700 ரூபாய் சம்பளம் என்பது, ஓர் ஆக்கப்பூர்வ தீர்மானமாகும் - கொந்தளித்துள்ள மக்களை, மீண்டும் கொதிக்க வைத்த வ.சுரேஷ்..
700 ரூபாய் என்ற அடிப்படைச் சம்பளமானது, தோட்டத் தொழிலாளர்களுக்காக, ஆக்கப்பூர்வமாக எடுத்த முடிவாகும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
தோட்டத் தொழிலாளர் மீதான அக்கறையில் ஆக்கப்பூர்வமாக எடுத்த முடிவால் 500 ரூபாய் சம்பளம் தற்பொழுது 700 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் ஒருநாள் சம்பளம், மேலதிக சலுகைகள் உள்ளிட்ட கொடுப்பனவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இதேவேளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு, மலையகம் உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போராட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுடன், பல இளைஞர்களும் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 700 ரூபாய் அடிப்படை வேதனைத்தை பெற்றுக் கொடுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என வலியுறுத்தி, 1000 இயக்கம் இன்று ராஜகிரியவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த நடவடிக்கைக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை என தெரிவித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள், இது குறித்து தமது கண்டனத்தை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment