Wednesday, January 23, 2019

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள், அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மன்னார் சதொச வளாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள், இன்றைய தினம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை காபன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கிலேயே, இவை புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள், சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஐபக்சவிடம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஒரு சிறிய பெட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு பி.232/18 என இலக்கமிடப்பட்டு, குறித்த பொதி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது .

குறித்த மாதிரி எலும்புக்கூடு அடங்கிய பொதி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்ஷவின் பொறுப்பிலே எடுத்துச் செல்லப்படுவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ஒருவரும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகப் பணிப்பாளர் ஒருவருமாக மொத்தம் 4 பேர் அமெரிக்காவின்
புளோரிடாவுக்குச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனித எலும்புக்கு கூடுகள் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கிடைக்கும் அறிக்கையின் படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனித எலும்புக் கூடுகளில் பல, சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com