எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றைக் கடந்து, எமது போராட்டத்தை முன்னெடுப்போம் - கேப்பாபுலவு மக்கள்.
எமது பூர்வீக காணிகளை பெறுவதற்கான போராட்டங்களில் நாம் எதிர்நோக்கும் துன்பங்களைக் கடந்து கட்டாயமாக வெற்றி பெறுவோம் என கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களில் ஒருவரான சிவப்பிரகாசம் அரியகலா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது போராட்டம் இன்றுடன் 693 நாட்களைக் கடந்துள்ளது. எமது பூர்வீக வாழ்விடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் வீதியோரங்களில் பல துன்பங்களைச் சந்தித்து இன்று வரை போராடி வருகின்றோம்.
இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கைக்கும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே, நாம் இன்றைய ஊடக சந்திப்பினை ஒழுங்கு செய்துள்ளோம்.
இதுவரை எமக்கு எந்தத் தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்று நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எமது விடயம் தொடர்பாக மேலும் அழுத்தங்களை வழங்கி எமது வாழ்விடங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு , நாம் மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தமது பூர்வீக காணிகளை இழந்த பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment