Wednesday, January 2, 2019

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன 11 மாதங்களுக்கு பின்னர் பிணையில் விடுதலை

பிணைமுறி மோசடி குற்றசாட்டு சுமத்தி, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோருக்கு சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மத்தியவங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும், நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களது வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் மன்றுக்கு நேற்றைய தினமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும் செல்வதற்கு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், சந்தேகநபர்கள் இருவரும் வௌிநாடு செல்வதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை பிணைதாரர்கள் நால்வரில் இரண்டு பேர், இவர்களது நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும். சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வாறாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவுசெய்யப்பட்டு குற்றவாளியாக அடையாளப்படுத்தப்படும் வரை, எந்தவொரு சந்தேகநபரும் தான் நிரபராதி என்பதற்கான முழுமையான தீர்மானத்தில் இருக்க முடியும் என பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகளின் நோய் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையை விசேட காரணியாக ஏற்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதாகவும் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் இந்த வழக்கை நிறைவுசெய்வதில் தாமதமடைவதாக தெரிவித்த பிரதம நீதவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com