Sunday, November 13, 2022

கிழக்கிலங்கை காணிக்கொள்ளைகளை விஞ்சியது கொழும்பு! இந்திய வியாபாரியும் ஓய்வு பெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகளும் கூட்டாக..

அரச மற்றும் தனியார் காணிகள் மோசடியான முறையில் கிழக்கிலங்கையில் கொள்ளையிடப்பட்டு வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். இது தொடர்பாக அண்மையில் பிள்ளையான் எனப்படுகின்ற பா.உ சந்திரகாந்தன் பல்வேறு தரப்பினர் மீது குற்றஞ்சாட்டியிருந்ததும், அதனைத் தொடர்ந்து பிள்ளையான் மேற்கொண்டுள்ள பல்வேறு காணி மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தோர் போட்டுடைத்ததும் பேசுபொருளாகி அடங்கிப்போய் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எது எவ்வாறாயினும் கிழக்கில் காணிக்கொள்ளை என்பது அரச உத்தியோகித்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஊடகங்கள் இக்கூட்டுக் கொள்ளைகளை இருட்டடிப்பு செய்துவருகின்றமைக்கு காரணம் அவர்கள் யாவரும் அரசிடமிருந்து கப்பமாக காணித்துண்டுகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என பா.உ சந்திரகாந்தன் சுட்டிக்காட்டியுள்ளமை ஒட்டுமொத்த ஊடகதுறைக்கே அவமானமாக அமைந்துள்ளது.

இருந்தபோதும், வடகிழக்குக்கு வெளியே இடம்பெறும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அங்கு இயங்கிக்கொண்டிருக்கின்ற ஊடவியலாளர்கள் மிகத்துணிச்சலாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது திருப்தியளிக்கின்ற விடயமாகும். அவர்கள், அந்தஷ்த்து தராதரம் பாராது கொள்ளையில் ஈடுபடுகின்றவர்களை எந்தவித சமரசமுமின்றிஅ அம்பலப்படுத்துகின்றனர்.

அந்தவகையில் இந்தியப் பிரஜையான ராஜூ ராதா எனப்படுகின்ற நபர், பெரும் முதலீட்டாளர் என்ற போர்வையில் இலங்கையினுள் ஊடுருவி பல்வேறு நபர்களின் காணிகளை சூட்சுமாக கொள்ளையடித்து வருவதாக சிங்கள, ஆங்கிலப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.


அச்செய்தியில், குறித்த நபர் சுதந்திர வர்த்தக வலையத்தினுள் நுழைந்து அங்கு காணிகள் மற்றும் தொழிற்சாலைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு பின்னர் அவற்றுக்கு மோசடி ஆவணங்களை தயாரித்து அவற்றை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய றோவின் ஒற்றனான ராஜூ ராதா எனப்படும் நபர், ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் ஒரு சிலரின் ஒத்துழைப்புடனேயே இந்த மோசடியை மேற்கொண்டுவருதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதுடன், நிதி குற்றத் தடுப்பு பிரிவின் இயக்குனராக செயற்பட்ட சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார வுடன் கொண்டுள்ள உறவு தொடர்பில் பலத்த கேள்வியை எழுப்புகின்றனர்.

குறித்த நபரின் மோசடிகள் மற்றும் அவரின் உள்ளுர் வலைப்பின்னல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ராஜூ ராதா விற்கு இலங்கையில் எந்த அடிப்படையில் வீசா வழங்கப்பட்டது, அதற்கு உதவி புரிந்தவர்கள் யாவர் என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை கோரியுள்ளதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment