Monday, January 28, 2019

அரசியல்வாதிகளும்,அரச அதிகாரிகளும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புபட்டுள்ளனர்.- ஜனாதிபதி.

நாட்டில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வலுப்பெற்றுள்ளதாகவும், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

போதைப் பொருளற்ற நாடு’ என்ற தொனிப்பொருளை சாத்தியமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் விசேட திறமைகளை வௌிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் ஜனாதிபதி விருது வழங்கும் விழா, இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தலில், சமூகத்தின் பிரமுகர்களே  தொடர்புபட்டுள்ளனர். இதனால் அதனை ஒடுக்குவதற்கு முன்னெடுத்த நடவடிக்கைளை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு முதல் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை, பொலிஸ், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பாளர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அந்த யுத்தத்திற்கு இணையாகவுள்ள போதைப் பொருளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு, நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு முதலில் தௌிவுபடுத்த வேண்டும். என ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இதேவேளை, இந்த நிகழ்வில், 2015 ஜனவரி 14ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு  பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள், கட்டமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய விசேட செயலணியின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரத்து 34 பேருக்கு ஜனாதிபதியினால் இன்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மூன்று பிரிவுகளின் கீழ் பாராட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், 15 பேருக்கு ஜனாதிபதி காவல்துறை வீர பதக்கங்களும், 59 காவல்துறை திறமை பதக்கங்களும், ஏனையோருக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

போதை ஒழிப்பு தேசிய செயற்திட்டங்களின் கீழ் ஜனவரி 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி, விரிவான பல வேலைத்திட்டங்கள் கடந்த தினங்களில் இடம்பெற்று வருகின்றன

மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாக குறைப்பதற்கும், அவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதன் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும், நாட்டின் சுகாதார நிலையை உணர்த்துவதற்கும், உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதன் ஊடாக வறுமையிலிருந்து விடுபடுவதற்கும், இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com