Friday, January 25, 2019

காலநிலை மாற்றம், மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது- ஜனாதிபதி.

உலகமெங்கும், குறிப்பாக எமது பிராந்தியத்தின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் காலநிலை மாற்றம் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவுவதற்கான வளமானதொரு நிதியளிப்பு பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விசத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு இன்று இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டில் முதன்மை உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை, 2019 பூகோள காலநிலை இடர் சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு சமச்சீரான காலநிலையைக் கொண்ட தீவான இலங்கை, அதன் நிலப் பிரதேசத்தின் 70 வீதம் உலர் வலயத்திற்கு சொந்தமாக இருப்பதுடன், வருடத்தில் 1500 மில்லிமீற்றரை பார்க்கிலும் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்றுவருகிறது.

காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அண்மையில் அதன் பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வள திட்டத்தை ஆரம்பித்தது. இது தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்களை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.

அதிகரித்து வரும் பூகோள வெப்பமாதல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு, பசுமை சூழலை பாதுகாப்பதற்கான இந்த திட்டங்களை பார்ப்பதற்கு எமது நாட்டுக்கு வருகை தருமாறு, ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, காலத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் புதிய நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றாடல் மாநாடுகளை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றாடல் மாநாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட அர்ப்பணிப்புகளை வெற்றிகரமாக அடைந்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கின்ற ஒரு முறைமையை ஸ்தாபிக்க வேண்டும் .

மேலும், கைத்தொழில், ‘தூய சமுத்திரம்’ வேலைத்திட்டம் போன்ற துறைகளை பலப்படுத்தும் வகையில் அபிவிருத்தியடைந்த நாடுகளினதும், பிராந்திய கூட்டுறவு அமைப்புகளினதும் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது விசேட உரையில் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com