Saturday, February 2, 2019

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

அமைச்சர் அவர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும்

முகநூல் எதற்காக உருவாக்கப்பட்டதோ தெரியவில்லை. ஆனால் முகநூல் இல்லாவிட்டால் உங்களுக்கு கட்சியும் இல்லை, உங்களை புகழ்பாடுவதற்கு எவரும் இருந்திருக்க வாய்ப்புமில்லை. அதற்காக மார்க்குக்கு நீங்கள் ரொம்பவும் கடமைப்பட்டுள்ளீர்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் அடையாளத்தினை பெற்றதன்பின்பு 2004 இல் தனிக்கட்சி ஆரம்பித்ததும், அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்காக சிலர் உங்களோடு இணைந்தார்களே தவிர, முஸ்லிம் மக்கள் எவரும் உங்களது கட்சியையும், உங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எவ்வளவுதான் தனிக்கட்சி, தலைவர் என்று பாரியளவில் விளம்பரம் செய்தாலும், உங்களது சொந்த கட்சி மூலமாக இதுவரையில் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டதுமில்லை, வன்னி மாவட்டத்துக்கு வெளியே யாரும் உங்கள் கட்சியை கணக்கில் எடுக்கவுமில்லை.

இந்த நிலையில்தான் 2௦11 இல் “அரபு வசந்தம்” என்ற பெயரில் மத்திய கிழக்கின் துனீசியா என்ற நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிக்கு செல்வாக்கு செலுத்தியது “முகநூல்” என்பது அன்று பேசப்பட்ட விடயமாகும்.

இதன் பின்புதான் இளைஞ்சர்கள் மத்தியில் முகநூல் பாவனை இலங்கையிலும் அதிகரித்ததுடன், உங்களது பார்வை முழுவதும் முகநூல் பக்கம் திரும்பியது.

இளைஞ்சர்களுக்கு இருந்த முகநூல் மோகத்தினை தனது அரசியல் பிரச்சாரத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக திட்டமிட்டு ஏராளமான பணத்தை செலவழித்து வருகின்றீர்கள்.

வேலையில்லாத பகுத்தறிவில்லாத இளைஞ்சர்களுக்கு தொழில் வழங்குகின்றேன் என்ற போர்வையில் அவர்களை கூலிக்கு அமர்த்தி உங்களை புகழ்பாட செய்வதுடன், முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் ரொம்பவும் கேவலமாக வசைபாட செய்தீர்கள்.

அப்போது முகநூல் பாவனை இளைஞ்சர்களிடம் மட்டும் இருந்ததனால் அரசியல் தெரியாத அப்பாவி இளைஞ்சர்கள் உங்களது வசைபாடல்களை உண்மை என்று நம்பினார்கள்.

பொய்யான உங்களது வசைபாடல்களை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியாமல், சில வருடங்களின் பின்பு உங்களது பிரச்சாரத்தின் ஆபத்தினை புரிந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைக்காக நாங்கள் களத்தில் இறங்கினோம்.

அதாவது இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும், உங்களுக்கும் அரசியல் அடையாளம் தந்த முஸ்லிம் காங்கிரசை அழியவிடாது பாதுகாப்பதற்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி உங்களது போலி பிரச்சாரத்துக்கு எதிராக உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றோம்.

நாங்கள் ஒருபோதும் உங்களது அரசியலுக்கு எதிராக குறுக்கே நிக்கவுமில்லை, முகநூல் அரசியலை நாங்கள் வலிந்து ஆரம்பிக்கவுமில்லை, யாரும் எங்களை பிரச்சாரம் செய்யும்படி கட்டளையிடவுமில்லை.

ஆனால் உங்களால் அமர்த்தப்பட்ட கூலிப்படைகள் மூலமாக வெளியிடப்படுகின்ற இட்டுக்கட்டப்பட்ட வசைபாடலுக்கு எதிர் பிரச்சாரம் மட்டுமே செய்து வருகிறோம்.

நீங்கள் முஸ்லிம் காங்கிரசை அழிக்கும் நோக்கில் முகநூல் மூலமாக எங்கள் கட்சிக்கும், எங்களது தலைவருக்கும் வசை பாடாமல் இருந்திருந்தால், நாங்கள் முகநூல் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்.

உங்களினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட அப்பாவி இளைஞ்சர்களைக் கொண்டு முகநூல் மூலமாக அவதூறு பரப்பும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நீங்கள் உடன்பட்டால், இன்றிலிருந்து நாங்களும் முகநூல் அரசியலுக்கு முடிவுகட்டுவதற்கு தயாராகவே உள்ளோம்.

நாங்கள் நாகரீகமான முறையில் அரசியல் பேசுகின்றபோது நீங்கள் எங்கள் மீது அநாகரிகமான முறையில் அவதூறு கூறுகின்றீர்கள்.

அதாவது யாரெல்லாம் முஸ்லிம் காங்கிரசுக்காக கடுமையாக வரிந்துகட்டிக்கொண்டு எழுதுகின்றார்களோ அவர்களை இலக்குவைத்து, அவ்வாறானவர்களை மூலைக்குள் முடக்கவேண்டும் என்ற நோக்கில் தனிப்பட்ட அவதூறுகளை அவர்கள் மீது பரப்புகிண்றீர்கள்.

இதில் உங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தட்டிக்கழித்துவிட முடியாது. ஏனென்றால் எங்கள்மீது அவதூறு பரப்புவதற்காக மாதாந்த சம்பளம் வழங்குவதுடன், தங்குமிடம், வாகனம், தொழில்நுட்ப உபகரணங்கள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து உட்சாகப் படுத்துகின்றீர்கள்.

இவ்வாறான வசதிகளை நீங்கள் வழங்காதிருந்திருந்தால் உண்ண வழியில்லாமல் இருக்கின்ற எவரும் எங்கள் மீது வசைபாட வந்திருக்கமாட்டார்கள், என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆனால் இவ்வாறான எந்தவித வசதிகளும் எங்கள் தலைவர் எங்களுக்கு செய்து தரவில்லை. நாங்களே வலிந்து செயல்படுகின்றோம்.

வெளியே நல்லவர்போன்று நடித்தாலும், எங்களுக்கு எதிரான அவதூறுகளை எழுதிவிட்டு அதனை உங்களுக்கு கான்பிக்கின்றபோது அதனை பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைகின்றீர்கள் என்ற செய்தியை கேள்வியுற்று ஆச்சர்யம் அடைந்தோம்.

அதிகார மமதையில் இருக்கின்ற உங்களுக்கு உள்ளார்ந்த இறை அச்சம் இருக்குமென்று கூறமுடியாது. செய்த்தான் அதனை மறக்கடித்துவிடுவான்.

நாங்கள் எவ்வளவுதான் தொழுதாலும், அற்ப அரசியலுக்காக பிறர்மீது அவதூறு கூறுவதன்மூலம் நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கையில் எதனை அடையப்போகின்றீர்கள் ? அவ்வாறு பெறுகின்ற பதவிகள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா ?

எங்களது மரணத்தின் பின்பு இந்த கூலிகள் யாரும் உங்களுக்காக சிபாரிசு செய்ய வரப்போவதில்லை. மாறாக இந்த கூலிகளுக்காக நீங்கள் சிபாரிசு செய்யவும் முடியாது. மறுமையில் அவர்கள் அனைவரும் உங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.

இவ்வாறு அவதூறு கூறுவதை நிறுத்திவிட்டு அரசியலை கற்றுக்கொடுங்கள். உங்களது கட்சியின் கொள்கை, எதிர்கால திட்டம், சமூகத்துக்கான உங்களின் பங்களிப்பு போன்றவற்றை பேசுங்கள்.

நாங்களும் எங்களது அரசியலை பேசுகிறோம். இவ்வாறு நாங்கள் ஆரோக்கியமான அரசியலை விவாதிகும்போது இதில் எது சரி ? எது பிழை என்பதனை மக்கள் தீர்மானிக்கட்டும் என்று கூறுவதுதான் இந்த கடிதத்தின் நோக்கமாகும்.

இங்கே நாங்கள் உங்களது ஊடகத்தைப் பற்றி பேசவில்லை. ஊடகத்தில் உத்தியோகபூர்வமாக பணிபுரிவது வேறு, அதற்கப்பால் முகநூல்களில் வசைபாடுவது என்பது வேறு.

எனவே அரசியல் பக்குவமும், மறுமை பற்றிய அச்சத்தினையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திகின்றேன். இந்தமடலை பார்த்தவுடன் உங்களது கூலிகள் மீண்டும் என்மீது வசைபாட வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் எனது இந்த மடலை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com