Friday, November 18, 2022

பெய்ஜிங்கின் உலகளாவிய ஊடக செல்வாக்கு: சர்வாதிகாரத்தின் நீட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீள்திறன்.

ஃப்ரீடம் ஹவுஸின் புதிய அறிக்கை ஒன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியானது இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் ஊடகங்களில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தும் வகையில் மிக நுணுக்கமான அதிநவீன தந்திரோபாயங்களை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.

மேலும் அவ்வறிக்கையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி(CCP) பொதுவான கருத்தை தங்களுக்குச் சாதகமாக வடிவமைப்பதற்காகவும், தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், அதன் உலகளாவிய கொள்கைகளை முன்னுரிமைப்படுத்துவதற்காகவும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஊடகச் செல்வாக்குப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கின் உலகளாவிய ஊடக செல்வாக்கு:
சர்வாதிகாரத்தின் நீட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீள்திறன், பெய்ஜிங்கின் உலகளாவிய ஊடகப் பிரச்சாரமானது எவ்வாறு 30 நாடுகளை அழுத்தத்திற்குட்படுத்தியிருக்கின்றது என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அறிக்கையில் ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் செல்வாக்கின் அழுத்தம் மற்றும் அதற்கு அவையாற்றும் எதிர்வினையின் வலிமை ஆகியவை தொடர்பாக அந்நாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பெய்ஜிங்கின் செல்வாக்கு உந்துதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டவை அல்லது பாதிக்கப்படக்கூடியவை என அந்நாடுகளை வகைப்படுத்தியுள்ளது.

இலங்கை வலிமை குறைந்த எதிர்வினையாற்றும் ஆற்றலையும் பெய்ஜிங்கின் குறிப்பிடத்தக்க ஊடக செல்வாக்கின் உந்துதலையும் கொண்டிருப்பதால், அது பெய்ஜிங்கின் ஊடக உந்துதலால் பாதிக்கப்படக்கூடிய நாடொன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமான காரணிகள் பின்வருமாறு;

அரசியல் மாற்றத்தின் மத்தியில் அதிகரித்த செல்வாக்கு முயற்சிகள்:
சீனக் கட்சி-அரசின் ஊடகச் செல்வாக்கு முயற்சிகள் 2019-21 இடைப்பட்ட காலத்தில் தீவிரமடைந்தன. பெய்ஜிங் சார்பாக செல்வாக்கு செலுத்துபவர்கள் சமூக ஊடக வெளியில் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்துள்ளனர், குறிப்பாக இலங்கையின் இளைய தலைமுறையினருடனான அவர்களின் தொடர்பு - மற்றும் சிந்தனைக் குழுக்கள் உட்பட்ட பிரமுகர்களுடனான புதிய ஒப்பந்தங்கள், ஊடகங்களில் உரையாடல்களை வடிவமைத்துள்ளன. 2020இல் ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தமையும் , 2022இல் அவர்களை வெளியேற்றுவதற்கான எதிர்ப்பும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளையும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களையும் அதிகரித்தன.

பலதரப்பட்ட மக்கள் பிரதிபலிப்பு:
சீனா சில சமயங்களில் மேற்கத்திய செல்வாக்கிற்கு எதிராக சமநிலைப்படுத்தும் சக்தியாக செயல்படக்கூடிய ஒரு நட்பு நாடாக பார்க்கப்படுகிறது, அத்துடன் இது மிகவும் அவசியமான கோவிட் -19 உதவியை வழங்கியது. அதே சமயம், 2017 ஆம் ஆண்டு இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரச நிறுவனமொன்றுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியதில் இருந்து, அதன் பொருளாதார தாக்கம் குறித்த பின்னடைவும், கவலையும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது .

பிரமுகர்களுடனான நெருங்கிய உறவுகள்:
இலங்கைக்கும் சீன அரசுக்கும் இடையில் உள்ள உயர்மட்ட உறவுகளின் விளைவாக அரசியல், வணிகத் தலைவர்கள் சீனாவின் பிரச்சாரக்கொள்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச தளங்களிலும் பரப்புகின்றனர். அத்துடன் அவர்கள் சின்ஜியாங்கின் சீன ஆட்சி மாதிரியையும் அங்குள்ள மனித உரிமை நிலைமைகளையும் பின்பற்ற வலியுறுத்துகின்றனர். அரசுக்குச் சொந்தமான நாளிதழ் டெய்லி நியூஸும், தேசிய வணிக செய்தித்தாள் தி டெய்லி எஃப்டியும், சில உயர்மட்ட பிரமுகர்கள் நடத்தும் கலாச்சார அமைப்புக்களும், சிந்தனைக்குழுக்களும் சீன அரசின் பிரச்சாரங்களையும் விவரணைகளையும் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கின்றன.

சமூக ஊடகங்களில் தீவிரமான இராஜதந்திர உந்துதல்:
சமூக ஊடகத்தளங்களில் தங்களுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களை சீன அரசியல் நிபுணர்கள் "வுல்ப் -வாரியர்" எனும் தந்திரோபாயத்தினை கைக்கொண்டு தொடர்ச்சியாக தீவிரமான எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர். இலங்கைச் சமூக ஊடகங்களிலும், ராஜதந்திர ரீதியிலான சீனப் பிரதிநிதித்துவம் போலிக் கணக்குகள் மூலமாக அதிகரித்துள்ளது.

சீனா ரேடியோ இன்டர்நேசனல்:
சீனா ரேடியோ இன்டர்நேஷனல், எஃப்எம் ரேடியோவில் இலங்கையின் பிரதான மொழியான சிங்களத்தில் இலங்கையர்களை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது, 1.4 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழ், சிங்கள வானொலிச்சேவைகளைப் பின்தொடர்கின்றனர்.

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் இளைஞர்களை குறிவைக்கின்றனர்:
2020 முதல், குறிப்பாக சீன அரசு ஊடகத்துடன் இணைந்த முகநூல் செல்வாக்கு செலுத்துபவர்கள், சிங்களம் உட்பட்ட உள்ளூர் மொழிகளில் இளைஞர்களை குறிவைக்கும் உள்ளடக்கங்களுடன் பாரிய முறையில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த கணக்குகளை 1.2 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.இந்த கணக்குகள் சீனாவின் நேர்மறையான, அரசியலற்ற பக்கங்களை விளம்பரப்படுத்துவதுடன் அவ்வப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பான உள்ளடக்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன. சமூக ஊடகத்தளங்கள், இவை சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகள் என அடையாளப்படுத்துவதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றன.

விமர்சனங்களை அமைதிப்படுத்தும் தூதரக முயற்சிகள்:
இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்களும், செய்தி நிறுவனங்களும் சீன அரசாங்கம் அல்லது அதன் ஈடுபாடு குறித்து சாதகமற்ற முறையில் அறிக்கை எதையும் வெளியிட்டால், சீனத் தூதரகம் அல்லது சீன அரசு சார்பான பிற நபர்களால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு மன்னிப்புக் கோரவோ அல்லது உள்ளடக்கத்தை அகற்றவோ நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் பத்திரிகையாளர்கள் மத்தியில் சில சுய-தணிக்கைகள் இடம்பெறுகின்றன.

உள்ளூர் சீன மொழி ஊடகம் இன்மை :
உள்ளூர் சீன மொழி ஊடகம் ஒன்றின் இன்மையானது நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சீன புலம்பெயர்ந்தோரே உள்ளனர் என்பதைப் பிரதிபலிக்கிறது .

மட்டுப்படுத்தப்பட்ட சீன நிபுணத்துவம் மற்றும் வளர்ந்து வரும் சிவில் சமூகக் கவனம் :
உள்நாட்டு சீன அரசியல் தொடர்பாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பொறிமுறைகள் தொடர்பாகவும் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட நிபுணத்துவத்தையே கொண்டுள்ளது. இருப்பினும் பத்திரிகை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செயலாற்றும் சமூகம் ஒன்று உள்ளது, மேலும் சிவில் சமூகத்தில் அதிகளவான மக்கள், இலங்கையில் சீன அரசின் பிரச்சார முயற்சிகள் எவ்வாறு நேர்மையற்ற முறையில் சமூக ஊடகங்களை கையாளுகிறது என்பது குறித்தும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளடங்கலாக சீனத் தலையீட்டுடன் இலங்கையில் உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

நாட்டில் ஊடக கல்வியறிவு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளமை சீன அரசின் செல்வாக்கிற்கு மற்றொரு கட்டுப்படுத்தும் காரணியாக செயல்படுகிறது

ஊடக சுய- ஒழுங்குமுறைப் பிளவுகள் :
இலங்கையில் புலனாய்வு அறிக்கையிடல் கலாச்சாரத்துடனான ஊடக நிபுணத்துவம் மிகவும் அருகி வருகிறது. இருப்பினும் இப்பிளவினை சமாளிக்கக்கூடிய வகையிலான ஊடகவியலாளர் பயிற்சிகளும் அரசாங்க முன்னெடுப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

அரசியல் செல்வாக்கிற்கு எதிரான பாதுகாப்பின்மை :
உரிமையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் வெளிநாட்டு உரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இருந்தாலும், குறுக்கு உடைமை மற்றும் பக்கச்சார்பு உரிமைக்கு எதிரான சட்டங்கள் இல்லை. குறிப்பாக சீனாவுடனான வலுவான அரசாங்க உறவுகள் மற்றும் ஊடகங்கள் அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்கும் போக்கு போன்றவற்றாலும் தேவையற்ற அரசியல் செல்வாக்கினாலும் இலங்கை ஊடகங்கள் ஆபத்தில் உள்ளன. இலங்கை அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை குறிவைப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளது, இது அரசாங்கக் கொள்கையை எதிர்க்கும் கண்ணோட்டங்கள் மீதான சுய-தணிக்கையின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தமிழில் Bhavna Mohan

Freedom House ன் முழு அறிக்கையினை வாசிக்க அழுத்தவும்..

இலங்கை தொடர்பான Freedom House ன் அறிக்கையை வாசிக்க அழுத்தவும்.

No comments:

Post a Comment