Thursday, January 24, 2019

கைதிகள் மீது தாக்குதல் - தவறிழைத்த அதிகாரிகளுக்கு நிறுவன நடைமுறையின் கீழ் தண்டனை - அதிகாரிகள் பரிந்துரை

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மீது அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான அறிக்கை அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களக் குழுவின் அறிக்கையில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 40க்கும் அதிகமான கைதிகளின் வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான CCTV காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பிலும் விசேட விசாரணைகள் பொலீசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகிக்கும் மூவர் வழங்கிய இவ் அறிக்கையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தவறிழைத்த அதிகாரிகளுக்கு நிறுவன நடைமுறையின் கீழ் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது குழுவினர் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டாவது குழுவில் , ஜனாதிபதி செயலகம், அரச நிர்வாக அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com