Friday, December 7, 2018

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டு மாநகர சபையில் கண்டன தீர்மானம்.

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வின்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரினால் குறித்த கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த படுகொலை சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரேரணை முன்வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த படுகொலையினை வன்மையாக கண்டித்ததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

அரசியல் குழப்பத்தினை மேற்கொண்டுள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதனால் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com