Wednesday, January 23, 2019

இரா. சம்பந்தனுக்கும், பிரித்தானியாவின் தெற்காசியாவிற்கான, பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பிரித்தானியாவின் தெற்காசியாவிற்கான பொறுப்பதிகாரியான பர்கஸ் ஓல்ட் சந்தித்துக்க்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இவர்கள் இருவரும் இணைந்து, கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

மேலும், அதிகாரப் பரவலாக்கம் நேர்மையானதாகவும், மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையிலும் இருத்தல் அவசியம் எனவும் இரா.சம்பந்தன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.

மக்கள் கைகளில் ஆணை செல்லும் போது ஊழல் மற்றும் வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும். இதன் காரணமாக ஒருசில அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுகிறார்கள் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் நீடித்த இச் சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பிரதானி போல் கிறீன் ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com