தன்னெழுச்சி கவனயீர்ப்பு போராட்ட த்தின் தீர்மானங்களும் கோரிக்கைகளும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை வேதன அதிகரிப்பை வலியுறுத்தி கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் டிசம்பர் 18ம் திகதி முதல், முன்னெடுக்கப்பட்ட 'தன்னெழுச்சி உணவுத் தவிர்ப்பு போராட்டம்' மற்றும் டிசம்பர் 22ம் திகதி அதே இடத்தில் முன்னெடுக்கப்பட்ட 'தன்னெழுச்சி கவனயீர்ப்பு போராட்டம்' என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும், கோரிக்கைகளும்.
தற்காலிக நலன் கருதி செய்துக் கொள்ளப்படும் புது கூட்டு ஒப்பந்தத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
➢ தொழிலாளர்களுக்கு வருடத்தில் 300 வேலை நாட்கள் உறுதி செய்யப்படல் வேண்டும்.
➢ ஊ. சே. நிதி, ஊ. ந. நிதி என்பன அடிப்படை சம்பளத்தில் இருந்து அல்லாமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே கழிக்கப்பட வகை செய்தல் வேண்டும்.
➢ வேலைத் தளங்களில் ஏற்படும் சுகவீனம் (குளவிக் கொட்டுதல், காயங்கள், விபத்துக்கள்) விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
➢ பெண் தொழிலாளர்களின் நலன்கள் விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்பட ஆவண செய்தல் வேண்டும்.
➢ இயற்கை அனர்த்த காலங்களில் தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும், விடுமுறையும் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
➢ தொழிலாளர்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப் படல் வேண்டும்.
➢ கழிப்பறைகள், முதலுதவிப் பெட்டிகள் உரிய இடத்தில் (தேயிலை மலைகள் உட்பட) வைக்கப்படல் வேண்டும்.
➢ சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்ல தொழில் நலன், உரிமைகள்சார் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.
➢ சம்பள பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு தேவையற்ற சம்பள கழிவுகள் அகற்றப்படல் வேண்டும்.
ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும், ஒப்பந்த விடயம் : அரசாங்கமும் மூன்றாவது தரப்பாக கைச்சாத்திடப்படுவது கட்டாயமாகும்.
அத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் அதன் முழுமையான உள்ளடக்கம், கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தமிழ், சிங்கள மொழிகளில் நேரடியாகவும்
ஊடகங்கள் வாயிலாகவும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு கருத்தறிவதற்கான போதுமான கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும்.
எதிர்காலத்தில்...
மலையக மக்களினதும், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களினதும் இருப்பு மற்றும், சுய பொருளாதார அபிவிருத்தி அரசியல் அபிலாசைகள் கருதி கூட்டுறவு தொழிற்துறையாக மாற்றியமைக்கப்பட்டு வாழ்வு பாதுகாப்பிற்கான வழி வகைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
மேற்கொண்ட விடயங்களை கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது கவனத்தில் கொள்ளப்பட்டு நடைமுறை சாத்தியமாக்குமாறு மலையகத் தொழிலாளர் வர்க்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
எவ்விதமான அரசியல், தொழிற்சங்க, அமைப்புகள் மற்றும் குழுக்கள் சார்ந்து அல்லாமல் முற்றுமுழுதாக தன்னெழுச்சியாக இடம்பெற்ற இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கணேசன் உதயகுமார் (தலவாக்கலை தோட்டம்), கந்தய்யா அசோக் (ஹப்புத்தளை - பிட்டரத்மலை), கனகரத்தினம் ராஜா (பொகவந்தலாவை கெம்பியன்; தோட்டம்), வீரக்குமார் மனோஜ் (புசல்லாவ) ஆகிய நாங்கள் முன்னெடுக்கிறோம்.
எங்கள் கோரிக்கையை உரியத் தரப்பினர் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மனுவின் ஊடாக வலியுறுத்துகிறோம்.
கணேசன் உதயகுமார்
கந்தய்யா அசோக்
கனகரத்தினம் ராஜா
வீரக்குமார் மனோஜ்
0 comments :
Post a Comment