, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics): பகுதி – 2 அ. வரதராஜா பெருமாள்

மக்களை தாமாகவே மூச்சடக்கி வாழ நாசூக்காக பழக்கி விட்டார்.

5. இருப்பதையும் கிடைப்பதையும் வைத்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என பரந்துபட்ட பொதுமக்கள் அவர்களாகவே இதுதான் விதியென ஏற்றுகொண்டு மூச்சுக் காட்டாமல் சீவிக்கும் நிலைமைக்கு பொது மக்களை கொண்டு போய் நிறுத்தியுள்ள சாதனையை ஜனாதிபதி ரணிலின் ஆட்சி படிப்படியாக, வெற்றிகரமாக சாதித்துள்ளது.

கொரோணா காரணமாக அடுத்தடுத்து அமுலாக்கப்பட்ட ஊரடங்குகள், போக்குவரத்துத் தடைகள், கொரோணாப் பரவல் தொடர்பாக மக்களிடையே நிலவிய அச்சங்கள் என்பன காரணமாக 2020ம் ஆண்டே மக்கள் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே தம்மை பழக்கப்படுத்திக் கொண்டனர், மேலும்,

(1) இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் நாடு முழுவதுவும் இரவு பகலென்றில்லாது நாட்கணக்கணக்கில் கியூ வரிசைகளில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமை, இவற்றால் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு மூன்று மடங்கு என திடீரென உயர்ந்தமை,

(2) உற்பத்திகளின் வீழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்ட வேலையின்மைகளால் மக்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,

(3) மக்கள் பொருட்களை வாங்குகின்ற பொருளாதார சக்தி தொடர்பில் மக்களின் வருமானத்தினுடைய மெய்யான பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என எல்லாம் சேர்ந்து இப்போதைக்கு மிக அத்தியாவசியமான பொருட்களைத் தவிர ஏனையவற்றை வாங்குவதை மக்கள் தாமாகவே குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் இதனை இப்போது தமது வாழ்க்கையின் இயல்பான ஒரு விடயமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

அதன் மூலம், 200க்கு மேற்பட்ட வகையான பல்லாயிரக் கணக்கான பொருட்களுக்கு ஜனாதிபதி தடை விதித்த போதிலும், மிக அத்தியாவசியமான பொருட்களின், இறக்குமதியை அரைவாசியாக்கியுள்ள போதிலும், அவற்றின் விளைவாக வேலையில்லாமைகள் அதிகரித்திருக்கின்ற போதிலும், முன்னர் 100 ரூபாவுக்கு வாங்கிய பொருட்களை ,இப்போது 250 அல்லது 300 ரூபா கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், இதனால் அரசாங்கத்தைக் குறித்து பரந்துபட்ட மக்கள் மத்தியில் உள்ளுர ஆத்திரமும் வெறுப்பும், விரக்தியும் நிலவுகிற போதிலும், இவையெதுவும் அரசுக்கெதிரான எழுச்சியாக மாறி விடாத ஒரு நிலைமையைப் பராமரிப்பதில் ஜனாதிபதி ரணில் ஒரு சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

– ‘கிடைத்தால் முயல் போனால் எறிந்த கற்கள் தானே’

6. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்த கடனுதவி கிடைப்பது இந்த ஆண்டுக்குள் சாத்தியமாகாது என ஏற்கனவே நாடுகளின் பொருளாதாரம் தெரிந்தவர்கள் கூறி விட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் அதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். அவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடாதது மிகவும் பிழையானது என கோத்தாபய ஜனாதிபதியாக ,இருந்த போது குற்றம் சாட்டியோர் பலர். இந்தியா, யப்பான் மற்றும் மேலைத் தேச நாடுகளும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவும் தாம் தொடர்ந்து ,இலங்கைக்கு உதவி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முதலில் சர்வ தேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற வேண்டும் என வலியுறுத்தின.

ரணில் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் அடிக்கடி கடன் வாங்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கிற நவதாராளவாதியே. இப்போது அதனிடம் போகவில்லை எல்லாருமாகச் சேர்ந்து தன்னைப் போக வைத்துவிட்டார்கள் என்பது போல அந்த நிதியத்துடன் ஊடாடுகிறார்.

கடன் கிடைத்தால் அது அவரது சாதனையாகும், கிடைக்கவில்லையென்றால் அதற்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார்.

இந்தா கடன் வரப் போகிறது…. பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்து விட்டன: அடுத்த மாதத்துக்குள் கிடைக்கும்: இந்த வருடத்துக்குள் கிடைக்கும் என காலத்தை மிகக் கெட்டித் தனமாகவே கடத்தி தனது ஆட்சிக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சற்றுக் காலம் தாழ்த்தித் தன்னும் அந்த நிதியம் உதவி தந்தாலும் அந்தத் தொகை அரசின் தேவைக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ போட்ட மாதிரியே இருக்கும். ஆனாலும் அவர் உலக நாடுகளிடமிருந்தும், உலக நிறுவனங்களிடமிருந்தும் சளைக்காமல் முயற்சிக்கிறார். நாடுகளெல்லாம் தன்னை அடுத்தடுத்து அழைக்கின்றன என்பது போல நாடு நாடாக தொடர் பயணங்களை மேற் கொள்கிறார். நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்படுத்த நமது ஜனாதிபதி எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என மக்கள் கருதும் வகையாக செயற்பட்டு மக்கள் மத்தியில் ஓர் அனுதாப அலையையும் ஏற்படுத்துகிறார். இது அவருக்கு அடுத்த தேர்தலுக்கு நன்கு பயன்படும்.

காற்றைக் கையால் பிடித்து போத்தலில் அடைத்து விற்கிறார் 7. இந்த ஆண்டு கிடைத்த வெளிநாட்டு உதவிகளெல்லாம் பெரும்பாலும் கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது கிடைத்தவையும் அவர் காலத்தில் தரப்படுவதாக உறுதி செய்யப்பட்டவையுமே.

ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆகிய பின்னர் மருந்துக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், உரத்துக்குமென அவ்வப்போது சில நாடுகள் வழங்கும் சிறுசிறு உதவிகளைத் தவிர குறிப்பிடத்தக்க எந்த உதவியும் இன்னமும் எந்தவொரு நாட்டிடமிருந்தோ அல்லது எந்தவொரு சர்வதேச நிறுவனத்திடமிருந்தோ கிடைக்கவில்லை.

கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதே வெளிநாடுகளுக்கான கடன்கள் தொடர்பில் இலங்கை தன்னைத் தானே வங்கிரோத்து நாடு என அறிவித்துக் கொண்டது. ஆனால், வெளிநாடுகளுக்கான மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கடன்களில் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான அந்நியச் செலாவணி தொடர்பான சுமையிலிருந்து தப்பித்திருக்கும் வாய்ப்பாக ஜனாதிபதி ரணில் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லையென்றால் இவர் 2015க்கும் 2019க்கும் இடையில் ஆட்சியில் இருந்த போது அம்பாந்தோட்டையில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பையும், கொழும்பில் கடலை நிரப்பி நிலமாக்கியதில் அரைவாசி நிலப்பரப்பையும் சீனாவுக்கு எழுதிக் கொடுத்த மாதிரி இந்நேரம் இவர் இலங்கையில் இன்னும் பல இடங்களை நாடுகளின் கடனுக்குப் பதிலாக எழுதிக் கொடுத்திருப்பார்.

இப்போதைக்கு ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்கும் இடையில் ஏற்படுகின்ற பாதகமான வர்த்தக நிலுவையை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்கும் ஒரு காட்சியைப் படமாக்குவது மட்டுமே தன் வேலை என பதட்டமின்றி செயற்படுகிறார்.

போராட்டங்களில்லாத நாடே முன்னேறுமாம் 8. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அதற்காக அரசாங்கம் மிகவும் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என அமைச்சர்களும், அரச உயர் அதிகாரிகளும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

அதேவேளை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலேயே – மேற்கொள்ள நிதி எதுவும் இல்லாமலேயே அவ்வப்போது தங்கள் தங்கள் அமைச்சுக்கு உட்பட்ட விடயங்களில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் அறிக்கை விடுகிறார்கள்.

அறகலய போன்ற போராட்டங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் போராட்டங்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் அதன் விளைவாக ஏற்படும் அரசியல் உறுதியின்மையின் காரணமாக நாடுகளோ சர்வதேச நிறுவனங்களோ இலங்கைக்கு உதவமாட்டா எனவும் பிரச்சாரங்கள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடைந்து விடுமோ என ஓர் அச்ச மனோநிலையை மக்கள் மத்தியில் வளர்த்து விடுகின்ற கடமை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிகிறது.

ஏதோ அறகலயக்காரர்களினதும் தொழிற் சங்கங்களினதும் போராட்டங்களால்த்தான் நாடு இன்றைய அளவுக்கு குட்டிச் சுவராகப் போனது என அரச பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கின்றன.

உண்மையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளமெதுவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு உரிய விதமாக உயர்த்தப்படவில்லை. சம்பளங்களின் மெய்யான பெறுமதி 200 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்து விட்டது. தனியார் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் நிலைமையும் அதுவே.

பெரும் நிறுவனங்கள் அனைத்தும் கொரோணா தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை முன்னரை விட அதிகமாகவே லாபம் சம்பாதிப்பதை அந்த நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளே குறிப்பிடுகின்றன.

ஆனால் அவ்வாறான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. அதேவேளை ரணில் அவர்களின் ஆட்சியில் இதுவரை எந்தவொரு போராட்டமும் அரச ஊழியர்கள் பக்கத்திலிருந்து எழவில்லை.

அவ்வாறு எதுவும் எழுந்து விடாதபடி ஒரு பயக்கெடுதியான நிலையை அரசாங்கம் தனது அனைத்து யந்திரங்களையும் பயன்படுத்தி பராமரிக்கிறது. தாங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சமுற ஆக்கிவிட்டது ,இந்த ஆட்சி.

(பகுதி 3ல் தொடரும்)

.

No comments:

Post a Comment