Wednesday, January 31, 2018

13 வயது மாணவனின் ஆண்குறியில் இந்திரியப்பரிசோதனை செய்த ஆசிரியர் கைது ..

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவன் வீங்கிய தனது ஆண்குறியுடன் அழுகையை நிறுத்தமாட்டாதவனாக வதங்கிப்போய் அவமானத்தில் குறுகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் படுத்துக் கிடக்கிறான்.

அவனது இந்த நிலைக்கு பள்ளி ஆசிரியர் காரணமாக இருந்தார் என்கின்ற செய்தி தரக்கூடிய அயர்ச்சியிலிருந்து மீளமுடியாமலும், காலையிலிருந்து எந்தவொரு பணியையும் ஒழுங்காகச் செய்யமுடியாமலும் பதட்டமாக இருக்கிறேன்.

ஏறாவூர் றகுமானியா பாடசாலையிலிருந்து விலகி அலிகார் தேசிய பாடசாலைக்கு பெரும் விருப்பத்துடன் மாறியுள்ளான். ”அலிகாரியன்” என்று தானும் பெருமையாகச் சொல்லவேண்டும் என்ற விருப்பம் அவனுக்குள்ளும் உண்டாகி வீட்டில் சண்டைகள் புரிந்து பள்ளியை மாற்றக் காரணமாக இருந்திருக்கலாம். எது எப்படியோ பள்ளி மாறிய சிறுவனுக்குப் புதிய பள்ளியின் சூழலும் புதிய நண்பர்களும் ஆசிரியர்களும் பழக்கமாகுவதற்கு முன்பே, அலிகாரில் கற்பிக்கும் ஆசிரியர் அலி முஹம்மது (55) அவனது ஆண்குறியில் இந்திரியம் வருவதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டுவிட்டது.

சென்ற சனிக்கிழமை, ”நீ கணிதப் பாடத்தில் வீக்காக இருக்கிறாய். உனக்கு விசேஷட வகுப்புத் தருகிறேன்” என்று தனியாக அழைத்து இரண்டு மணி நேரமாக பாலியல் சேஷ்டைகள் புரிந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எல்லோரையும் போல பாதிக்கப்பட்ட சிறுவனில் எனக்கும் அதிக அக்கறை இருந்தபோதும், அவனை பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆசிரியரின் முகத்திரையை கிழிப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது.

இந்த ஆசிரியர் கடந்த முப்பது வருடங்களாக பணியில் உள்ளவர். இவரால் பல சிறுவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலை நிர்வாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று முறைப்பாடு செய்யும் பெற்றோர்களிடம் ”அல்லாஹ்வுக்காகச் ஸபூர் செய்யுங்கள். இனி இப்படி நடக்காது” என்று மன்றாட்டங்கள் செய்து இவரைக் காப்பாற்றி வந்துள்ளது. இந்த ஆசிரியர் மீது 20 வருடங்களுக்கு முன்பும் பொலிஸில் இதே விவகாரத்துக்காக முறைப்பாடு செய்யப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டதும் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு என்றால் இன்று வரைக்கும் இந்த ஆசிரியர் எத்தனை சிறுவர்களின் ஆண்குறியில் இந்திரியப் பரிசோதனை நடாத்தியிருப்பார்?

இன்றைக்கும் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தருகிறோம் என்றும் ஏறாவூரிலுள்ள உலமாக்களும் ஆலிம்களும் ஆசிரியர்களும் ஓடித்திரிவதைப் போல ஒரு வெட்கங்கெட்ட செயல் வேறென்ன இருக்கமுடியும். பள்ளி நிர்வாகம் முன்பே இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் பல சிறார்களை இவரிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். ”அடுத்தவனின் மானத்தைக் காப்பாற்றினால் உனது மானத்தை அல்லாஹ் காப்பாற்றுவான்” என்பதற்கான அர்த்தத்தை பிழையாகக் விளங்கிக் கொண்ட தற்குறி உலமாக்கள், ஆலிம்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுந்த பாடம் புகட்டவேண்டிய தருணம் இது. இது ஆசிரியரின் மானம் சார்ந்ததோ, பாடசாலையின் மானம் சம்பந்தப்பட்டதோ இல்லை. சிறுவனின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. சிறுவர்களின் உளவியலைச் சிதைக்கும் காரியங்கள் எதிர்காலத்தில் உண்டாக்கும் விளைவுகள் பாரதூரமானவை.

இந்த ஆசிரியர் நஜ்மில் உலும் என்ற பெயரில் அரபிக் கலாசாலை ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்த அரபிக் கலாசாலையில் 100 வரையிலான மாணவர்கள் உள்ளார்கள். பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் இவர் ஒரு உறுப்பினர் என்றும் தெரியவருகிறது. பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவரே ஒரு பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடி ஒழித்தவர்தான் ஒரு காலத்தில். இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படித்தான் இந்த சமூகம் உருப்படும்?

பாதிக்கட்ட சிறுவனை நஷ்ட ஈடுகொண்டு தேற்றிவிட முயல்கிறவர்கள் அத்தனை பேர் மீது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்த ஆசிரியர் பெரும் செல்வாக்குப் பெற்றவர் என்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகூட கொஞ்சம் அப்படி இப்படித்தான் நடந்து கொள்கிறார் என்றும் அறிந்தேன். நியாயமாக இந்தப் பொலிஸ் அதிகாரி மீதும், ஏறாவூர் பள்ளி வாசல்கள் சம்மேளனம், அலிகார் பாடசாலை நிர்வாகம் அனைத்தின் மீதும் வழக்குத் தொடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆசிரியரை பதவி நீக்கம் செய்து, ஓய்வூதியம் பெறமுடியாதபடி ஒரு தீர்ப்பை கொண்டு வரமுடியுமாக இருந்தால் நாடுபூராகவும் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக மாறும்.

சிறுவர்கள் நமது சொத்து. நாளைய நமது செல்வங்களைச் சுரண்டும் இந்தக் கயவர்களை எதிர்த்துப் போராட முடியாத நமது அறச்சீற்றத்தையும் எழுத்தையும் குப்பையில் தான் போடமுடியும்.

1929 என்ற இலக்கத்திற்கு (Child Help Line) அழைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பியுங்கள். ஏறாவூரில் மனிதாபிமானம் கொண்ட இளைஞர்கள் இருப்பீர்களாக இருந்தால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கொழும்பு அலுவலக இயக்குநருக்கு ஒரு கடிதத்தை உடனடியாகப் பெக்ஸ் மூலம் அனுப்புங்கள். பலர் கூடிக் கையெழுத்திட்ட மனுவாக அது இருந்தால் நன்று. பெக்ஸ் இலக்கம் தேவைப்படுகின்றவர்கள் உள்பெட்டியில் கேட்டுப் பெறலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளரான Sharmila Seyyid அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

என மனித உரிமைச் செயற்பாட்டாளரான அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

கைதினைத் தொடர்ந்து அவர் Sri Lanka Thowheed Jamath இற்கு கீழ்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்:

சட்டநடவடிக்கைக்கு ஏறாவூரின் SLTJ (Sri Lanka Thowheed Jamath) உறுப்பினர்கள் தான்காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

தவிர்க்க முடியாமல் உம்மம்மாவின் சொலவடை ஒன்று துருத்திக் கொண்டு நினைவுக்கு வருகிறது. அது, "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்ற சொலவடை.

SLTJ க்கு ஏது சிறுவர் துஷ்பிரயோக அக்கறையெல்லாம்? அப்படியொரு அக்கறை SLTJக்கு மெய்யாகவே இருக்குமெனில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் பெண்களின் திருமண வயதை 18 ஆக திருத்தப் போராடியிருக்கவேண்டும். இந்தப் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனின் வயதுச் சிறுமிகளைத் திருமணம் செய்வதைச் சட்டமாக வைத்துக் கொண்டு அதனை மாற்ற ஆதரவளிக்காதவர்களின் சிறுவர் அக்கறை என்பது நகைப்புக்கிடமானது. அத்தோடு தாருநுஸ்ராவில் 18 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தச் சிறுமிகளின் நீதிக்காக குரல் உயர்த்தி இருக்கவேண்டும். மதரஸாக்களில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து வாய் திறந்திருக்கவேண்டும். அரபிக் கல்லூரிகளில் நிகழும் ஓர்பால் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

இப்படி சுற்றி நிகழும் சமூகச் சீர்கேடுகள் ஒன்றைப் பற்றியும் வாய் உசுப்பாத SLTJ, இப்படியான சமூக அவலங்களுக்காக ஒரு துரும்பைத்தானும் தூக்கிப்போடாத SLTJ இன் ஏறாவூர் உறுப்பினர்கள் மட்டும் இந்த ஒரு விடயத்தில் பொங்கிக் கொண்டு புறப்பட்டது ஏன்? மருத்துவமனையில் இரவு பகலென்று பாதிக்கப்பட்ட சிறுவனுக்குக் காவல் இருந்தது ஏன்?

சம்பந்தப்பட்ட ஆசிரியர் / அவர் சார்ந்த மத நிறுவனத்திற்கு எதிரான ஒரு பழிவாங்கும் உட்பூசல் நடவடிக்கையாக இதனைப் பார்க்க முடியுமே தவிர சமூக அக்கறையாக கொள்ளவேண்டியதில்லை.

ஏறாவூர் SLTJ மட்டும் ஒரு முன்மாதிரியாக ரோசம் சூடு சுரணை உள்ள உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் அதனைப் பாராட்டுவதில் தவறில்லை. எங்கே அண்மையில் ஏறாவூரில் பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளைப் பொலிசிலிருந்து தூசு தட்டி எடுத்து நீதி கிடைக்கச் செய்யட்டும் பார்ப்போம்.

Read more...

Monday, January 29, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 1) வ.அழகலிங்கம்.

உலகிலுள்ள ஒவ்வொரு தாயும் ஓர் அதி அழகான குழந்தையைப் பெறுகிறாள். தமிழ்த் தாயும் தமிழ் என்ற அழகான குழந்தையைப் பெற்றாள். வழமான சமூகவாழ்க்கை என்பது அரசியற் கோரிக்கைகள், சமூகநலக் கோரிக்கைகள், பொருளாதாரக் கோரிக்கைகள் என்ற மூன்று ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கோரிக்கைகளால் ஆனது.

* பிரஜாவுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை, சுயநிர்ணயவுரிமை போன்றன அரசியற்கோரிக்கைகளாகும்.

* இலவசவைத்தியவசதி, இலவசக்கல்வி, வதிவிடவசதி, வயதானகாலத்து ஓய்வூதியம், பிரசவகாலத்து ஓய்வு என்பன சமூகநலக் கோரிக்கைகளாகும்.

* சம்பளஉயர்வு, வரிகுறைப்பு, பணவீக்கத் தடுப்பு, 8 மணி வேலை, அதிக பணப்புழக்கமும் சந்தையில் பற்றாக்குறை ஜீவனப் பொருட்களும், பற்றாத பணப்புழக்கமும் உபரி வினியோகப் பொருட்களும் ஏற்காமை போன்றன பொருளாதாரக் கோருக்கைகளாகும்.

இந்த மூன்று கோரிக்கைகளில் ஒன்றின் அழிவில் மற்றொன்றை வெல்வது அல்லது ஒரு கோரிக்கையை மாத்திரம் உயர்த்திப் பிடிப்பது அரசியற் பிழையாகும்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று" என்றது சிலப்பதிகாரம். இங்கு சொல்லப்படும் "அறம்" என்பது என்ன?

ஏன் சிலகாலங்களில் அணைகடந்த காட்டாற்று வெள்ளம்போல ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான பொறுமையிழந்த மக்கள் ஒன்று திரண்டு அரசுகளுக்கு எதிராகத் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள் என்று சிந்திக்கக் கார்ல் மாக்ஸ் தலைப் பட்டார். ஈற்றில் மக்களின் வாழ்நிலமைகளே மக்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றனவே ஒழிய மனிதர்களின் சிந்தனைகள் மனிதர்களின் வாழ்நிலமைகளைத் தீர்மானிப்பவை அல்ல என்று முடிவுக்கு வந்தார். சிந்தனைகள், போதனைகள், சட்டங்கள் என்பன வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று மனோமூலவாதிகளே எண்ணுவார்கள்.

பசி, பட்டினி, பஞ்சம், கடன்சுமை, கொடியவரிச்சுமை, வீடின்மை வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தியின்மை, நோய்கள், பயம், எதிர்காலத்திற்கான உத்தரவாதமின்மை, இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் மீள வழியின்மை, பகைவர்களின் பயம், யுத்தம் போன்றன நாட்டில் நிலவும் தருணங்களிலே மக்கள் சட்டத்திற்கோ, வாழையடி வாழையான வழக்கங்களுக்கோ கட்டுப்பட மாட்டார்கள். சட்டம,; நீதி, நானாவித மனிதஉரிமைகள் எல்லாமே மக்களை ஏதோ ஒரு விதத்தில் வாழ வழிவிட்டால் மாத்திரம்தான் செல்லுபடியாகும். எல்லா உரிமைகளுமே பொருளாதாரத்திற்குக்; கட்டுப்பட்டது. ஜனனாயகமோ சர்வாதிகாரமோ வாழ வழிவிட்டால் மாத்திரமதான்; செல்லுபடியாகும். இல்லையேல் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். இதுவே சிலப்பதிகாரம் சொன்ன அரசியல் பிழைத்தோர்க்கு ஷஅறம்| கூற்று என்பதுவாகும்.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவாகும். திரட்சியாகும். ஒட்டுமொத்தமாகும். சிலகாலகட்டங்களில் வெகுசனங்கள் ஓரிரு பிரச்சனைகளுக்கு எதிராக மட்டும் போராட மாட்டார்கள். ஒட்டுமொத்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் எதிராகவும் போராடுவார்கள். ஒடுக்குமுறைகள் எல்லாவற்றிற்றிற்குமெதிராக அவை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அவைகளுக்கு எதிராகப் போராடுவார்கள். இதுவே வெகுசன எழுச்சி வடிவத்தை எடுக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் திரண்ட சமூகமூரண்பாடுகளைத் தீர்க்க வேண்டிய காலங்கனிந்ததால் எழுவதாகும். இந்த எழுச்சிகளின் போது புதியதொரு சமுதாயம் ஏற்படாவிட்டால் நாட்டில் காட்டுமிரண்டித்தனம் முந்தயதிலும் பலமடங்கு கொடூரமாக நடந்தேறும். இதுவே வாழையடி வாழையான வரலாறுகளின் பொதுமைப் படுத்தலாகும்.

சிலப்பதிகாரம் என்னும் காவியம் ஏன் எழுந்தது? அதற்குக் காரணம், இளங்கோவடிகளே சொல்லுகிறார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

"பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்." என்று மணிமேகலை கூறிற்று.
ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலகம் முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள். ஆருயிர் மருந்து இட்டனள்.

உணவு என்பது உயிர்க்கு அமுது. பசி என்பதோர் பிணி. முதலிற்பசி என்ற பிணியை அகற்ற வேண்டும். வள்ளலாரோ, 'வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்கிறார்.

ஒளவையோ, 'ஈயென பல்லைக் காட்டி இரந்து தின்பது இழிவானது, ஆனால் அவர்க்கு இல்லை என்று சொல்வது அதனைவிட இழிவானது' என்கிறார். உணவைப் பாழாக்குகிறவர் பெரும் பாவிகள். உணவை அனுபவிப்பதற்கு பசியே முக்கியமான தேவை. உலகம் பசியாமலே சாப்பிடும் நாடுகளாகவும் சாப்பிட்ட பின்பும் பசிக்கும் நாடுகளாகவும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

'வறியோர்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து'| என்கிறார் வள்ளுவர். இல்லாதவனுக்குக் கொடுப்பதே ஈகை. மற்றெல்லாக்; கொடுப்பனவும் பிரதிபலன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. கைம்மாறு கருதாத உதவியே உதவி. மற்றெல்லாம் றால் போட்டுச் சுறா பிடிப்தாகும.

'பசிப்பிணி, ஒருவரின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை அழித்துவிடும். நற்குணங்களைச் சிதைத்து விடும். வாழ்வுக்குப் பற்றுக்கோடாகப் பற்றிக்கொண்ட கல்வியாகிய நல்லாண்மையைப் போக்கிவிடும். நாணமாகிய அணிகலனையும் நீக்கிவிடும். மேன்மைபொருந்திய அழகினை எல்லாம் சீர்குலைக்கும். மனைவியோடு சென்று பிறரிடம் பிச்சை எடுக்க வைக்கும். அத்தகைய பசி என்ற பாவியாகிய கொடுமையை முதலிற்போக்க வேண்டும். அங்ஙனம் போக்கியவர்களது புகழை அளவிட்டுக் கூற எந்த நாவாலும் முடியாது.

கடன்பட்டார் நெஞ்ஞம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
-என்றான் கம்பன்.

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்கள் படும் கஷ்டத்தை இராவணனுக்கு உவமையாகச் சொல்கிறார் கம்பர். கடன் காலைச் சுற்றிய பாம்பு போல என்பார்கள். காலைச் சுற்றிய பாம்பிடம் இருந்து தப்புவது சிரமம்.

'விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள்வாயிற் பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத் துற்ற போது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.'

கம்பன் உயர்வு நவிர்ச்சி அணியின் உச்சக் கட்டத்திற்குப் போபவன். பெற்றோரை இழந்த கலக்கம், பிள்ளைகளை இழந்த கலக்கம், தாரத்தை இழந்த கலக்கம,; காதலை இழந்த கலக்கம், தாய் நாட்டை இழந்த கலக்கம் என்பனவெல்லாம் சின்னக் கலக்கங்கள். இந்தியாவிலே வருடாவருடம் முப்பதுனாயிரத்திற்கு மேலான விவசாயிகள் வங்கிக் கடனைக் கட்ட வக்கில்லாததால் தற்கொலை செய்து கொண்டார்கள். இலங்கையிலே சில வருடங்களுக்கு முன்னர் கேகாலை என்ற ஒரேயொரு மாவட்டத்திலேயே 380 விவாசாயிகள் வங்கிக் கடன் கட்ட வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். கம்பனுக்கு உலகிலேயே பெரிய கலக்கம் கடன் பட்டவர்க்கே உண்டு என்பதாகும்.

இன்றய யதார்த்தம் மக்கள் மட்டும் கடனால் நசிபடவில்லை. அரசாங்கங்கள், வங்கிகள் போன்றன எல்லாமே கடனில் அமிழ்ந்தியுள்ளன. உலகின் பெரிய கடனாளி ஐக்கிய அமெரிக்கா. இலங்கையின் மொத்தக் கடன் வருடாந்த உற்பத்தியிலும் மூன்று மடங்கு. பட்டகடனுக்கான வட்டியைக் கட்ட வரியாற் கிடைக்கும் அரச வருமானம் போதாது. கஜான எப்பொழுதுமே காலி. அதனோடு கூட அரசாங்கம் அச்சடித்து விற்ற 'பொண்ட்" என்று சொல்லப்படும் உறுதிப் பத்திரங்கள் (தரலாம் கடன்)ஒரு கொள்ளை. சிறீலங்கா எப்போது பட்டகடனை இறுக்கமாட்டேன் என்று சொல்கிறதோ ஆரறிவார் பராபரமே. ஓர் அரசு கடனாளியாகி விட்டால் அந்த நாட்டை அழிக்க வெளியில் இருந்து ஒரு பகை வரவேண்டிய அவசியமில்லை. கறையான் பிடித்த வேலிபோலத் தானே அந்த அரசு அழிந்துவிடும்.

'...நீணிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
..அறமெனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள்ளூ மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது
கண்டதுஇல்| எனக்-,,(மணி 24-225-230).

பெரிய நாட்டை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருளற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு வழியும் உளதாமோளூ அறம் என்று சொல்லப்படுவது என்னவென்று கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக: மன் உயிர்களுக்கெல்லாம் உணவும், உடையும், தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை.,,

'இதுவேதான் மேற்குலக நவீன பொருளியலின் அத்திவாரமாகும்.,, நவீன அரசாட்சிகளின் முக்கியமான அரசியற்கோட்பாடுகள் என்று சொல்பவைகளைத் தமிழிலக்கியங்கள் 2000 வருடங்களுக்கு முன்னரே சொல்லி வைத்தன. தமிழர் ஆட்சிகள் கடைப் பிடித்தன.

சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் என்பதைக் கண்டறிய வேண்டுமானால் தமிழுக்குள்ளேயே தேடவேண்டும்.

'தன் நிலமை தாழாமை தாழ்ந்த பின் வாழாமை,, என்பதே தமிழர் மூலதர்மம்.

நடந்த இடத்தில் தவழக் கூடாது என்பது பழந்தமிழர் சம்பிரதாயம்.

தங்களது கடந்த கால வரலாறு, தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை அறியாத மக்கள் வேரற்ற மரம் போன்றவர்கள் என்று மூதறிஞர் மார்க்கஸ் கார்வே கூறியுள்ளார்.

நடந்துவந்த பாதை தெரியாதவர்களுக்கு நடக்கப் போகும் பாதை தெரிய வராது. நடந்துவந்த பாதையை மறந்த தமிழர்கள் ஐரோப்பாவிலே அர்த்தராத்தியிற் குடைபிடிக்கிறார்கள்.

'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு,,-என்கிறான் வள்ளுவன்.

ஒருவனுக்கு இல்லாமை எல்லாவற்றுள்ளும் மிகப்பெரிய இல்லாமை அறிவில்லாமையே ஆகும். மற்றப் பொருளில்லாமயை உலகத்தார் இல்லாமையாகக் கொள்ளமாட்டார்கள்.

பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்வையும் வாழ்வியல் பண்புகளையும் நிகழ்வுகளையும் தன்னிடத்தே கொண்டதால்தான் சிலப்பதிகாரம், மகாகவி பாரதி சொன்னதுபோல இன்னும் நெஞ்சை
அள்ளிக்கொண்டிருக்கிறது. அது உலகிற் தோன்றிய முதலாவது குடிமக்கள் காப்பியம்.

ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும். நல்ல ஞானம், நல்ல காட்சி, நல்ல ஒழுக்கம் என்ற மும்மணிகளை வாழ்க்கை முன்நோக்காகக் கொண்டது தமிழர் பண்பாடு.

தமது தாய்மொழியை ஐயம்திரிபறக் கல்லாதவரிடம் கலாச்சாரமோ நாகரீகமோ இருக்கும் என்று சொல்லுவது கடினம். எம்தாய்மொழியாம் தமிழ் ஒரு வாழ்க்கை வழிகாட்டி. அரசியல் வழிகாட்டி. அறவியல் வழிகாட்டி. அந்தக்கால அறிவியல் வழிகாட்டி.

'அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.,,(503) என்கிறது குறள்.

சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்த குற்றங்கள் எதுவும் இல்லாதவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமையென்பது இல்லாதிருப்பது அருமையோயகும்.

கற்றிந்த பேரறிஞர்களிடத்தும் ஏதாவாதொரு பலவீனம் இருக்கும். அதிமுட்டாளிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும். உலகில் எந்த மனிதனும் உதவாக்கரையாகவோ பெறுமதியற்றவனாகவோ இல்லை. இயற்கையின் அதியுயர் படைப்பு மனித மூளை என்று ஹேகல் சொல்லுவார். உலகில் அதிஉயர் அழகான படைப்பு மனிதப் படைப்பே என்று உலகம் மெச்சிய ஓவியக் கலைஞர் பிக்காசோவின் கருத்தென்று கூறுவார்கள்.

திட்டினாலும் தமிழிலே திட்டு. அது தேவகானமாக எனது காதில் ஒலிக்கும் என்று அருணகிரிநாதர் கூறுவார்.

'அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.

மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. "தண் தமிழின் மிகுநேய முருகேசா" என்று சிறுவாபுரி திருப்புகழிலும் "தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே" என்று பழனித் திருப்புகழிலும் வருகின்றன.

தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணகிரிநாதர் நிம்பபுரம் திருப்புகழில் "வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதம் அருள்வாயே" என்று முருகனிடம் வேண்டுகிறார். வண்தமிழில் அற்புதக் கவிபாட அருள்செய்.

தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தைத் தந்து அருளு என்று அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.

ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது முதன்மையானது.

"முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி" என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.

தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ், செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.

'சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே'

தமிழிலே பொதிந்துள்ள, அரசியற்கோட்பாடுகள், அரசியற்பொருளாதாரக் கோட்பாடுகளைக் காட்ட முனைவதுவே இந்தக் கட்டுரையின் நோக்குநிலையும் குறிக்கோளுமாகும்.


தொடரும்.....


Read more...

‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன்.

எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை!

தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவித நியாயபூர்வமான பதில்களும் கூறாமல் மறுதளிக்கும், இவர்களை நினைக்கச் சிரிப்புத்தான் வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமே உரிய,
ஆறாவது அறிவான சிந்திக்கும் திறனை இழந்த இவர்களும் பாவம்தான்! எத்தனை நாட்களுக்குத்தான் இல்லாதவற்றைச் சொல்லி என்னைத் திட்டித்தீர்ப்பது. அவர்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும்.

அதுமட்டுமா? கேட்பாரில்லாத சிந்திப்பாரில்லாத திருந்துவாரில்லாத, இந்தச் சமுதாயத்தை எத்தனை நாட்களுக்குத்தான் இடித்துரைப்பது என்று, எனக்கேகூட அலுத்துத்தான் போய்விட்டது. தீர்க்கதரிசனமற்ற தலைவர்கள், சிந்தனையில்லா மக்கள், புத்திசாலிகளான எதிரிகள் என, எம் இனத்தைச் சூழ்ந்து கிடக்கும் ஆபத்துக்களைப் பார்க்க, என்னாகப் போகிறதோ எம் இனம்? என்று மனம் பதறுகிறது. அந்த வருத்தத்தோடும் சிந்தனையோடும் படுக்கையில் கிடந்தேன்.

➤➤➤

‘ட்றிங்’ ‘ட்றிங்’ ‘ட்றிங்’……. திடீரென தொலைபேசி அழைத்தது. எதிர் முனையில் எனக்கு நெருக்கமான ஒரு ஊடக நண்பனின் குரல். ‘ஜெயராஜ் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது. உங்கள் கடிதத்தால் நம் தலைவர்கள், இன நன்மை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இனித் தமிழர்களுக்கு நல்லகாலம்தான்’ என்று பரபரத்தான் அவன். வழக்கமாக நிதானமாகப் பேசும் அவன் குரலில், புதிதாய்த் தெரிந்த பரபரப்பு ஆச்சரியப்படுத்த, ‘என்ன சுந்தர்? (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ன நடந்தது?’என்றேன். ‘என்ன நடந்ததா? பெரிய ஆச்சரியம் நடந்திருக்கிறது. நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லையா?’ என்று, செய்தி சொல்லாமல் என்னையும் பதற்றப்படுத்தினான்.

➤➤➤

‘சரியப்பா விஷயத்தைச் சொல்லாமல் இதென்ன பரபரப்பு’ என்று சினந்தேன். அவன் நிதானமாகச் சிரித்தபடி தொடர்ந்தான். ‘உண்மை அறிந்த உற்சாகத்தில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை, நீங்கள் சொன்னாற்போல நம் தலைவர்களெல்லாம் ஒன்றுபட்டு, இனப்பிரச்சினை பற்றி பேரினத்தாரோடு பேச முடிவுசெய்து விட்டார்கள். எதிர்காலத்தை மனதில் கொண்டு இனி செயல்படுவதென்று, மிக ஆச்சரியமாக அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.’ என்றான். நானும் சற்று ஆச்சரியத்துடன், ‘அதென்ன எதிர்காலத்திட்டம்?’என்றேன்.

➤➤➤

அவன் விபரித்ததைக் கேட்க எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. ‘நான் காண்பது என்ன கனவா? அல்லது நனவா?’ என்று, பழைய படமொன்றில் சிவாஜிகணேசன் ஒரு வசனம் பேசுவார். நண்பன் சொன்னதைக் கேட்டதும் அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வந்தது. என் எழுத்திற்கு இவ்வளவு சக்தியா? என்று மனம் மமதைகொள்ள முயல, ‘சீச்சீ’ அது சத்தியத்திற்கான சக்தி என்று புத்தி சொல்லிற்று. அப்படி என்ன அவன் சொன்னான் என்று கேட்கிறீர்களா? அந்த அதிசயத்தை ஏன் கேட்கிறீர்கள் போங்கள்! கடவுளின் பார்வை தமிழினத்தின்மேல் விழத் தொடங்கிவிட்டது போலும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அழைப்பின் பேரில், நம் தமிழ்த்தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடி, அற்புதமான சில முடிவுகளை எடுத்திருக்கிறார்களாம். அவர்கள் எடுத்த முடிவுகளை விபரமாய் நண்பன் சொன்னான். அவன் சொன்னவற்றை இங்கே எழுதுகிறேன். பொறுமையாகப் படியுங்கள்!

➤➤➤

அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில்,
➧ தமிழரசுக்கட்சி.
➧ தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி
➧ தமிழ் காங்கிரஸ் கட்சி
➧ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
➧ தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சுரேஸ் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - வரதராஜப்பெருமாள் அணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)
➧ ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
➧ ஜனநாயக போராளிகள் கட்சி

என்பவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனராம். ‘என்னது? தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியும், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், வரதராஜப் பெருமாளும் கூடவா அழைக்கப்பட்டனர்?’ என்று, ஆச்சரியத்துடன் நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ‘ஐயா பொதுமகனாரே! தயவு செய்து உங்கள் திருவாயைச் சற்று மூடுங்கள். என்னவோ ஏதோ! அவர்களும் தமிழ்மக்கள் பிரதிநிதிகளாய் அங்கீகரிக்கப்பட்டவர்கள்தானே. குற்றம் என்று பார்த்தால் மேற் சொன்ன எல்லாரிடமும் ஏதோ ஒரு குற்றத்தைச் சொல்லலாம்தானே. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்று நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். பிரிவுக்கான காரணம் தேடும் நேரமில்லை இது. உறவுக்கான காரணம் தேடும் நேரம். முதலில் எல்லோரும் ஒன்றுபடட்டும். தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றபின், மக்கள் மன்றில் அவரவர் தம்மை நிரூபித்துக் கொள்ளட்டும். ஒற்றுமையின் உன்னதத்தை அவர்களே விளங்க முற்படும் போது, பொதுமகனாராகிய நீர் தயவு செய்து அதைக் குழப்பாதேயும்’, ‘சரி சரி மேற்கொண்டு விடயத்தைச் சொல்லும் என்கிறீர்களா?’ இதோ உங்கள் உத்தரவுக்குப் பணிகிறேன்.

➤➤➤

அன்றைய கூட்டத்தில் மேற்படி கட்சியினர் ஒன்றிணைந்து, ஏகமனதாக சில முடிவுகளை எடுத்துள்ளார்களாம். நண்பன் சொன்ன அவர்தம் முடிவுகளைக் கீழே செய்திகளாய்த் தருகிறேன். ஆச்சரியத்தில் நீங்கள் மயங்கி விழும் வாய்ப்புண்டு. எதற்கும் ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

➤➤➤

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி நண்பன் சொன்ன விடயங்களைச் சுருக்கித் தருகிறேன்.

➧➧ முதலில் மேற்படி கட்சிகள் பத்தாண்டுகால அடிப்படையில் தமது கட்சிகளை கலைத்து விடுவதாய் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் கட்சிப் பிரிவுகள் இருக்குமாயின் எப்படியும் தத்தமது கட்சியின் வளர்ச்சி நோக்கியே தலைவர்கள் இயங்க முயற்சிப்பர். எனவேதான் இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகள் தத்தமது சொந்தக்கட்சிகளை கலைத்துவிடுவது எனும் முடிவு எடுக்கப்பட்டதாம்.

➧➧ அடுத்ததாய், இனி ஒருவரையொருவர் ‘துரோகிகள்’ என்று குற்றம் சாட்டுவதில்லை என தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனராம். முடிந்த வரலாற்றுப்பாதையில் எல்லாக் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் குற்றச்சாட்டுகள் பதிவாகி இருப்பது நிதர்சனமாகும். சந்தர்ப்பத்திற்கேற்ப தத்தம் குற்றங்களை மறைத்து மற்றவர்களது குற்றங்களை விரிவித்து சுயலாபம் காணும் எண்ணம் இருந்தால் கட்சிகளுக்கிடையிலான பகையுணர்வு நிலைத்தே நிற்கும். எனவேதான் மற்றவர் குற்றத்தில் தத்தமது தகுதியை நிரூபிக்க முயலாமல் பழைய வரலாறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாய் இருப்பதற்காயும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

➧➧ தத்தமது கட்சியின் வளர்ச்சி அடிப்படையிலன்றி இனவளர்ச்சி அடிப்படையில் ஒருமித்துச் செயல்படுவதாகவும், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தத்தம் கட்சிக்கு வாய்ப்பாகச் செயற்பட முனைவதில்லை எனவும் தமது கட்சி ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் கூட கட்சி மனப்பான்மையிலிருந்து வெளிவரச் செய்து இனநலன் நோக்கி ஒருமித்து இயங்கச் செய்வது எனவும் தலைவர்கள் உறுதி பூண்டனர். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்புக்கள் பெயரளவில் கூட்டமைப்புக்களாய் இருந்தனவேயன்றி இனநலன் நோக்கிய ஒருமைப்பாட்டுணர்வோடு அவை இயங்கவில்லை. அந்த ஆபத்து தொடராமல் இருக்கவே தலைவர்கள் அனைவரும் மேற்படி உறுதியைப் பூண்டுள்ளனராம்.

➧➧ ‘தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என இக்கூட்டமைப்புக்குப் பெயரிடுவது எனவும் தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்துமுகமாகவும், அவர்கள் தம் வாழ்வொளியைக் காக்க ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதைக் குறிக்குமுகமாகவும் பல கைகள் ஒன்றிணைந்து ஒரு ஜோதியை காப்பதான சின்னத்தை இக் கூட்டமைப்பின் சின்னமாக ஏற்றுக்கொள்வது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்துள்ளனராம்.

➧➧ இவ்வமைப்புக்கான தலைமையகக் கட்டிடத்தை வடக்கு, கிழக்கு எனும் பிரிவு ஏற்படாவண்ணம் இரு பிரதேசங்களுக்கும் பொதுவான ஒரு இடத்தில் தமிழர்தம் பாரம்பரியத்தையும் ஒற்றுமையின் பலத்தையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நம் கலாசார முறைப்படி பிரமாண்டமாக அமைப்பதென்றும் முடிவு செய்தனராம்.

➧➧ இவ்வமைப்புக்கான உறுப்பினர் படிவங்கள் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது எனவும் மாதந்தோறும் இவ்வுறுப்பினர் எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்காணிப்பது எனவும்  வருடத்தில் ஒருதரம் அத்தனை உறுப்பினர்களையும் ஒரு பொது இடத்தில் திரட்டிப் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவது எனவும் அப் பொதுக்கூட்டத்திற்கு இலங்கையில் இருக்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் விருந்தினர்களாய் அழைப்பதோடு ஒரு வெளிநாட்டுத் தலைவரை சிறப்பு விருந்தினராகவும் அழைப்பித்து நம் இனஒற்றுமைப்பலத்தை உலகறியச் செய்வதெனவும் தலைவர்கள் முடிவு செய்தார்களாம். நமது தாயகத்தில் இன்று இருபத்திரண்டு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாகவும் அவர்களுள் பதினைந்து இலட்சம் பேர் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும்; புலம்பெயர் நாடுகளில் எட்டரை இலட்சம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. (2012 கணக்கெடுப்புப்படி) இப்புதிய கூட்டமைப்பை ஆரம்பித்து ஒரு வருட எல்லைக்குள் நம் தாயகத்தில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் புலம்பெயர் நாடுகளில் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களையும் இக்கூட்டமைப்பின் உறுப்பினர்களாக்குவது என்றும் தலைவர்கள் ஏகமனதாய் முடிவு செய்தனராம்.

➧➧ அரசியல் சார்ந்து வரும் பதவிகளை வழங்குவதில் தகுதிக்கு முதலிடம் கொடுத்த பின்பு அத்தகுதி பெற்ற, இனவளர்ச்சிக்கு உண்மையாய்ப் பாடுபடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குவது என்றும், அச்செயல் மூலம் இனநலன் நோக்கி இயங்குவோரை ஊக்குவிப்பது என்றும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாம்.

➧➧ மேற்படி கூட்டமைப்புக்கென பெரிய அளவிளான நிதித்தளம் ஒன்றை உருவாக்குதல் அவசியம் என்பதால் மாதந்தோறும் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் உறுப்பினர்களால் திரட்டப்படும்  நிதியை, ‘ஈழத் தமிழர் நல்வாழ்வு நிதியம்’ என்னும் பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அந்நிதியத்தில் அதனைச் சேமித்து  தமிழ்ப் பிரதேசங்களின் அவசியமான மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அந்நிதியைப் பயன்படுத்துவது எனவும் தலைவர்கள் முடிவெடுத்தனராம்.

➧➧ மேற்படி அமைப்புக்காக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பதான ஊடக அமைப்புக்களை உருவாக்குவது எனவும் அதன் மூலம் இயக்கக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி, எதிர்ப்பரப்புதல் செய்வோரை முறியடித்து வெற்றி கொள்வதெனவும் தமது ஊடக பலம் கொண்டு கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைவோரைப் புறந்தள்ளி செயல்படுவதெனவும் அவ் ஊடகங்களின் மூலம் மாற்றினத்தாரும் தமிழர்தம் நியாயபூர்வமான கோரிக்கைகளை அறியும் வண்ணம் பரப்புதல் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டதாம்.

➤➤➤

‘என்னையா பொதுமகனாரே! இந்த விழி விழிக்கிறீர்கள். கவனம் விழி வெளியே விழுந்துவிடப்போகிறது! நம் தலைவர்களின் இனநலன் நோக்கிய, இத்திடீர் மாற்றங்களைக் கேட்டால் யாருக்குத்தான் வியப்பு வராது.
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால், இனி நாங்கள் யாரைத்திட்டி இணையங்களில் எழுதுவது என்று யோசிக்கிறீர்கள் போல, யார் தப்புகிறார்களோ இல்லையோ நானும் கம்பனும் தப்பினோம். இவர்களை புலி கலைத்தது எலி கலைத்தது என்று, இனி நீங்கள் கற்பனைக் கதைகளை எழுத முடியாதாக்கும். பகைமையை ஒழிப்பதென்று தலைவர்களே முடிவு செய்தபிறகு, நீங்களும் பகையை ஒழித்துத்தானே ஆகவேண்டும்.

ஒற்றுமையை விடப் பகைதான் சுவையானது என்று நினைக்கிறீர்களோ? உங்களது இந்த மனநிலையால்த்தானே தலைவர்களும் பிரிந்து கிடந்தார்கள். இனியாவது திருந்த முயலுங்கள். எதற்கும் ஒரு ‘பிளேன்ரீ’ குடித்து நிதானித்த பின் வாருங்கள். இவ்வளவத்தோடு விஷயம் முடிந்து விடவில்லை. இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. என்ன அதற்குள் ‘ரீ’ குடித்துவிட்டீர்களா? அத்தனை ஆர்வமாக்கும்? சரிசரி மேலும் படியுங்கள்

➤➤➤

இதுவரை தன்னாதிக்கப் போட்டி போட்டுக்கொண்டிருந்த நம் தலைவர்கள், இனி அதிகாரங்களைப் பரவலாக்குவது என்று முடிவு செய்து, நிர்வாகத்தினுள் உண்மையான ஜனநாயக முறையைக் கொண்டு வரப்போகிறார்களாம். எத்துணை அதிசயமான செய்தி! முன்பு போல் தனிமனிதர்களிடம் அதிகாரங்களைக் குவிக்காமல், நிர்வாகப் பரவலாக்குதலுக்காக சரியான ஜனநாயக முறைப்படி, பதினைந்து சபைகளை அவர்கள் அமைக்கப்போகிறார்களாம்.

அந்த சபைகள் பற்றிய விபரங்களைக் கீழே தருகிறேன்.

➤➤➤


01. அரசியல் வழிகாட்டுனர் சபை

மேற்படி சபையில் அரசியல் அனுபவமிக்க மூத்த தலைவர்கள் அங்கத்தினர்களாய் நியமிக்கப்படுவார்களாம். இவர்கள் வேறேதும் பதவிகளை ஏற்காமல் தமது அரசியல் அனுபவங்களைக் கொண்டு மற்றைச் சபையினருக்கு வழிகாட்டுதல் செய்வதிலும் பிரச்சினைகள் உருவாகும் போது அவற்றை நிதானமாய்க் கையாள துணை புரிவதிலும் உதவி நிற்பராம். இச்சபையில்  தமிழினத்தின் உரிமைபற்றி அக்கறையுடைய பிற இனத்தலைவர்கள் ஓரிருவரும் இணைத்துக் கொள்ளப்படுவராம்.

02. பாராளுமன்ற உறுப்பினர் சபை

மேற்படி சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களாய் உள்ள அங்கத்தவர்கள் அனைவரும் இடம்பெறுவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வில், தகுதியின் அடிப்படையில் தக்கவர்களை  ஒன்பது தலைவர்களும் ஒன்றுகூடி சிபாரிசு செய்வராம். இச்சிபாரிசு மக்கள்சபையில் (இச்சபை பற்றிய விபரம் பின்னே தரப்படுகிறது.) அங்கீகரிக்கப்பட்ட பின்பே மேற்படி உறுப்பினர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவார்களாம். இவ்  உறுப்பினர்கள் இன உரிமை பற்றிய விடயங்களைப் பாராளுமன்றத்தில் முன்னெடுப்பதிலும் இன நலன் பற்றிய விடயங்களை பாராளுமன்ற அதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும் உரிமை பெற்றிருப்பராம்.

03. மாகாண, உள்ளூராட்சி உறுப்பினர் சபை

மாகாண, உள்ளூராட்சி சபைகளின் அங்கத்தவர்கள் அனைவரும் இச்சபையின் உறுப்பினர்களாய் இயங்குவராம். உறுப்பினர்களின் தேர்வும் முன் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்வைப் போலவே அமையுமாம். இவர்கள் பிரதேச முன்னேற்றம் பற்றிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை மட்டும் பெற்றிருப்பராம். இன உரிமை பற்றிய விடயங்களில் இவர்களுக்கு அதிகாரம் இருக்காதாம்.


04. சட்ட ஆலோசகர் சபை

இச்சபையில் தமிழினத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்க சட்டத்துறைசார் அறிஞர்களும் புலம்பெயர்ந்து வாழும் சட்டத்துறை அறிஞர்களும் அங்கத்தவர்களாய் சேர்த்துக் கொள்ளப்படுவராம். மேற்படி கூட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் புதிய விடயங்களை சட்டமயமாக்கும் பொறுப்பும், உலக அரங்குகளில் தமிழர் உரிமை பற்றி முன்வைக்கப்படும் விடயங்களை சட்ட நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய அரசாங்கத்தினால் தமிழர் நலன் நோக்கிய திட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் வேளைகளில் அவற்றை நீதிமன்றத்தில் சந்திக்கும் பொறுப்பும் மற்றும் இன்னபிற சட்டம் சார்ந்த விடயங்களைக் கையாளும் பொறுப்பும் இக்குழுவினருக்கு உரியதாகுமாம்.

05. பொருளாதார ஆலோசகர் சபை

இச்சபையில் தமிழினத்தைச் சார்ந்த பொருளாதார அறிஞர்களும், வெற்றி பெற்ற வர்த்தக  நிறுவனங்களின் தலைவர்களும், நிதி அமைச்சில் பணியாற்றிய, பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் அங்கம் வகிப்பராம். வடகிழக்கில் அமைந்த பிராந்தியங்களின் தகுதிகளுக்கேற்ப பொருளாதார வளர்ச்சி பற்றி திட்டமிடும் பொறுப்பும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ‘தமிழர் நல்வாழ்வு நிதிய’ நிர்வாகத்தினை முன்னெடுக்கும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

06. கல்வி ஆலோசகர் சபை

தமிழர் பாரம்பரிய கல்வி முறையை உட்படுத்தி, உலக கல்வி நிலையைச் சமப்படுத்தும் புதிய கல்வி நெறியை அறிமுகப்படுத்தும் பொறுப்பும் தொழில் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கல்விப் பாதையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும், மத்திய கல்வி அமைச்சின் ஆலோசனைகளுக்கப்பால் கல்லூரி, பாடசாலை முதலியவைகளை செம்மையுறச் செய்யும் திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை நெறிப்படுத்தும் பொறுப்பும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

07. கலை, பண்பாடு, கலாசார ஆலோசகர்கள் சபை

தமிழினத்தின் பாரம்பரியமான கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்காத வகையில், அவற்றை நவீனமயப்படுத்தி ஈழத்தவர்க்கான தனிப்பாணிகளை உருவாக்குதலும் இளையோர் மத்தியில் அவ்வாற்றல்களைப் புகுத்தலும் அவர்தம் ஆற்றல்களை உலகளாவி வெளிக்கொணர வழி செய்யதலும் ஒழுக்கயீனங்களால் சமுதாய சமநிலை தவறும் இடங்களில் அவற்றைச் சீர்செய்தலுமான பொறுப்புக்களும் இவர்களுக்கு வழங்கப்படுமாம்.

08. வெளிநாட்டுத்தொடர்பாளர்கள் சபை


இனப்பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணலும் தமிழர் சார்பான நிலைப்பாட்டால் அந்நாடுகள் பெறக்கூடிய ஆதாயங்களை அவர் தமக்கு இனங்காட்டுதலும் தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் ஆதரவினையும் அந்நாடுகளிடம் பெறுவதற்கான வழிகள் சமைத்தலும் சமத்துவ வாழ்வுக்கான அந்நாடுகளின் அரசியல் நெறிகளை அறிந்து கொள்ளுதலும். நமது அரசோடு அந்நாடுகளைப் பேசச்செய்து அந்நெறிகளை புதிதாய் ஆக்கப்படும் அரசியல் அமைப்பில் இணைத்துக்கொள்ளச் செய்தலும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.

09. பிராந்தியத் தொடர்பாளர்கள் சபை


வடக்கு, கிழக்கிற்கு உள்ளேயும் இலங்கை முழுவதினுள்ளும் இருக்கும் தமிழர்தம் பிராந்திய வேறுபாடுகளைக் களைதலும் அவற்றிற்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதலும் இப்பிராந்தியங்களில் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றால் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும் மக்கள் நலன் நோக்கிய பொதுத்திட்டங்களில் பிராந்திய வேறுபாட்டுப் பாதிப்புக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்வதும் இவர்தம் கடமைகளாய் இருக்குமாம்.

10. இன நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை

நாடு முழுவதும் பிரிவுற்றிருக்கும் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைதலும் ஏற்கனவே விழைந்த இனப்பகை பற்றிய விடயங்களை நீக்க முயலுதலும் எல்லா இனத்திலும் உள்ள நல்லவர்களை ஒன்றிணைத்து அவர்தம் குரலை ஓங்கச் செய்தலும் இளையோர் மத்தியில் இன ஒற்றுமையை உருவாக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.

11. சமய நல்லுறவுத் தொடர்பாளர்கள் சபை
பிராந்தியங்களில் பலம் பெற்றிருக்கும் சமயங்கள் மற்றைய சமயங்களில் நலன்களைப் பாதிக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுதலும் மக்கள் தத்தம் சமயத்தைப் பேணுவதோடு மாற்றுச்சமயத்தை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குதலும் சமயச் சண்டைகளை நீக்க முயல்தலும் இவர்தம் கடமைகளாகுமாம்.

12. புலம்பெயர் இன அக்கறையாளர்கள் சபை

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தொகை இன்று எட்டரை இலட்சத்தையும் தாண்டி விரிந்திருப்பதாய் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இப்புலம்பெயர் தமிழர்கள் தத்தம் புகழ் நோக்கி தாய்மண்ணில் சில நற்காரியங்களை ஆற்றுகின்றனரேயன்றி ஒருமித்த அவர்களது ஆதரவுப்பலத்தை இன்னும் நம் இனம் பெறவும் பயன்படுத்தவுமில்லை. அதற்கான ஓர் புதுத்திட்டம் அமைக்கப்படல் வேண்டும் என்றும் முன் சொன்னாற்போல ஈழத்தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மேற்படி கூட்டமைப்பின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு நேர்மையான நிர்வாகிகள் அங்கு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் மூலம் வாரத்திற்கு ஒருதரம் புலம்பெயர் தமிழர் ஒருவர் தாயகத்திற்காக ஒரு பிரித்தானியப்பவுண் வழங்கும் முறைமையை கொணரவேண்டும் என்றும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனராம். ஒரு பவுண் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு மிகச் சிறிய தொகையேயாகும். (அவர்கள் ஒரு ‘பேகர்’ சாப்பிடுவதை விட குறைந்த தொகை) புலம் பெயர்ந்து வாழும் எட்டரை  இலட்சம் பேரில் குறைந்தது ஏழு இலட்சம் பேரையாவது இத்திட்டத்தில் இணைத்தால் மாதம் ஒருதரம் 7 இலட்சம் பவுண் நிதியாகக் கிடைக்கும். அது கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் பதினைந்து கோடி ரூபாவாகும். இப்பணத்தை நம் மண்ணுக்கு முறைப்படி கொண்டுவருவது பற்றி அரசுடன் பேசி வழி செய்யவேண்டும். இப்பணத்தைக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலுமாக ஒவ்வொரு மாதமும் சில பொருளாதாரக் கல்வித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அரசைச் சாராமலே நம் தாய்மண்ணை நாம் வளப்படுத்தலாம் என முடிவு செய்துள்ள தலைவர்கள் மேற்படி திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் அதிகாரத்தை இச்சபைக்கு வழங்கவுள்ளனராம்.

13. தாயகக் கட்டமைப்புத் திட்ட ஆலோசகர் சபை

இச்சபையில் நம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் பொறியியளாலர்களும் வரைபடக்கலைஞர்களும் அங்கம் வகிப்பராம். கடந்த பல ஆண்டுகளாக நமது தாயகப் பிரதேசம் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உட்படுத்தப்படாமல் பல்லாண்டுகளுக்கு முன் இருந்த நிலையிலேயே மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. நவீன வளர்ச்சிக்கேற்பவும் உலக நாடுகளை சமப்படுத்தும் வகையிலும் நம் தாயகக்கட்டமைப்புத் திட்டம் நவீனமயப்படுத்தப்படுதல் வேண்டும். இத்தகு பொறுப்புக்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெறுமாம்.

14. விவசாய முன்னேற்ற ஆலோசகர் சபை

நவீன விவசாய முறைகளை அறிமுகஞ் செய்தல், பிராந்திய நீர்வளங்களைப் பெருக்குதல், கால்நடை வளர்ப்பிலும் அவற்றின் பயன்களை சேமித்து விநியோகத்திலும் நவீன முறைகளைப் புகுத்துதல், விவசாயப் பயன்பாடுகளை சேகரித்துப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல், வடக்கு கிழக்கில் வெறுமையாய் உள்ள நிலப்பரப்புக்களைக் கையகப்படுத்தி விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், வீட்டு விவசாயத்தை ஊக்கப்படுத்துதல் முதலிய விடயங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை இச்சபை பெற்றிருக்குமாம்.

15. போர் பாதிப்பாளர் நல்வாழ்வுத் திட்ட ஆலோசகர் சபை

நடந்து முடிந்த போரினால் பாதிப்புற்ற அங்கயீனர்கள், விதவைகள், அனாதைகள், சொத்திழந்தோர் போன்றோரின் நல்வாழ்வு மீட்புத்திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தினை கொண்டிருக்கும் இச்சபை, புலம்பெயர் இன அக்கறையாளர் சபையினூடு பெறப்படும் நிதியத்தின் ஒரு பங்கை இப்பணிகளுக்கு பயன்படுத்துதல் பற்றி ஆராய்ந்து இச்சபை செயல்படுமாம். அரசியற்சபையின் பெரும்பான்மை அபிப்பிராயம் பெறப்பட்டே, இச்சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

➤➤➤

இதையெல்லாம் ஊடக நண்பன் சொல்லச்சொல்ல, என் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது போங்கள். உங்கள் நிலையும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவும்தானா? என்றேன் நண்பனிடம். என்ன அவசரப்படுகிறாய் கொஞ்சம் பொறு என்றவன், மேலும் சில செய்திகளைச் சொன்னான். அவன் சொன்னவற்றைக் கேட்டு, இத்தனை ஆற்றல்களையும் வைத்துக் கொண்டா, நம் தலைவர்கள் இதுவரை சும்மா இருந்தார்கள் என ஆச்சரியப்பட்டேன். அவன் சொன்னவற்றையும் சொல்லி முடித்துவிடுகிறேன்.

➤➤➤

மேற்படி சபைகளைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மொத்த சபை அங்கத்தவர்களை உள்ளடக்கி, அரசியற்சபை, மக்கள்சபை என இருவகையான சபைகளை, இக்கூட்டமைப்பினுள் உருவாக்குவார்களாம். இவற்றுள் அரசியற்சபை, இன முன்னேற்றம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்குமாம். மக்கள் சபை அரசியற்சபையை சரியாக வழிநடத்தும் பொறுப்பினைக் கொண்டிருக்குமாம். அரசியற்சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், மக்கள் சபையால் ஏகமானதாகவோ பெரும்பான்மையாகவோ அங்கீகரிக்கப்பட்ட பின்பே,
நடைமுறைப்படுத்தப்படுமாம்.

மேற்படி அரசியற்சபையில் 9 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும் அங்கம் வகிப்பார்களாம். முரண்பாடுகள் ஏற்படின் வாக்களிப்பில், பாராளுமன்றத் தலைவர்களுக்கு ஐந்து வாக்குகளும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மூன்று வாக்குகளும், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஒரு வாக்கும் வழங்கப்படுமாம். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஏகமனதாக அல்லது பெரும்பான்மையாக எடுக்கும் முடிவுகள், மக்கள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின்பே, அவை நடைமுறைப்படுத்தப்படுமாம்.

➤➤➤

மக்கள்சபையில் மேற்படி பதினைந்து குழுக்களிலும் உள்ள ஒவ்வொருவர் அங்கம் வகிப்பார்களாம். அங்கம் வகிக்கும் உறுப்பினரை அந்தத்தச் சபையினரே தேர்ந்தெடுத்து, மக்கள்சபைக்கு அனுப்பி வைப்பார்களாம். அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவற்றின் கூட்டங்களும், அவ்விரண்டு சபைகளும் இணைந்து நடத்தும் கூட்டமும் மாதம் ஒருதரம் நடாத்தப்படுமாம். மக்கள்சபையில் அமைந்துள்ள பதினைந்து குழுக்களும், வாரந்தோறும் தனித்தனி சந்தித்து, தத்தம் துறை சார்ந்த மக்கள் நலம் பற்றிய திட்டங்களை வடிவமைக்குமாம். அங்ஙனம் அவர்களால் வடிவமைக்கப்படும் திட்டங்கள், அரசியல்சபை, மக்கள்சபை ஆகியவை இணைந்து நடாத்தும் கூட்டங்களில், பெரும்பான்மை பற்றி அங்கீகரிக்கப்பட்ட பின், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை, அரசியல்சபை ஏற்றுக்கொள்ளுமாம்.

மாகாணசபை, உள்ளூராட்சிசபை ஆகியவற்றில், எதிரணிகள் இருக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போவதால், மேற்படி கூட்டமைப்பின் உறுப்பினர்களே, கொண்டு வரப்படும் திட்டங்களை திறந்த மனதோடு விவாதித்து, மக்கள் நலம் நோக்கி அத்திட்டங்களை நெறிப்படுத்தவேண்டும் என்றும், தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.

➤➤➤

உங்கள் மனநிலை எப்படியோ தெரியவில்லை. மேற்சொன்ன செய்திகளை ஊடக நண்பன் விபரித்ததும், என் கால்கள் தரையிலிருந்து மேலே கிளம்பிப் பறப்பதாய் உணர்ந்தேன். இனி என்ன? ஈழத்தமிழினத்தை எவராலும் அசைக்க முடியாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று தலைவர்கள் உணர்ந்து கொண்டார்கள். தலைவர்கள் உணர்ந்தால் இனி மக்களும் உணர்வார்கள். ‘அவன் கெட்டவன்’, ‘இவன் நல்லவன்’ என்று பிரிவுகள் பேசி, நம்மை நாமே பலயீனப்படுத்தும் துன்பம் இனி தொலைந்து போகும். ஆளுக்கொருவராய் அறிக்கைகள் விட்டு சீர்குலைந்த நம் இனம், இனி எதிரிகள் உள் நுழையாவண்ணம் இறுக்கமுறும். ஒற்றுமைப் பலத்தை எவர்தான் மதிக்காமல் இருக்கமுடியும்? தமிழர்கள் தலைநிமிரப் போவதை எவராலும் இனி தடுக்க முடியாது, என்றெல்லாம் எண்ணி என் மனம் துள்ளியது. ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று, உரக்கக் கூவியபடி உற்சாகத்தில் ஒரு துள்ளுத்துள்ளினேன்.

➤➤➤

‘தொப்படீடீடீடீர்’ என்று ஒரு சத்தம். முதுகு கையெல்லாம் ஒரே வலி. என்ன நடந்தது என்று நிதானிப்பதற்கு முன்? வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அறைக்குள் ஓடி வந்தார்கள். தரையில் இழுத்துப் போடப்பட்ட திமிங்கலம் போல, கட்டிலால் நிலத்தில் விழுந்து கிடக்கும் என்னைப் பார்த்து, ‘என்ன?’, ‘என்ன?’ என்று எல்லோரும் பதறினார்கள். அரைத்தூக்கத்தில் இருந்த நான், ‘ஆர் விழுந்தால் என்ன? தமிழினம் இனித் தலைநிமிர்ந்து விடும், நம் தலைவர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள், வாழ்க! தமிழ் இன உரிமை மீட்புக் கூட்டமைப்பு’ என்று உரத்துக் கூவ, எல்லோரும் என்னைக் கவலையாய்ப் பார்த்தார்கள்.

‘தலையில் அடிபட்டிருக்கும் போல, ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்’ என்று டாக்டர் நண்பர் சொல்ல, ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவராய்ப் பிடித்து என்னைத் தூக்க முனைகிறார்கள். முழுமையாய்த் துயில் கலைய, அப்போதுதான் நான் கண்டது கனவு என்பதும், கனவில் துள்ளிய துள்ளலில் கட்டிலால் விழுந்திருக்கிறேன் என்பதும் தெரிகிறது.

கண்ணோரத்தில் கண்ணீர். விழுந்த வலியால் அல்ல. இனிய கனவு முடிந்த வலியால். கனவிலாவது நல்லதைக் கண்டேனே! கனவுதான் வெற்றியின் முதல்படி என்றார் அப்துல்கலாம். யார் கண்டது? தமிழர்க்கு நல்ல காலம் வரும் போது, என் கனவும் நனவாகும் போல!.



Read more...

Friday, January 26, 2018

இலங்கை பாராளுமன்ற மோதல் முதலாளித்துவ வர்க்க ஆட்சி நாற்றமெடுப்பதன் வெளிப்பாடு. By Saman Gunadasa and K. Ratnayake

ஜனவரி 10 புதன் கிழமை, இலங்கை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சியினதும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் அடிபட்டுக்கொண்டமை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் உச்சகட்ட நெருக்கடியையும் நாற்றமெடுப்பையும் பொது மக்கள் கண்டுகொள்வதற்கு சந்தர்ப்பமாக அமைந்தது. இலங்கையில் “பாராளுமன்றத்தின் உயர்ந்த பண்பு” மற்றும் நாட்டின் ஆட்சியை நடத்துவதில் உள்ள “மகா சக்தி” பற்றியும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் ஆய்வாளர்களும் விடுக்கும் வாய்ச்சவடால்களுக்கு அடியில் அபிவிருத்தியடைந்து வரும் உண்மையான நிலைமையை இது அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளது.

2015 பெப்பிரவரி மாதம் மத்திய வங்கி பிணை முறி வெளியீடு ஒன்றின் மூலம் நடந்த பெரும் நிதி மோசடி சம்பந்தமாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை கலந்துரையாடுவதற்காகவே பாராளுமன்றம் கூட்டப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஊழல் மற்றும் ஜனநாயக-விரோத ஆட்சியை தூக்கி வீசி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்து ஒரு மாதத்துக்குள்ளேயே, அந்த பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் முன்னணியில் இருந்தவர்களே இந்த நிதி மோடிக்கு உடந்தையாக இருந்தமை ஆச்சரியத்திற்குரியதாகும். பேர்பச்சுவல் டெசரீஸ் கூட்டுத்தாபனம் செய்த இந்த மோசடிக்கு ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் நபர்களும், மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் அதிகாரிகளும், குறைந்த அல்லது கூடிய பட்சம் நேரடியகாவோ அல்லது மறைமுகமாகவோ இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

டிசம்பர் 30 அன்று தனக்கு கிடைத்த அறிக்கை பற்றி, ஜனவரி 3 அன்று ஜனாதிபதி சிறிசேன விடுத்த அறிக்கையின் படி, ஐந்து மாத குறுகிய காலத்துக்குள் பர்பச்சுவல் டெசரீஸ் நிறுவனம் சுரண்டிக்கொண்ட நிதி குறைந்த பட்சம் 11 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாக இருப்போதடு ஊழியர் ஓய்வூதிய நிதி உட்பட, அரச நிறுவனத்தால் பேணப்படும் ஓய்வூதீய நிதிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நட்டம் 8.5 பில்லியன்களை விட அதிகமாகும். இதற்கு முன்னர் இராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2008-2014 இடைப்பட்ட காலத்தில், மத்திய வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிணை முறி வெளியீடுகளுடன் சம்பந்தப்பட்ட இந்த பில்லியன் கணக்கான “நிதி மோசடி” பற்றி சரியானமுறையில் தெரிந்துகொள்வதற்கு, “தடயவியல் விசாரணை ஒன்றை” நடத்த வேண்டும் என ஆணைக் குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகனான பேர்பரசுவல் டெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் மேலும் பலபேருக்கு எதிராக, இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டு இடம்பெற்றுள்ள கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக, சட்ட ரீதியாக தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பிரேரித்துள்ளது.

கொள்ளையடிப்பின் விஸ்தீரணம் மற்றும் உண்மையான திருடர்கள் சம்பந்தமான சமிக்ஞைகள் மட்டுமே அம்பலத்துக்கு வந்துள்ளன. அலோசியஸின் நிறுவனம் சுரண்டிக்கொண்டதாக அம்பலத்துக்கு வந்துள்ள பிரமாண்டமான நிதித் தொகை மட்டுமே கூட முழுமையான வைத்தியசாலை ஒன்றை அல்லது பல பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கு போதுமானதாகும். அதற்கு முன்னர், இராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடி சம்பந்தமாகவும் செய்தி வந்தது. மத்திய வங்கி பிணை முறி ஊடாக இடம்பெற்ற மோசடிகளுக்கு மேலாக, மேலும் எத்தனையோ சுரண்டல்கள் பற்றி தமக்கிடையேயான மோதல்களுக்கு மத்தியில் ஆளும் வர்க்கத்தின் கும்பல்கள் ஒன்றுக்கு ஒன்று குற்றம் சாட்டிக்கொள்கின்றன.

பட்டப்பகல் திருட்டு அம்பலத்துக்கு வருகின்ற நிலைமையில், அரசாங்கத்தின் மற்றும் எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடியபோது, ஒருவருக்கு ஒருவர் “திருடன் திருடன்” என அசிங்கமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டு தமது அம்மணத்தை மூடிக்கொள்வதற்கான சண்டையை வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டனர். அவர்கள் தம்மை நேர்மையானவர்களாக காட்டிக்கொள்ளும் நோக்கத்திலேயே இவ்வாறு குற்றம் சாட்டிக்கொண்டனர். கொள்ளையடிப்புகளை நசுக்குவதாக கூட்டங்களில் சபதம் செய்யும் சிறிசேன, கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும் திருட்டுக்கள் நடக்கும்போது தான் அரசாங்கத்தின் தலைவராக இருந்தது எப்படி என்பது பற்றி எதுவும் கூறுவதில்லை.

அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் எதிர்க் கட்சி குழுக்கள், தத்தமது நேர்மையைப் பற்றி இந்தளவு பொய் கூறுவது, அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த மோசடி சம்பந்தமாக கிளர்ந்தெழும் சீற்றத்தை திசை திருப்பிவிடுவதற்கும் அதில் இருந்து தப்புவதற்குமே ஆகும். வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அதிகாரத்திற்கு வந்துள்ள ஆட்சியாளர்கள், யதார்த்தத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நசுக்கித் தள்ளி முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சி காணும் போராட்டம், அரசாங்கத்தின் ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், மேலும் மேலும் உக்கிரமடையும் என ஆளும் வர்க்கம் பீதி அடைந்துள்ளது.

இந்த அம்பலப்படுத்தல்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அணிதிரண்ட போலி-இடதுகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் எனச் சொல்லப்படுபவை அச்சம் அடைந்துள்ளன.

முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்க போலி கட்டுக் கதைகளை பின்னும் ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ஜனவரி 14 ஞாயிறு வெயீட்டுக்கு, பிணை முறி மோசடி நடந்தது ஏன்? என்பது பற்றி, கண்களுக்கு மண் தூவும் “விவரணம்” ஒன்றை வழங்கியுள்ளார். பிணை முறி மோசடியில் மத்திய வங்கியும் நாட்டின் அரசியல் கட்சிகளும் அழுகிப் போயுள்ள அளவு புரிந்துகொள்ள முடியும் என கூறும் ஐவன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இத்தகைய பிழைகளை செய்வதற்கு தூண்டப்பட்ட “என்னுடைய நம்பிக்கைக்கும் காரணமான அர்த்தப்படுத்தல் இதுவே” என விவரித்துள்ளதாவது: “கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும் செலவுகளைச் செய்யவேண்டி ஏற்பட்டதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதில் ஏற்பட்ட பெரும் கடன் சுமையை தீர்த்துக்கொள்வதற்காக, ’மத்திய வங்கிக்கு சாதகமான ஆளுனரை நியமித்து, கட்சிக்கு இருந்த நிதி நெருக்கடியை மத்திய வங்கி மூலமாக தீர்த்துக்கொள்வது சிறந்த வழி என நினைத்திருக்கலாம்’. இராஜபக்ஷ காலத்திலும் அப்படி நடந்திருப்பதால், இரகசியமாக அப்படிச் செய்ய முடியும் என ஐ.தே.க. தலைவர்கள் நினைத்திருந்தாலும், ’திட்டம் பிசகிவிட்டது’”.

தெற்காசியாவின் அரசியல் பண்டிதராக ஊடகங்களில் கூறப்படும் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, “அரசியல் உடலில் பற்றிக்கொண்டுள்ள பெருமளவிலான இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகிய புற்று நோயை அகற்றுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்புகின்றார்.

இந்த முரண்பாட்டை தீர்த்துக்கொள்வதானது “சரத் விஜேசூரிய தலைமைத்துவம் வகிக்கும் பிரஜைகள் இயக்கமும், ஐவன் ஐயா தலைமைவகிக்கும் புனருத்தாரண இயக்கமும், அனுர குமார திசாநாயக்க ஐயா தலைமை வகிக்கும் ஜே.வி.பி.யும் ஆழமாக கலந்துரையாட வேண்டிய விடயமாகும்” என உயன்கொட பிரேரித்துள்ளார். எனினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஊழல் எதிர்ப்பு என அரசாங்கத்தை அரவணைத்துக்கொண்ட உயன்கொட உட்பட இந்த கும்பல், அதன் செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இன்னொரு ஆய்வாளராக ஊடகங்களுக்கு கட்டுரைகள் எழுதும் குசல் பெரேர என்பவர், டெயிலி மிரர் பத்திரிகைக்கு பின்வருமாறு விவரித்துள்ளார்: “நாம் வாழ நேர்ந்துள்ள மேலும் மேலும் ஆழமடைந்து வரும் நெருக்கடிகளுக்கு, தேசிய ரீதியில் [ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டிய] தீர்வுகள் சம்பந்தமாக, ஆழமான கலந்துரையாடல்கள் இல்லை,.” சில சட்டங்களை திருத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே கடும் தீர்வு என ஜே.வி.பி. உட்பட ஊழல்-எதிர்ப்பு குழுக்கள் கோருகின்றன. எனினும், பாராளுமன்றமே சட்டத்துக்கு முரண்பாடானது என்றும் தற்போதைய அரசியல்வாதிகள் சம்பந்தமாக நம்பிக்கை இல்லை என்பதையும் கூறும் குசல் பெரேராவின் பிரேரணை பின்வருமாறு உள்ளது: “நாம் துணியை நன்கு துவைத்து காயவிடும் எதிர்பார்ப்புடன் அடிக்கடி லோன்றிகளுக்கு செல்லாமல், பாராளுமன்றத்தை அன்றாடம் துப்புரவுபடுத்தி வைக்கின்ற புதிய மற்றும் மாற்றீட்டு நடவடிக்கை ஒன்றை வழங்குவது அவசியமாகின்றது”. அவர், “இந்த சமூகம் சிதறுண்டு போவதற்கு முன்னர், சிறந்த நடவடிக்கையைக் கொண்ட புதிய அபிவிருத்தி மாதிரி ஒன்றைப் பற்றி உடனடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரே தோள் கொடுத்த “நல்லாட்சி மாதிரி” அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், இந்த ஊழல்கள் உச்சத்திற்கு செல்வதைத் தடுப்பதற்காக, புதிய அபிவிருத்தி மாதிரி பற்றிய கலந்துரையாடல்கள் மூலம் முட்டுச் சந்து ஒன்றை உருவாக்கி விடுவதற்கு பெரேரா பிரேரிக்கின்றார். தாம் காலூன்றிக்கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்புமுறை சிதறிப்போகக்கூடிய நெருக்கடி உருவாகியிருப்பதால், தலையில் இருந்து பாதம் வரை தமது நாற்றமெடுப்பை பல்வேறு வழியில் காட்சிப்படுத்துகின்ற ஆளும் வர்க்கத்தின் பகுதியினரதும் அவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களதும் தொடைகள் நடுங்கத் தொடங்கியிருக்கின்றது. ஊழல்களுக்கு எதிராக கண்டனம் செய்யும் இவர்களின் கட்டுரைகளில், ஊழல் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை க்கும் இடையிலான உறவு பற்றி, ஒரு சொல் கூட இல்லாமல் இருப்பது தற்செயலானது அல்ல. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வெளியில் ஒரு உலகம் அவர்களுக்கு கிடையாது.

ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஊழல் குணாம்சத்தை வெட்டி அகற்றி, முதலாளித்துவ அமைப்புமுறையை துப்புரவு செய்து பாதுகாக்க முடியாது. முதலாளித்துவத்தின் உச்சத்தில் இருக்கும் ஊழல் மற்றும் சூறையாடல்கள், முன்னேறிய நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் சீரழிவினால் தோன்றியுள்ளது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியை முன்னெடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் சீரழிந்து, ஜனநாயக-விரோத அமைப்புகளாக மாறியுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் அவற்றை தமது உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களாக பயன்படுத்த முடியாது.

நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே நிதி மூலதனம் மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய யுகத்தின் ஒட்டுண்ணி பண்பு பற்றி ஆராய்ந்த லெனின், நிதி பிரபுத்துவ தட்டின் எழுச்சியை ஆராய்ந்தார். நிதி மூலதனத்தின் எழுச்சியுடன் சம்பந்தப்பட்ட “பிரமாண்டமான ஊழல், இலஞ்சம் மற்றும் எல்லா வகையிலுமான மோசடிகள்” அதன் குணாம்சங்களாகும். “இந்த அமைப்புமுறைக்குள் ஜனநாயக, குடியரசு மற்றும் பிற்போக்கு மன்னர் ஆட்சிகள் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான வேறுபாட்டை மூடி மறைத்து, அவர்கள் இரு தரப்பினருமே அழுகிக்கொண்டு வாழ்கின்றனர்,” என லெனின் குறிப்பிட்டார்.

அக்காலத்தில் இருந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறையை இந்த ஊழல் பற்றிப் படர்ந்துள்ளது. இந்த நிலைமையில், உற்பத்தி பொருளாதாரத்தில் இருந்து மேலும் மேலும் தூர விலகி, நிதி ஊகம் மற்றும் சூறையாடலில் பணம் சம்பாதிப்பதை எல்லா நாடுகளிலும் காணக் கூடியதாகிருப்பது தற்செயலானது அல்ல. அதற்கு சமாந்தரமாக உலக அளவில் ஒரு மூலையில் நிதி குவிவதும், மறு மூலையில் வறுமை குவிவதும் இடம்பெறுகின்றது.

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களும், முதலாளித்துவ அமைப்புமுறையை துப்புரவு செய்து பேணிக் காப்பது பற்றிய அதன் கள்வர்களின் வஞ்சத்தனமான திட்டத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும். தற்போதைய சமூக நோய்கள் அனைத்திற்கும் அழுகிப்போன முதலாளித்துவமே தோற்றுவாயாகும். தற்போதைய அமைப்புமுறையை மாற்றியமைப்பதன் மூலமே அதை இல்லாமல் ஆக்க முடியும். பிரதான முதலாளித்துவ தொழிற்துறைகள், வர்த்தகங்கள் பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர் ஆட்சியின் கீழ் சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இது சர்வதேச சோசலிசத்துக்காக முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் பாகமாகும்.

பெப்பிரவரி மாதம் நடத்தப்பட உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஊழலை அகற்றும் விடயத்தையே சகல கட்சிகளும் மோசடித்தனமாக முன்வைக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சி, இந்த சகல கட்சிகளுக்கும் முற்றிலும் மாறான சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அவசியமான புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றது. அது வட இலங்கையில் யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறை, மத்திய பெருந்தோட்ட பிரதேசமான அம்பகமுவ, கொழும்பு கொலன்னாவை ஆகிய ஊள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுகின்றது.

Read more...

உண்மையும், யதார்த்தமும் மறைக்கப்படும் சாக்கடை அரசியல்! ‘அண்டம் காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியலே’ வி. சிவலிங்கம்.

தமிழ் அரசியல் தற்போது எடுத்துச் செல்லப்படும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பொய்களும், புனைவுகளும். ஆர்ப்பரிப்பும் உண்மைகள் மக்களைச் சென்றடையவிடாது தடுக்கின்றன. சுயநலமிகளினதும், சந்தர்ப்பவாதிகளினதும் கைகளில் ஊடகங்கள் இருப்பதால் உண்மைகள் சென்றடையாமல் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நல்ல அரசியல் சக்திகளை மக்களால் அடையாளம் காணப்பட முடியவில்லை. அரசியல் யதார்த்தங்களை மக்கள் தத்தமது மனங்களில் விவாதித்து முடிவுகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட முடிவுகள் உணர்ச்சிகளுடன் கலந்து ஊட்டப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே துன்பச் சுமைகளுக்குள் உழலும் மக்களால் உண்மை நிலமைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை. அதிகார மமதையும்,ஆதிக்கச் செருக்கும் போரிற்குப் பின்னதான எச்ச சொச்சங்களாக வலம் வருகின்றன.

தற்போதைய ஊள்ளுராட்சித் தேர்தல்கள் ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்த உதவலாம் என்ற நம்பிக்கை சிதைந்துள்ளது. எந்தவிதமான அரசியல் மற்றும் சமூகக் கட்டுமானங்களற்று ஊழல்களின் இருப்பிடங்களாக மாறிவிட்ட அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் துன்பத்தில் சிக்கியுள்ள மக்களை மேலும் அதற்குள் தள்ளும் அரசியலையே நடத்துகின்றன.
இவற்றிற்கெதிரான சக்திகள் காணப்படினும் அவற்றிற்குள்ளும் இணைப்புகள் இல்லாதது வேதனைக்குரியது. இதற்குப் பிரதான காரணம் அங்கு தொடர்ந்தும் வன்முறை சக்திகளின் ஆதிக்கம் நிலவுவதுதான். மக்கள் இன்னமும் கடந்த கால இருண்ட வாழ்விலிருந்து மீளவில்லை. ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம் மக்களைச் சென்றடையவில்லை. மாற்று அரசியல் சிந்தனைகள் மக்கள் எண்ணங்களை எட்டவில்லை.

இலங்கை அரசியலில் முதன் முறையாக பெண்களுக்கு வழங்கியுள்ள பொது வாழ்விற்கான அங்கீகாரம் முளையிலேயே கிள்ளி எறியப்படும் ஆபத்துக்கள் ஆங்காங்கே எழுந்துள்ளன. இவை தமிழ்ப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமைப்பனால் எடுத்துச் செல்லப்படுவது மேலும்வெறுப்பை ஏற்படுத்துகிறது. தாம் ஜனநாயகவாதிகள் எனவும், அகிம்சாவாதிகள் எனவும் கூறிக்கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதை அவதானிக்கும் போது இவை அரசியல் அஸ்தமன அந்திம காலத்தின் இயலாமையின் வெளிப்பாடே என எண்ணத் தோன்றுகிறது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அக் கட்சியால் நியமிக்கப்பட்ட பெண் வேட்பாளரை கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கட்சித் தலைமைப் பீடம் எந்த நடவடிக்கையையும் அந்த உறுப்பினர் மீது மேற்கொள்ளவில்லை. அப் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பிற்காகச் சென்ற பொலீசாரும் அக் கொடுமையைக் கண்டும் செயலற்று இருந்தனர். இக் குற்றச் செயலைத் தடுக்க பொலீசார் ஏன் முன்வரவில்லை? என அந்த உறுப்பினரை வினவியபோது அப் பொலீசார் தனது பாதுகாப்பிற்காக வந்தவர்கள் எனப் பதிலளித்துள்ளார். அப் பெண் அபேட்சகரைத் தாக்கியது மட்டுமல்ல பொலீசாரை ஈடுபடுத்தவும் அவர் தவறியுள்ளார். தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தின் வன்முறை அருவருக்கத் தக்கது. இதனைக் கண்டித்துப் பேச வக்கற்ற நிலையில்  கூட்டமைப்பின் இதர கட்சிகள் மௌனமாக உள்ளன. இப் பெண் அபேட்சகர் மலையகத்தைப் பின்னணியாகக் கொண்டவர். இத் தாக்குதலுக்கு அவரது பின்னணியும் வாய்ப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது. தமிழர் ஒற்றுமை குறித்துப் பீத்தும் தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மைத் தோற்றம் இதுவே.

முஸ்லீம் மக்கள் தனித்துவமானவர்கள், அம் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கொக்கரிக்கும் முஸ்லீம் தலைமைகள் இத் தேர்தலில் நடந்து கொள்ளும் முறை அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் பெண்கள் மிகவும் இழிந்த விதத்தில் பகிரங்கமாக முகப்புத்தகங்களில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் முஸ்லீம் பெண்மணி ஒருவரின் காரியாலயம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் அதிகளவு முஸ்லீம் பெண்கள் பொதுவாழ்விற்குள் வருவது இதுவே முதற் தடவையாகும். அதுமட்டுமல்ல மிகவும் உறுதியுடன் இத் தேர்தலில் அப் பெண்கள் இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது.

நாற்றமெடுக்கும் தமிழ் அரசியல்

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழரசுக் கட்சி தனது அரசியல் வலுவை இழந்திருப்பதை அதன் அரசியலும், நடைமுறையும் நன்கே தெளிவுபடுத்துகிறது. தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவது என்பது பயனற்ற பொது நடைமுறையாகிவிட்டது. தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் வெளியிட்ட எந்தத் தேர்தல் விஞ்ஞாபனமும் நடைமுறை சார்ந்ததாக இருந்ததில்லை. இவை மக்களை ஏமாற்றும் தந்திரங்களாகவே இருந்தன.

ஆனால் இம்முறை அவர்கள் ஏற்படுத்திய பொறிக்குள் அவர்களே வீழ்ந்துள்ளதை நாம் காண முடிகிறது. உள்ளுராட்சித் தேர்தல்கள் என்பது உள்ளுர் அபிவிருத்திகளை மையப்படுத்தியது என ஆரம்பத்தில் தெரிவித்த தமிழரசுக் கட்சியினர் தற்போது இத் தேர்தலை புதிய அரசியல் யாப்பில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக மாற்ற முனைந்துள்ளனர்.

தற்போது வெளிவந்துள்ள அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை என்பது நிரந்தர அரசியல் அமைப்பாக கருதப்பட்டு விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ தே கட்சி என்பன இணைந்த தேசிய அரசு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன் வந்தமையால் தாம் இந்த அரசை ஆதரிப்பதாக கூட்டமைப்பினர் கூறினர். பதவிகளைப் பெற்றனர். அரச ஆடம்பரங்களை அனுபவித்தனர். தற்போதைய தேர்தல் விவாதங்களைப் பார்க்கும் போது தேசிய அரசு நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் புதிய அரசியல் அமைப்பு வருமா? என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

இந் நிலையில் தேர்தல் கூட்டங்களில் கூட்டமைப்பிற்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் தமிழரசுக் கட்சியினரும், எதிர் தரப்பினரும் தமிழ் மக்களைப் பயமுறுத்தும் அரசிலிற்குள் தள்ளி வருகின்றனர். குறிப்பாக தமிழர் கூட்டமைப்பிற்கு எதிராக இதர கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஒரு புறத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமையிலும், மறு புறத்தில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலும் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்த இரு தரப்பினரும் எடுத்துள்ள அரசியல் விவாதங்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், தவறாக வழி நடத்துபவையாகவும், மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த எந்தவித திட்டங்கள் அற்றதாகவும், மக்களைக் குழப்பத்தில் தள்ளுவனவாகவும் உள்ளன. இவற்றில் சிலவற்றை வாசகர்களின் கவனத்தில் தருவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இறைமை குறித்த விவாதங்கள்

கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையை நிரந்தர யாப்பாக முன்வைத்தே விவாதங்களை நகர்த்துகின்றனர். இடைக்கால அறிக்கை என்பது மக்களின் விவாதத்திற்காக, கருத்தக்களை அறியும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையாகும். இவ் விவாதங்களின் பின்னர் முன் வைக்கப்படும் திருத்தங்களை வழிகாட்டுக் குழு பின்னர் விவாதித்து முடிவு செய்யும். எனவே இவ் இடைக்கால அறிக்கையை முடிவுப் பொருளாக முன்வைத்து அரசியலை எடுத்துச் செல்வது மக்களை ஏமாற்றுவதாகும்.

இருப்பினும் விவாதங்களை ஆராய்ந்து பார்ப்போம். இத் தேர்தலை புதிய யாப்பிற்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்றும் முயற்சியில் கஜேந்திரகுமார், சுரேஷ் ஆகிய தரப்பினர் இணைந்து செயற்படுகின்றனர். இவர்கள் புதிய இடைக்கால வரைபின் ஆரம்ப பக்கங்கள் ஒரு சிலவற்றுடன் தமது விவாதங்களை முடிக்கின்றனர். ஏனெனில் ஆரம்பமே பிழை என்பதால் அதற்கு மேல் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். ஆனால் ஏனைய பிரிவுகளுக்குச் செல்லும்போது அவர்களின் விவாதம் வலுவற்றதாக மாறும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இங்கு எமது அவதானத்திற்குரியது எதுவெனில் புதிய யாப்பு தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறதா? என்பதை விட அதன் அடிப்படைத் தார்மீக விவாதம் திரிபுபடுத்தப்படுவதையே முதலில் அவதானிக்க வேண்டியுள்ளது. இங்கு பிரிவினைவாத அரசியல் வேறு கோணத்தில் அதாவது தமிழ் இறைமை என முன் வைக்கப்படுகிறது.

முதலில் நாட்டின் கட்டுமானம் எவ்வாறானது? என்பதற்கான வியாக்கியானங்களே அவர்களது கவனத்தில் உள்ளது. உதாரணமாக இலங்கை அரச கட்டுமானம் என்பது ‘ஏக்கய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு’ என்பதற்கான விளக்கம் குறித்த விவாதங்களாகும்.

முதலில் இடைக்கால வரைபில் உள்ள விளக்கத்தினை அவதானித்தால் அதில் இலங்கை என்பது இறைமையும், சுயாதீனமும் உள்ள நாடு அதாவது ‘ஏக்கய ராஜ்ய’ அல்லது ‘ஒருமித்த நாடு’ என்பதுடன் அது மத்தியிலும், மாகாணத்திலும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் கட்டுமானங்களைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் இலங்கையின் ஆதிபத்தியம் மத்தியிலும், மாகாணத்திலும் உள்ள நிறுவனங்களால் பரிபாலிக்கப்படுகிறது என்பதாகும். இதுசமஷ்டியா? அல்லவா? அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? அல்லது மாகாணங்களுக்கும் பகிரப்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? என்பதை வாசகரிடம் விடுகிறேன். இதன் பிரகாரம் பார்க்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பு (1978) ஒற்றை ஆட்சி எனக் குறிப்பிடப்படுவது அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை என்பதால் அவ் விளக்கம் நாட்டின் ஒட்டுமொத்த கட்டுமானத்தின் தோற்றத்தினை அதாவது ஏனைய சமூகங்களும் இத் தேசத்திற்குள் உள்ளனர் என்பதை அது புலப்படுத்தவில்லை. பதிலாக அரசின் தன்மையை விபரிக்கிறது என்பதை சிங்கள மக்களும் ஏற்றுள்ளதால் அதனை மேலும் விரிபுபடுத்தும் வகையில் மேலும் விளக்கத்தை இணைத்துள்ளனர். எனவே ‘ஏக்கய ராஜ்ய’ என்பது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாததாகவும், அரசியல் அமைப்பை மாற்றும் அதிகாரம் அரசியல் அமைப்பில் வழங்கியுள்ளவாறு பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் உரியது எனக் குறிப்பிடுகிறது. இங்கு எந்த இடத்திலும் சிங்கள மக்கள் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. இது எவ் விதத்தில் சிங்கள மக்களை மட்டும் குறிக்கிறது?

இந் நிலையில் கஜேந்திரகுமார் தரப்பினர் ஒற்றை ஆட்சி என்ற ஒற்றை விவாதத்திற்குள் சென்று அதன் விரிந்த விளக்கத்தை மறைக்க முயற்சிக்கின்றனர். சமஷ்டியை ஏற்காத அவர்கள் சமஷ்டியைக் காணவில்லையே! என வினவுகின்றனர். இங்கு மாற்றம் சமஷ்டியை நோக்கியதா? இல்லையா? என்பது தனியான விவாதத்திற்கு உரியது. ஆனால் புதிய விளக்கம் இதர தேசிய இனங்களின் இருப்பை அங்கீகரிப்பதாகவே உள்ளது.
இனி நாட்டின் இறைமை அதிகாரம் குறித்த விளக்கங்களைப் பார்ப்போம். புதிய வழிகாட்டுக் குழு அறிக்கையில் ‘நாட்டின் இறைமை மக்களுக்குரியது. பாராதீனப்படுத்த முடியாதது.’ எனவும், அவ் இறைமை அதிகாரம் அம் மக்களிடமே தொடர்ந்து இருக்கும் எனவும்,அவர்களிடமிருந்து பிரிக்க முடியாதது எனவும் கூறுகிறது.

நாட்டின் இறைமை குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள இப் பிரிவை இவர்கள் வியாக்கியானப்படுத்தும் முறை நாட்டின் சட்டத்துறை சார்ந்தவர்களை அவமானப்படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக நாட்டின் இறைமை மக்களுக்குரியதாக இருப்பதோடு, பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பகுதி நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பிரிக்க முடியாத இறைமை அதிகாரத்தைக் குறிக்கிறது. இந்த இறைமை அதிகாரம் என்பது மனிதன் என்பதை மையமாகக் கொண்டு வியாக்கியானப்படுத்தப்படுகிறதே ஒழிய தமிழ், சிங்களம், முஸ்லீம் என அடையாள அரசியல் வழியில் வியாக்கியானப்;படுத்தப்படவில்லை.
ஆனால் இவர்கள் மக்கள் என்பதை மறைத்து அதனுள் தமிழ் மக்கள் என்பதை இணைத்து தமிழ் மக்களின் இறைமை என வியாக்கியானம் செய்கின்றனர். இறைமை அதிகாரம் என்பது மக்களிடமிருந்து பிரிக்க முடியாதது என்பது அரசு என்பது மக்களின் தேவைக்காக மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது. மக்களே தமது உரிமை அதிகாரத்தை சகல மக்களும் பாராளுமன்றம் சென்று பிரச்னைகளைத் பேசித் தீர்க்க முடியாது என்பதால் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். தமது இறைமை அதிகாரத்தை தமது வாக்குச் சீட்டின் மூலமாக தமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தற்காலிகமாகஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தமது இறைமையை ஒப்படைத்தார்கள். எனவே இறைமை அதிகாரம் என்பது மக்களிடமே தொடர்ந்து இருக்கும், தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதி கொடுத்த வாக்குறுதியை மீறும் பட்சத்தில் மீள அழைக்கும் அதிகாரமும் அந்த மக்களுக்கு உரியது. எனவேதான் இறைமை அதிகாரம் மக்களிடம் தொடர்ந்து இருக்கும் என யாப்புக் கூறுகிறது. இந்த இறைமை அதிகாரம் தனி நபர் இறைமையைக் குறிப்பிடுகிறதே தவிர ஒருபோதும் கூட்டு இறைமையைக் கூறவில்லை. மனித உரிமை என்ற கோட்பாடு இந்த தனி மனித இறைமை அதிகாரத்திலிருந்துதான் எழுகிறது. தமிழ் இறைமை எனக் கூறி மனிதனின் இறைமையைக் கொச்சைப்படுத்தும் அரசியலாகவும், மக்களை அறிவிலிகளாகக் கருதும் போக்காகவும்இது உள்ளது.

பிரிவினை அரசியல்


இவர்களால் முன்வைக்கப்படும் விவாதங்கள் மறைமுகமாக பிரிவினை அரசியலை மீண்டும் முன்வைக்கும் தந்திரங்களாக உள்ளன. உதாரணமாக இலங்கை என்பது இரண்டு பிரதான தேசங்களை உள்ளடக்கியதெனவும், அது சிங்கள தேசம், தமிழ்த் தேசம் என்பதாக அமையுமெனவும், சிங்கள தேசத்திற்கு இறைமை அதிகாரம் உள்ளது போலவே, தமிழ்த் தேசத்திற்கும் இறைமை உள்ளது எனவும், இறைமை பிரிக்க முடியாதது என அரசியல் வரைபு கூறுவது தமிழ் மக்களின் இறைமையை மறுப்பதாக அமையும் என பிரிவினைவாதம் உள்ளெடுக்கப்படுகிறது. இவ் வரைபை ஏற்றால் இலங்கைத் தீவில் தமிழர் தேசம், தமிழர் தாயகம், அந்தத் தாயகத்திற்கான இறையாண்மை என்பவை ஏதும் இல்லை என ஆகிவிடாதா? என முன்வைக்கப்படுகிறது.இவ் வகை அரசியல் மிகவும் சூழ்ச்சி நிறைந்தது. மக்களை உணர்ச்சிக்குள் தள்ளி மீண்டும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பயணிக்க வைக்கிறது.இங்கு தனிமனித இறைமை அதிகாரம், தமிழ் இறைமை அதிகாரம் என்ற பதங்களிடையே ஏற்படுத்தப்படும் குழப்பமான விளக்கங்களே கவனத்திற்குரியவை.

புதிய அரசியல் யாப்பு வரைபில் இலங்கை மக்கள் என்பதைத் தவிர சிங்கள, தமிழ் இறைமை என எந்த இடத்திலும் இல்லை. ஆனால் அவ்வாறு இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழ் மக்களுக்கான தனி இறையாண்மை உள்ளதெனில் அக் கொள்கையோடு ஆரம்பித்து தனிப் பாராளுமன்றம் அமைக்க தமிழ் மக்களின் ஆணையைக் கோர வேண்டும். சிங்களதேசத்தின் பாராளுமன்ற மற்றும் ஏனைய தேர்தலில் பங்குபற்றுவது அவர்கள் கூறும் தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் இறையாண்மையை ஏற்றுச் செயற்படுவதாகும். தமிழ் மக்களின் இறையாண்மையை தமிழ் மக்களே பிரயோகிக்க வேண்டும். சிங்கள தேசத்தின் இறையாண்மைக்குள் உள்ளதாகக் கூறும் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு செல்ல முடியும்? அவ்வாறானால் சிங்கள தேசத்தின் இறையாண்மையை ஏற்பதாக அமையாதா?  இவைஇவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முன் வைக்கும் குறுக்கு வழிகளாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அங்கு சென்ற வேளையில் இவ் இறைமை அதிகாரம் குறித்து ஒருபோதும் பேசியதில்லை. இலங்கை அரசின் அரசியல் அமைப்பின் இறைமை குறித்த பிரச்சனைகள் பற்றிப் பேசியதில்லை. பதிலாக இலங்கையின் நீதித்துறையினதும், ராணுவத்தினதும் அரசியல் அமைப்பு மீறல்களை, மனித உரிமை மீறல்களைப் பேசியுள்ளார். இதன் அர்த்தம் என்ன? இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசு செயற்படவில்லை என முறையிடுவது எனில்,அரசியல் அமைப்பை ஏற்றே அவ் விவாதங்களை நகர்த்தியுள்ளார். அவரால் தனது முறைகெட்ட அரசியல் விவாதங்களை சர்வதேசம் முன்னிலையில் வைக்க முடியவில்லை.மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் இந்த அரசியல் ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் ஆறுமுன்னர் மீண்டும் இறைமை என்றபோலி முகங்களுடன் மக்களை ஏமாற்றுவது மிக மோசமான வஞ்சக அரசியலாகும்.

இவ் வகையான துரோக அரசியல் குறித்து தமிழரசுக் கட்சி மௌனமாகச் செல்கிறது.இவர்களில் பலர் இந்த அயோக்கிய அரசியல் தொடர மனதார விரும்புகின்றனர். இவர்களால் ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்களை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இவர்களும் மக்களைப் பயமுறுத்தியே செல்கின்றனர். எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி கூட்டமைப்பு தனது ஆதரவை இழக்க நேரிட்டால் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற முடியாமல் போகலாம். தமிழ் மக்கள் எமக்குத் தந்த ஆதரவை மீளப் பெற்றுள்ளார்கள் என்ற நிலையை ஏற்படுத்த உதவாதீர்கள் எனப் பயமுறுத்தல் வழியில் கூறும் சுமந்திரன், இறைமை குறித்து கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது தவிர்த்து வருகின்றார்.

இவர்களால் புதிய அரசியல் யாப்பு சாத்தியமா? என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. அதே போல அவ்வாறு அரசியல் அமைப்பு சாத்தியப்படாத நிலை ஏற்பட்டால் மாற்றுத் திட்டமும் இவர்களிடம் இல்லை. எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் அரசை ஆதரிக்கின்றனர். ராணுவம் நிலங்களை விடவில்லை. முகாம்களிலிருந்து விலகவில்லை. சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனோர் காரியாலயம் செயற்படவில்லை. போர்க்குற்ற விசாரணையைக் காணவில்லை. இடைக்கால  நீதி வழங்கப்படவில்லை. இவ்வாறு பட்டியல் நீழ்கிறது.

அரச மட்டத்தில் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இவ்வாறான சரணாகதி அரசியல் எந்த முன்னெற்றத்தையும் தரப் போவதில்லை. அரசாங்கத்தை நிபந்தனை இல்லாமல்  காப்பாற்றுவதற்கான நியாயங்கள் எதனையும் காணவில்லை. சர்வதேச வலையில் வீழ்ந்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை விலை கூறி விற்பதாகவே இவை காணப்படுகிறது. விட்டுக் கொடுப்பே எஞ்சியுள்ளது. மாற்று அரசியல் வழிமுறைகளும் இல்லை. பலமான சிங்கள, தமிழ்,முஸ்லீம் இணைப்பும் இல்லை. அதிகாரத்தையும், செல்வாக்கையும் அனுபவித்ததைத் தவிர எஞ்சியது எதுவுமில்லை.

இவர்கள் மீண்டும் கஜேந்திரகுமாரின் ஏமாற்று அரசியலிற்கே செல்வார்கள். சமீப காலமாக அரசியல் யாப்பு வரைபு குறித்த விவாதங்களில் சுமந்திரன் பலிக் கடாவாக முன்வைக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் இதர உறுப்பினர்கள் எவரும் இவ் விவாதங்களில் இல்லை. சம்பளமும், சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது. ஆனால் மக்கள் சேவை எங்கே? சுமந்திரனிடமோ, அவரது கட்சியிடமோ தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை. அது மட்டுமல்ல, சுமந்திரனின் குறுகிய கால வளர்ச்சி தமிழ் அரசியலில் பெரும்கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புலிகளின் கடந்த கால ஜனநாயக விரோத செயல்களை காத்திரமாக விமர்ச்சிக்கும் அவரது அரசியல், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற கதிரைகளை நோக்கிய அரசியல் பச்சோந்திகளுக்குப் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமது வாக்குப் பலத்திற்கு ஆப்பு வைப்பதாகக் கருதி முணுமுணுக்கின்றனர். அவரை எந்த விதத்திலும் சம்பந்தருக்குப் பின்னர் தலையெடுக்க விடுவதில்லை எனக் கங்கணம் கட்டி வருகின்றனர். இருப்பினும் தற்போதைய தேர்தலில் தனது ஆதரவு சக்திகளை அவர் நிறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.  அரசியல் அமைப்பில் உள்ள தீர்வுகளே அவரது தீர்வுத் திட்டங்களாக உள்ளன. கூட்டமைப்பின் ஏனையோர் வெற்றி கிடைத்தால் ‘நாம்’, தோல்வி என்றால் சுமந்திரன் என்ற வகையில் அரசியலை நடத்துகின்றனர்.

சமீப காலமாக தென் இலங்கையில் இடம்பெறம் பிரதான கட்சிகள் மத்தியிலே காணப்படும் போட்டிகளில் மைத்திரி தரப்பையே சுமந்திரன் குற்றம் சாட்டி வருவதாக தெரிகிறது. தமிழரசுக் கட்சி முழுமையாக ஐ தே கட்சியிடம் சரணடைந்துள்ளது. இதன் காரணமாகவே ஐ தே கட்சி தனித்து அரசு அமைக்கப் போவதாகப் பயமுறுத்தி வருகிறது. தமிழரசுக் கட்சியிடமிருந்த குறும் தேசியவாத போக்குகள் தற்போது தற்காலிகமாக சுரேஷ், விக்னேஸ்வரன் போன்றோரிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள இதர சக்திகள் இவர்களுடன் இரகசிய உறவுகளைப் பேணி வருகின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிரான அணியினர் என்பது தோற்றப்பாடாக இருப்பினும், இவை தற்காலிகமானதே. ஏனெனில் அடிப்படையில் பாரிய கருத்து வேறுபாடுகள் இல்லை.

இலங்கை அரசியல் மிகவும் சிக்கலான ஓர் சூழலுக்குள் உள்ளது. நாட்டில் லஞ்சம், ஊழல், ராணுவ அதிகாரம் நிறைந்த அரசு வேண்டுமா? அல்லது ஜனநாயகமும், சட்டம், ஒழங்கு நிறைந்த ஆட்சி தேவையா? என்ற விவாதத்திற்குள் சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்தள்ளது. மிக அதிகமான கடன்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பணம் இல்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அபிவிருத்தியின்மை, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, சமூக விரோத செயற்பாடுகளின் அதிகரிப்பு, உயர்மட்டம் வரை ஊழல் என பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. எந்த அரசும் நீடித்திருப்பது கேள்விக்குரியதாகியுள்ளது. இந் நிலையில் நிலைத்த அரசு அமைப்பது எனில் தேசியப் பிரச்சனைகளில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்கும் அரசினை அமைக்க உதவ வேண்டும். கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு உண்டா? சுpல சர்வதேச அரசுகளின் கைப் பொம்மையாக உள்ள கூட்டமைப்பினால் சுயாதீனமாக இயங்க முடியாது. எனவே புதிய அரசியல் பார்வை தேவையாகிறது.

தமிழ் அரசியல் தரப்பில் ஊழலும், வன்முறையும், குடும்ப ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் சம்பந்தமாக எந்தவித முன்னெடுப்புகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை. எதிர்க் கட்சியில் இருந்தவாறே வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பது ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குகிறது.

இவ்வாறான குழப்பமான சந்தர்ப்பவாத அரசியல் சகதிக்குள் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளைக் கைதூக்கி விடுவது தேசத்தை நேசிக்கும் மக்களின் கடமையாகும். இங்கு கட்சிகள் பலவற்றில் சமூக நலன்களுக்காக அர்ப்பணிக்கும் பலர் உள்ளனர். இவர்கள் சமூக நிறுவனங்களின் அதிகாரத்தில் வைக்கப்பட வேண்டும். எனவே கட்சி அரசியலை விட நல்ல மனித நேயம் கொண்ட மனிதர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும்.
Vsivalingam@hotmail.com

Read more...

Thursday, January 25, 2018

சோசலிஷம் எதற்காக? - ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன்

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.

இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.

மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”

ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?

இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.

மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.

எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.

மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.

மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.

[இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.

தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.

எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]

https://monthlyreview.org/2009/05/01/why-socialism/

Read more...

Sunday, January 21, 2018

கனடா துர்க்கையம்மன் ஆலயத்தினுள் மனித உரிமை மீறல். போட்டுடைத்தது கனடிய ஊடகம்.

கனடாவின் ரொரொண்டோ மாநிலத்திலுள்ள துர்கையம்மன் ஆலயத்தின் கோபுரக்கட்டுமானப் பணிகளுக்கென இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கனடிய ஊடகமான சீபீசீ நீயூஸ் அம்பலப்படுத்தியுள்ளது. புலம்பெரும் நாடுகளெங்குமுள்ள பெரும்பாலான ஆலயங்கள் மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றபோதும் நிர்வாகத்தினர் அவற்றை வழமையான பாணியில் நிராகரித்து தவறுகளை திருத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதபோது அவை வெளிநாட்டு ஊடகங்களால் பல தருணங்களில் அம்பலப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களால் அம்பலப்படுத்தப்படுகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வெட்கித்தலைகுனியவேண்டிய அல்லது சமூககுற்றவாளிக்கூண்டில் ஏறவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

கனடிய ஊடகச் செய்தி பின்வருமாறு அமைகின்றது.

ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.

(சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன.)

CBC ரொறன்ரோவுடன் மட்டுமே பேசிய இரண்டு தொழிலாளர்களின் கருத்துப்படி, ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழலுக்கு முகம் கொடுத்ததுடன் மிகவும் குறைவான ஊதியத்தையே பெற்றிருக்கின்றனர்.

'It's slavery in the modern world': Foreign workers say they were hungry, abused at Toronto temple


சேகர் குருசாமி, 51 மற்றும் சுதாகர் மாசிலாமணி, 46 இன் கருத்துப்படி, ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிகளில் ஒன்றைப் பகல் நேரத்தில் செதுக்கி, பூச்சு வேலை செய்த அவர்கள், இரவில் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உயிர்ப்பற்ற நிலையில், கொதிகலனுக்குப் பக்கத்தில் மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்வார்கள்.

"நாங்கள் மிகவும் பசியுடன் இருந்தோம், எங்களால் அதைத் தாங்கமுடியாமலிருந்தது. சாப்பிடாமல் இருப்பதால், எங்களுக்குத் தலைசுற்றும்" என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக CBC உடன் பேசிய குருசாமி கூறினார்.

CBC ரொறன்ரோவுக்கான அறிக்கை ஒன்றில், குற்றச்சாட்டுகள் "பொய்யானவை," என ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் கூறுகிறது.


ஆலயத்தின் அடித்தளத்தின் ஒரு அறையிலிருந்த நான்கு மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்ளும்படி தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தமிழர்கள் கூறுகின்றனர்.

'எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை'

தேவாலயம் ஒன்றில் உள்ள தூபிக்கு ஒத்த, ஆலயக் கோபுரத்தின், $1.2 மில்லியன் பெறுமதியான புனருத்தான வேலைகளின் ஒரு பகுதியைச் செயலாக்குவதற்காக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் இந்தியாவிலிருந்து நேரடியாக இந்த நான்கு தமிழ் ஆண்களை வேலைக்கமர்த்தியது.

இந்த நான்கு தமிழ்த் தொழிலாளர்களும் உணவுக்காக இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவர் சொற்களால் துன்புறுத்தியதுடன் வன்முறை செய்வதாக மிரட்டினார் எனக் குருசாமி கூறினார்.

"அவருக்கு மிகவும் கோபம் வந்தது, வெளியேறச் சொல்லி எங்களிடம் சொன்னார். 'நாயே வெளியேறு' என அவர் சொன்னார். தகாத சொற்களைப் பயன்படுத்தினார்." எனக் குருசாமி கூறினார். "என்னுடைய மனம் புண்பட்டுப்போனது. எங்களுக்குப் போதுமான உணவு கிடையாததால் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். வேறு என்னத்தைச் செய்வதெண்டு எங்களுக்குத் தெரியேல்லை. எங்களுக்கு ஆரையும் தெரியாது. இந்த நாட்டுக்கு இப்பதான் முதல் தரமாக வந்திருக்கிறோம்."

அவருக்கு அல்சர் இருப்பதாகவும், அதனால் ஒழுங்காகச் சாப்பிடுவது அவருக்கு முக்கியமானது எனவும் மாசிலாமணி CBC ரொறன்ரோவுக்குக் கூறினார்.

"சரியான சாப்பாடு எதுவுமில்லாமல். ஐந்து மாதமா நாங்க அங்கே வேலைசெய்திருக்கிறம்," என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக மாசிலாமணி கூறினார். "சாப்பாடு பற்றி அவரிடம் நாங்கள் கேட்க முடியாது. வணங்கவருபவர்கள் முதல் நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியே எங்களுக்குத் தரப்படும்."

அடித்தளத்தில் கொதிகலனுக்குப் பக்கத்தில் நித்திரை கொள்ளும்படி அவர்கள் நான்கு பேரும் வற்புறுத்தப்பட்டதாக அந்தத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், வாரத்தில் 60 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலைசெய்ததாகவும், ஆனால், உணவும் நித்திரைக்கான வசதிகள்தான் அதிகம் கவலைதருவனவாக இருந்தன என்றும் மாசிலாமணியும் குருசாமியும் கூறினர்.

"மூட்டைப் பூச்சிகளைப் பற்றி நான் சொன்னாலும்கூட [பிரதம சிவாச்சாரியாருக்குக்] கோபம் வரும். அவர் எங்களை மன அழுத்தம் உள்ளவர்களாகவும் வேதனைப்படுபவர்களாகவும் மாற்றியிருக்கிறார்." எனக் கூறினார் மாசிலாமணி.

"அவருடைய நடத்தை சிவாச்சாரியார் ஒருவருடைய நடத்தை போன்றதல்ல. நிறையத் தகாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்," எனக் குருசாமி கூறினார். "எங்களை அடிக்கப் போவதுபோல தனது கைகளை அவர் உயத்தினார்."

புகார்கள் ஆதாரமற்றவை என்கிறது ஆலயம்

பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜகுருக்களுடனான ஒரு நேர்காணலுக்கான வேண்டுகோளை ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மறுத்துவிட்டது, ஆனால், அதன் மதரீதியான சிற்ப வேலைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.

"மேலதிக நேர வேலை எதுவும் செய்யப்படவில்லை," அத்துடன் "கட்டுமானத் தளத்தை இலகுவாக அணுகுவதற்காகவும், போக்குவரத்துத்துக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் ஆலயத்தை அணுகுவதற்காகவும்," தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பிடம் வழங்கப்பட்டது என ஆலயம் கூறுகிறது.

"கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, எங்களுடைய மதரீதியான சிற்பவேலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல்கள் தொடர்பாக ஒருபோதும் கரிசனைகளை வெளிப்படுத்தியதுமில்லை புகார்களை எங்களுக்குச் சொன்னதுமில்லை," என அந்த அறிக்கை கூறுகிறது. "ஊதியம், வேலைச் சூழல், வசிப்பிட வசதிகள் தொடர்பாக சிற்பிகள் திருப்தியடைந்திருந்ததை எங்ளுடைய கடந்த காலத் தொழிலாளர் திருப்திக் கருத்தாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன."

"தொழிலாளர்கள் எவரையும் எங்களுடைய பணியாளர்கள் வார்த்தைகளால் தாக்கவுமில்லை, உடல்ரீதியாகப் பலமாகத் தள்ளவோ அல்லது தள்ளவோ இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்."




அந்த நான்கு தொழிலாளர்களையும் மோசமாக நடத்தியதாக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜாக்குருக்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

'இதுநவீன உலகின் அடிமைத்தனமாகும்':  தமிழ் தொழிலாளர் வலையமைப்புக் கூறுகிறது 


முடிவில், தொழிலாளர்கள் முகம்கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ள இந்த நிலைமைளை ஆலயத்துக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒருவர் அறிந்து, தமிழ் தொழிலாளர் வலையமைப்பைத் தொடர்புகொண்டார்.

"இந்தப் பிரச்சினை பாரதூரமானது … நான் இளமையாக இருக்கும் போது, 20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்திருந்தால், அந்த ஆலயத்தை நான் கொளுத்தியிருக்கக்கூடும்," என்கிறார், தமிழ் தொழிலாளர் வலையமைப்பு தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான ராம் செல்வராஜா. "நியாயமான ஊதியத்தை விடுவம் அதைப் பற்றி நான் கதைக்கவில்லை, மனிதர்கள் நடத்தப்பட்ட விதம் … நவீன உலகத்தின் அடிமைத்தனம் இது."

சாரக்கட்டுகளில், தரையிலிருந்து 20 மீற்றர் உயரத்தில் வேலைசெய்தபோதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் தவிர்ந்த பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சாரக்கட்டுகளில், நிலத்திலிருந்து 20 மீற்றர் அளவு உயரத்தில் அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோதும், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்த நான்கு தொழிலாளர்களும், கடந்த செப்ரெம்பரில் தமிழ் தொழிலாளர் வலையமைப்பைச் சந்தித்து தங்களுடைய தொழில் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அந்த ஆண்களால் வாசிக்க முடியாத ஒன்றாக அது இருந்தது.

அந்த நான்கு ஆண்களும் ஏப்ரல் 15, 2017 முதல் ஒக்ரோபர் 15, 2017 வரையான ஆறு மாதங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததை அவர்களின் வேலைவாய்ப்புப் பதிவேடுகள் காட்டின.

வாரத்துக்கு 40 மணி நேரம், மணித்தியாலத்துக்கு $18படியும், மேலதிக நேரத்துக்கு மணித்தியாலத்துக்கு $27படியும் அந்த ஆண்கள் ஊதியம்பெறுவார்கள் என்பதை அந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது. மேலதிக நேரத்தைத் தவிர்ந்துப் பார்த்தால் இது மாதத்துக்கு கிட்டத்தட்ட $2,500 ஆக இருக்கும்.


ஒரு மாத வேலைக்கு $2,530 அவர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் கூறும் காசோலை ஒன்றுக்கான ஓர் உதாரணம் இது. (Tamil Workers Network)

நான்கு தொழிலாளர்களும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள் என பிரதம சிவாச்சாரியார் அவர்களுக்கு செப்ரெம்பர் 24ம்திகதி காலை கூறியதாகக் குருசாமியும் மாசிலாமணியும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம் முடிவதற்கு மூன்று வாரகாலத்துக்கு முன்னதாகவும், தமிழ் தொழிலாளர் வலையமைப்புடன் அந்த நான்கு ஆண்களும் கதைத்த சில நாட்களுக்குப் பின்பாகவும் அது நடந்தது.

தங்களுடைய ஐந்தாவது மாத வேலைக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து CBC உடன் பேசிய அந்த இரண்டு ஆண்களும் தெரிவித்தனர்.

ஆலயம், தனது அறிக்கையில் அவர்கள் நேரத்துடன் அனுப்பப்பட்டதை மறுத்திருந்ததுடன், அந்த இரண்டு தொழிலாளர்களும், "அந்தச் செய்திட்டத்தை பூர்த்திசெய்வதற்காக 2018 வசந்த காலத்தில் திரும்பிவருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்தாகவும்," கூறியுள்ளது.

குருசாமியுடனும் மாசிலாமணியுடனும் வேலைசெய்த மற்ற இரண்டு சிற்பிகளினதும் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் CBC ரொறன்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில் அவர்களும் தங்களுடைய வேலைச் சூழல்கள் பற்றி அதே மாதிரியான குற்றச்சாட்டுகளையே கூறியுள்ளார்கள்.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் ஒரு 'வர்த்தகமாக' மாறியுள்ளது, என ஒரு செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் கவலைதருவனவாக உள்ளன, ஏனெனில் அந்தப் பிரதம சிவாச்சாரியார் ஆலயத்தை ஒரு "வர்த்தகம்" போல இயக்கிறார் போலிருக்கிறது என்கிறது, தமிழ் தொழிலாளர் வலையமைப்பு

சிவாச்சாரியார் தியாகராஜக்குருக்கள் மேலான CBC ரொறன்ரோவின் புலன்விசாரணை BMW ஒன்று அவர் பெயரில் இருப்பதையும் Mercedes S5A அற நிலையமான ஆலயத்தின் பெயரில் இருப்பதையும் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் செய்த கனேடியர்களுக்கு மதிப்பளிக்க வழங்கப்படும் விருதான, Queen's Diamond Jubilee Medalஐயும் (ராணியின் வைரவிழாப் பதக்கம்) 2012இல் தியாகராஜக்குருக்கள் பெற்றிருக்கின்றார்.

"முக்கியமாக 'நான் கடவுளின் அடியான்; இது வழிப்பாட்டுக்குரிய ஓர் இடம், என நீங்கள் சொல்லும்போது, உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கடை நம்பிக்கைகளையும் கனவுகளையும் விரக்திகளையும் ஆலயம் ஒண்டுக்குள் கொண்டுவருவினம், அதோடை இது ஒரு வர்த்தகமாகிட்டுது என நான் நினைக்கிறன்; இது ஒரு சுரண்டல்,'' என்கிறார் செல்வராஜா.

கோபுரத்துக்கான கட்டுமான நிதிக்கு அவருடைய தாயார் அன்பளிப்புச் செய்திருக்கிறார். அத்துடன் அவருடைய சமூகத்துக்குள் உள்ள மிக முக்கியமான மதத் தலைவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதலால், இவை "பாரதூரமான குற்றச்சாட்டுகளாக" இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

"என்னுடைய அம்மா, 'இல்லை, இல்லை, இல்லை, அப்படி இருக்கேலாது. இது ஒரு ஆலயம். ஆலயங்களிலை இப்பிடி நடக்கிறதில்லை.' என்கிறார். ஆனபடியால், இது மிகப் பாரதூரமான ஒரு விஷயம். சமூகத்துக்குள்ளை நிறைய எதிர்முழக்கங்களை இது கொண்டுவரப் போகுது எண்டது எனக்கு நிச்சயமாய்த் தெரியுது," என்கிறார், செல்வராஜா.

நகரிலுள்ள தொழிலுக்காக இடம்பெயர்ந்த தமிழர் தொடர்பில் கேள்விப்பட்ட முதலாவது விடயமாக இது இருப்பதால், முறைசாராத புலன்விசாரணைகளை ரொறன்ரோ தமிழ் சமூகத்தினுள் தமிழ் தொழிலாளர் வலையமைப்பு ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இது மட்டுமல்ல இப்படிப் பல நடந்திருக்கும் என அது நம்புகிறது.

"இதன் பூதாகாரத்தை நாங்கள் புரிந்துகொள்ளும்போது, இப்படிப் பல விடயங்கள் வெளியில் வரப்போகின்றன என்பது எங்களுக்கு நன்கு தெரிகிறது," என அவர் கூறினார். "இப்போது இது எங்களுடைய radarஇல் இருக்கிறது."

பனிப்பாறையின் முனை, என்கிறார் சட்டத்தரணி

Parkdale Community Legal Services (சமூக சட்ட சேவைகள்) இந்த வழக்கினை இலவசமாக நடத்துகிறது. உண்மையிலேயே அந்த ஆண்கள் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைக் காட்டும் இந்திய வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்தச் சட்ட மையம் தற்போது முயற்சிக்கின்றது.

"எங்களுடைய ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் குறைந்த வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு இரண்டிலும் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்," என்கிறார், அந்த மையத்தின் தொழிலாளர் உரிமைகள் பிரிவுச் சட்டத்தரணி, John No

தற்காலிக வேலை அனுமதிப்பத்திரம் உள்ள வெளிநாட்டவர்கள், கனடாவில் ஒரு வேலைவழங்குநருடன் மட்டுமே வேலைசெய்யலாம்.

"கனடாவில் தங்கியிருப்பதற்கான திறனும், வாழ்வதற்கான ஊதியம் பெறலும் அந்த ஒரு வேலைவழங்குநரில்தான் முற்றாகத் தங்கியுள்ளது. அதனால் வேலைச் சூழலிலோ அல்லது வேலைவாய்ப்புத் தரங்களிலோ அந்த வேலைவழங்குநர் அவர்களை மோசமாக நடத்தினாலும் அந்த வேலையை அவர்கள் விட முடியாது என்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு மாற்றீடுகளே உள்ளன,"என்கிறார், No.

தொழிலுக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படும் சுமார் 50 வழக்குகளை அவரின் அலுவலகம் ஒவ்வொரு வருடமும் கையாள்வதாக No கூறினார்.

"இது பனிப்பாறையின் முனை என்றுதான் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். "அனேகமான தொழிலாளர்கள் முன்னுக்கு வருவதற்குப் மிகவும் பயப்படுகிறார்கள்."

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com